15 September 2015 4:32 pm
டொக்… டொக்… என இரவு நேர காவல்காரனின் கைத்தடியின் ஓசை… தெருவில் வீட்டின் அருகே; வர வர… மெல்ல மெல்ல… குறைந்து கொண்டே போனது. காவல்காரன் அடுத்த ச்சால்" (தெருவுக்கு) பக்கம் போயிருக்கணும், நான் புரண்டு படுத்தேன் படுக்கையில், மங்கிய விளக்கொளியில் சுவர் கடிகாரம் மணி 3 எனக் காட்டியது. பக்கத்தில் அப்பா அயர்ந்து தூங்கியபடி மெல்லிய குறட்டையொலி எழுப்பிக் கொண்டிருக்க, அடுத்து தம்பியும் தங்கையும் உறங்கிட, சுவற்றை ஒட்டி அம்மா… மணி கோர்த்து உழைத்த (ஒரு கைத்தொழில்) அலுப்புடன் முனங்கியவாறு திரும்பிப் படுத்தாள். மீண்டும் ஒருமுறை டிவிப் பெட்டி மீது இருந்த அந்த கடித உறையை கண்கள் ஏறிட்டன… அப்பா, ஒரு தனியார் மில்லில் மேஸ்திரியாக வேலை பார்க்கிறார். சம்பளமோ நான்காயிரம்தான் இதில் நாங்கள் ஐவர். உணவு, உடை, எங்களின் பள்ளி, கல்லூரி கட்டணங்கள், வீட்டு வாடகை என குடும்பம் தள்ளாடியது ஏதோ அம்மாவின் மணிகோர்ப்பின் மூலம் சிறு தொகை கிடைக்க, இத்தனை நெருக்கடியிலும் எங்கள் படிப்பு தொடர்ந்தது. நான் பி.எஸ்சி முடித்து வேலைத் தேடிக் கொண்டிருந்தேன். நேற்றுதான் அந்த கடிதம் அஞ்சலில் வந்தது… மருந்து கம்பெனி ஒன்றில், மருத்துவப் பிரதிநிதிக்கு ‘ஆட்கள் தேவை’ செய்தித்தாள் விளம்பரத்தைப் பார்த்து எழுதிப் போட்டிருந்தேன். அதன் பதில்தான், நேர்முகத் தேர்வுக்காக வந்த அழைப்புக் கடிதம். வீட்டாருக்கு மகிழ்ச்சி தந்தைக்கோ நேற்றிலிருந்து முகத்தில் ஒரு நம்பிக்கை ஒளி… குடும்பச் சுமையை சிரமத்தோடு சுமந்துவரும் தனக்கு, தனயன் தோள் கொடுக்கும் நேரம் வந்து விட்டதாக பூரிப்பு… தாய்க்கும் தன் மகனால் குடும்ப நிலை உயர்ந்திடும் எனும் மகிழ்ச்சி: "துன்பம் தொலைந்து இனி நல்ல காலம் வரும்" வாய்விட்டுச் சொல்லிக் கொண்டார். அதனால் தானோ என்னவோ… தூக்கத்திலும் முகம் மலர்ந்து காணப்பட்டாள். நான் எப்போது தூங்கினேனோ தெரியாது கண்விழித்த போது காலை 6 மணியாகிவிட்டது. அம்மா வழக்கம் போல் வாசல் தெளித்து கோலமிட்டுக் கொண்டிருந்தாள், மற்றவர்கள் யாரும் எழுந்திரிக்கவில்லை. குளித்து முடித்து அம்மா வெளுத்துப் போன சேலையிலும் மஞ்சள் முகமாய் மின்னினாள். நான் அவள் அருகே அமர… திரும்பிய அவள் "ராஜா நீ பாத்ரூம் போயிட்டு வா ஸ்டவ்ல தண்ணி காயுது, எடுத்து குளிச்சுட்டு தயாராகணும் இப்ப… கிளம்பினாத்தான் பதினோருமணிக்கு அங்க இருக்கலாம் எட்டு மணி போல புறப்படு" என்றவள் எனது தயக்கத்தைப் பார்த்து என்னை ஏறிட்டாள். அம்மா, அப்பா முப்பது ரூபா தந்தாங்க அது போதாது இன்னும் தேவைப்படும் என்றவன் சற்று நிதானித்து, போட்டுக்க நல்லச் சட்டை கூட இல்லையேம்மா… நான் முடிக்கவில்லை… அம்மா சொன்னாள் "நேத்தைக்கே மண் உண்டியலை உடைச்சி எடுத்தேன்; அறுபது ரூபா தேறிச்சி! அத நான் தாரேன், நீ அங்கே சி.எஸ்.டி.யில ஏதாவது சாலையோரம் சட்டைத்துணி விப்பாங்க. அம்பது ரூபாயிக்கு கிடைக்கும் எடுத்துப் போட்டுக்க! தேர்வுக்கு முன்னாடி போனா தான் நேரம் கிடைக்கும்" என்றாள். பாவம் அம்மா, பிள்ளைகளால் தங்களது வறுமை நீங்கிடும் என்று நம்பிக்கையோடு இருந்தாள். மும்பை சி.எஸ்.டி. இரயில் நிலையத்தில் வழக்கம் போல மக்கள் வெள்ளம். நான் அதில் நீந்தி ஒருவழியாக வெளியே வந்தேன். நடைபாதைக் கடைக்காரன் ஒரு சட்டைத்துணி ‘பச்சாஸ் ரூப்பியா சிறீப் பச்சாஸ் ரூப்பியா’ என சட்டைகளை கையில் வைத்தபடி கூவிக் கொண்டிருந்தான். நான் தயங்கி சட்டைப் பையில் கை விட்டபடி அங்கு செல்ல கடைக்காரன் ‘ஆய்யியே சாப்’ ஆப்கிலீயே பராபர் சைஸ், ரேய்ங்கா ‘லீஜியே…’ என்றான் இந்தியில். அதாவது இந்த சட்டை உங்களுக்கு ஏற்ற அளவு இருக்கும் எடுத்துக்கோங்க என்றான். நான் பள பள வென்றிருந்த வெளிர் பச்சை நிறத்தில் இருந்த ஒரு சட்டையை காட்ட அவன் அதன் கழுத்துப் பட்டியில் உள்ள குறியீட்டை பார்த்து இது உங்கள் அளவுக்கு பொருந்தும் என்று கூறி என்னிடமிருந்த அம்பது ரூபாயை பெற்று துணியை எனது கையில் திணித்தான். நான் கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். அது இன்னும் இருபது நிமிடம் இருக்கு என்பதை வஞ்சனையின்றி காட்டியது. நான் அவசரமாக வலப்புறமாக இருந்த ஒரு கழிப்பறைக்குச் சென்றேன். எனது பழைய சட்டயை கலைந்து புதிய சட்டையை அணிந்து கொண்டேன். என் அருகில் யாரோ ஒருவர் என்னையே பார்ப்பதைப் போன்று பிரமை… நான் விரைந்து வெளிப்பட்டு கையில் இருந்த பழைய சட்டையை… அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் வீசியெறிந்ததுடன் எனக்குப் பின் ஒரு துப்பரவு தொழிலாளி கையில் பெரிய வாளியில் குப்பை எடுத்து சென்று கொட்டுவதை பார்த்தேன். பழமை வாய்ந்த அய்ந்து மாடிக் கட்டடத்தில் இரண்டாவது மாடியில் அறை எண் 231-இல் நேர்முகத் தேர்வு என எனக்கு வந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு மிகச் சரியாக சென்று விட்டதால் மனம் நிம்மதியடைந்தது. அறைக்கு வெளியே வரிசையாக இருக்கைகள். அதில் இளைஞர்கள் நேர்த்தியான உடையில் அமர்ந்து நுனி நாக்கு அங்கிலத்தில் தங்களை ஒவ்வொருவருக்கும் அறிமுகப்படுத்திக் கொண்டும் சிலர் இங்கும் அங்கும் நடந்து கொண்டும் இருந்தனர். எனக்கும் அவர்களை போல உடுத்திட ஆசைதான். என்ன செய்வது? ஏக்கத்தோடு எனது புதிய சட்டையை ஒரு முறை பார்த்தவன் திடுக்கிட்டேன். முன்பக்கம் கீழிருந்து இரண்டாவது பொத்தானின் அருகில் ஒரு பெரிய ஓட்டை அதாவது நெல்லிக்கணி அளவுக்கு கிழிந்திருந்தது. ‘பாவி’ கடைக்காரன் என்னை ஏமாற்றிவிட்டானே. இப்போது என்ன செய்வது? உடல் சற்றே நடுங்கியது எனது தோள் பையை வைத்து மறைத்தபடி நானும் இருக்கையில் அமர்ந்தேன். குடும்பத்தாரின் முகங்கள் கண்முன் தோன்றி நம்பிக்கையோடு காத்திருப்பதுபோல… ஒரு பிரமை… இப்போது அந்த பழைய சட்டை ஞாபகம் வர போயி எடுத்துட்டு வரலாமா… யோசித்தேன் நான் சட்டையை வீசிய பிறகு அதன்மீது ஒருவர் குப்பையை கொட்டிவது நினைவுக்கு வர… கண்களில் கண்ணீர் திரண்டது.********* வீட்டில் எல்லோருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி! இருக்காதா பின்னே… எனக்கு வேலை கிடைத்துவிட்டது! தேர்வை நடத்தியவர்கள் எளிதான கேள்வியைத்தான் கேட்டார்கள். நான் சரியாகச் சொன்னதாக தேர்வு அதிகாரிகளின் முகம் காட்டியது. அங்கு மூன்று அதிகாரிகள் அமர்ந்து இருந்தனர் நடுவில் இருந்தவர் தமிழர்போலும் அவரின் எதிர் இருந்த பெயர் பலகையில் ‘கருப்பையா’ என பெயர் காணப்பட்டது. மற்ற இருவர் வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள். எனக்கு வேலை கிடைக்க தமிழரான கருப்பையா தான் காரணமா என யூகிக்க முடியவில்லை. அப்போதே எனது வேலைக்கான சம்பளம் மற்றும் பிற விவரங்கள் அடங்கிய உத்திரவாத கடிதம் ஒன்றை தனது உதவியாளர் ஒருவரை தயாரிக்க சொன்னார்… சில நிமிடங்களில் அது எனக்கு வழங்கப்பட்டது. அதை படித்த நான் என்னையே ஒருமுறை கிள்ளிப்பாத்துக் கொண்டேன். இது கனவா? நினைவா? என்று. வீட்டில் சட்டை கிழிந்த விவரத்தை சொன்னேன் அம்மா கடைக்காரனை திட்டி விட்டு ‘போகட்டும் விடு’ என்றாள். மறுபடியும் அப்பா கேட்டார் மீண்டும் சொன்னேன் சம்பளம் 15, 000, அது போக புதியதாக டிரஸ் எடுத்துக்க மூவாயிரம் கையிலேயே கொடுத்தாங்க, தினசரி வெளியூர் செல்ல பயணப்படியாக 300 ரூபாய்; வேலைக்கு சென்று வர அவர்கள் மூலமாகவே இருசக்கர வாகனமும் எடுத்து தருவார்களாம் வங்கி கடனை எனது சம்பளத்தில் மாதம் 1500ஐ கழித்துக் கொள்வார்கள் என்றேன். அப்பா ரொம்பவே மகிழ்ந்தார்… அதில் அம்மாவும் சேர்ந்து கொண்டார்கள் இருவர் முகங்களிலும் ‘வாழ்க்கையில் வென்றிடுவோம்’ எனும் பலத்த நம்பிக்கை பிறந்திருக்கும் போல… அவர்களை பார்க்க மனதுக்கு நிறைவான மகிழ்வு உண்டானது. தம்பி தங்கைகள் பேசிக் கொண்டார்கள். தம்பியின் குரல் சுமதி நீ இனிமே எதுக்கும் கவலை படாதே… தனிவகுப்பு, பள்ளி கல்லூரி போன்ற நிலுவைத் தொகைகளை எல்லாம் கொடுத்திடலாம். அண்ணாவுக்கு பதினைந்தாயிரம் சம்பளமாம்… அதில் நம்ம துன்பம் எல்லாம் பறந்திடும் என்றான்… தங்கை சொன்னாள்; ஆமாம் இனி வீட்டு வாடகை, பால்காரன் தொல்லை, நமது சாயம் போன ஆடை இதுக்கெல்லாம் சேர்த்து தான் நல்ல விடிவுக்கு வந்திருக்கு… என்றபடி பேசிக் கொண்டனர். வேலைக்கு கிடைத்த உத்திரவாத கடிதத்தை அப்பா அம்மா இருவரையும் அருகே நிறுத்தி அவர்களின் பாதங்களில் வைத்து வணங்கி எழுந்தேன். பெற்றவர்கள் உச்சி முகர்ந்து ஆனந்த கண்ணீர் மல்க என்னை தழுவிக் கொண்டார்கள். மெதுவாக அம்மா கேட்டாள் ‘உனக்கு மட்டும் எப்படி இப்படியொரு வாய்ப்பு…?’ அதுதான் எனக்கும் புரியலைம்மா என்றேன். அங்கு வந்திருந்தவர்களில் பலர் என்னைவிட திறமை சாலிகளாகவும் ஆங்கிலப் புலமையும் உலக அறிவும் கொண்டவர்களாகக் காணப்பட்டார்கள், இருந்தும் அவர்களுக்கு கிடைக்காத இந்த வேலை எனக்கு மட்டும்… எப்படி… புரியவில்லை.********* வீட்டில் அதிகாரி கருப்பையா, மகிழ்வுடன் காணப்பட்டார், அவரின் துணைவியார் கேட்டார்கள். ‘அய்யாவுக்கு என்ன இன்னைக்கு இத்தனை பூரிப்பு…’ ஏதாவது பதவி உயர்வு கிடைச்சுதா…? இல்லைம்மா இது… வேறு ஒரு மகிழ்ச்சி! அப்பா அடிக்கடி என்னிடம் சொல்வாரே… "மகனே கருப்பையா! வறுமையில் வாடும் ஏழை பிள்ளைகளுக்கு அவர்கள் படிப்பை பொறுத்து… உனது உத்தியோகத்தினால் ஏதாவது உதவி செய்" என்று… நானும் சரிப்பா என்பேன்… சற்றே சோக பெருமூச்சு விட்ட படி… ம்… "அப்பா காலமும் முடிந்து பல வருசமாச்சி… இப்பத்தான் அவர் விருப்பம் நிறைவேறிச்சு…" ஏங்க ஒன்னுமே புரியலையே… மீதியை சொல்றேன் கேளு. எங்கள் அலுவலகத்தில் இன்று நேர்முகத் தேர்வு இருந்தது. அதற்காக நான் காலையில் சீக்கிரமாவே புறப்பட்டேன் இல்லையா, ஆமாம் நீங்க எதுவுமே சாப்பிடாமலே ஒரு தம்ளர் தண்ணியை மட்டும் குடிச்சுட்டு போனீங்க… நான் டிரைவரை எதிர்பார்க்காம நானே வண்டியை எடுத்துட்டு போனேன்; போகும் போது சி.எஸ்.டி.யில் செய்தித்தாள் விற்பவனிடம் ‘தமிழ் பேப்பரை’ வாங்கி திரும்பினேன். அப்போ பக்கத்தில் இருந்த கழிவறை வாசலில் ஒரு பையனை பார்த்தேன் அவன் தனது சட்டையை கழட்டி விட்டு புதுச்சட்டையை அணிந்து கொண்டு எதிர்ப்பட்டான் முகத்தில் ‘தமிழ்க்கலை தெரிந்தது’. அவன் கையில் வைத்திருந்த பழைய சட்டையை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு வேகமாக சென்று விட்டான். ம்… அப்புறம் கதை கேட்கும் ஆர்வம் அவளுக்கு… அலுவலகத்தில் நாங்கள் மூவர் தேர்வு அதிகாரிகள் அமர்ந்து இருந்த போது ஏதேச்சையாக எனது எதிர் சுவற்றில் சி.சி.டிவி திரையில், வெளியில் அமர்ந்துள்ள இளைஞர்கள் வரிசையாக அமர்ந்திருந்ததை பார்த்தேன். அப்போதுதான் நான் சற்றுமுன் பார்த்த அந்த இளைஞன் வேகமாக உள்ளே நுழைந்தான், அவன் சட்டையின் முன்புறம் கிழிந்து இருந்தது. அவன் அனைவரின் உடைகளையும் பார்த்துவிட்டு தனது புதிய சட்டையை ஒருமுறை நோட்டமிட… அதிர்ந்து போனவனாய் கிழிந்திருந்த அந்த சட்டைப் பகுதியை தனது தோள் பையால் மூடியபடி வரிசையில் அமர்ந்தான். நான் அவன் முறை வந்ததும் அவனிடம் சம்பிரதாயத்துக்கு சில கேள்விகளை கேட்டுவிட்டு அவனுக்கு நல்ல சம்பளத்தில் வேலை போட்டு கொடுத்தேன்… அப்பாவின் ஆசையை நிறைவேற்றிய நிம்மதி அவர் முகத்தில் பளிச்சிட்டது. கருப்பையா தனக்குள்ளாக… "பையன் ஏழையாயிருந்தாலும் கிடைச்ச வாய்ப்பை பயன்படுத்தி முன்னுக்கு வந்திடுவான்" என நம்பிக்கையோடு சொல்லிக் கொண்டார்.- எழிலன்"