மாமியார் - தமிழ் இலெமுரியா

15 May 2016 7:33 pm

திருச்சியில் காஞ்சனா விமரிசையாகத் தன் மாமியாரின் திவசத்தை நடத்திக் கொண்டிருந்தாள். வடை, பாயாசம், இரண்டு பொரியல், கூட்டு, சாம்பார், அப்பளம், ஊறுகாய்  என்று சிறப்பாகச் சமையல் நடந்து கொண்டிருந்தது.மாமியார் படத்தைத் துடைத்து மாலை போட்டு,  வண்ண மின்விளக்குகளால் அலங்கரித்து வரவேற்பரையில் வைத்திருந்தாள். உற்றார் உறவினர் எல்லோரும் வந்த பிறகு படைத்தாள். படத்துக்கு முன் விழுந்து கும்பிட்டு, அத்தை! எங்க குடும்பத்தைத் தெய்வமா நின்னு பார்த்துக்குங்க அத்தை.. குழந்தை குட்டிங்களுக்கும் அவருக்கும் எனக்கும் நீங்கதான் பக்கத் துணையாக நிக்கணும்" என்று அழுதவாறே சொல்லி முடித்த போது, கூட்டம் ‘த்சொ, த்சொ’ என்றது."அத்தைக்கு அரக்குச் சிவப்புன்னா ரொம்பப் பிடிக்கும். அதனாலே இதோ இந்தப் புடவையைத் தேடித் தேடி எடுத்தேன் – வைச்சிப் படைக்கறதுக்கு. விலையா? ஆயிரத்தி எழுநூறு ரூபாய் தான் – அவங்களுக்குப் படைக்கற புடவையிலே, கணக்குப் பார்க்கலாமா?" என்றபோது கூட்டம் பிரம்மித்தது.கூட்டத்துக்குத் தெரியாத விசயங்கள் நான்கு.ஒன்று, எந்த வரவேற்பறையில் மாமியார் படம் இருக்கிறதோ, அந்த இடத்திற்கு அவள் வாழ்ந்த காலத்தில் வர அனுமதிக்கப் பட்டதில்லை.இரண்டு, வடை, பாயாசம், அப்பளம் நல்ல பொரியல் இவற்றை ஒரு நாளும் காஞ்சனா தன் மாமியாருக்குப் பரிமாறியதே இல்லை.மூன்று, ஆயிரத்து எழுநூறு ரூபாயில் புடவை எடுத்துப் படைத்து விட்டுத் தான் கட்டிக் கொள்ளப் போகிறாள். ஆனால் மாமியாருக்கு ஐம்பது, அறுபதுக்கு மேல் போட்டு எடுத்ததே இல்லை.நான்கு, குழந்தை குட்டிக்களுக்கும் அவருக்கும் பக்கத் துணையா நிக்கணும் என்று படத்துக்கு முன்னால் அரற்றினாளே.. மாமியார் வாழ்ந்த காலத்தில் மகனுடன் ஒரு வார்த்தை பேசவிடாமல் தடுப்பதுடன் தன் குழந்தைகளை அருகே போகவிட மாட்டாள்.இந்த நான்கு உண்மைகளும் தெரியாததால் கூட்டம், என்ன பொறுப்பாக திதி கொடுக்கிறாள்? என்று வியந்தது. பாயாசத்தின் இனிப்பும் முந்திரிப் பருப்பும் வியப்பை மேலும் அதிகப்படுத்தின.****இன்னிக்கு நம்ப ஆயா செத்துப் போன நாள் இல்லேம்மா?" நந்திதா கேட்டாள். "ஆமாம்! முணு வருசம் ஆகுது இல்லே?" தங்கக்கிளி தன் கணவனைப் பார்க்க, அவன், ம்கூம்! நாலு வருசம் ஆகுது தங்கக்கிளி! என்றான்."பாருங்களேன்! எப்படி வருசம் ஓடுது.." தங்கக்கிளி இட்லியை வைத்தவாறே சொன்னாள். "என்ன பாண்டியன்? உங்க அம்மாவா? அவங்க அம்மாவா?" அலுவலக நண்பன் சேகரன் கேட்டான். "எங்கம்மாதான் சார் – என்னோடதான் பதினெட்டு வருசமா இருந்தாங்க" "இன்னிக்குத் திவசம் இல்லியா? ஒன்னும் பண்ணலை போலிருக்குது?""அதெல்லாம் எப்பவுமே செய்யற பழக்கம் கிடையாதுங்க. என் மனைவி இருக்காளே தங்கக்கிளி! அவ ஒரு டைப். – அவளுக்கு இந்த மூடப்பழக்கங்களான திதி திவசம் இதுலேல்லாம் நம்பிக்கை கிடையாது"‘‘அப்படியா?’’"ஆமாம் சார்! உயிரோட இருக்கிறப்ப நல்லபடியா அவங்களை வெச்சுக்கணும். ஒரு சண்டை, சச்சரவு போடாம, நாயே பேயேன்னு ஏசாம, அவங்க வாழற காலம் நிம்மதியா "நம்ப வீட்டிலே நாம்ப இருக்கிறோம்" அப்படிங்கற எண்ணத்தை, மகிழ்ச்சியை அவங்களுக்குக் கொடுத்துட்டு வந்தம்னாலே, போதும்கறது என் எண்ணம் சார்.." ஜிமிக்கி குலுங்கப் பேசினாள் தங்கக்கிளி."அதுக்குன்னு.. ஆனாலும்.." சேகரன் பதைத்தான். அது எப்படித் திவசம் கொடுக்காமல் விட்டுவிட முடியும்? அதை எப்படி இந்த புருசன்காரனும் ஏற்றுக் கொண்டு இருக்கிறான்? பெண்டாட்டிக்குப் பயந்தவனாய் இருப்பானோ? தங்கக்கிளியின் அமைதியான முகத்தைப் பார்த்தால், அவர்கள் இருவரின் பாசமான பேச்சுகளைப் பார்த்தால், அப்படியும் தோன்றவில்லை.பாண்டியன் நண்பருக்கு பழைய நிகழ்ச்சிகளை விவரிக்க ஆரம்பித்தான்."இந்தாங்க.. உங்களுக்கு ஒரு துண்டு. நந்திதா இந்தா! தம்பி இங்கே வாடா.."மாமியார் எழுந்து உட்கார்ந்தாள்."இந்தாங்க! இனிப்பு""எனக்கு எதுக்கு? என் காலத்துக்கு நான் எவ்வளவோ சாப்பிட்டு முடிச்சாச்சி. குழந்தை பறக்குதுங்க பாரு! அதுங்களுக்குக் கொடு!""அதெல்லாம் தப்பு.. எல்லோருக்கும் பங்கு உண்டு""எண்பது வயசுக் கிழவிக்கு இப்போத்தான் பால்கோவா கேக்குதாக்கும். அட குடுத்துடும்மா குழந்தைங்களுக்கு""அதெல்லாம் தப்பு அத்தை! எதுவாயிருந்தாலும் எல்லாருக்கும் பகிர்ந்து குடுத்துதான் சாப்பிடணும். உங்களுக்கு மட்டும் இதெல்லாம் சாப்பிடணும்னு இருக்காதா என்ன?"வயதான பெண்மணி ஒரு இனிப்பு சாப்பிட ஏன் இத்தனை வெட்கப்படுகிறாள், ஏன் இவ்வளவு தயங்குகிறாள்? என்பது பிற்பாடு தெரிந்தது. உறவுக்காரப் பெண்மணி ஒருத்தி வீட்டுக்கு வந்திருந்தாள். தட்டில் இனிப்பு ஒமப்பொடி வைத்து எல்லோருக்கும் கொடுத்த தங்கக்கிளி தன் மாமியாரிடத்தும் ஒரு தட்டை நீட்டினாள். அவள் எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தாள். "ஓ! பெரியம்மா இப்போல்லாம் இனிப்பு சாப்பிடறீங்களா? அக்கா இல்லே தங்கம்.. அதுதான் உன் ஓரகத்தி காஞ்சனா இந்த மாதிரி நல்ல பண்டம்லாம் இவங்க கண்ணுலெயே காட்டாது. தன் புருசனுக்கும் தன் குழந்தைகளுக்கும் மட்டும் எடுத்து வெச்சிக்கும். நாம்ப குடுக்கச் சொன்னா, ஆங்! அவங்க வயசுக்கு அவங்க சாப்பிடாத இனிப்பா? இதைத்தானா அவங்க சாப்பிடணும்?னு சிரிச்சிக்கிடே போயிடும். சே! சரியான பொம்பளை!"தங்கக்கிளிக்கு, தன் வீட்டுக்கு வந்த புதிதில் இனிப்பை மறுத்ததன் காரணம் இப்போது தெளிவாக விளங்கியது. ஒன்றிரண்டு நாள் கொடுத்துவிட்டு, பிறகு சின்ன மருமகளும் பெரிய மருமகள் பாடிய பல்லவியைத்தானே பாடப் போகிறாள்?அந்தப் பல்லவியை அவளுக்கும் முன்பாக நாமே பாடிவிட்டால், போகிறது என்று நினைத்திருப்பாளோ? அவளைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. மூத்தவள் காஞ்சனாவை நினைக்க நினைக்க ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. அவள் எப்போதுமே அப்படித்தான். தனக்கும் தன் கணவனுக்கும் தன் குழந்தைகளுக்கும் தண்ணீர் கலக்காத பாலில் காபி கலந்து கொள்வாள். கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி, மாமியாருக்கு ஒரு காபி கொடுத்ததாகப் பெயர் பண்ணிவிடுவாள்.வெட்கமோ, கூச்சமோ இல்லாமல், தங்கக்கிளி பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பதைச் சட்டையே செய்யாமல், அது பாரு தங்கம்.. வயசானவங்க பாரு. திக்குக் காபி செரிக்காது. இதுதான் சுலபமா செரிமானம் ஆகும் என்பாள்.தீய்ந்துபோன தோசை, கரிந்து போன அடை, அடிப்பிடித்துப் போன கூட்டு, கெட்டுப்போன சாம்பார் இவற்றையெல்லாம் கூட "இவைதான் செரிமானம் ஆகும்" என்கிற கணக்கில் தான் கொடுக்கிறாளோ என்று எரிச்சல்படுவாள் தங்கக்கிளி.யாராவது வீடு தேடி வருகிற நண்பர்கள், உறவினர்களிடத்தில், எங்க மாமியாருங்க என்று காஞ்சனா அறிமுகப்படுத்தியதாக வரலாறே கிடையாது. அதுமட்டும் இல்லை. அப்படி யாராவது அவளைத் தேடி வந்தால் மாமியார் வரவேற்பரையில் உட்கார்ந்திருக்கக் கூடாது. உடனே எழுந்து உள்ளே போய்விட வேண்டும். அதே பழக்கத்தில் இங்கேயும் அவள் மாமியார் யாராவது வெளி ஆட்கள் வந்தால், உடனே தன் அறைக்குள் பதுங்கிக் கொள்வாள். "இருங்க அத்தை! நீங்க ஏன் உள்ளே போறீங்க?" என்று தங்கக்கிளி கேட்ட போது மாமியார் அதிர்ந்து போனவளாக அவளையே பார்த்தாள். என்ன இவள்? நிசமாய்க் கேட்கிறாளா? இல்லை, ஏதாவது சண்டைக்கு ஆரம்பம் செய்கிறாளா?யோசனையுடன் நின்றவளை வீட்டுக்கு வந்த எல்லோரிடமும் அறிமுகப்படுத்திவிட்டு, பேசிக்கிட்டு இருங்க அத்தை! காபி கொண்டு வரேன் என்று உள்ளே போனபோது கிழவிக்கு அதிசயமாகத்தான் இருந்தது."இவளுக்கும் காஞ்சனாவுக்கும் ஏணி வெச்சாக்கூட எட்டாது. இவகுணம் என்னிக்கும் இதே மாதிரி இருக்குமா? இருக்கும்னா, நம்பபுள்ளை குடுத்து வெச்சவன்தான். நம்ப புள்ளை என்ன, நான் குடுத்து வெச்சவதான்!" முனங்கிக் கொண்டாள்.காஞ்சனா ஏற்கெனவே அவளுக்குச் சொந்தம்தான். இருந்தாலும் என்ன? அத்தையைப் பார்க்கக் கூடப் பிடிக்கவில்லை அவளுக்கு. நின்றால் குற்றம்; நடந்தால் குற்றம் என்று தவறு கண்டு பிடித்தாள். மாமியார் கொடுமை என்பது மாறி, மருமகள் கொடுமை ஆரம்பித்தது. மரகதம்மாள் மனம் தளராமல் சாமி கும்பிடுவாள்."என் தெய்வங்களே! என் துன்பத்தை நான் யார்கிட்டே சொல்லி அழுவேன்? உங்களுக்கு அன்னாடம் பூப்போட்டு விளக்கேத்தறேனே.. எப்போ விடியும் அகிலாண்டேஸ்வரி..’’வாய்விட்டே புலம்புவாள். காஞ்சனா உதட்டைச் சுழித்துக் கொண்டு பேசுவாள். இந்த அழகில் காஞ்சனாவுக்குக் இறை நம்பிக்கை அதிகமாகவே உண்டு. ஏகப்பட்ட விரதம் இருப்பாள். பாவம் செய்தால் தண்டனை உண்டு என்கிற நம்பிக்கை உண்டு. வேடிக்கை என்னவென்றால், இத்தனையும் உள்ளவள் மாமியாருக்கு மட்டும் நெய் போடாமல், பொரியல் வைக்காமல், தனியாகக் கீழே உட்கார வைத்துச் சோறு போடுவாள்.ஆரம்ப நாட்களில் மரகதம்மாளுக்கே அவள் வெள்ளிக் கிழமைகளில் விரதம் இருப்பதும் கோயில் குளம் போய்த் திரும்புவதும் வீட்டைக் கழுவித் தள்ளுவதும் ஏக பரவசமாய்த்தான் இருந்தது."என் அண்ணன் மவளுக்கு என்னா ஒரு கடவுள் பக்தி பாரு! என்ன பொறுப்பா, பூஜை சாமான்லாம் தேச்சு வெக்கறா" என்று பெருமை கொள்வாள்.நாள் போகப் போக பக்தியும் பொறுப்பும் பூஜை சாமான்களைத் தேய்த்து வைப்பதோடு தீர்ந்து விடுகின்றன என்பது தெரிய வந்தது.மனிதாபிமானமோ, மரியாதையோ இல்லாமல் வெறும் பக்தி மட்டும் இருந்து யாருக்கு என்ன இலாபம்? உண்மையாக பக்தியை அவள் அறிந்திருந்தால், கத்தரிக்காய்ப் பொரியலிலும் அவரைக்காயப் பொரியலிலும் வித்தியாசம் காட்டுவாளா? சாம்பாரில் தண்ணீர் ஊற்றிக் கொடுப்பாளா? த்தூ..அப்புறம்  இவள் கோயிலுக்குப் போய் என்ன? குளத்துக்குப் போய் என்ன? எந்தக் கடவுள் இவள் பக்தியை மெச்சிக் கொள்வார்? "அன்பே சிவம்" என்பதற்கு பொருள் தெரியுமா?மரகதம்மாளுக்கு அவளின் ஆத்திக வேடம் அலுப்பையும் ஆற்றாமையையும் கொடுத்தது. அந்த நேரத்தில்தான் இளைய மருமகளாகத் தங்கக்கிளி வந்து சேர்ந்தாள். அவளோ பக்தி, பூசை, கோயில், விரதம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பாள். இது வேறு புதிய தொல்லையா?முதலில் அவளிடம் வரப் பெரிதும் பயந்தாள் மரகதம்மாள். மூத்த மருமகளிடம் பட்ட அனுபவம் காதுக்கருகில் கவனமாயிரு என்று எச்சரித்துக் கொண்டே இருந்தது.நாளாக, நாளாகச் சின்ன மருமகளின் குணம் புரிந்து போயிற்று."என்ன தங்கம், என்ன இது..?""வடை சாம்பார்…""இப்பவா?""ஆமாம் அத்தை! நேத்து நானும் உங்க புள்ளையும் ஓட்டல்லே வடை சாம்பார் சாப்பிட்டோம். உங்களை எல்லாம் விட்டுவிட்டு சாப்பிடறமேன்னு இருந்தது. அதுதான் இதோ இப்போ செய்துட்டேன்.."  அதுதான் தங்கக்கிளி."அத்தை! இன்னும் ரெண்டு போட்டுக்குங்க. ஏங்க! நீங்க இன்னும் ஒரு வடை வெச்சுக்குங்களேன்.. பசங்களா.." மரகதம்மாள் அவள் உபசரிப்பைப் பார்த்து உள்ளபடியே பரவசப்பட்டுப் போனாள்."ஏங்க! நீங்க இல்லாமே போயிட்டீங்களே.. குத்துவிளக்காட்டமா மருமக வந்திருக்கிறாய்யா! வாய்க்கு வாயி அத்தை அத்தைன்னு கூப்பிட்றா.. பாசமா "சாப்பிடுங்க, சாப்பிடுங்க"ன்னு பார்த்துப் பார்த்து வெக்கறா.. நீங்க இருந்திருந்தா என்னமா சந்தோசப் பட்டிருப்பீங்க? கடவுளே! உங்களை அந்தப் பாழாப்போன எமன் எடுத்துக்கிட்டுப் போயிட்டானே!"அன்று நெடுநேரம் மரகதம்மாள் கணவனை நினைத்து நினைத்து அழுதுக் கொண்டிருந்தாள். "நீ கிளம்பும்மா.. நான் இங்கியே நிக்கறேன்..""என்ன அத்தை இது? ஏன் நீங்க ஓரமா ஒதுங்கி நிக்கிறீங்க? நீங்க பாட்டுக்கு உள்ளே வாங்க..""அய்யோ.. அது எப்படியம்மா..? கட்டுக் கழுத்தியா இருக்கிறவங்க எதிர்லே வந்தா, அது நல்லது. நான் இப்படி ஆயிட்டவ.. எதிர்லே வரலாமா?""நீங்க தாராளமா வரலாம்! மாமா தவறிவிட்டதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க? வாங்க அத்தை" "எப்படிம்மா எதிர்லே வர்றது..""எங்கம்மா என் எதிரிலே வந்தா அது அபசகுணமாயிடுமா? அது மாதிரிதானே அத்தை நீங்க வர்றதும்"அந்த வார்த்தையைக் கேட்டதும் மரகதம்மாள் நெகிழ்ந்து விட்டாள். காஞ்சனா எப்படியெல்லாம் அவமானப்படுத்தி இருக்கிறாள்? "என்ன நீங்க உங்க பிள்ளை ஆபீசுக்குக் கிளம்பிட்டு இருக்கிறார். நீங்க பாட்டுக்கு எதிர்லே வரீங்க. எனக்குத் திக்குன்னு ஆயிட்டுது..""நான் கவனிக்கலேம்மா.."மாபெரும் பாதகத்தைச் செய்து விட்டதைப் போலக் கூனிக் குறுகி நின்றாள் மரகதம்மாள்."அது எப்படிக் கவனிக்கலேங்கறது? போற பிள்ளை நல்லபடியா வீடு திரும்பணுங்கற எண்ணம் இருந்தா, இப்படிப் பண்ணுவீங்களா? அந்த அளவுகு அலட்சியம். நம்பளைதான் ஆண்டவன் முடக்கி மூலைலே ஒக்கார வெச்சிட்டானேங்கற எண்ணம் வேண்டாம்?"கண்ணிலே நீர் சோர நிற்கும் மரகதம்மாளின் தோற்றம் கற்பாறையையும் கனிந்துருகச் செய்யும். ஆனால் காஞ்சனாவுக்குக் கனியவும் தெரியாது; உருகவும் தெரியாது."என்ன அத்தை? ஏன் ஒக்காந்திருக்கீங்க? தூக்கம் வரலையா? என்ன யோசனை? ஏதாவது கவலையா?""எனக்கென்னமா கவலை? போற நேரத்திலே சுகப்படணும்னு இருக்குதுபோல.. நீதான் பெத்த பொண்ணாட்டம் பார்த்துக்கிறியே!""அத்தை, நல்ல இருக்கிறப்போ நிம்மதியா வெச்சுக்கணும். பேரக் குழந்தைகளைக் கட்டுப்படுத்தாமே ஆடவிடணும்; பாட விடணும். பெத்த புள்ளையோட பிரியமாப் பேச விடணும். நல்லபடியா சோறு போட்டு நல்லா வெச்சுக்கணும். அதெல்லாம் பண்ணாமே, போனப்புறம் படத்துக்கு மாலை போட்டு, திதி குடுக்கிறதுலே என்ன அத்தை பயன் இருக்கு? வாழற காலமெல்லாம் நரக வேதனையிலே நசுங்க வெச்சுட்டு, திதியன்னிக்கு மந்திரம் சொன்னா, ஆத்மா சாந்தியடைஞ்சிடுமா?"மரகதம்மாள் மருமகளின் கையைப் பற்றிக் கொண்டாள். தெரு விளக்கின் மெல்லிய வெளிச்சம் நிழலுருவம் போல் இருவரையும் காட்டிற்று. எங்கோ கடிகாரத்தில் டாண்டாண் என்று இரண்டு முறை மணியடித்தது."நெசம்தான்! நெசம்தான் தங்கம் அதெல்லாம் வெறும் சடங்கு. அவ்வளவும் வேசம். ஒங்க ஓரகத்தி இருக்களே அவ குடுப்பா திதி அட்டகாசமா.. நான் போயிட்டா. நீ நிச்சயம் என் படத்தை வெச்சிக் கும்பிட மாட்டே; திதி குடுக்கமாட்டே! எனக்குத் தெரியும். என்ன இப்போ? இருக்கிற காலத்துலே என்னை நீ ரொம்ப மேன்மையா வெச்சிருக்கிறேயே, அது போதும். இதெல்லாம் பார்க்கிறப்போ ஒரு மனுசன் இறைநம்பிக்கை இல்லாமல் இருந்தாலும் பரவாயில்லை; மனிதாபிமானத்தோட வாழ்ந்தா அதுவே போதும்னுதான் நினைக்கிறேன்.நீ சாமி கும்பிட்றதில்லையேன்னு முதல்லே நான் கவலைப் பட்டேன். இப்போ, இத்தனை ஆண்டுக்கப்பறம் தெரியுது.. உன் கடமையை சரியா செய்துகிட்டிருக்கிற நீ ஏன் சாமி கும்பிடணும்? அந்தச் சாமியே பூலோகம் வந்து உன்னைக் கும்பிடும்!"மருமகள் தலையைத் தொட்டு ஆசி நல்கிய போது மரகதம்மாளுக்கு உணர்ச்சிப் பெருக்கால் குரல் கம்மியது. மூக்கு விடைத்துக் கொண்டது; கண்கள் கலங்கின.பழைய நினைவுகளில் ஆழ்ந்திருந்த தங்கக்கிளி அத்தையைப் பற்றிய இனிய நினைவுகளுடன் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினாள். அக்கம் பக்கத்தில் பெண்கள் பேசிக் கொண்டார்கள்."ஏண்டி, இவள்லாம் ஒரு பொம்பளையா? ஆங்! சாமி பூதம் இல்லேன்னா! சரி விடு! அட மாமியாருக்குத் திதியாவது குடுக்கணுமில்லை! அட! வடை பாயாசம் செய்து படைக்கணுமில்லே! ச்சீ! பொம்பளையாடி இவ.. த்தூ…"  - அரசு மணிமேகலை, சென்னை"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி