15 March 2016 9:26 pm
மெல்ல மெல்ல விடிந்தது வானம். இம்மி இருள் மட்டும்தான் பகலைப் போர்த்தியிருந்தது. ஒரு சேவல் கொக்கரக்கோ.. எனக் கூவியதும் முழுப் பொழுதும் தீட்டிய உளுந்தைப்போல பளிச்சென விடிந்தது. ‘ஏ புள்ள.. நீராகாரம் கொண்டா’வாசலைக் கூட்டிப் பெருக்கிக் கொண்டிருந்த பாப்பாத்தாள் தூர்வையை அதே இடத்தில் விட்டுவிட்டு வீட்டுக்குள் ஓடினாள். சுப்பையன் தோளில் மண்வெட்டி இருந்தது. அதைக் கீழே வைத்து விட்டு மனைவி நீட்டிய சொம்பை வாங்கி நீராகாரத்தைக் கலக்கினார். சொம்பைத் தலைக்கு மேல் தூக்கி அண்ணார்த்தினார். வாய்க்குள் நுழைந்த நீராகாரம் தொண்டைக் குழியில் இறங்குவேனா?.. என்றது.‘என்ன புள்ள உப்பு போட மறந்திட்டீயா..?’‘உப்பு இல்லிங்களே..’இச்! கொட்டிக் கொண்டார் சுப்பையன். நீராகாரம் அவருடைய நாசி வழியே புரை ஏறியது.‘உப்பு இல்லன்னா பக்கதுல ஒரு டம்ளர் கேட்டு வாங்கிருக்கக் கூடாதா?’‘உப்பளத்தில் வேலப் பார்த்துக்கிட்டு உப்ப யாராவது இரவல் வாங்குவாங்களா.. கேட்டாலும்தான் கொடுப்பாங்களா?’நீராகாரத்தில் போடாத உப்பை வார்த்தையில் போட்டாள் பாப்பாத்தாள்.‘நான்தான் நேத்தைக்கே உப்பு வாங்கிட்டு வரச் சொன்னேங்களே..’‘காசு இல்லயே புள்ள. வாரச் சம்பளம் போட நாளு இருக்கே’‘உப்பளத்திலதானே வேலப் பார்க்குறீக.. ஒரு பொட்டலம் உப்பு எடுத்துக்கிட்டு வரலாமே?’சுப்பையன் முகத்தில் ‘சுருக்’ எனத் தையல் விழுந்தது.‘என்னடி.. திருடச் சொல்றீயா?’‘பெரிய அரிச்சந்திரன் நெனப்பு. டீவியில தினம் தினம் பார்க்குறீகல்ல.. மதுரயில கிரானைட் கல்லாம்! திருடி, வெட்டி வித்து கோடீஸ்வரனாகுறான்களாம். தெக்கே.. தாமிரபரணி ஆத்து தண்ணிய உறிஞ்சி, அடைச்சி நம்மக்கிட்டயே விற்கிறான்களாம்.. சொத்து மேல சொத்து சேர்த்து வெளிநாட்டுல பதுக்குறாங்க. நாட்டுல எதை விட்டு வச்சிருக்காங்க ம்.. இந்தக் கடலு ஒன்னுதான் பாக்கி அதுவும் முழிச்சிக்கிட்டு இருக்கிறதனாலே அது இருக்கு. இல்ல அதையும் பட்டாப்போட்டு சிட்டா எடுத்திருப்பாங்க. நீ மட்டும் ஏன்ய்யா இந்தக் காலத்திலேயும் பிழைக்கத் தெரியாத மனுசனா இருக்கே?’‘தப்பு புள்ள!’‘எதுய்யா தப்பு. தேனெடுக்கிறவன் விரல் சூப்புறதா?’‘கடலாத்தா.. மன்னிக்க மாட்டாடி’‘ஆமா.. மன்னிக்க மாட்டா. உங்கள பாலுக்கு சீனித்திருடச் சொல்லலேங்க.. கூழுக்கு உப்பத் திருடச் சொல்றேன்.’‘மனசாட்சி இடங் கொடுக்கலடி’‘பரட், பரட்..டென ராவெல்லாம் சொறிஞ்சிக்கிறீங்க. வைத்தியருக்கிட்டப் போயி இரண்டு ஊசி போட்டுக்கிட்டு வரலாம். கையிலதான் காசு இல்லயே.. பத்து பாக்கெட் உப்ப தெரியாம எடுத்துக்கிட்டு வாய்யானு சொன்னா மனசாட்சி குத்துது, குடையுதுன்னு சொல்றீங்க. சரி விடுங்க ஒரு பிடி உப்ப அள்ளி துண்டுல முடிஞ்சிக்கிட்டு வரலாம்ல.. நீராகாரத்துக்கு ஆகும்ல..’ஓர் அசைவுமில்லாமல் கிளை ஒடிந்த மரம் போல நின்றுக் கொண்டிருந்தார் சுப்பையன். அவருக்குள் சுனாமி எழுந்து அடங்கியிருந்தது. கொஞ்ச நேரம் வெறுமென நின்றுக் கொண்டிருந்தவர் பிறகு மெல்ல ஆமை நழுவுவதைப் போல அந்த இடத்தை விட்டு நழுவினார்.‘ஒன்னத்தான்யா..’‘என்ன புள்ள?’‘வரும்போது எப்போதும் போல கைய வீசிக்கிட்டு வராம உப்பு பாக்கெட்டுல அஞ்சாறு எடுத்துக்கிட்டு வாய்யா’****மண்டையைக் குடையும் காலை வெயில். ‘கடவுளே நீ இருந்தாக்கேளு’ என மண்ணை வாரி இறைக்குது காற்று எங்கும். ‘கொய்ங்’ சத்தம். கடலலை இரைச்சலை விடவும் காற்றின் சுழற்சி காதைப் பிறாண்டுது.தலையில் பெரிய முண்டாசு. உடம்பில் சட்டை இல்லை. நாலு முழம் வேட்டியை இரண்டாக மடிச்சு இடுப்பில் கட்டியிருக்கிறார். வயிறு குழி விழுந்துபோய் இருக்கிறது. கண்ணிமை மயிரெல்லாம் படிக உப்பு. நீர் இறைக்கும் இயந்திரத்தில் டீசலை ஊற்றுகிறார். சாவியைக் கொடுத்து இயக்குகிறார்.தலைத்தெறிக்கப் பாயுது தண்ணீர். கரையைத் தொட்டு ஓடி ஒழிகிற கடலலை வாயைப் பொத்திக் கொண்டு வாத்துக் குஞ்சுகளைப் போல வாய்க்காலில் ஓடி வருது. ‘அம்மா ஊட்டாத சோத்த ஊறுகா ஊட்டும். மேட்டுல பாயாத தண்ணிய மேக்ககாத்து பாய்ச்சு’மெனச் சொல்வாங்க. சரிதான் அடிக்கிற மேக்ககாற்றில் தண்ணீர் தலைக் குப்புறப் பாயுது. மனித வாழ்க்கையைப் போலத்தான் இந்தக் கடலும். கண்ணீரும் வியர்வையும் கலந்த ஆழம் தெரியாதப் புதிர்.வங்கக் கடல் அதையொட்டி நூறு ஏக்கர் நிலம். வெள்ளைப் பூத்த உப்பளம். அதில் பெரிசும் சிறிசுமாக எண்ணூறு பாத்திகள், பாத்தியெங்கும் மனிதத் தலைகள். அத்தனையும் ஒப்பந்தக் கூலிகள். முக்காடு அணிந்த பெண்கள், முண்டாசுக் கட்டிய ஆண்கள், தொப்பி வைத்த இளைஞர்கள், ஜீன்ஸ் உடுத்திய பாலகர்கள்.. என உயர்திணைகள் செறிந்து நிற்கிற பூமி அது.இது அயோடின் உப்பு, இது குளோரின்.. இது செறிவூட்டப்பட்டது.. அது தொழிற்சாலைக்கு.. அது அரபுநாடு போக வேண்டியது.. என தரம் பிரித்துக் கொண்டிருந்தார்கள் டிப்டாப் உடையில் பட்டதாரிகள்.‘அடேய்.. அடுத்தப் பாத்திக்கு தண்ணியைத் திருப்பி விடுடோய்’‘ஏய்.. ஏய்.. அங்கே பாரப்பா.. தண்ணீ உடைப்பெடுக்குது’‘யாரம்மா நீ.. வேலைக்குப் புதுசா.. குழந்தை நடை போடுற.. வெரசா வாம்மா..‘உப்பு பாத்தியில் கோட்டப்போடு; மம்பட்டியால உப்ப ஒன்னுச்சேரு; கூடையைத் தலையில் தூக்கிவிடு; உப்ப அம்பாரத்தில் கொட்டு; லாரியில் ஏத்து; காய வை’ இப்படியாக படிக்காத கைநாட்டுப் பேர்வழிகளின் குரல் ஒலி கேட்டுக் கொண்டிருந்தது.‘ஏய் சுப்பா..’‘இதோ வந்துட்டேங்கய்யா’‘சும்மாச்சும்மா.. காலையும் கையையும் சொறிஞ்சிக்கிட்டிருக்காம ஓடியாடி வேலையப்பாரு’‘சரிங்கய்யா..’சுப்பையனின் முதுகு உடைந்தப் பாதி வளையலாகக் கூன் விழுந்துப் போயிருக்கிறது. முதுகெலும்புனு ஒன்னு இருக்கா இல்லையா.. என்றே தெரியவில்லை. காலையும் கையையும் உதறிக்கிறார். தலையைச் சிலிப்பிக்கிறார். தத்தி.. தத்தி நடக்கிறார். என்னச் செய்ய? மனதில் இருக்கிறத் தெம்பு காலில் இல்லை. கால்கள் இரண்டும் கோழி கால்களைப் போல சூம்பிப் போயிருக்கிறது, ஐம்பது வருசம் உப்பளத்தில் ஓடியக் கால்கள் அல்லவா அது! பாத்திகளுக்கு தண்ணீர் பாய்ச்ச, கோடுகிழிக்க, உப்பை வாற, காய வைக்க, ஒன்னுச் சேர்க்க, அள்ளிவிட, சுமக்க, அம்பாரத்தில் சேர்க்க, தரம் பிரிக்க, அளக்க, லாரியில் ஏற்ற.. எத்தனையோ வேலைகளைப் பார்த்த உடம்பு அல்லவா அது.‘ஓடியதுப் போதும் நிற்கிறேன்’ என்கிறது கால்; ஊகூம் இன்னும் கொஞ்சம் ஓடுமய்யா என்கிறது காலம் காலா.. காலமா? வென்றது என்னவோ காலம்தான்!‘சுப்பா.. இனி நீ வேலைக்கு வர வேண்டாம். முதலாளி எப்பொழுதோ சீட்டைக் கிழித்து விட்டார். என்ன செய்வார் அவர். பாவம்! வயிறென்று ஒன்று இருக்கிறதே..‘ஏனுங்க அய்யா?’ பதறிப் போனார் சுப்பையன்.‘போதும் வேற வேல இருந்தாப் பாரு..’உயிர் அறுவதைப் போல இருந்தது சுப்பையனுக்கு. கூனிக் குறுகி குந்திப் போனார். என்ன வேலை பார்ப்பதாம்? இதை விட்டால் என்ன வேலைத் தெரியுமாம்?‘அய்யா.. இப்படிச் சொன்ன எப்படிங்க.. இத்தனைக் காலம் இந்த கடலாத்தாவும் நீங்களும் தானே வேலக்கொடுத்தீங்க. சோறுப் போட்டீங்க. இப்ப வேண்டானு சொல்லிட்டா நான் எங்கேங்கே போவேன்.‘முன்னே மாதிரி நீ வேலப் பார்க்க மாட்டேங்கிறேயேய்யா’‘பார்க்கிறேன் சாமி.. பார்கிறேன்..’முதலாளி மறுபடியும் வேலைக்கு வர வேண்டானு சொல்லி விடுவாரோ.. சம்பளத்தில் கை வைத்து விடுவாரோ.. நாலு பேர் பார்க்க திட்டித் தொலைப்பாரோ.. உள்ளுக்குள் தீப்பிடித்தது.பழைய சுறுசுறுப்பை நரம்பில் ஏற்றுகிறார். காலையும் கையையும் உதறுகிறார். விரு.. விருவென நடக்கிறார். வாய்க்கால் தண்ணீரை ஒவ்வொரு பாத்தியாகத் திருப்பி விடுகிறார். பாத்தி உடைப்பு எடுக்கிறது. தேடிப்பிடித்து அடைக்கிறார். நிற்க நேரமில்லை. அவர் வாயில் நுரைத் தள்ளுகிறது. ஒரு நாழி நிற்கலாம். முதலாளி பார்க்கிறாரே.. விரல் இடுக்கில் அரிப்பு எடுக்கிறது. கணுக்காலுக்கு மேல் சுருக்.. சுருக் என்கிறது. உப்பு, உப்புப் பூத்தக் கால்களைத் தின்னுகிறது. குனிந்து நிமிர்ந்து சொறிகிறார். உடல் அரிப்பு நின்றாலும் மன அரிப்பு நின்ற பாடில்லை. காலையில் மனைவி நடத்திய வாழ்க்கைப் பாடம் நினைவில் வந்து நிற்கிறது.****மேற்கு வானம் சிவந்துப் போயிருந்தது. வீட்டுக்கு கிளம்ப வேண்டிய நேரம் வந்து விட்டிருந்தது. பறவைகள் அதனதன் கூட்டுக்கு பறந்து கொண்டிருந்தது. சுப்பையன் மனதிற்கு திக்.. திக்.. உடம்பு ‘குப்’பென வியர்த்தது. வியர்வை உப்பும் கடல் உப்பும் சேர்ந்து உடம்பை நமைச்சது. துண்டை உதறி குறுக்கு வாக்கில் கொடுத்து முதுகைத் துடைத்துக் கொண்டார். வரப்பில் சுருட்டி வைத்திருந்த வேட்டியை எடுத்து இடுப்பில் சுற்றிக் கொண்டு சட்டையை உடுத்திக் கொண்டார்.வியர்த்துப் போயிருந்தது தேகம். எறும்பு கடிப்பதைப் போல காலும் கையும் அரிப்பெடுக்கிறது. பட்டை பட்டையாக விடுகிறது தோல். குளோரின் பூத்த உடம்பில் வெள்ளை விடுபட்டு கறுப்புத் தோல் தெரிகிறது. அதில் குருதியும் ஊநீரும் கசிகிறது. அரிவா வச்சிருக்கிற கையும் சொறிச் சிரங்கு கையும் சும்மா இருக்காதாம்.. சரிதான்!எவ்வளவு நேரம்தான் சொறிந்து கொண்டிருப்பதாம். வீட்டுக்கு போக வேணாமா? வழக்கம் போல கிழக்குப் பக்கம் திருப்பி கடலாத்தாவைப் பார்த்து கையெடுத்தார் நெடுஞ்சாண் கிடையாக கீழே விழுந்தார்.‘ஆத்தா.. கடலம்மா.. தாயி.. என்ன மன்னிச்சிடாத்தா..’‘நான் என்னச் செய்ய தாயீ.. எனக்கு இதை விட்ட வேற வழி தெரியல ஆத்தா.. எனக்கு கஞ்சி ஊத்துறது நீதான்.. நான் இல்லைனு சொல்லல. எனக்கு வேலக் கொடுக்கிறது நீதான். அத நான் மறுக்கல. ஆனா.. கேட்டதைக் கொடுத்த நீ கேட்காததையும் கொடுத்திருக்கியே.. இந்த சொறி, பட்ட, பசி அடங்கா வயிறு, வறும இதெல்லாம் நா கேட்டேனா? நீயாத்தானே கொடுத்தே.. ஏன் கொடுத்தே? தாயி.. உன்னத்தேடி நா வந்தப்ப எனக்கு வயசு பத்துக்கூட ஆயிருக்காது. அதிலிருந்து உழைக்கிறேன். எனக்கு வீடு, வாசல், சொந்தம், பந்தம், சொத்து, சுகம் எல்லாம் நீதான். எனக்கு நீ எல்லாம் கொடுத்தே. நா இல்லைனு சொல்லல. இந்த முடியாத வயசுல வைத்தியம் பார்த்துகிற காப்பீடு கொடுத்தியா? ஒழைச்சி, ஒழைச்சி ஓடாப் போயிருக்கேனே. உட்கார்ந்து சாப்பிட பென்சன் கொடுத்தியா? இல்லையே.. அதான் இந்த முடிவுக்கு இறங்கியிருக்கேன். என்னை மன்னிச்சிடு தாயீ..’****சுப்பையன் வீட்டிற்குள் நுழையும் பொழுது ஊர் ஒடுங்கியிருந்தது. மனைவி வாசலைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள். ‘இவ்ளோ நேரமா என்னப் பண்ணுனீங்க.. நான் என்னாச்சோ.. ஏதாச்சோனு தவிச்சிப் போயிட்டேன். மத்தியானம் சாப்பிட்டீங்களா? இல்லையா? வாங்க.. வாங்க கை, கால் அலம்பிட்டு சாப்பிடுங்க..சுப்பையனுக்கு ஆத்ம திருப்தி. வந்ததும் வராததும் ‘உப்பு எங்கே?’ எனக் கேட்காதது மனதிற்கு இதமாக இருந்தது. ரெட்டினக்கால் போட்டு உட்கார்ந்தார் சுப்பையன். அவர் முன்னே சாப்பாடு இருந்தது. பசி வயிற்றைப் பிராண்டுகிறது. சோற்றைப் பிசைகிறார். வாயில் சோற்றை வைத்தவுடன் தூ என கைக்கு கக்குகிறார். கண்ணீர் சொரிய கோபம் வருகிறது.‘என்ன புள்ள.. உப்பு போடலையா..?‘நீங்க அள்ளிக்கிட்டு வரலையே’திரு திருவென விழிக்கிறார் சுப்பையன். விரக்தியும் கோபமும் அவருடைய நாசியை முட்டுகிறது.‘ஆள் நடமாட்டம் இருந்ததுங்களா?’‘இல்ல புள்ள’‘பின்னே?’‘மனசாட்சி இடங்கொடுக்கல.. அதான் எடுத்த உப்ப திரும்ப வைச்சுட்டேன் புள்ள’கணவனை குறு குறுவெனப் பார்த்தாள் பாப்பாத்தாள். அவளுடைய கண்களில் கற்கண்டு போல கண்ணீர் பூத்திருந்தது.‘பசி குடலைத்தின்னுது புள்ள..’‘சொறி, அரிப்புக்கு உப்பு சேர்க்காம சாப்பிடுறது நல்லதுதான்யா.. சோத்த மருந்தா நினைச்சிக்கிட்டு முழுங்கிடுய்யா’‘குமட்டுது புள்ள..’‘என்னய்ய இப்படி சொல்றே.. பசியை வயிறு பொறுத்தாலும் வயசு பொறுக்காதுய்யா.. நானா ஊட்டி விடட்டா.. இந்தாய்யா..’ சோற்றைப் பிசைந்து வாய் அருகே கொண்டுப் போகிறாள். அவளது கண்கள் கலங்க, துளி உப்பு பருக்கையில் விழுகிறது. ‘ஆ..’ வென வாயைப் பிளக்கிறார் சுப்பையன். சோற்றில் உப்பு இருப்பதாக உணருகிறார்.‘சாப்பிடுய்யா.. சாப்பிடு. இன்னும் கொஞ்சம் வாங்கிக்கோய்யா..’ -அண்டனூர் சுரா, புதுக்கோட்டை