அழிந்து வரும் அடையாளங்கள் - தமிழ் இலெமுரியா

17 February 2015 11:56 am

பண்டைய காலத்தில் நம் வாழ்வில் தவிர்க்க முடியாத அடையாளங்களாக இருந்தவை இன்று தவிர்க்கப் பட்டு வருகின்றன. அவற்றில் நமது வீட்டுத் திண்ணைகளும் சுமைதாங்கிகளும் நம்முடன் விடை சொல்லிப் பிரிந்து விட்டன.  நாம் நமது சிற்றூர்களுக்குப் போகும் போது சில வீடுகளில் திண்ணைகள் இருப்பதைக் காணமுடிகிறது. புதிதாகக் கட்டப்படுகின்ற வீடுகளில் திண்ணைகள் இருப்பது இல்லை. திண்ணைக்காக ஒதுக்கப்பட்ட இடம் வீட்டிற்குள் போய்விட்டது. நமது பழைய கட்டடக் கலைக்கும் இன்றைய கட்டடக் கலைக்கும் வந்த மாறுதல் திண்ணைகள் காணாமல் போனதுதான். உணவு உண்டு ஓய்வு எடுப்பதற்கும் ஊர்க்கதைகள் பேசுவதற்கும் திண்ணைகள்  உதவியாக இருந்தன. ஊர்ப் பெரியவர்கள் ஊர் விவகாரங்கள் பேசுவதற்கும் கோயில் மண்டபங்கள் இருந்தன. பெரிய கோயில் மண்டபங்கள் இல்லாத ஊர்களில் வீட்டுத் திண்ணைகள்தான் பொது இடங்களாக இருந்திருக்க வேண்டும். இன்று இருப்பதைப் போல பழைய காலத்தில் உணவு விடுதிகளும் தங்கும் விடுதிகளும் இருக்கவில்லை. வெளியீர் பயணிக்கும் விவசாயிகள், வணிகர்கள் மற்றும் பெரிய ஊர்களில் பெரிய கோயில்களுக்கு வந்து செல்லும் பக்தர்கள் தங்கியிருக்க சத்திரங்கள் இருந்திருக்கின்றன. சத்திரங்கள் இல்லாத ஊர்களில்  திண்ணைகள் தான் தங்கும் விடுதிகளாக, இரவுத் தங்கலுக்கு உதவி இருக்கின்றன. அறிமுகம் இல்லாத ஒருவர் வீட்டிற்கு  வரும் போது வீட்டிற்குள் அழைத்து இருக்கச் சொல்லிப் பேசுவதும் உண்ண உணவு தருவதும் நல்லது அல்ல என்று எண்ணுபவர்களுக்குத் திண்ணைகள்தான் உதவியாக இருந்தன. ஊருக்குள் இரவு நேரங்களில் வருபவர்களுக்கும் ஊருக்குப் புதிதாக வருபவர்களுக்கும் திண்ணைகள்தான் இரவு தங்கலுக்கு ஏற்ற இடமாக இருந்திருக்கின்றன. இரவு தங்கிவிட்டு விடிந்த பிறகு எழுந்து செல்லும் அறிய வாய்ப்பினை திண்ணைகள்  வழங்கியிருக்கின்றன. அதனால் வீட்டுக்காரர்களின் பாதுக்காப்பிற்கு எந்தவித இடையூறும் நேராதவண்ணம் வழிப் போக்கர்களுக்குத் திண்ணைகள் உதவியாக இருந்திருக்கின்றன. வீட்டுக்காரர்களுக்குத் தெரிந்தும் தெரியாமலும் வழிப்போக்கர்களுக்குத் திண்ணைகள் பாதுகாப்பை வழங்கிய இடமாகவும் இருந்து இருக்கின்றன. விலைபெறாமல் தங்கும் வசதியைத் தந்தன அன்றைய திண்ணைகள். இன்றைய விடுதிகள் விலை பெற்றுக் கொண்டு தங்கும் வசதியை வழங்கி வருகின்றன. நமது விளை நிலத்தில் பயிர் செய்து கிடைத்த விளை பொருள் மூட்டைகளையும் கன்றுகளுக்கான தீவனங்களையும் கொண்டு செல்ல கட்டை வண்டிகள் இருந்தன. கட்டை வண்டி இல்லாத எளியவர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை ஓர் இடத்தில் இருந்து வேறொர் இடத்திற்குக் கொண்டு செல்ல தலைச் சுமையாகத்தான் கொண்டு போக வேண்டும். அப்படிக் கொண்டு போகும் போது நீண்ட தொலைவிற்கு ஒருவரால் இறக்கி வைக்காமல் கொண்டு போக முடியாது. தலைச் சுமையால் வரும் கழுத்து வலியையும் கால் வலியையும் குறைக்க சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டும். பிறகு மீண்டும் தலையில் ஏற்றி சுமந்து செல்ல வேண்டும். சுமை சிறியதாக, எடை குறைந்ததாக இருந்தால் இறக்கி வைத்தவர் வேறு யாருடைய துணையும் இல்லாமல் தலையில் ஏற்றி வைத்து கொள்ள முடியும். ஒருவரால் ஏற்றமுடியாத, பெரிய சுமையாக இருந்தால் உதவிக்கு ஆள் தேவைப்படும். உதவிக்கு ஆள் கிடைக்கும் வரை பெரிய சுமையை தனியொருவரால் தூக்க முடியாமல் இருந்தால் என்ன செய்வது? அதற்குத் தான் நம் பெரியவர்கள் சாலையோரம் சுமை தாங்கிகளை அமைத்து தலைச் சுமைக்காரர்களுக்கு உதவியிருக்கிறார்கள். இரண்டு பரந்த பாறைக் கற்களை நட்டு, அந்த கற்களுக்கு மேல் மற்றொரு பாறையை கிடத்தி வைத்தால் சுமைதாங்கி ஆகிவிடும். அவை ஆள் உயரத்திற்கு இருக்கும்படி அமைக்கப்பட்டு இருக்கும். கனமான பொருளை அதன்மேல் இறக்கி வைக்கும் படியாகவும் வேறு ஒருவர் துணையில்லாமல் மீண்டும் தலையில் வைக்கும் படியும் உதவியாக இருக்கும். சரக்குப் போக்குவரத்துத் துறையில் பெரிய பெரிய மாற்றங்கள் வந்து விட்டன. இன்று தொடர் வண்டிகள், சிறிய – பெரிய பேருந்துகள், மகிழுந்துகள், மிதிவண்டிகள், வானூர்திகள், இரண்டு சக்கர, மூன்று சக்கர வாகனங்கள் என பல்வேறு மாற்றங்கள் வந்து விட்டன. ஒன்றும் இல்லாத பழைய காலத்தில் சுமைதாங்கிகள் பேருதவி செய்து இருக்கின்றன. இன்று அவைகளும் காணாமல் போய்விட்டன.- அழகனார், கள்ளிக்கோட்டை

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி