16 October 2014 7:54 am
ஆத்தோரம் குடிசை போட்டு வசித்து வந்த மாரிமுத்து ஒரு நெசவுத் தொழிலாளி. நூல் விலை ஏற்றத்தால் தொழிலில் சுணக்கம் ஏற்பட்டு குடும்பம் வறுமையில் வாடியது. ‘உள்ளூரை நம்பி ஒரு பிரயோசனமும் இல்லை. வெளியூருக்குப் போனா ஏதாவது ஒரு வேலை செய்து பொழைச்சிக்கலாம்‘ என்ற நண்பனின் யோசனையைக் கேட்டு மாரிமுத்துவின் மகன் கதிர்வேலு பம்பாய்க்குப் பயணமானான். வேலை தேடித் தேடி அலுத்துப் போச்சு. உனக்குப் படிப்பும் இல்லை. கைத்தொழிலும் தெரியாது, இந்தியும் பேச வராது ஏதாவது ஒரு வேலைன்னா எப்படி"ங்கிற பதிலைக் கேட்டுக் கேட்டு புளிச்சுப் போச்சு. அவுங்க சொல்றதும் நாயமாத்தான் படுது. படிடா படிடான்னு தலையா அடிச்சுக்கிட்டாங்க கேட்டேனா.. கோலிக்குண்டு ஆடத்தானே போனேன்.. இப்ப வருத்தப்பட்டு என்ன புண்ணியம். கண்ணு கெட்டபொறவு சூரிய வழிபாடுங்கிற கதை தான். மொதல்லே தூங்க எடமும் திங்கச் சோத்துக்கும் வழியைப் பாப்போம். தேநீர்க்கடைதான் இதுக்குத் தோதான இடம்னு ஒரு முடிவுக்கு வந்தான். நடைபாதைத் தேநீர்க் கடையில் வேலை கிடைத்தது. விடியற்காலை எழுந்து போய் பால் வாங்கி வந்து கொடுக்க வேண்டும். மாஸ்டர் தேநீர் போடப் போட எடுத்து வாடிக்கையாளரிடம் கொடுக்க வேண்டும். அவர்கள் குடித்து வைத்த கண்ணாடிக் குவளைகளைக் கழுவி வைக்கணும். பீடியோ சிகரெட்டோ கேட்டா வாங்கி வந்து கொடுக்க வேண்டும். காலையில் சாப்பிட்ட தேநீரும் பன்னும் காலி. இப்போது வயிற்றைக் கிள்ளியது. சமாளித்துக் கொண்டு வேலைகளைச் செய்தான். மதியம் சாப்பாட்டு நேரமானதாலே வியாபாரம் அவ்வளவா இருக்காது. மாலை நேரம் வியாபாரம் அதிகமாக இருக்கும். இரவு எட்டு மணி சுமாருக்கு பால் தீர்ந்ததும் கழுவி வைத்த கண்ணாடிக் குவளைகளையும் பித்தளை ஸ்டவ்வையும் எடுத்து தேநீர் மேடைக்கு கீழே உள்ள இடத்தில் வைத்துப் பூட்டிய பிறகு மீதமுள்ள தட்டுமுட்டுச் சாமான்களையும் மாஸ்டர் நின்று தேநீர் போட வசதியாக நிற்கும் மரத்தால் செய்த மேடையும் வைத்து தார்பாய் போட்டு மூடி சுற்றிலும் கயிறுபோட்டுக் கட்டிய பிறகு சப்பாத்தியும் கடைந்த பருப்பும் கடித்துக் கொள்ள வெட்டிய பெரிய வெங்காயமும் நீளமான பச்சை மிளகாயும் கிடைக்கும். இரண்டு பக்கமும் தையல் பிரித்தெடுத்த நீளமான சாக்குப் படுதாவை விரித்து அதன்மேல் ஒரு பழைய துணியைப் போட்டு கையை மடக்கி தலைக்கு வைத்துக் கொண்டு கடைக்குப் பாதுகாப்பாகப் படுத்தான். இவ்வாறு நடைபாதை வாழ்க்கை ஆறுமாதம் கடந்து ஓடியது. உடுப்பி ஓட்டல் சப்ளையரோடு சினிமா திரையரங்கில் ஏற்பட்ட சிநேகம், ஓட்டலில் மேசை துடைக்கும் வேலை பெற்றுத் தந்தது. படுக்கப் பத்தமடைப் பாய், தலைக்குத் தலையணை, போர்த்திக் கொள்ளப் போர்வை, தூங்க சக தொழிலாளர்களுடன் பாதுகாப்பான அறையென வசதிகள் பெருகியதில் கதிர் பெரு மகிழ்ச்சி அடைந்தான். இட்டளி, தோசை, பொங்கல் என்று தமிழ்நாட்டுச் சிற்றுண்டிகள் கிடைத்ததில் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்றானது. கதிரின் சுறுசுறுப்பும் கனிவான பேச்சும் முதலாளியை வெகுவாகக் கவர்ந்தது. ஆள் பற்றாக்குறை கதிரைச் சப்ளையர் ஆக்கியது. கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு கடுமையாக உழைத்தான். அந்த உணவு விடுதியில் வழக்கமாகச் சாப்பிட வரும் ஒரு வாடிக்கையாளருக்கு கதிரின் பேச்சும் வேலையில் காட்டிய சுறுசுறுப்பும் உபசரிக்கும் விதமும் மிகவும் பிடித்துப்போனது. அன்றாடம் அவன் பரிமாறும் இடத்திலேயே அமர்வதை வழக்கமாகக் கொண்டார். அவருடைய தேவையை உணர்ந்து அவர் கேட்காமலேயே மனத்தை நிறைவு செய்யும் பாங்கு அவரின் மனத்தைக் கவர்ந்தது. கதிரிடம் பேசி அவனைப் பற்றிய விவரங்களை அறிந்தார். ஒரு பெரிய நிறுவனமொன்றில் "பிட்டர்" ஆகப் பணியாற்றும் அவருக்கு, உதவியாளன் தேவைப்பட்டது. தனது செல்வாக்கைப் பயன்படுத்தி மேல் அதிகாரியிடம் இசைவு பெற்று கதிரை தன்னுடன் சேர்த்துக் கொண்டார். கதிரின் கடின உழைப்பும் தொழிலில் உள்ள ஈடுபாடும் நான்கு ஆண்டுகளில் கை நிறையச் சம்பளம் வாங்கும் "பிட்டர் கதிர்வேல்" ஆகி விட்டான். இருப்பினும் அவன் கடந்துவந்த பாதையை மறக்கவில்லை. விடுமுறை நாள்களில் அவ்வப்போது சென்று, தனக்கு ஆதரவளித்த தேநீர்க்கடை மாஸ்டர், உடுப்பி உணவு விடுதியில் இடம் பிடித்துக் கொடுத்த நண்பன், உணவு விடுதி முதலாளி என்று ஒவ்வொருவரையும் பார்த்து நன்றி சொல்லத் தவறுவதில்லை. நன்றி விசுவாசம் கதிருக்கு நல்மதிப்பைப் பெற்றுத் தந்தது.***************************** "அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லை" என்று தகவல் வரவே ஒருமாத விடுப்பில் ஊருக்கு வந்து, அம்மாவை கோயம்புத்தூர் மருத்துவமனையில் வைத்து மருத்துவம் பார்த்தான். கதிர்வேலனுக்கு தினசரி நாளேடுகளைப் படித்துவிடுவது பழக்கம். அன்று சிற்றுண்டி முடித்தவுடன் நூலகம் நோக்கி நடைப் போட்டான். மேட்டுத்தெருச் சந்தில் பெண்கள் கூடி நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். என்னவென்று கூடியிருந்தோரை விசாரித்தான். தெருவோரம் ஒரு மூதாட்டி சுருண்டு கிடப்பதைக் காட்டினார்கள். இந்த அம்மாவுக்கு ரெண்டு மகன்கள். மூத்தவன் நல்ல வசதியோடு இதே ஊர்லதான் இருக்கிறான். இன்னொருத்தன் ஏழைப்பட்டவன். பணக்கார மருமககாரி வச்சுப் பார்க்க முடியாம ராத்திரியோட ராத்திரியா ஏழைமகன் வீட்டுக்குப் பக்கத்துல படுக்கவெச்சுட்டுப் போயிட்டா… பெற்ற தாயையே புறக்கணிக்கும் மகன்களா? என்று மனம் வெதும்பினான் கதிர்வேலன். முதுமையைக் காரணம் காட்டி முதியவர்களின் மேல் சிறிதும் பரிவு இல்லாமல், இப்படி வீட்டுக்கு வெளியே கொண்டுவந்து விடுகிறார்களே. ஆசீர்வதிக்க வேண்டிய மனிதர்களின் மேல் அன்பு செலுத்த வேண்டிய மனிதக் கடமை, ஆசி வாங்க வேண்டிய பெற்ற பிள்ளைகளிடம் இல்லையே என்று கதிர் தனக்குள் புழுங்கினான். "போலீசுக்குப் போன் செஞ்சா அவிங்க வந்து முதியோர் இல்லத்திலே சேர்த்திடுவாங்களே" என்று கதிர் சொன்னதும், ஆமாங்க நீங்க சொல்றது சரிதானுங்கோ.. ஆனா போன் செஞ்சதும் போலீசுக்காரங்க வண்டியிலே வந்து விசாரிப்பாங்க. அந்த வாயாடி தெருவுல நின்னுக்கிட்டு இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி பேசி நாறடிச்சுடுவா. இதெல்லாம் நமக்கு வேணுங்களா? என்று கதிர்வேலனை மடக்கினார்கள். கதிர் ஒன்றும் பேசவில்லை. தன் கைப்பேசியை எடுத்து காவல்துறைக்குப் போன் செய்தான்.ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ-சங்கொலி பாலகிருட்டிணன்"