15 October 2016 6:08 pm
வீடு முழுவதும் பனிமூட்டம் போல் மண்டிக்கிடந்த சாம்பிராணிப் புகை யினூடே என் மனைவியின் கீச்சுக்குரல் கேட்டது.‘ஏங்க, எங்கே இருக்கீங்க? இன்னைக்கு வெள்ளிக் கிழமை அதுவுமா எனக்கு பூஜை வேலை ரொம்ப இருக்குன்னு, உங்ககிட்ட பூசை அறையில சாமிப் படங்களுக்கு பூ வைக்கச் சொன்னா, ஒழுங்கா வைக்காம, ஏனோ தானோன்னு வச்சிருக்கீங்களே… ஏன்தான் இப்படிப் பண்றீங்களோ…’ ஆரம்பித்தாயிற்று அவளுடைய குறை கூறும் படலம். வெள்ளிக்கிழமை மட்டுமல்ல, வரக்கூடிய எல்லா விசேச நாட்களிலும் அவள் செய்யக்கூடிய பூசைகளுக்கும் என்னை ‘உதவியாளனாக’ அமர்த்திக் கொள்வது அவளுக்கு வாடிக்கையாய்ப் போய் விட்டது. பெண்களுக்கு தெய்வ பக்தி இருக்க வேண்டியதுதான், ஆனால் இவள் காட்டும் அளவற்ற பக்தியையும் செய்யும் சடங்குகளையும் என்னால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை.‘எல்லாப் படங்களுக்கும் பூ வச்சிட்டு இப்போதானே உக்காந்தேன்… எதுல குறை கண்டுபிடிச்சுட்டு இப்படி கத்தறே?’என்று பல்லைக் கடித்துக் கொண்டு கத்தினேன் நான். என் கடுப்பான சொற்கள் அவளை சீண்டியதால் அந்த புகை மண்டலத்தினூடே புகுந்து புறப்பட்டு, அருகில் வந்து பத்தரகாளியாய் நின்றாள்!‘உக்கும், இந்த சிடுசிடுப்புக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல! பூசை அறையில் போய் பாருங்க! அந்த திருத்தணி முருகன் படத்துக்கு பூவே வைக்கலே! கீழே பிள்ளையார் படத்துக்கு மட்டும் நிறைய வச்சிருக்கீங்க’என்று என்மீது ஓர் ஆன்மிக குற்றச்சாட்டைப் பதிவு செய்தாள்.அவள் தொந்தரவு தாங்க முடியாமல், கணிணி வேலையை அப்படியே நிறுத்தி விட்டு எழுந்து, பூசை அறைப் பக்கம் போய் எட்டிப் பார்த்தேன். அங்கே மலர் சூட்டப்படாத திருத்தணியார் என்னை கோபத்துடன் நோக்கினார்! ஒரு மாம்பழத்தால் முருகனுக்கும் விநாயகருக்கும் புராணத்தில் ஏற்பட்ட மனக்கசப்பு ஆறிப்போன நிலையில், இப்போது மீண்டும் பங்காளிச் சண்டையாய் உருவெடுத்து விடுமோ என்ற பயம் எனக்கு! படங்களில் குடிகொண்டுள்ள சாமிகள் ஒருவருக்கொருவர் சாமி நேயத்துடன் விட்டுக் கொடுத்துப் போனாலும், என் மனைவி என் மீது சுமத்தும் குற்றச்சாட்டு அவர்கள் செவிகளில் விழுந்தால் என்னவாகுமோ?ஒவ்வொரு வெள்ளிக் கிழமையிலும் விசேச நாட்களிலும் இப்படித்தான் பூசை புனசுக்காரங்களில் என்னையும் உதவிக்கு அழைத்து வேலை வாங்குவாள். நான் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட நேரும் போது, அன்று எனக்கு காலைச் சிற்றுண்டி எட்டு மணியிலிருந்து பத்து மணிக்கு ஒத்திப்போடப் படும் சாத்தியக் கூறுகளும் உண்டு! விருப்ப ஓய்வால் வேலையை துறந்து, வீட்டிலே அடைகாக்கும் நான் அவளுக்கெதிராக ஊழியர் சங்கமா வைத்துப் போராட முடியும்? காஞ்சனாவுக்குத் தாலி கட்டினேனா இல்லை, காரைக்கால் அம்மையாருக்கு கட்டினேனா என்ற ஐயப்பாடு அடிக்கடி எனக்கு எழுவதுண்டு. அந்த அளவுக்கு பக்தி வழியில் தீவீரவாதி என் மனைவி!எழுந்து போய், சுட்டிகாட்டிய கடவுளர் படங்களுக்கு மலர் சூட்டி அவள் மனதை குளிரச் செய்து விட்டு, எனது அறைக்குள் போய் உட்கார்ந்தேன். தொலைக் காட்சியில் பிரபல சோதிடர் ஒருவர் ‘விருச்சிகம் ராசி அன்பர்களே…! என்று நேயர்களை கூப்பிட்டு வார இராசிப்பலனை சொல்லிக் கொண்டு இருந் தார். அந்த ராசிப் பலன் நிகழ்ச்சியை நான் விரும்பாவிட்டாலும் அவை என் மனைவியால் உள்வாங்கப்பட்டு, என்னிடம் மறு ஒலிபரப்பாவது வழக்கமான நிகழ்ச்சி! தொலைக்காட்சி செய்திகளைப் பார்த்து நாட்டு நடப்புகளைத் தெரிந்துக் கொள்ளலாமென்றால், ஆன்மிக நிகழ்ச்சிகள் ஓடும்போது அலை வரிசைகளை மாற்றக்கூடாது என்பது என் மனைவியின் கட்டளை. மேலும், தொலைக்காட்சியின் தொலை முடுக்கி (ரிமோட் கண்ரோல்) அவள் இடுப்பில் குடியிருக்கும் பேறு பெற்றது!அதிகாலையில் எங்கள் வீட்டில் இவளால் போடப்படும் திருப்பள்ளி எழுச்சி ஒலி நாடா, தெருக்கோடியிலுள்ள வீடுகளில் அயர்ந்து தூங்கும் குழந்தைகளைக் கூட எழுப்பக் கூடிய ஒலித்திறன் மிக்கது! திருமலையில் பள்ளி கொண்டுள்ள அந்த பெருமாளே எங்கள் வீட்டில் அலறும் திருப்பள்ளி எழுச்சியைச் செவியுற்றுத்தான் எழுகிறாரோ? என்றும் யோசிக்கத் தோன்றுகிறது! அந்த சத்தகிரிக்கே சத்தம் கேட்கும் அளவிற்கு ஒலியைக் கூட்டி ஒலிநாடாவை ஒலிக்கச் செய்து கேட்டால் தான் இவளுடைய பக்தி மனதில் ஒரு நிம்மதி! வாசலில் செய்தித்தாளை வீசிவிட்டு சிட்டாய்ப் பறந்தான் அந்த ஆள். ஒருமுறை அவன் வீசிய செய்தித்தாள், இவள் வாசல் படிக்கட்டில் போட்டிருந்த கோலத்தின் மீது விழுந்து கோலம் கலைந்துவிட, மறுநாள் அவனுக்கு இவள் விட்ட ‘அர்ச்சனை’யால் மறுநாளிலிருந்து அந்த இளைஞனையே காணோம்! வேறு ஏரியாவில் பணியாற்றச் சென்றானோ அல்லது வேலையையே துறந்து விட்டானோ தெரியவில்லை! எழுந்து போய் செய்தித்தாளை எடுத்து வந்து, சோபாவில் உட்கார்ந்த போது.. உள்ளேயிருந்து மனைவி கத்தினாள்.செய்தித்தாளை அப்புறம் படிக்கலாம். மேசை மேல காபி வச்சுருந்தேனே.. பாக்கலையா? குடிச்சுட்டுப் போய் தோட்டத்துல பூவைப் பறிச்சிட்டு வாங்க, நான் கோயிலுக்குக் கிளம்பணும். மணி இப்பவே ஏழு ஆயிடுச்சி!"பல இல்லங்களில் கணவன்மார்களின் சுதந்திரம் பறிபோகிறது என்று சொல்லப் படுகிறதே.. பணி ஓய்வுக்குப் பின் அதை நான் முற்றிலும் அனுபவித்துக் கொண்டிருப்பது இப்படித்தான்!செய்தித்தாளை மேலோட்டமாக மேய்ந்து விட்டு, சாம்பிராணி மணம் கமழ்ந்த காபியை வாயில் ஊற்றிக் கொண்டு (அவசர கதியில், கை கழுவாமல் தயாரித்ததாக இருக்கலாம்! பக்தி மணம்!) வாசல் பக்கம் போய், வாயிற்சுவரைச் சுற்றியுள்ள செடிகளிலிருந்த பூக்களைப் பறித்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்த போது.. சுற்றுச்சுவரை யாரோ அசைக்கும் ஓசை கேட்டது. எட்டிப் பார்த்தேன்.வாயிற் கதவை நக்கியவாறு அங்கே ஒரு மாடு!சமையலறையில் இருந்த என் மனைவி அந்த மாட்டின் வருகையை எப்படி மோப்பம் பிடித்தாளோ! தெரியவில்லை, என்னங்க.. வாசல்ல நம்ம லச்சுமியா வந்து நிக்குதுன்னு பாருங்களேன்..‘லச்சுமி’ என்று அவள் குறிப்பிட்டது வாசலில் வந்து நின்ற மாட்டைத்தான்!மேய்வதற்காக அன்றாடம் தெரு வழியே போய்க் கொண்டிருந்த அந்த மாட்டை ஒருநாள் இவள் வலுக்கட்டாயமாக எங்கள் வீட்டு வாசலுக்கு அழைத்து வந்து, அதன் மேனியெங்கும் மஞ்சள் குங்குமம் இட்டு, தொட்டு கும்பிட்டு, வாழைப்பழம் கொடுத்த காரணத்தால்.. வலிய வந்த அந்த அன்பைப் புறக்கணிக்க மனமில்லாமலும் நன்றியுணர்வோடும் தினமும் எங்கள் வாசலுக்கு வரும் நிரந்தர வாடிக்கையாளர் ஆகிவிட்டது! வீதிகளில் மேய்ந்து சுவரொட்டிகளையும் குப்பைத் தொட்டியில் பிளாஸ்டிக் சாமான்களையும் தின்று வயிறு வளர்த்து வந்த அந்த மாட்டுக்கு லாட்டரி அடித்தாற் போல இப்படியொரு வாழ்வு கிடைக்கிறதென்றால் அது சும்மா விடுமா? "யாம் பெற்ற இன்பம் பெறுக நம் மாடு வர்க்கமெல்லாம்.." என்று எண்ணியதோ என்னவோ, தினமும் தன் மேய்ச்சல் சகாக்களையும் தன்னுடன் கூட்டமாக வாசலுக்கு அழைத்து வந்து விடுவதால், தினமும் எங்கள் வீட்டு வாசலில் ஒரு ‘குட்டி மாட்டுச் சந்தை’யே உருவாகி களை கட்டி விடும்! பணி ஓய்வுக்குப் பின் நான் மாட்டு வணிகம் நடத்துவதாக சிலர் என்னிடம் கேட்டு என்னை நோகடித்ததும் உண்டு!இவளோ அந்த மாடுகளில் பசு இனத்தை மட்டும் தேர்வு செய்து, அவற்றிலும் வத்தல் தொத்தல்களை விரட்டி விட்டு, அவற்றில் சுத்தமான ‘அக்மார்க்’ பசுக்களாகத் தேர்வு செய்து பின், கோபூசை செய்து அனுப்புவது அவள் வழக்கம்."என்னங்க.. லச்சுமி நிக்குதுல்ல?" மனைவியின் குரல் என் சிந்தனையை கலைத்தது."அந்த மாடுதானே? நிக்குதுடி!"கைகளில் மஞ்சள், குங்குமக் கிண்ணங்கள், ஒரு வாழைப்பழம் இவற்றுடன் அரக்கப் பறக்க ஓடி வந்தவள் "அதென்ன மாடுன்னு நக்கல் வேண்டிக்கெடக்கு? இன்னிக்கு வெள்ளிக் கிழமையும் அதுவுமா, நம்ம வீட்டு வாசல்ல வந்து நிக்கறதை லச்சுமின்னு சொன்னா கொறஞ்சா போயிடுவீங்க?" என்று என்னை வார்த்தைகளால் இடித்துக் கொண்டே வாசலுக்கு விரைந்தாள்.நானும் அவள் பின்னால் நடந்தேன். அவள் பசுவுக்கு மரியாதை செய்து கும்பிடும் வரை, அவளுடைய தாலிக்குச் சொந்தக்காரனாகிய நானும் அவளுடன் நின்று, அதைத் தொட்டுக் கும்பிட வேண்டும் என்பது அவள் எனக்குப் போட்டுள்ள நிலையான உத்தரவு! மனைவியின் மனம் கோணாமல் நடக்க வேண்டுமல்லவா! நானும் ஒரு அமைதியான இன்னொரு பசு போல அவள் அருகில் நின்றேன்.மஞ்சள் குங்குமத்தால் அதன் நெற்றி, முதுகு, வயிறு, இன்ன பிற பகுதிகளிலெல்லாம் வண்ணப் படுத்தினாள். அதன் நெற்றியைத் தொட்டுக் கும்பிடத் துவங்கி, மாட்டை வலம் வந்து, அதன் வாலைத் தொட்ட போது.. அவள் முகம் ஏனோ சுருங்கியதைக் கண்டேன்."ஏன்? என்னாச்சு?" என்று நான் கேட்க, அவளோ, ஒண்ணுமில்லே என்று சமாளித்ததைக் கண்டு எனக்குள் குழப்பம். அவள் அருகில் சென்று மாட்டின் பின் பகுதியைப் பார்த்த போது.. பொங்கி வந்த சிரிப்பை என்னால் அடக்க முடியவில்லை.அது ஒரு காளை மாடு!பக்திப் பரவசத்துடன் அவளுடைய வழிபாட்டிற்குத் தன் நிர்வாண மேனியைக் காட்டிக் கொண்டு நின்றிருந்த அக்காளைக்கு, ஒரு பெண்ணின் ஸ்பரிசம் தன்னுடலில் பட்டதால் உடல் சிலிர்த்தது. சிறுநீர் கழிக்க ஆரம்பித்தது!அவள் முகத்தில் ஈயாடவில்லை. எனக்கு மிக்க மகிழ்ச்சி! அவளுடைய அவசர புத்திக்கு இது ஒரு நல்ல பாடம்!"என்ன காஞ்சனா.. லச்சுமி.. லச்சுமின்னு சொன்னியே.. இப்போ லச்சுமணனா நிக்குதே? என்னதான் ஆனாலும், உனக்கு இவ்வளவு அவசர புத்தி கூடாது!"பெண்பாலாய் நினைத்து தான் வழிபட்ட அந்தக் கால்நடை ஓர் ஆண்பால் என்று தெரிந்ததும், அவளுக்கு பால் அதிர்ச்சியும் ஏமாற்றமும் ஏற்பட்டதில் வியப்பில்லை! ஆனால் அவள் கூறிய பதில்தான் வியப்பாய் இருந்தது! "ஏண்டி முன்னாலேயே பார்த்திருக்கக் கூடாதா? இப்படி அசடு வழிய நிக்கிறியே!""உக்கும்.. சிரிப்பு என்ன வேண்டிக்கிடக்கு? பக்கத்துல நிக்கற நீங்களாவது பார்த்துச் சொல்லிருக்கலாமில்ல?""வாசலில் வந்து நிற்கும் மாடுகளைப் பிடித்து ‘பாலின ஆராய்ச்சி’ செய்வதா என் வேலை?""வெள்ளிக் கிழமை ஆச்சே.. நம்ம லச்சுமிதான் வந்து நிக்குதோன்னு நினைச்சுட்டேன். அங்க பாருங்க.. இதோட மூஞ்சியப் பார்த்தா நம்ம லச்சுமி சாயலாவே இருக்குல்ல?"எந்த பெண்தான் தன் தவறை ஒப்புக் கொண்டிருக்கிறாள்? என் மனைவி மட்டும் விதிவிலக்கா என்ன? அவள் முகம் பரிதாபமாய் இருந்தது."இப்பவும் ஒண்ணும் தப்பு நடந்துடலேங்க. இன்னிக்கு ‘பிரதோஷம்’ல! சிவபெருமானோட வாகனம் காளைதானே.. சிவனோட நந்திக்கு பூஜை செய்ற புண்ணியம் நமக்குக் கிடைச்சிருக்கு பாருங்க!"‘குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற கதைதான்!தெருவில் வேறு யாரும் இதைப் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு, கையில் கொண்டு வந்திருந்த பொருட்களையெல்லாம் எடுத்துக் கொண்டு உள்ளே போய் விட்டாள் காஞ்சனா.மனைவிக்குத் தெரியாமல் அந்தக் காளையை விரட்ட கையை ஓங்கினேன். அது விசமத்தனத்துடன் என்னைப் பார்த்து விட்டு, ரிசபத்தனத்துடன் பாய்ந்து ஓடியது அக்காளை! – கிரிஜா மணாளன், திருச்சி"