15 October 2015 1:34 pm
இலங்கை அரசின் மனித உரிமை மீறல் செயல்பாடுகள் குறித்து ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பித்துள்ள இலங்கையின் ஆய்வு அறிக்கை (Report of the OHCHR Investigation on Sri Lanka – OISL) 16-9-2015 நாளிட்ட அறிக்கை ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவாகும். இதுகுறித்து ஆராய்வதற்கு முன்னதாக இந்த அறிக்கையின் பின்னணியில் உள்ள பல கடந்த கால நிகழ்வுகள், ஆய்வுகள், அறிக்கைகள் குறித்து அறிந்து கொள்வதும் இவ்வறிக்கை குறித்தத் தெளிவான புரிதலுக்கு உதவியாக அமையும். வரலாற்றில் பின்னணி இலங்கைத் தமிழர் போராட்டம் என்பது ஒரு நெடிய வரலாற்றைக் கொண்டதாகும். 1948 ஆம் ஆண்டு பிரிட்டிசாரிடமிருந்து விடுதலை பெற்ற தமிழ் – சிங்கள இனக்குழுக்கள் முழு நம்பிக்கையுடன் தத்தம் இறையாண்மையைப் போற்றும் வண்ணம் ஒன்றுபட்ட இலங்கைக் குடியரசு என இணைந்தாலும் ஒரு சில ஆண்டுகளிலேயே அந்த ஒற்றுமையில் வேற்றுமைப் போக்கு தலை காட்டியது. சமுக, பொருளாதார பண்பாட்டுக் கூறுகளில் சிங்கள மேன்மையை முன்னிறுத்தும் வகையில் இலங்கை அரசால் மேற்கொள்ளப் பட்ட சில அரசியல் நகர்வுகள் இதற்குக் கரணியமாக அமைந்தன. 1949 ஆம் ஆண்டு தமிழர் பகுதியில் சிங்கள குடியேற்றம் தொடங்கி சிங்கள பிரதிநிதித்துவச் சட்டம், தோட்டத் தொழிலாளர் உரிமை பறிப்பு, தமிழ் நூலகம் எரிப்பு, சிங்களம் மட்டும் ஆட்சி மொழி – அலுவல் மொழி, இலங்கை அரசின் அரசமைப்புத் திருத்தம், வெலிக்கடைச் சிறைப் படுகொலை என பல்வேறு வேற்றுமைக் கூறுகள் தமிழ் & சிங்கள இன மக்களிடையே ஒரு கசப்பான சூழலைத் தோற்றுவித்தன. இவைகளில் பொது மக்கள் என்பதை விட அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்களின் தவறான அரசியல் நகர்வுகளே இக்கசப்புணர்வுக்கு நீர் வார்த்தவையாகும். இதன் விளைவாக இரு இன மக்களும் பல்வேறு கால கட்டங்களில் இடர்பாடுகளையும் வன்முறைச் சம்பவங்களையும் சந்தித்துள்ளனர் என்பது வேதனையான ஒன்றாகும். இலங்கையை அண்டை நாடாகவும், தமிழ் இன மக்களைத் தன் நாட்டுக் குடிமக்களின் ஒரு பகுதியாகவும் கொண்டிருக்கும் இந்திய நாடு இச்சிக்கல் குறித்து முறையான தீர்வை எட்டும் வகையிலும், இலங்கை இறையாண்மைக்குக் குந்தகம் விளைவிக்காத வகையிலும் தன் பங்களிப்பையும் ஆலோசணைகளையும் வழங்கி வந்துள்ளது. எனினும் எதிலும் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படவில்லை என்பது வரலாற்றுப் பதிவுகளாக உள்ளன. மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் (இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்தவர்கள்) மற்றும் பூர்வீக ஈழத் தமிழர்கள் குறித்தும் பல்வேறு கால கட்டங்களில் எடுக்கப்பட்ட முயற்சிகள் ஒரு நீண்ட பட்டியலாகும். 1953 ஆம் ஆண்டு இந்தியத் தலைமையமைச்சர் ஜவகர்லால் நேரு – இலங்கை ஜனாதிபதி டட்லி சேனநாயகா பேச்சு வார்த்தை, 1954 ஜவகர்லால் நேரு – கொத்தலவாலா பேச்சு வார்த்தை, 1957 பண்டாரநாயகா – தமிழ் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் ஒப்பந்தம், 1964 சிறிமாவோ பண்டாரநாயகா – லால்பகதூர் சாஸ்த்திரி ஒப்பந்தம், 1965 செல்வநாயகம் – டட்லி சேனநாயகா ஒப்பந்தம், 1972 இலங்கை அரசியல் சட்ட திருத்தம், 1974 சிறிமாவோ பண்டாரநாயகா – இந்திரா காந்தி கச்சத் தீவு ஒப்பந்தம், 1976 செல்வநாயகம் தலைமையில் தமிழ் ஈழமே தீர்வு" எனப் பிரகடனப் படுத்தப் பட்ட வட்டுக் கோட்டை தீர்மானம், 1978 வடகிழக்கு மாகாண ஆட்சி மொழி குறித்த சட்ட திருத்தம், 1984 இலங்கையின் அனைத்துக் கட்சி கூட்டு ஒப்பந்தம், 1985 இந்தியா உதவியுடன் தமிழ்ப் போராளிகளுடன் நடைபெற்ற திம்பு பேச்சு வார்த்தை, 1987 ராஜீவ் காந்தி – ஜெயவர்த்தனே ஒப்பந்தம், 2002 நார்வே முயற்சியால் முன்னெடுக்கப் பட்ட இலங்கை அரசு – விடுதலைப் புலிகளுக்கிடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம், 2008 போர் நிறுத்த ஒப்பந்த மீறல், 2009 வன்முறை ஒழிப்பு என்கிற இறுதிப் போர், மனித உரிமைமீறல்கள், அப்பாவி மக்கள் படுகொலைகள் என வரலாற்றில் கறை படிந்த அத்தியாயமாக இச்சிக்கல் உருப்பெற்றுள்ளது. மேற்கண்ட உடன்படிக்கைகள், பேச்சு வார்த்தைகள் அனைத்தும் ஏதாவது ஒரு வகையில் இச்சிக்கலில் பங்காற்றியுள்ளன. அவைகள் தனியாக விவாதிக்கப் படவேண்டியவையாகும். எனினும் இதில் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளவர்கள் தமிழ் மக்களே ஆவர். ஐக்கியநாடுகள் அவை தலையீடு: 2009 ஆம் ஆண்டு போர் முடிவுற்று விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அறியப்பட்ட உயிர்ச் சேதங்களையும் மனித உரிமை மீறல்களையும் கணக்கில் கொண்டு, போர்முடிந்த பத்து நாட்களுக்குள் 25/5/2009 அன்று ஐக்கிய நாடுகளின் பதினோறாவது சிறப்பு அமர்வில் உறுப்பு நாடுகளான அர்ஜென்டைனா, போஸ்னியா, சிலி, கனடா, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, மொரிசியசு, நெதர்லாந்து, கொரியா, சுவிட்சர்லாந்து, கிரேட் பிரிட்டன், அயர்லாந்து உள்ளிட்ட பதினேழு நாடுகள் மற்றும் பார்வையாளர் நாடுகளான பின்லாந்து, டென்மார்க், சுவீடன், ரொமானியா, ஸ்பெயின் போன்ற நாடுகள் இலங்கை மனித உரிமை மீறல்கள் நிலவரம் குறித்து விவாதிக்க வேண்டுமென மொத்தம் முப்பத்து நான்கு நாடுகள் கூட்டாகக் கையொப்பமிட்டு வேண்டுகோள் விடுத்தனர். இதில் இந்தியா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இதை அறிந்த இலங்கை அரசு உடனடியாக தன்னுடைய நிலைப்பாட்டை நியாயப் படுத்தும் வகையில் இலங்கையில் மனித உரிமையைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்காக இலங்கை அரசுக்கு உதவ வேண்டும் என மற்றொரு எதிர் தீர்மானத்தை சீனா, இந்தியா, இந்தோனேசியா, சவுதி அரபியா, மலேசியா, எகிப்து உள்ளிட்ட பல நாடுகளின் கையொப்பத்துடன் ஒரு தீர்மானத்தை முன் மொழிந்து தன் செயல்பாடுகளை, மனித உரிமை மீறல்களை உலக நாடுகளிடமிருந்து மறைத்திடமுற்பட்டது. ஆனால் அந்த அமர்வில் ராஜபக்ச அரசின் அறிக்கையினையும் விளக்கங்களையும் ஏற்புடையதாக அறிவித்தது மட்டுமன்றி ராஜபக்சேவின் நடவடிக்கைகளைப் புகழ்ந்தும் பல நாடுகள் பேசும் வகையில் மிகத் தந்திரமாக தன் ராஜதந்திர நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொண்டது. இதில் இலங்கை அரசுக்கு ஆதரவாக அன்றைய நாள் இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பிலிருந்த காங்கிரசு அரசும், சீன அரசும் பெரும் பங்கு வகித்தன. இறுதியாக இலங்கையின் ஆதரவு நாடுகளான சீனா, பாகிஸ்தான், இந்தியா, கியூபா, மலேசியா போன்ற நாடுகள் மனித உரிமை மீறலுக்காக இலங்கை அரசிடம் விளக்கம் கேட்பதற்குப் பதிலாக இலங்கை அரசின் நடவடிக்கைகளை வெகுவாகப் பாராட்டி வரலாற்றில் ஒரு கறையைப் பதித்தன. இதற்கிடையில், இந்த சிறப்பு ஐ.நா. அமர்வுக்கு ஒருநாள் முன்பாக ஐ.நா.வின் செயலாளர் பான் கீ மூன் இலங்கை நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டு இலங்கை அதிபர் ராஜபக்சவுடன் இணைந்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் இலங்கையின் இறுதிப்போரில் நடைபெற்றதாகச் சொல்லப் படும் மனித உரிமை மீறல் குறித்து இராசபக்ச அரசு "கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு" தன்னுடைய அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்பதாகும். அந்த அறிக்கை சற்றொப்ப மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நவம்பர் 2011 இல் மனித உரிமை செயல் திட்டக்குழுவிடம் தரப்பட்டது. எனினும் அதில் கூறப்பட்ட விடயங்கள் குறித்து எவ்வித நடவடிக்கைகளையும் இலங்கை அரசு அமல் படுத்தவில்லை. இதற்கிடையில், இலங்கை அரசின் போக்கைக் கவனித்த சில சர்வதேச நாடுகள் மனித உரிமை மீறல்கள் குறித்த தங்களின் வருத்தத்தைப் பதிவு செய்ததுடன், இலங்கை அரசின் மெத்தனப் போக்கைக் கருத்தில் கொண்டு இது குறித்து ஒரு அறிக்கை தயார் செய்ய " நிபுணர்கள் குழு" ஒன்றை அமைத்திடுமாறு ஐ.நா.விடம் முறையிட்டனர். அதன் விளைவாக ஐ.நா. செயலாளர் 2010 சூன் மாதம் மாருஸ்கி தருஸ்மன்(இந்தோனேசியா), யாஸ்மின் சூகா(தென் ஆப்பிரிக்கா), ஸ்டீவன் ரட்னர்(அமெரிக்கா) ஆகியோர் அடங்கிய குழு மார்ச் 2011க்குள் அறிக்கை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அந்த அறிக்கை இரண்டு விடயங்களைக் கண்டறிந்தது. 1) இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரண்டு தரப்பும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளன என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதால் இது குறித்து ஒரு சுதந்திரமான பன்னாட்டு விசாரணை மேற்கொள்ளப் பட வேண்டும்; 2) ஐ.நா. பொருத்தமாக செயல் படவில்லை எனவே அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆராயப்பட வேண்டும் என்பவைகளாகும். மார்சுகி தாருமன் தலைமையிலான நிபுணர் குழு தனது அறிக்கையில் ஈழத்தமிழர்கள் கோரமாகக் கொல்லப்பட்டதையும் இசைப்பிரியா உள்ளிட்ட தமிழ்ப் பெண்கள் கொடூரமாகக் கற்பழிக்கப் பட்டுக் கொல்லப்பட்டது உள்ளிட்ட எண்ணற்ற நிகழ்வுகளையும் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது மட்டும் அல்லாது இது குறித்து சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் எனவும் பரிந்துரை செய்தது. ஆனால் அப்படிப்பட்ட விசாரணைக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை. பன்னாட்டு நீதி விசாரணை என்ற கோரிக்கை எவ்வித முன்னேற்றமும் இன்றி கிடப்பில் நீண்டு கொண்டேயிருந்தது. 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்க நாடு ஐ.நா. மனித உரிமைக் குழுவில் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தது. ஆனால் அத்தீர்மானத்தின் மீது இந்தியா, சீனா, பாகிசுத்தான் போன்ற நாடுகளின் அழுத்தங்களினால் அதன் தன்மை குறைக்கப் பட்டு இறுதியாக மிக மிதமாக இலங்கை அரசின் மனித உரிமை மீறல், திருத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து கவலை தெரிவித்து மனித உரிமை மீறல்களுக்குப் போறுப்பேற்றல் மற்றும் இவற்றைக் களைவதற்கான இலங்கையின் செயல் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ஐ.நா.விற்கு ஒரு அறிக்கை தருமாறு அத்தீர்மானத்தின் மூலம் மனித உரிமை ஆணையரை ஐ.நா. வேண்டியது. இதற்கிடையில் இலங்கையின் போர்க்காலத்தில் ஐ.நா. எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளக ஆய்வுக்குழு ஒன்றை சார்லஸ் பெட்ரி தலைமையில் 2012 ஏப்ரல் மாதம் ஐ.நா. அமைத்தது. எட்டு மாத ஆய்வுகளுக்குப் பின் அதன் அறிக்கை 2012 நவம்பர் மாதம் சமர்பிக்கப் பட்டது. பல உண்மைகள் அந்த அறிக்கையில் முழுமையாக வெளிவராவிடினும் போர்நடைபெற்ற போது, நிகழ்த்தப்பட்ட படுகொலைகளைத் தடுக்க ஐ.நா. அதிகாரிகள் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இலங்கை அரசின் ஆணைகளுக்குக் கட்டுப்பட்டு மனசாட்சியைப் புதைத்து விட்டு கடமை தவறியுள்ளனர். அவர்கள் கண் எதிரே பல பொதுமக்கள், குழந்தைகள் குண்டு வீச்சுகளுக்குப் பலியாகியுள்ளனர். உணவு, மருத்துவ வசதிகளின்றி பலர் சாக நேர்ந்துள்ளது என்பதையும் கடுமையான முறையில் சுட்டிக் காட்டியது. மேற்கண்ட தரவுகளின் அடிப்படையில் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இலங்கை அரசாங்கம் தமது நாட்டின் மனித உரிமை சிக்கல்களை திறந்த வெளிக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை தமது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறான உரிய முனைப்புகள் மேற்கொள்ளப்படாது போனால் பன்னாட்டுப் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டியது உறுப்பு நாடுகளின் கடமை எனவும் கூறியிருந்தார். ஆனால் இலங்கை அரசு எதையும், பொருட்படுத்தவில்லை. அதன் பின்னர் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மான எண்: A/HRC/25/1 அடிப்படையில் இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கும் பொறுப்புக் கூறலுக்கும் மனித உரிமை தொடர்பான விடயங்கள் குறித்து விரிவாக நுண்ணாய்வு செய்யும் படியும் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் வேண்டப்பட்டார். இதன் படி ஐ.நா. மாமன்றத்தின் 27 வது அமர்வில் அது நாள் வரை தொடர்பான விடயங்கள் குறித்து வாய் மூல அறிக்கையினையும், 28 வது அமர்வின் போது (அதாவது மார்ச் 2015) புலனாய்வு தொடர்பான விவரமான அறிக்கை ஒன்றினையும் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டது. இதன் அடிப்படையில் ஐக்கிய நாட்டு அவையில் தீர்மானம் ஒன்றும் 38 நாடுகளின் முன்னெடுப்பில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதற்கிடையில் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அதிபராக மைத்ரிபால் சிறிசேன பதவியேற்றார். எனவே மனித உரிமை மீறல்கள் குறித்த ஆணையர் அறிக்கை சமர்ப்பிப்பை செப்டம்பர் 2015 வரை தள்ளி வைக்குமாறு இலங்கை அரசின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப் பட்டது. இது ஐ.நா. மன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 2009 ஆம் ஆண்டு போர் நடைபெற்ற வேளையிலும் அதன் பின்னரும் இலங்கை, ஐ.நா. போன்றவை மேற்கொண்ட கால இழுத்தடிப்பின் காரணமாக இன்று வரை பாதிக்கப் பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை.தற்போது வெளிவந்துள்ள மனித உரிமை ஆணையர் அறிக்கை (OISL) :- போர் முடிந்து சற்றொப்ப ஏழு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையரின் இலங்கை ஆய்வு அறிக்கை என்பது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இந்த அறிக்கை 262 பக்கங்களில் மூன்று அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டு 1)முன்னுரை இலங்கை அரசு, விடுதலைப் புலிகள் நிலை குறித்த ஆய்வு, 2) கொலை, சித்திரவதை, காணாமல் போனவர்கள், கடத்தல், போர் நெறிமுறை மீறல்கள், 3) உண்மை கண்டு பிடிப்பு, கையாளவேண்டிய நெறிமுறைகள், பரிந்துரைகள் என தனித் தனியாக 1281 பத்திகளில் விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது. பரிந்துரைகளில் 1. பொதுவானவை, 2. இலங்கை அரசின் செயல்பாட்டுகுரியவை, 3. நிருவாகச் சீரமைப்புகள். 4. உண்மை, 5. நீதி, 6. ஐ.நாவின் செயல் முறைமை மற்றும் உறுப்புநாடுகள் மேற்கொள்ளவேண்டிய விடயங்கள் என தனித் தனியே மிக விவரமாக தயாரிக்கப் பட்டுள்ள ஒன்றாகும். மனித உரிமை ஆணையர் அல் உசேன் மிகவும் கமுக்கமாகவும், நேர்மையாகவும் பிற நாடுகளின் தலையீடுகளை, அழுத்தங்களைத் தவிர்த்தும் மிக விரிவான அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். மனித உரிமை ஆணையர் தன்னால் முடிந்த அளவு செய்துள்ளார். ஆனால் அவருடைய வரம்பு இங்கே முற்றுப் பெறுகிறது. இது ஈழத்தமிழ் மக்கள் அல்லது உலகத் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்றா என்றால் இல்லை எனலாம். காரணம் இந்த அறிக்கையில் "இன அழிப்பு" (GENOCIDE) என்கிற பதம் பயன் படுத்தப்படவில்லை என்பது ஒரு பெரும் மனக்குறையாகும். ஆனால், இலங்கைத் தமிழர் சிக்கலில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள பதிவுகள் அனைத்தையும் விட இது ஒரு முக்கியமான வரலாற்று ஆவணம் என்பதை யாரும் மறுக்க இயலாது. தமிழ் மக்களின் இன அழிப்பை பதிவு செய்து உலக அரங்கிற்கு காட்டியிருக்கும் ஒன்றாகும். இன அழிப்பு என்கிற பதம் நேரிடையாகச் சொல்லப் படவில்லை எனினும் அந்த பொருளை உள்ளடக்கியுள்ள ஏராளமான விடயங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. எதிர் காலத்தில் பன்னாட்டு சட்ட நிபுணர்கள் இந்த அறிக்கையின் உண்மையானப் பொருளை வெளிக் கொணர இது வாய்ப்பாக அமையும். நாளை ஒரு காலத்தில் பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தப் படும் போது அது நிச்சயமாக வெளிப்படும். இந்த அறிக்கையில் இலங்கை அரசின் இராணுவ அத்துமீறல்கள், போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்தும் விடுதலைப் புலிகளின் மனித உரிமை மீறல்கள், சிறார்களை கட்டாயமாக தன் படையணியில் சேர்த்தல், பொது மக்களை விருப்பத்துக்கு மாறாக நிறுத்தி வைத்தவை போன்ற விடயங்கள் வெளிப்படுத்தப் பட்டுள்ளன. இலங்கை அரசை ஒரு தரப்பாக பார்க்கும் இவ்வறிக்கை தமிழ் மக்களை ஒரு தனித் தரப்பாக அங்கீகரிக்கவில்லை. குறிப்பாக தமிழ் மக்களின் வரலாற்று ரீதியான இன்னல்களும் அவர்கள் மீது ஏவப்பட்ட கொடுமைகளும் முழுமையாக ஆராயப்படவில்லை. இலங்கை அரசு தங்களின் மீறல்களை ஒரு உள்ளக அல்லது பன்னாட்டு பொறிமுறை அடிப்படையில் விசாரிக்க இடமளிக்கும் இவ்வறிக்கை விடுதலைப் புலிகள் உள்ளக புலன் விசாரணை செய்து கொள்ள இடமளிக்கவில்லை. உள்ளக விசாரணை என்பது இலங்கையின் சட்ட விதிகளுக்கும், ஆட்சியாளர்களின் கொள்கை முடிவுகளுக்கும் உட்பட்ட ஒன்று. அதில் நீதியை எதிர்பார்க்க இயலாது என்பது கடந்த 65 ஆண்டு கால வரலாற்றுப் பதிவாகும். கடந்த ஏழு ஆண்டுகளாக உலகின் பல நாடுகளின் தலையீடுகளுக்குப் பின்னர் தன் சொந்தச் செலவில் பன்னாட்டு மனித உரிமை ஆர்வலர்கள், சட்ட நிபுணர்கள் கொண்டு கள ஆய்வு செய்து பல நிலைகளில் அறிக்கைகள் தயார் செய்து இறுதியில் குற்றம் சாட்டப்பட்டவரே தன் மீதுள்ள குற்றத்தை விசாரித்துக் கொள்ளட்டும் என்று தீர்மானிக்காது என்பதை முழுமையாக நம்பலாம் என தமிழ் மக்கள் பெரும் எதிர் பார்ப்புடன் இருந்தனர். ஆனால் இலங்கையின் இராச தந்திர நகர்வுகள் அந்த நம்பிக்கையை தகர்த்துள்ளன. புதிய அரசுக்கு இது குறித்து நடவடிக்கைகள் எடுக்க சில கால அவகாசம் வேண்டுமென்பதும் பன்னாட்டு தலையீட்டை எம்மால் அனுமதிக்க முடியாது என்பதையும் இலங்கை அரசு வலிமையாக எடுத்துக் கூறி கூறி அமெரிக்கா, இந்தியா, சீனா, பிரித்தானியா போன்ற நாடுகளை தம் அந்நிலைக்கு ஆதரவாக திருப்பியுள்ளது. மேல்நடவடிக்கைகள் எவ்வாறு அமையும்? உலக அரங்கில் மனித உரிமைகள், இயற்கை வள பாதுகாப்பு, கடல்சார் உரிமைகள், தொழிலாளர் சட்டங்கள், கல்வி, பன்னாட்டுக் குற்றங்கள் விசாரணை என பலக் கூறுகள் குறித்த மரபுகள், ஒப்பந்தங்கள், கூட்டறிக்கைகள் என ஐ.நா உறுப்பு நாடுகளின் நடைமுறைப்படுத்தலுக்குள் இருந்தாலும் சர்வ தேச சிக்கல்கள் பெரும்பாலும் வலிமை வாய்ந்ததாக எண்ணப்படும் அமெரிக்கா, சீனா, பிரான்சு போன்ற நாடுகளின் நிலைப்பாட்டை ஒட்டியே தீர்மானிக்கப் படுகின்றன. அந்த வகையில் இலங்கை அரசின் போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் தீர விசாரித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டுமென்பதில் இது வரை ஒருமித்தக் கருத்து உருவாகவில்லை என்பதே வேதனைக்குரிய விடயமாகும். சர்வதேச சமுகத்தின் நிலைப்பாடு என்பது புவிசார் அரசியல், பொருளாதார அரசியல், அணிசார் அரசியல் மற்றும் உலக அரங்கின் மாற்றங்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கி முடிவெடுப்பதாகும். இதில் விடுதலைக்காகப் போராடும் எந்த இனமக்களுக்கும் உடனடியாக நீதி கிடைப்பதில்லை. இலங்கை விடயத்தில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் பார்வை முன்னெடுப்புகள் மிகவும் முக்கியமானதாகும். மேற்குறிப்பிட்ட அனைத்து நாடுகளும் இது காறும் இலங்கை அரசைக் காப்பாற்றும் வகையிலேயே தத்தம் முன்னெடுப்புகளை நகர்த்தியுள்ளன. கடந்த 2012 ஆம் ஆண்டு இது தொடர்பாக ஐ.நா. மாமன்றத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து பன்னாட்டு விசாரணை வேண்டும் என்கிற கோரிக்கை சிறுகச் சிறுகச் திருத்தி அமைக்கப் பட்டு இலங்கை அரசு உள்ளக விசாரணை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் மறு சீரமைப்பு என்ற அளவில் ஓர் அடையாளச் சிதைவுக்கே வழி வகுத்தது. அமெரிக்கா, பிரிட்டன், , இந்தியா என அனைத்து நாடுகளுமே சர்வதேச விசாரணை என்பதில் ஆர்வமின்றியே நடந்து கொண்டன. மனித உரிமை ஆணையரின் பரிந்துரைகளில் உறுப்பு நாடுகளுக்கு சொல்லப்பட்டுள்ள ஒரு செய்தி மிக முக்கியமானதாகும். பரிந்துரைப் பட்டியலில் 36 வது பத்தியில் "ஐ.நா. வின் உறுப்பு நாடுகள் எப்போது அவர்களால் முடியுமோ, இவ்வறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள், குற்றத்தோடு தொடர்புடையவர்கள் தங்கள் நாடுகளுக்கு வரும் போது அவர்களை சர்வதேச சட்டங்களுக்குட்பட்டு (UNIVERSAL JURIDICTION) விசாரிக்கலாம்" என்று சொல்லப்பட்டுள்ளது. தற்போது அங்கம் வகிக்கும் 194 நாடுகளும் இதை எவ்வாறு எடுத்துக் கொள்ளப் போகின்றன என்பது முக்கியமானதாகும். இதற்கு முன்பு இலங்கை அரசு சர்வதேச சமுகத்திற்கு இடமளிக்கவில்லையா? ராஜபக்ச அரசு சர்வதேச சமுகத்திற்கு ஒரே ஒரு இடத்தில் இடம் அளித்தது. ஆம், விடுதலைப் புலிகளை அழிப்பதற்குச் சர்வ தேச சமுகத்தின் ஆதரவைக் கோரியது. அந்த இராணுவ நடவடிக்கைகளுக்கு சீனா, இந்தியா, அமெரிக்கா, பாகிசுதான் போன்ற நாடுகள் நேரிடையாகவும் மறைமுகமாகவும் பங்காற்றின. ஐ.நா. மன்ற நடவடிக்கைகள் கூட இலங்கை அரசின் ஆணைகளுக்குக் கட்டுப்பட்ட ஒன்றாக மாறியிருந்தது என்பது நினைவில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். மேலும் அதற்குக் கை மாறாக ராஜபக்ச அரசு சீனாவுக்கு இலங்கையில் பெரும் இடமளித்தது. இது இந்திய நாட்டுப் பாதுகாப்புக்கு அறைகூவலாக அமைந்தது. ஆனால் தற்போதுள்ள அரசு இந்தியாவிடம் நெருக்கமான உறவை வளர்த்துக் கொண்டு சீனாவிடமிருந்து சற்றே விலகி நிற்க எண்ணுவது போல தோன்றுகிறது. ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா? எந்த வகையிலும் தமிழ் மக்களுக்குச் சாதகமில்லாச் சூழலில் இந்த அறிக்கையின் அடிப்படையில் தற்போது ஒரு தீர்மானம் ஐ.நா.வின் 30 வது அமர்வில் அக்டோபர் மாதம் முதல் நாளன்று ஏகமனதாக இலங்கையின் வழிமொழிதலோடு நிறைவேற்றப் பட்டுள்ளது. இதுகாறும் ஈழத் தமிழர்களுக்கு ஓரளவு ஆதரவு நிலை எடுத்திருந்த கனடா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன என்பது ஒரு வகையில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதில் பின்னடவை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழர்கள் முழுமையாகக் கைவிடப்பட்டுள்ளனர் என பலதரப்பு மக்களிடம் கருத்துகள் நிலவினாலும் தற்போதைய தீர்மானம் முழுமையாக அந்த வழியை அடைத்து விட்டதாக எண்ண இயலாது. பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு தரப்பாக அங்கீகரிக்கப் படாத அறிக்கையின் மீது ஏற்படுத்தப்பட்டுள்ள இத்தீர்மானம் இலங்கையை ஒரு இறையாண்மை மிக்க குடியராக எண்ணி அவர்களின் வேண்டுதலை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தியுள்ளனர். இலங்கையின் கடந்த கால வரலாற்றுப் பொய்மைகளை பல நாடுகள் அறியாதவை. எனவே பொது நலவாய நாடுகளின் நீதிபதிகள், சட்ட வல்லுனர்கள் அடங்கிய ஒரு நீதி விசாரணை அதுவும் இலங்கையின் விதிகளுக்குட்பட்டு என ஒருமித்த குரலில் நிறைவேற்றியுள்ளனர். இது தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட அநீதிகளை ஒப்புக் கொள்ள மறுக்கும் செயல். அதற்கான தீர்வை தாமதப் படுத்தும் செயல் என்பதே உண்மையாகும். இலங்கை அரசின் உண்மை முகம் அடுத்தடுத்து வருகின்ற ஐ.நா. செயல் முறைகளில் வெளிப்பட வாய்ப்புண்டு. எனவே தமிழ் மக்கள் கடந்த ஏழாண்டு பொறுமை காத்தது போல் இன்னும் சில ஆண்டுகள் தங்கள் போராட்டத்தையும் முன்னெடுப்புகளையும் தொடர்ந்து செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர். மனித உரிமை என்பது கேட்டுப் பெறுகின்ற பிச்சை போல ஆகிவிட்டது. அது உலக மனிதர்கள் ஒவ்வொருவரின் உரிமை என்பதை ஒப்புக் கொள்ள மறுக்கும் நாடுகள் உறுப்பு நாடுகளாக பங்கேற்பது உலகை ஏமாற்றும் செயலாகும். தங்களின் வல்லாதிக்கம், புவிசார் நகர்வுகள், பொருளாதார மேன்மைகள் என பல விடயங்கள் அய்.நா.வின் பொது அவையிலும், பாதுகாப்புக் குழுவிலும் பேசப்படவேண்டிய செய்திகளை கள்ளத் தனமாக மனித உரிமை பற்றிப் பேசும் பொழுது கருத்தில் கொள்ளும் அளவு கயமைத் தனம் பெரும்பாலான நாடுகளிடையே ஏற்பட்டுள்ளது என்பதே இதன் சூட்சமம் ஆகும். இது மனித குலப் பேரழிவிற்கே எதிர் காலத்தில் வழி வகுக்கும் என்பதை வரலாறு காட்டும். ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசியில் "அகை யழல் அழுவம் தன்னை நெய்யினால் அவிக்கலாமோ" என்கிற வரிகள் நினைவில் கொள்ளத் தக்கவை. நெய் பெய்து நெருப்பை அணைப்பது முடியாது என்பது நியதியாகும். மலையை இழுத்துவிடலாம் என்று நம்பியிருந்த தமிழ் மக்களுக்குக் கையில் கிடைத்திருப்பதோ ஒரு சிறு மயிர் தான். எனவே தமிழர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம். தொடர்ந்து பன்னாட்டுத் தளங்களில் இந்த அநீதியை முன்னெடுக்க வேண்டும். அதற்கு அடிப்படைத் தேவை அனைத்து தமிழ் மக்களின் ஒற்றுமையானப் போக்காகும். நமக்கு நாமே என்று எண்ணி தமிழர்கள் விழித்தெழ வேண்டும். ஒரு மனிதநேயச் சிக்கல் ஒவ்வொரு நாட்டின் தன்னல உணர்வுகளை முன்னிறுத்திக் கையாளப் பட்டுள்ளது. நீதி தாமதம் ஆவது அநீதிக்கு ஒப்பாகும் என்பதை உலகம் ஒரு நாள் உணரும். காற்று திசை மாறி வீசும்; ஊற்று ஒரு நாள் திறக்கும்; மாற்று ஒரு நாள் பிறக்கும் என்கிற நம்பிக்கையுடன் உலகில் வாழும் தமிழர்கள் அனைவரும் ஒன்று பட்டு செயலாற்ற வேண்டும். அதுவே விடியலுக்கான வழியாகும்; மொழியாகும். – சு.குமணராசன்"