வன்மச் சுவடுகள் - தமிழ் இலெமுரியா

18 August 2015 10:51 am

வெவ்வேறு சமுகத்தால்  ஒதுக்கப்பட்டு, வெவ்வேறு சமுகத்தைச்  சேர்ந்த காதல் இணையர்  (ஜோடி). காதலை வென்று வாழ்க்கையை வெல்லப் போராடிக் கொண்டிருந்தவர்களுக்கு தடைக்கல்லாய்  இருந்தவர்கள்  இவ்விருவரின்  சாதிச் சமுகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பல இன்னல்கள் தரவே, ஊரின் எல்லையில்  தங்கி வாழ்வை துவங்கினர். நண்பர்களின்  உதவியால்  பக்கத்து நகரத்தில்  முத்துவிற்கு வேலை  கிடைத்தது. மணிமேகலையும்  அவருக்கு பல விதத்தில்  உதவியாக இருந்தாள். ஊரை விட்டு அவர்களை ஒதுக்கி வைத்ததால் உறவினர்களின்  நல்லது கெட்டதுகளில்  கூட கலந்து கொள்ள முடியாத நிலை. இவ்வாறு சென்று கொண்டிருந்த அவர்களின்  வாழ்வின்  விடிவெள்ளியாய் எழில்  பிறந்தாள். அவள்  பிறந்த நேரமோ முத்துவுக்கு புதிய தொழில்  செய்யும் வாய்ப்பு கிட்டியது. அவள் வளர வளர முத்துவின் தொழிலும் வளர்ச்சியடைந்தது. அவர்களின் பொருளாதாரம் உயர்ந்த நிலையிலும் அவ்வூரினர்  அவர்களை ஏற்கவில்லை. அவ்வளவு சாதியக்  கட்டுப்பாடுகளைக் கொண்டது. அவர்களின்  பெற்றோரும்  அடுத்தடுத்த பிள்ளைகளின்  வாழ்வை எண்ணி சேரவில்லை. இப்படி காலங்கள்  கடந்தது. எழில் பூப்படைந்தாள். அவளின் நன்னீராட்டு விழாவை விமரிசையாக கொண்டாட வேண்டுமென முத்துவுக்கு ஆசை. அதனால்  ஊரில்  சிக்கல் வருமோ என எண்ணி, அத்திட்டத்தை கைவிட்டு விட்டார். அவரது விருப்பத்தை தன்  நண்பர்  வேலனிடம்  கூறினார். அது எப்படியோ முத்துவின்  தூரத்து உறவினரின்  காதை எட்டியது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, எழிலின் சொத்துகளை அபகரிக்க திட்டம்  தீட்டினான்  காளி. வெகுநாளாக காத்துக் கொண்டிருந்த சந்தர்ப்பம்  தானாகவே அமைய, முத்துவை நேராக சந்திக்கச் சென்றான்  காளி. உறவு முறையில்  காளி முத்துவுக்கு தம்பி. தம்பியின்  வருகை இன்ப அதிர்ச்சியாய்  இருந்தது. வெகுநாட்கள்  கழித்து சந்தித்தப்பின் பல விசயங்கள், நல விசாரிப்புகள்  என நடந்தது. பிறகு எழிலுக்கு நன்னீராட்டு விழா செய்யுமாறு கூறினான் காளி. ஊர் கட்டுப்பாடு, சாதியக் கோட்பாடு இதையெல்லாம்  மனதில்  வைத்து மறுத்தார். தான் வேறு சமுகத்தைச்  சேர்ந்த மணிமேகலையை திருமணம் செய்ததால்  யாரு வருவார்கள். நன்னீராட்டு விழா என்பது உறவுகள் கூடி ஒன்றாக நடத்தும் ஒரு விழா. அப்படியே வைத்தாலும் முத்து, மணிமேகலையின்  உறவினரிடையே தகராறு வருமோ என அஞ்சினார். தான் மணிமேகலையை திருமணம் செய்தது, முத்துவின் சமுகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பிடிக்கவில்லை, மணிமேகலை தரப்பிலும் அது பிடிக்கவில்லை. இரு தரப்பினரையும்  அழைக்க வேண்டும். அழைத்தால் கண்டிப்பாக சிக்கல் வரும். அதனால் வேண்டாமென முத்து மறுத்தார். ஆனால்  காளியோ வீட்டில் இது போன்ற நல்ல காரியம்  நடைபெறும் நேரத்தில்  அழைத்தால் தான்  உறவு கூடும்; பகையும் சங்கடங்களும் மறையும். அதோடு தங்களின்  காலத்திற்கு பிறகு எழிலுக்கு சொந்த பந்தம் வேண்டும் என்று சர்க்கரை தடவி பேசி சமாதானமும் செய்தான். அத்துடன் அனைவரையும் அழைக்கும் பொறுப்பையும் தானே ஏற்பதாகக்  கூறினான்  காளி. எழிலை எண்ணி முத்துவும் சம்மதம் தெரிவித்தார். அன்று மாலை மிக உற்சாகமாக வீட்டிற்கு சென்றார் முத்து. அலுவலகத்திற்கு காளி வந்ததையும், அவன் சொன்ன விசயங்கள் அனைத்தையும்  மணிமேகலையிடம்  கூறினார். அவள்  முதலில்  மறுத்தாலும் பின்பு உற்றார், உறவினருடன்  இணைய அரிய வாய்ப்பாக  உதவும்  என்பதால் மகிழ்ச்சியாக சம்மதித்தாள்.  மறுமுனையில்  காளியும்  வீட்டிற்கு சென்று தன்  மனைவியிடம்  திட்டத்தை கூறினான். அருக்காணி அதற்கு மறுத்தாள். ஏனெனில் அவர்கள் இருவரும் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு உதவ போய்  நமக்கு எதுவும்  சிக்கல்  வந்தால், நம்  மூன்று பெண்  பிள்ளைகளை யார் காப்பாற்றுவது என பொருமினாள். உடனே காளி ஏண்டி அவங்களுக்கு உதவ நான்  என்ன முட்டாளா? அத பயன்படுத்தி நாம எப்படி முன்னேற முடியும்  என்பதத்தான்  பார்க்கணும். நமக்கு இந்த வாய்ப்ப விட்டா நம்ம பிள்ளைகள கர சேர்க்க முடியாது" என்றான்.  அருக்காணி "என்ன பண்ண போறீங்க"  "ரெண்டு சாதி தலைவர்களையும்  பார்த்து பேசணும். நமக்குதான்  முதல் உரிமை என்று ரெண்டு பேரையும்  சம்மதிக்க வைக்கணும். அப்பறம்  என்ன, முத்து பணக்காரன்  என்பதால்  ரெண்டு தலைவர்களும்  முத்துவை தங்கள் பக்கம் கொண்டு வர வேண்டும்ன்னு சரின்னு சொல்லுவாங்க. அப்பறம் ஊருக்காரங்க, உறவுக்காரங்க எல்லாம்  வந்துருவாங்க" "சரி அதுக்கும்  நம்ம சொத்த எழுதி வாங்குறதுக்கும்  என்ன சம்மந்தம்" "நான்  இப்போ சொல்லப்  போற விசயம்  உனக்கு அதிர்ச்சியாய்  இருக்கும். ஆனா இதை விட்டா வேற வழியில்லை. நல்ல காரியம் நடக்கும் போது, சாதி சண்டைய கௌப்பி விட்டுட்டு, நம்ம ஆளுகள கொஞ்சம்  பேரை வச்சு முடிச்சுர போறேன். அப்பறம்  சொத்து நமக்குதான்""சரிங்க எதுவானாலும்  பார்த்து பண்ணுங்க" என்றாள். மறுநாள் காளி எழிலின்  பூப்பு நன்னீராட்டு விழாவின்  ஏற்பாடுகளோடு தன் திட்டத்தை செயல்படுத்த அனைத்து காரியங்களிலும்  ஈடுபட்டான். அனைத்தும் முடிவடைந்து அந்த நன்நாளும் வந்தது. எழிலின் வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. முத்துவும் மணிமேகலையும் அளவு கடந்த மகிழ்ச்சியில் உற்றார், உறவினர்  என அனைவரையும்  அழைத்தனர். இரு வேறு சமுகத் தலைவர்கள்  உட்பட அவர்களின்  பெற்றோரும்  பல ஆண்டுகள்  கழித்து இணைந்தனர். எழிலோ அலங்கரிக்கப்பட்ட அம்மனைப் போல்  மிக பிரகாசமாயிருந்தாள். அவளை மேடையில் அமர்த்தினர். சீர்வரிசைகள் ஒவ்வொன்றும்  அனைவரையும்  ஆச்சரியப்படுத்தும்  வகையில்  இருந்தது. செய்முறை செய்வதில்  தொடங்கியது குழப்பம். முத்துவின்  உறவினர்கள், அவர்களின்  முறைப்படி சீர்  செய்ய வேண்டும்  என்றும்  மணிமேகலையின் உறவினர்கள்  அவர்களின் முறைப்படி சீர்  செய்ய வேண்டும் என்றும் கூறியதால் குழப்பம்  பெரிதாகி, அது கடைசியில்  என்  சாதிதான்  பெரியது; உன் சாதிதான் சிறியது என்று சண்டையாக உருவெடுத்தது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். முத்து பயந்தது போலவே ஆகியது. முத்து எழிலை ஒரு அறையில் வைத்து பூட்டி விட்டு சண்டையை நிறுத்த முயன்றார். மணிமேகலையை தேடினார். அவ்வேளையில்  காளி தன்  காரியத்தைச் சாதிப்பதற்காக ஆட்களை ஏவினான். ஒவ்வொருவரும்  தங்களின்  உயிரைக்  காப்பாற்றிக்  கொள்ள ஓடினர். சண்டையின்  முடிவில்  பல உயிர்கள்  மண்ணில்  சரிந்தன. விழாக்கோலம் மூண்ட அம்மனை, சுடுகாடு போல காட்சியளித்தது. எங்கும்  அழுகுரலும் குருதிக் கரையுமாக இருந்தது. இறுதியில் முத்து, மணிமேகலை, காளி மூவரும் இறந்திருந்தனர். எழில்  அவர்களின்  உடலை கண்டு கதறினாள். அவளுக்கு ஆறுதல்  கூறக்  கூட ஆளில்லாமல்  நிர்கதியாய் நின்றிருந்தாள். அருக்காணியும் அக்கலவரத்திற்கு மூலக் காரணமான காளியை இழந்து வாடினாள்.  அவ்வன்மச் சுவடுகள் மறைவதற்கு நாட்கள் ஆகியது. எழிலால்  தன்  பெற்றோரின் மறைவை மறக்க முடியவில்லை. முத்துவின் குடும்பத்துக்கு காளி உதவியதால் அவனது குடும்பத்தையும் ஊரை விட்டு ஒதுக்கி விட்டனர். தங்களால்தான் அருக்காணிக்கு இப்படி ஒரு நிலை என்று அவளும் அவர்களை சேர்த்துக் கொண்டாள். ஆனால் எழிலின் சொத்துகளை பறிக்கத்தான் வந்துள்ளாள் என்பதை அப்பேதை அறியவில்லை. அருக்காணி தன் பிள்ளைகளை விட எழிலின்  மீது பாசமழை பொழிந்தாள். எழிலும் அருக்காணியின்  மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்தாள். அவளின் பிள்ளைகளுக்கு வேலனின் மூலம் மாப்பிள்ளை பார்த்து திருமணம்  நடத்தி வைத்தாள். ஆனால்  அருக்காணியின் சுய ரூபம்  வேலனுக்கு தெரியும்  படியான நிகழ்வுகள்  பல நடந்தன. நாட்கள்  நகர்ந்தன. எழிலும்  தன்  பழைய வேதனைகளை மறந்து, இயல்பு வாழ்க்கைக்கு மாறிய தருணத்தில்  அருக்காணியின்  பிடி ஓங்கியது. எழிலின் சொத்துகள், அலுவலின்  வரவு செவுகளை தன்  வசப்படுத்த முயன்றாள். அதன்படி ஒரு நாள்  வேலன்  வீட்டிற்கு வந்த வேலையைப்  பயன்படுத்தி, தன்னை பலவந்த படுத்த முயன்றதாக நாடகமாடி, வீட்டை விட்டு வெளியேற்றியதுடன்  அலுவலக வேலைகளிலிருந்தும்  நீக்கினாள். தனக்கு சாதகமான ஒருவரை அமர்த்தினாள். சொத்துகளின் அனைத்து வரவு செலவுகளையும்  தன்  கட்டுக்குள்  கொண்டு வந்தாள். அருக்காணியின் சுயரூபம் கொஞ்சம்  கொஞ்சமாக எழிலுக்கு தெரிய வந்தது. அது மட்டுமல்லாது எழிலின் ஒவ்வொரு செயல்களையும் ஓர்  ஆள்  வைத்து உளவு பார்த்தாள். அனைத்தும் எழிலுக்கு தெரிந்தும் அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. வேலன் எழிலை எச்சரித்தார். எங்கு அருக்காணியால்  எழிலின்  உயிருக்கு எதும்  ஆபத்து வந்து விடுமோ என்று. அவ்வேளையில்  தான்  அமலின்  அறிமுகம்  எழிலுக்கு கிடைத்தது. அவளின் ப்ராஜெக்ட்  காரணமாக சந்தித்தாள். வகுப்புத் தோழி அனிதாவின்  சகோதரர். அவர்களுக்கு பெற்றோர் கிடையாது. அமல் படித்த பட்டதாரி. வேலை இல்லாததால், சிறு சிறு வேலைகள்  செய்து தங்கையை படிக்க வைத்தான். ப்ராஜெக்ட்  விசயமாக சந்தித்த சந்திப்பு பிறகு நல்ல நட்பாக மாறியது. அமல் எழிலுக்கு பல வகையில்  உதவிகரமாக இருந்தான். அருக்காணியின்  பிடியில் எழில்  சிக்கி தவிக்கும்  சமயத்தில்  ஆறுதலாகவும்  இருந்தது அவனது நட்பு. இச்செய்தி அருக்காணியின்  காதுக்கு எட்டியது. எங்கு எழில்  அமலை விரும்பி விடுவாளோ என அஞ்சினாள். அன்று கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய எழிலை அருக்காணி விசாரித்தாள். எழில்  எவ்வளவோ கூறியும்  அவள்  பதிலை அருக்காணி கேட்பதாய் இல்லை. அவன் தாழ்த்தப்பட்ட சமுகத்தைச் சார்ந்தவன். அவனுடன்  நட்பு பாராட்ட வேண்டாம்  என்று கூறினாள். அதைக் கேட்டவுடன், அவ்வளவு நாட்கள் பொறுமை காத்த எழில், அன்று பொங்கி எழுந்தாள். ஏனென்றால்  சாதி என்ற ஒன்றால்தான் தன் பெற்றோரை இழந்தாள். அதை சற்றும்  எதிர்பாராத அருக்காணி ஆடிப்  போனாள். இதை இப்படியே விட்டால் நாளை நமக்கே ஆபத்தாக மாறிவிடும் என எண்ணி, மறைமுகமாக காவல் நிலையத்தில்  அமலின்  மீது பொய்  வழக்கு போட்டாள். அதோடு அமலைக் கொல்லவும் முயற்சித்தாள். ஆனால் அது பலிக்கவில்லை. அருக்காணி அதோடு அல்லாமல் ஊர் தலைவர்களிடம் வேறு சமுகத்தைச் சேர்ந்த பெண்ணை விரும்புவதாகக் கூற, அவர்கள்  அமலையும் அவன் தங்கையையும்  ஊரை விட்டு ஒதுக்கி விட்டனர். அன்றாடம்  உணவுக்கே சிரமமாயிற்று. இச்செய்தியறிந்த எழில்  அமலை காப்பாற்றுவதற்கு வேலனின்  உதவியை நாடினாள். வேலனின்  உதவியோடு அமலை வெளியே கொண்டு வந்தாள். அத்துடன் அவளை மருத்துவமனையில் சேர்த்து அவளே உடனிருந்து கவனித்துக் கொண்டாள். தன்னால்தான் அமலுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டத்தை எண்ணி வருந்தினாள். அதற்கு தீர்வு காண எண்ணினாள். மறுநாள் அதிகாலையில்  எழுந்து, யாரிடமும்  சொல்லாமல்  நேராக அமலின்  வீட்டிற்குச் சென்றாள். அமலை திருமணம்  செய்ய விரும்புவதாகக்  கூறினாள். அமல் முதலில்  மறுத்தார். ஏனென்றால்  எழில்  பணக்காரப்  பெண். அதுவும்  உயர்ந்த சாதிக்காரப் பெண். தானோ ஏழை. அதுவும்  தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் என்பதால்  மறுத்தான். பிறகு எழிலின்  நிலையை எண்ணி சம்மதித்தான். இருவரும் வேலனின் வீட்டிற்குச் சென்று, நடந்தவற்றைக் கூறினர். நிலைமையை உணர்ந்த வேலன், இவ்வாய்ப்பை பயன்படுத்தி, அருக்காணியிடமிருந்து எழிலை காப்பாற்ற எண்ணினார். யாருக்கும் தெரியாமல்  அவர்களுக்கு பதிவு திருமணம்  செய்து வைத்தார். அருக்காணிக்கு அது பெரும்  அதிர்ச்சியைத்  தந்தது. ஏனெனில்  எழிலுக்கு திருமணமானால் அவளின்  சொத்துகளை பராமரிக்கும்  பொறுப்பு, அவளின்  கணவனையே சாரும். அமலும்  எழிலும்  மணக்கோலத்தில்  நுழைந்தனர். வேலன்  அருக்காணியையும் அவளது பிள்ளைகளையும்  வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறினார். அவளது அதிகாரம், பணக்கார வாழ்க்கை, வசதி வாய்ப்பு அனைத்தும்  பறிபோனதை எண்ணி வருந்தினாள். அவர்கள்  எல்லாரையும்  பழிவாங்க வஞ்சம்  கொண்டாள். எழிலும்  அமலும்  தங்களின்  இல்வாழ்க்கையை துவங்கினர். எழில்  தன் படிப்பினை முடித்து, நல்ல இல்லத்  தலைவியாய்  விளங்கினாள். அமலும் எழிலின்  அலுவல்  பொறுப்புகளை ஏற்றுக்  கொண்டான். அமலின்  தங்கையை நல்ல குடும்பத்தில்  திருமணம்  செய்து வைத்தனர். இப்படி மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்த அவர்களது வாழ்வில் புது வரவுக்கான அடித்தளம் அமைந்தது. எழில்  கருவுற்றிருந்தாள். அமல்  அவளை கண்ணின்  கரு விழி போல காத்தான். அப்பா முத்துவிடம்  உணர்ந்த பாதுகாப்பையும்  அன்பையும் அக்கறையையும் அவனிடம் உணர்ந்தாள். பெற்றோரை இழந்து வாடிய அவளுக்கு அவனின்  அன்பு ஒரு புதிய பரிமாணத்திற்கே அழைத்துச்  சென்றது. நாட்கள்  நகர்ந்தது. அவர்கள்  இருவருக்கும்  அழகிய தீரன்  பிறந்தான். தீரனின் வருகை அவர்களின்  வாழ்வை மேலும்  வசந்தமாக்கியது. வெகுநாளாக காத்திருந்த வாய்ப்பு இன்று அமைந்தது குழந்தையின்  பெயர் சூட்டும் விழாவை ஊரின்  பொது கோயிலில்  ஏற்பாடு செய்திருந்தனர். அங்கு ஒரு தரப்பினர்  அமலை கோயிலுக்குள்  அனுமதிக்க மறுத்தனர். ஊரை விட்டு ஒதுக்கப்பட்டவன், அதுவும்  ஊர்  கட்டுப்பாட்டை மீறி உயர்  சாதிப் பெண்ணை திருமணம்  செய்தவன், கோயிலுக்குள்  வருகிறாயா? என தகராறில்  ஈடுபட்டனர். அமலின்  சமுகத்தைச்  சேர்ந்தவர்கள்  பரிந்து பேசினர். தகராறு பெரிதாகவே, பெரிய சாதிக் கலவரமாக மூண்டது. இது போன்ற ஒரு சாதிக் கலவரத்தில்  தன் பெற்றோரை இழந்தது அவளது கண் முன்னே வந்து சென்றது. அப்படியே குழந்தையுடன் மயங்கி விழுந்தாள். கலவரத்தின் முடிவில்  பல உயிர்கள் மாண்டனர். மருத்துவமனையில் எழில் கண்விழித்துப் பார்த்தாள். சுற்றும் முற்றும் அமலை தேடினாள். வேலனிடம் வினவினாள். அமல் இறந்து விட்டதாகக்  கூறினார். தலையில்  இடி இறங்கியதைப்  போல்  உணர்ந்தாள். கத்தினாள். கதறினாள். ஊருக்கு கொண்டு சென்றால்  மேலும்  சிக்கல்  வருமோ என எண்ணி இறுதி காரியங்களை அங்கேயே செய்து அமலின்  உடலை அடக்கம் செய்தனர். இப்படியே மாதம்  கடந்தது. வீட்டின்  அனைத்து இடங்களிலும்  அமலின் முகமாகத் தெரிந்தது. தனிமையில் வாடினாள். மீண்டும் அருக்காணி வீட்டிற்குள் நுழைய முற்பட்டாள். நடந்த அனைத்தும் அருக்காணியின் மறைமுக திட்டத்தின்  பெயரில்தான்  என்பதும்  சொத்திற்காகத்தான்  செய்தாள் என்பதும் எழிலுக்குத்  தெரியும். தன்  சொத்துகளை அருக்காணியின்  பெயரிலும் ஒரு பங்கு வேலனின் பெயரிலும்  எழுதி அவளின்  கையில்  கொடுத்தாள். வீட்டை விட்டு வெளியேறி கால் போன போக்கில் நடந்தாள். ஊரைக் கடந்து எல்லையில், மரத்தின்  அருகில் அமர்ந்தாள். சிறிது நேரம் இளைப்பாறினாள். குழந்தை அழவே பாலூட்டிய படியே தன் வாழ்வில் ‘சாதி’ என்ற இரண்டெழுத்து வார்த்தை தன்  பெற்றோரையும்  கணவனையும் பலி கொண்டதை எண்ணிக் கலங்கினாள். இந்த சாதி சமுகத்தினால்  தான்  பெற்ற துன்பங்களையும்  இழந்த இழப்புகளை இனி தன் குழந்தை பட வேண்டாம் என கிணற்றில் குழந்தையுடன் குதித்து தற்கொலைச்  செய்து கொண்டனர். இறப்பதற்கு முன்பு தன்  மகன்  தீரனிடம் "இனியாவது சாதியில்லா உலகில்  பிறப்போமடா!" என்றாள்  அந்த பேதை. இவளைப்  போன்று எத்தனையோ பெண்கள், குடும்பங்கள் சாதி என்கிற ஒன்றால் தங்களின்  வாழ்வை தொலைக்கின்றனர். தினமும் இது போன்ற இனக் கொலைகளும், தற்கொலைகளும் நடந்த வண்ணம்தான் இருக்கின்றன. விலங்குகள் கூட உணவுக்காக தன்  பலத்தைக்  கொண்ட மற்ற உயிரினங்களைக் கொன்று உண்டு வாழும். ஆனால் மனிதன்தான் ‘சாதி’ என்கிற பெயரில் ஒருவரை இன்னொருவர்  அடிமைப்படுத்துகிறான். இந்நிலை மாற வேண்டும்; சாதி இல்லா சமுதாயத்தை உருவாக்குவோம். சமத்துவம்  பரப்புவோம். – செல்வம்  கந்தசாமி, நவிமும்பை"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி