மண்வாசம் - தமிழ் இலெமுரியா

19 July 2016 1:13 pm

பூமிக்கு பச்சை ஆடை அணிந்தது போல், பச்சை பசேல் என இருக்கும் நெல் வயலில் சிதறிக் கிடக்கும் பயிர்களை உண்ணும் பறவைகளின் ஓசை, நடக்கும் ஓரமெல்லாம் தென்னை மரத்தின் நிழல், அதனுடன் கூடிய குளிர்ந்த காற்றும் வீச கதிரேசன் தர்மனின் வீட்டை நோக்கிச் சென்றான்.ஐயா.." என்கிற குரல் கேட்டதும் வீட்டிலிருந்து ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் வெளியே வந்தார்."நீங்க யாரு? உங்களுக்கு என்ன வேணும்?""என் பெயர் கதிரேசன். செய்தித்தாளில் வயலும் தோப்பும் விற்பனைக்கு&ன்ற விளம்பரத்தை பார்த்தேன். அதான் வந்தேன்""யாருக்கு வேணும்? உங்களுக்கா!" "ஆமாம்""உங்கள பார்த்தா, படிச்ச புள்ள மாதிரி தெரியுது. நீங்க இந்த வயலை வாங்கி, என்ன பண்ண போறீங்க""இந்த தோப்பை அழிச்சிட்டு வெளிநாட்டுக்கு மாமிசங்களை ஏற்றுமதி பண்ற தொழிற்சாலை ஒன்னு கட்ட போறேன். இந்த இடம் ஊருக்கு வெளிய இருக்கு. அதுமட்டுமில்லாம நல்ல தண்ணி வசதியும் இருக்கு. அதான்""ஓ.. அப்படியா!" என்று பேசிக் கொண்டே இருவரும் நடந்தனர். மின் இயந்திரத்தில் தண்ணீரை நீர்வீழ்ச்சி போல், சுழற்றி ஊற்றிக் கொண்டிருக்கும் இடத்தில் அமர்ந்தனர்."இது என்ன ஐயா? இவ்வளவு வேகமா தண்ணீரை கொட்டுது""இது பம்பு செட்டுப்பா""இந்த தண்ணி எங்க போகுது?""இங்க இருக்குற மாமரம், தென்னை மரம், வேப்பமரம்-ன்னு எல்லாத்துக்கும் போகுது. இங்க இருக்கிற சில மரத்துக்கு என்னோட வயசு. எங்க அப்பா நான் பொறந்தப்ப வைச்சது. இதோ உன் பக்கத்துல இருக்கிற மரம் என் பையன் பொறந்தப்ப நான் வைச்சது""உங்க பையன் எங்கே? நீங்க மட்டும் தனியாவா இருக்கீங்க?""இல்லப்பா, என் கூட இந்த மரங்களும் நான் வளர்க்கிற ஆடு, மாடு, கோழி-ன்னு எல்லாரும் ஒன்னாத்தான் இருக்குறோம். இந்த மரங்களையும் வயலையும் பார்த்தாலே நான் தனியா இருக்கிற மாதிரி தோனாது""அப்போ உங்க மனைவி எங்க""எனக்கு ஒரே பையன். அவன் இந்த வயல் வேலையெல்லாம் செய்யக் கூடாதுன்னு நல்லா படிக்க வச்சேன். அவனும் படிச்சு முடிச்சுட்டு அமெரிக்கா போயிட்டான். அங்க போனவன் எங்களை மறந்துட்டு, அங்கேயே ஒரு பொண்ண கல்யாணம் செஞ்சுக்கிட்டான். அதுவே எங்களுக்கு ஒரு வருசத்துக்கு அப்பறம்தான் தெரியும். எனக்கு பேத்தி பொறந்திருக்குன்னும் அத பார்க்க யாரும் இல்லன்னும் என் பொண்டாட்டிய, அமெரிக்கா கூட்டிட்டு போனான். அங்க ஆறு மாசத்துக்கு முன்னாடி என் மனைவிக்கு புற்று நோய் வந்து இறந்துட்டா…ங்கற செய்தி தொலைப்பேசி மூலமா வந்துச்சு. எனக்கு பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) இல்ல. அதனால உடனடியா என்னால போக முடியல. அங்கிருந்து அவ உடலை கொண்டு வர நிறைய செலவாகுமுன்னு என் பையன் எல்லா காரியத்தையும் அங்கேயே முடிச்சுட்டான். அமெரிக்கா போகும்போது அவளை நான் கடைசியா பார்த்தது" எனக் கூறும் போதே தர்மனின் கண் கலங்கியது. அதைக் கேட்ட கதிரேசன் மனம் கலங்கினான்."அப்போ ஏன் இந்த இடத்தை விற்குறீங்க" என கதிரேசன் கேட்க,  "என் பையன் வினோத்துக்கு அமெரிக்கால தொழில் தொடங்கணுமாம். அதனால இந்த இடத்தை எல்லாம் வித்துட்டு, நானும் அவன் கூட வரணும்னு கண்டிப்பா சொல்லிட்டான். நாளைக்கு அவன் வந்துடுவான். நீங்களும் நாளைக்கு வந்தா பேசி முடிச்சிடலாம்" என தர்மன் பதிலை கேட்டு அவ்விடம் விட்டு நகர்ந்த கதிரேசன், அந்த வயல் மரங்களுடனான தர்மனின் பந்தத்தை எண்ணி வியந்து சென்றான். தானும் இது போன்ற ஓர் இயற்கை சூழலில் வளரவில்லையே என்கிற ஏக்கத்துடன் தன் பயணத்தைத் தொடர்ந்தான்.மறுநாள் வினோத் மனைவி மகளுடன் அமெரிக்காவிலிருந்து வீட்டிற்கு வந்தான். தர்மனும் முதன் முதலாக வந்த தனது பேத்தியை கண்டு உச்சி முகர்ந்தார். அச்சு அசலாக தன் மனைவியை போல் பிறந்திருந்த அவளை தூக்கிக் கொண்டு வயலைச் சுற்றிக் காண்பித்தார். பேத்தியின் கையால் புதிய மரக்கன்று ஒன்றை நட்டு வைத்தார். பின்பு வீட்டிற்கு வந்த தர்மன், நிலத்தின் பத்திரத்தை எடுத்து வினோத்திடம் நீட்டினார். அத்துடன் கதிரேசன் வந்ததையும் கூறினார்.பத்திரத்தை கையில் வாங்கிய வினோத், அப்பா நான் அம்மாவ இழந்துட்டேன். அவங்க பாசத்த விட்டு நான்தான் ரொம்ப தூரம் போய்ட்டேன். அம்மாவுக்கு வந்த புத்துநோய் இரசாயனம் நிறைஞ்ச உணவால வந்ததுன்னு டாக்டர் சொன்னாங்க. என் அம்மாவ இழந்தது போல என் குழந்தையையும் நான் இழக்க விரும்பல. நம்ம வயல்ல இரசாயனம் இல்லாத நல்ல தானியங்கள பயிர் செஞ்சு, விவசாயம் பண்ணி, நோயில்லா வாழ்க்கையை உருவாக்கணும்பா, மனுசன் வாழ ரொம்ப முக்கியம் உணவு; அந்த உணவே நஞ்சா மாறி நம்ம உயிரை எடுக்கக் கூடாது. எனக்கும் உங்கள போலவே நல்ல விவசாயம் செய்யறது எப்படின்னு கத்துக் கொடுங்கப்பா. இனி வரும் சமுதாயம் நம்ம பாரம்பரிய உணவ சாப்பிட்டு, ஆரோக்கியமான வாழ்வை வாழட்டும். நாம் நம் பரம்பரையை காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கும் இதனை கற்பித்து அவர்களுக்கு நல்ல வழிகாட்டியா இருக்கணும்பா..இதைக் கேட்ட தர்மன் உணர்ச்சி ததும்ப தன் மனைவி உருவில் இருக்கும் தன் பேத்தியை ஆரத்தழுவி முத்தமிட்டு தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். – செல்வம் கந்தசாமி, கோவை"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி