11 January 2015 4:28 pm
விமானப் பயணங்களின் கட்டணம் குறைந்து கொண்டே வருகிறது. பேருந்து கட்டணம் உயர்ந்து கொண்டே போகிறது. ஏன்?ஒரு விவசாயி மாடு வாங்க வேண்டும் என்று கடன் கேட்டால், தகுதி இல்லை என்கிறார்கள். கார் வேண்டும் என்று கேட்டால், உடனடியாக வீட்டுக்கு முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள். எப்படி?இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை ‘லியோ டாய்ஸ்’ என்கிற இந்திய நிறுவனம் தயாரித்த பொம்மைகளை விளையாடாத நடுத்தரவர்க்கக் குழந்தைகளே இல்லை. அப்படி இருந்த அந்த முதல் தர (நம்பர் ஒன்) நிறுவனம் ஏன் மூடப்பட்டது?பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஐந்தாயிரம் பேர் வசிக்கும் ஒரு பகுதியில் சின்னக் கடை வைத்து சோடா தயாரித்து விற்கும் வியாபாரிகள் உண்டு. எங்கே தொலைந்து போனார்கள் அவர்கள்?சென்னை போன்ற பெருநகரங்களில் சாலை ஓரங்களில் பிச்சை எடுக்கும் முதியவர்களை விசாரித்துப் பாருங்கள்… அவர்கள் நமக்கு சோறு போட்ட விவசாயிகளாக இருப்பார்கள். அடுத்தவர்களுக்குச் சோறிட்ட கைகள் பிச்சையெடுக்க என்ன காரணம்? இப்படி நிறையக் கேள்விகளை அடுக்கிகொண்டே போகலாம். இதற்கெல்லாம் சேர்த்து மூன்றே பதில்கள் தான்! தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் என்ற மூன்றையும் நம் நாடு ஏற்றுக் கொண்டதால்தான் இந்தியா வறுமையாகியிருக்கிறது. இன்றைக்கு உலகம் முழுவதும் அறிஞர்கள் மத்தியில் பெரும் விவாதப் பொருளாகி இருக்கும் இந்த மூன்றும் இந்தியாவின் சாதாரண உழவர்களை, சிறு சிறு தொழில்கள் செய்து கொண்டு இருந்த நம் சகோதரர்களை அழித்த, அழித்துக் கொண்டு இருக்கும் வரலாற்றை இன்னும் நாம் முழுமையாக உணராமல் இருக்கிறோம். அமெரிக்க முன்னால் அதிபர் பில் கிளிண்டன், முன்பொருமுறை இந்திய நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் போது, ‘உலகம் கிராமமாகிவிட்டது. இனி, உலகமயமாக்கலைத் தவிர்க்க முடியாது’ என்று கர்வத்துடன் சொன்னார். உடனே நமது மேனாள் குடியரசு தலைவர் கே.ஆர்.நாராயணன், ‘உலகம் கிராமமாகி இருக்கலாம். அதற்காக அதை ஒரேயொரு தலையாரி மட்டும் ஆளமுடியாது’ என்று பதிலடி தந்தார். இப்போதும் நாம் விழிப்படையவில்லை என்றால், நிச்சயம் சில தலையாரிகளால் மட்டுமே ஆட்சி செலுத்தப்படுவோம். யார் ஏழையாக இருக்க வேண்டும், யார் பணக்காரர்களாக இருக்க வேண்டும் என்பதையும் உலகமயமாக்கல்தான் தீர்மானிக்கிறது. கொலம்பஸ் இந்தியாவைக் கண்டுபிடிக்கச் சென்ற நிகழ்வுதான் (1492) உலகமயமாக்கலின் ஆரம்பம். இந்தியா என்று நினைத்துக் கொண்டு அவர் அமெரிக்கா சென்று இறங்கியது பயணத்தின் மீது இருக்கிற ஆர்வத்தால் மட்டுமல்ல; சூரியன் மறையாத அடிமை தேயங்களைக் கொள்ளையடிக்கிற ஆசை. அமெரிக்காவின் பூர்வ குடிகளாக இருந்த செவ்விந்தியர்கள் மீது வேட்டை நாய்களை ஏவி கொன்றுவிட்டு, அவர்களின் உழைப்பால் விளைந்த ஏராளமான செல்வங்களைக் கப்பலில் கொள்ளையடித்து வந்த கொடூரத்தை வீரவரலாறாகப் படிக்கிறார்கள் நமது பிள்ளைகள். ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின் ஆதிக்கத்திலிருந்து ஏழை நாடுகள் விடுதலை பெற்றதும், அந்த நாடுகளின் மீதான தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்த வழி தேடின வல்லரசுகள். தங்கள் நாட்டுத் தனியார் வங்கிகளில் அரேப்பியர்கள் போட்டு வைத்த பணத்தை ஏழை நாடுகளுக்குக் குறைந்த வட்டிக்குக் கடன் தந்தன. ஆனால், திடீரென்று ஒருநாள் வட்டி விகிதத்தை உயர்த்தி, உடனடியாகப் பணத்தைத் திருப்பி தரவேண்டும் என்று வற்புறுத்தின. தங்கள் நாடு கடனைத் திரும்பத் தர இயலாத நிலையில், திவாலாகி விட்டதாக முதன் முதலில் 1982இல் மெக்ஸிகோ அறிவித்தது. அடுத்தடுத்து, 20 நாடுகள் கடனைத் திரும்பத் தர இயலாது என்று அறிவித்தன. இதனால் பெரிய சிக்கலில் சிக்கின தனியார் வங்கிகள். தங்கள் நாட்டு வங்கிகளை கடனை அடைக்கும்படி ஜி-7 பணக்கார நாடுகள் ஒரு திட்டத்தை முன் வைத்தன. ஏழ்ழையில் சிக்கிய நாடுகள் தங்கள் கடன்கார களங்கத்தைப் போக்க, உலக வங்கியிடம் கடன் வாங்கச் சம்மதித்தன. கடன் தருவதற்குப் பல நிபந்தனைகளை விதித்தது உலக வங்கி. உள் நாட்டு வியாபார நிறுவனங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்காமல், உலக தனியார் நிறுவனங்களைத் தங்கள் நாடுகளுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்றும் உள் நாட்டு நிறுவனங்களுக்கோ, மக்களுக்கோ மானியம் வழக்கக் கூடாது என்றும் அதற்கான சட்டங்களை இயற்றவேண்டும் என்றும் விதித்த உலக வங்கியின் நிபந்தனைகளை ஏழை நாடுகள் ஏற்றுக் கொண்டன. பொதுத்துறையில் அரசு எந்த நிறுவனத்தையும் நடத்தக் கூடாது. மின்சாரம், போக்குவரத்து, வங்கி, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சேவைத் துறைகளைத் தனியார்மயமாக்க வேண்டும். வெளிநாட்டு நிறுவனங்களின் சேவை, பொருட்கள், மூலதனம் எதற்கும் தடை இருக்கக் கூடாது போன்ற கடுமையான நிபந்தனைகள், விடுதலை பெற்ற நாடுகளை வேறுவிதமாக அடிமைப்படுத்தும் முயற்சியாக மேற்கொள்ளப்பட்டன. அந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட நாடுகளை எச்சரித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 1991-ஆம் ஆண்டு வரை நமக்கு இருந்த தெளிவு, பிற்காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாகத் தடுமாற ஆரம்பித்தது. வலுவான மத்திய அரசு இல்லாமல் போனது, வெளி நாட்டு நிறுவனங்களுக்கு வசதியாகி விட்டது. 100 மில்லியன் டாலரைச் சில நிறுவனங்களுக்கு உடனடியாகச் செலுத்த முடியாமல் போனதால், நம்முடைய தங்கத்தை அடகு வைத்துக் கடனை அடைத்தனர். கொஞ்சம் நிதானமாக யோசித்திருந்தால், அந்தச் சிக்கலை சுமுகமாகவே கையாண்டிருக்கலாம். சொற்பத் தொகைக்கு நாட்டின் எதிர்காலத்தையே அடகு வைத்த வரலாறு மிக மோசமானது. தராளமயமாக்கலை இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுகொள்ள ஆரம்பித்தது. இன்று உலகமயமாக்கலை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் தடுமாறி நிற்கிறது. இந்த உலகமயமாக்கலால் சில நன்மைகள் இல்லாமல் இல்லை. ஐ.டி., பி.பி.ஓ., வங்கி துறை, சின்ன கார்களின் உற்பத்தி, மருத்துத்துறை, பயோடெக், கார்மென்ட்ஸ் போன்ற சில துறைகள் பெரிய வளர்ச்சி பெற்றிருக்கின்றன. இந்தத் துறைகளால் நேரடியான பலன் பெற்றவர்கள் ஒரு கோடி பேர். மறைமுகமாகப் பலன் பெற்றவர்கள் இருபது கோடி இருக்கும். ஆனால் எண்பது கோடிக்கும் மேற்பட்ட சாதாரண மக்கள் எவ்வளவு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை இன்னும் நம் ஊடகங்கள் வெளிச்சத்துக்குக் கொண்டு வரவில்லை. எண்பது விழுக்காடு மக்கள் விவசாயத்தைச் சார்ந்து வாழ்கிற ஒரு தேசத்தில், அவர்களின் வளர்ச்சிக் கணக்கில் கொள்ளப்படாமல் போவது, மன்னிக்க முடியாத இரண்டகம் (துரோகம்). ஐ.டி. துறையில் வளர்ந்திருக்கும் ஆந்திரா, மகாராட்டிரா, குசராத் மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. தமிழ்நாடு, கருநாடகம், கேரளா போன்ற மாநிலங்களிலும் இந்த சோகம் ஆரம்பித்துவிட்டது. வளர்ந்த மாநிலங்களின் பட்டியலில் இருக்கின்ற இந்த மாநிலங்களின் விவசாயிக்கே இந்த கதி என்றால் பீகார், உத்திரப் பிரதேசம், ஜார்கண்ட், அஸ்ஸாம் போன்ற மாநில விவசாயிகளின் துயரத்தை விளக்க வார்த்தைகளே இல்லை. உலகமயமாக்கலால் பயோ, ஸ்டீல், டூரிஸம், சிமெண்ட் போன்ற துறைகளுக்கு இந்தியாவில் ஒளிமயமான எதிர்காலம் இருப்பதை மறுக்கவில்லை. ஆனால் 70% விவசாயிகளைத் தன் மக்கள் தொகையில் கொண்டிருக்கும் நாடு, அவர்களை சாலைப் பணியாளர்களாக, கூலித் தொழிலாளர்களாக மாறுவதைத் தடுக்காமல் போனால், சந்திக்கப் போகும் விளைவுகள் ஆபத்தானவை. ஒரு மாட்டை நீங்கள் வீட்டில் வளர்த்தால், அமெரிக்க அரசு உங்களுக்கு சும்மாவே அன்றாடம் 2 டாலர் தரும். ஐரோப்பாவில் கால்நடை வளர்ப்புக்கு அரசுகள் தரும் மானியம் இரண்டரை டாலர். அதுவே நம் நாட்டில் வங்கியில் கடன் வாங்கி மாடு வாங்கினால், மாட்டையே விற்று தான் கடனை அடைக்க வேண்டியிருக்கிறது. ஏழைகள் மேலும் ஏழைகள் ஆவதும், பணக்கராரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவதும் இந்தியாவில் தான் அதிகம். உலகமயமாக்கலால், இமாச்சலப் பிரதேசத்தின் ஆப்பிளை நம்மால் பார்க்க முடியவில்லை. ஒரு மாநிலத்தின் பொருளாதாரமே ஆட்டம் கண்டுவிட்டது. சீனாவில் இருந்து எலெக்ட்ரானிக் பொருட்கள் முதல் பூண்டு வரை இறக்குமதி செய்து குறைந்த விலைக்கு விற்கிறார்கள். சாக்லெட், சீஸ், கோலாக்கள் என நம் உணவுப் பழக்கத்தையே மேலை நாடுகளுக்கு ஏற்ப மாற்றிகொண்டு இருக்கிறோம். இறக்குமதி ஆகிற பொருள் நமது தயாரிப்பை விட எப்படி குறைந்த விலைக்குத் தரப்படுகிறது என்கிற தொழில் நுட்பத்தை ஆராய்ந்து நம் விவசாயிகளுக்கு வழங்காமல், அவர்களின் உற்பத்திப் பொருளைப் புறக்கணிப்பது, அவர்களைத் தற்கொலைக்குத் துண்டுகின்ற குற்றத்துக்குச் சமம். உலகமயமாக்கலால் சில தொழில்கள் வளர்ந்திருக்கின்றன. ஆனால் 7 இலட்சம் சிறுதொழில் நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன. அதை நம்பிப் பிழைத்துக் கொண்டிருந்த நம் சகோதரர்கள் வெளிநாடுகளில் அடிமைகளாக ஏற்றுமதி ஆகிறார்கள். 3 ஆயிரம் பெரிய தொழில்கள் அடையாளம் இல்லாமல் அழிந்துவிட்டன. இவ்வளவு சிக்கல்களையும் தாண்டி இந்தியா பொருளாதாரத்தில் வளர்கிறது என்றால், நம் இளைய தலைமுறை இரவு பகலென நேரம் காலம் பார்க்காமல் உழைத்துக் கொண்டு இருப்பதே காரணம்! இதுவும் ஒருவகையான மனித உரிமை மீறல்தான். இளமைக்குரிய எல்லா இயல்புகளையும் துறந்து, 40 டாலருக்குரிய வேலையை 4 டாலருக்குச் செய்து கொண்டு இருக்கிறார்கள்.சரி, உலகமயமாக்கலை எதிர்கொள்வது எப்படி? நம்முடைய பெரிய பலமாக இருக்கின்ற விவசாயத் துறையை மேம்படுத்தாமல் நம்மால் உலகமயமாக்கலால் நன்மை அடையவே முடியாது. உழவர்களுக்கு அரசு நிறைய மானியம் தந்து, வேளாண்மை ஆராச்சிகளைத் தொலைநோக்குடன் வளர்ப்பதே முக்கியம். வட இந்தியாவில் வெள்ள நிவாரண நிதியும், தென் இந்தியாவில் வறட்சி நிவாரண நிதியும் வாங்கிக் கொண்டு இருந்தால், அரசு செயல்படுவதில் அர்த்தமே இல்லை. நதிகள் இணைப்பு, சிறுதொழில் ஊக்கம், மனித வளத்தைப் பயன்படுத்துவது என்று பலக் கோணங்களில் நாம் விழிப்புணர்வு பெற வேண்டியது அவசியம். அமெரிக்கப் பூர்வகுடிகளைக் கொன்று குவித்துக் கொள்ளையடித்த போது இன்றைய வல்லரசுகளிடம் துப்பாக்கி இருந்தது. இன்று, அதைவிட பயங்கர ஆயுதமான ‘உலகமயமாக்கல்’ இருக்கிறது!- பேராசிரியர் விக்டர் லூயிஸ் ஆன்த்துவான்.