22 October 2017 12:05 pm
கடந்த அரை நூற்றாண்டு காலமாக இந்தியாவில் அதிகம் பேசப்பட்டு வரும் சொல் ஊழல் என்பதாகும் ஊழல் என்பது உலகம் தழுவிய ஒன்றாக இருப்பினும் அவற்றை முறையாகக் கட்டுப் படுத்துதல் அல்லது தவிர்த்தல் மூலம் வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி தடையின்றி முன்னேற உதவுகின்றது. அண்மையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் ஆய்வறிக்கையின் படி ஆசியாக் கண்டத்தில் ஊழல் மலிந்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிக்கின்றது என்ற கருத்தை வெளியிட்டது. இது ஒரு வேதனையான செய்தியாகும். இந்தக் கருத்துக் கணிப்பு மக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி, மருத்துவம், தொழில் என்ற அடிப்படையில் கேள்விகள் கேட்கப் பட்டு சேகரித்த விடைகளின் வெளிப்பாட்டில் கணக்கிடப் பட்டுள்ளது. இது ஏதோ தற்பொழுது பதவியில் அமர்ந்துள்ள ஆளுங்கட்சிக்கு எதிரான வாதமாக மட்டுமே பார்க்கக் கூடாது. எந்தக் கட்சி தேர்தலில் வென்று ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்தாலும் அதன் எதிர்க்கட்சியையோ அல்லது எதிர்க்கட்சி ஆளும்கட்சியின் முறைகேடுகளை சுட்டிக்காட்டுவதும் நாடாளுமன்றத்தை முடக்குவதும், விசாரணை குழுக்கள் அமைப்பதும் காலங்காலமாய் நிகழ்ந்து வருகின்ற ஒன்றாகும். இந்திய நாட்டின் தேசிய அளவிலும் சரி அல்லது தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அளவிலும் சரி ஊழல் என்பது சமானிய மக்களின் அன்றாடவாழ்வில் தவிர்க்க இயலாத ஒன்றாக மாற்றம் பெற்றுவிட்டது. ஊழல் என்ற இந்த சொல் நமது தமிழ் இலக்கியங்களிலோ வரலாற்றுப் புதினங்களிலோ இதுகாறும் பயன் படுத்தாத ஒரு சொல்லாகும். கடந்த நூற்றாண்டின் மையப் பகுதிக்குப் பின்னர்தான் இச்சொல் புழக்கத்தில் வந்துள்ளது. அதாவது இரண்டாம் உலகப் போருக்குப்பின் உலகின் பல்வேறு நாடுகளில் ஏற்பட்ட உணவுப் பஞ்சம், பொருளாதார சீரழிவு ஆகியவற்றிலிருந்து தன்னை தற்காத்துக்கொள்ள சிலபகுதி நாடுகள் கொள்ளையடிப்பு வன்முறை மூலம் கவர்தல் என்ற அடிப்படையில் ஓர் செயற்கையான வணிக நிலையை மேற்கொள்ளத் தொடங்கின. அதன் தொடர்ச்சியாக தன்னலம் சார்ந்து பிறர் பொருளை முறைகேடாக கவரத் தலைப் பட்டதின் விளைவாக ஊழல்(corruption) என்ற ஒன்று பரவத் தொடங்கியற்று. ஊழ் என்ற தமிழ்ச் சொல் விதி நேர்மைமரபு என்ற பொருள் பட நம் இலக்கியங்களில் கையாளப் பட்டது. ஆனால் கடந்த நூற்றாண்டு தொடர்ந்த வினைகளுக்கு பொருத்தமாக ஊழ்+ அல்நேர்மையில்லாத, விதிகளுக்கு முரணான,மரபுக்களுக்கு எதிரான என்ற பொருள் படும்படி ஊழ் + அல் = ஊழல் என்ற புதுச்சொல் தமிழில் புழக்கத்தில் வந்தது. பொதுமக்கள் அதிகாரத்தை தனி நபர் இலாபங்களுக்காகத் தவறாகப் பயன் படுத்தும் போக்கே ஊழல் என வங்கி விளக்கம் சொல்கிறது. எனவே ஊழல் மலிந்த நாடுகளுக்கும், ஊழல் ஒழிந்த நாடுகளுக்கும் பெருளாதார வளர்ச்சி, மக்கள் நலம் மக்களின் வாழ்க்கை முறை ஆகியவற்றில் ஓர் பெரும் வேறுபாட்டை காணமுடிகிறது. இந்தியா போன்ற இயற்கை வளமும் மனிதவளமும் மிக்க நாட்டில் கூட ஏழை, பணக்காரன் இடைவெளி என்று பெருகி வருகிறது. ஒருவேளை உணவின்றி பட்டினியுடன் படுக்கைக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை சற்றொப்ப 45 கோடி என அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த இடைவெளியினை ஏற்றத் தாழ்வினை சமன் செய்யும் பொறுப்பும் கடமையும் இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவர் மனதிலும் முகிழ்த்திட வேண்டும். எனினும் ஆட்சிக்கு வருகின்ற அரசியலாளர்களும் குடிமைப்பணியில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரத்தில் மத்தியிலும் பெரிதும் செயலாக்கம் பெற வேண்டிய ஒன்றாகும். அரசியல் கட்சிகள் சில சட்டங்கள் மூலம் ஊழல் ஒழிப்பை முன்னிலைப் படுத்தினாலும் அதே அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தான் ஊழலின் ஊற்றுக் கண்ணாக விளங்குகின்றனர். வாக்கு வங்கி அரசியலில் பணம் சேர்ப்பதும் அதிகார மையத்தைக் கைப்பற்றுவதும் தற்கால அரசியல் கட்சிகளின் முதன்மைக் கொள்கையாக அமைந்து விட்டபடியால் மனித குல மாண்புகளும், சமூக சமனியமும் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பண்புகளும் சிதைந்து வருகின்றன. இந்தியாவின் ஊழல் நிலைக்கு மற்றொரு காரணியாக விளங்குவது கருப்பு பணமாகும். இந்தியாவில் கருப்புப் பணம் என்பது இந்தியாவின் மொத்த உற்பத்தியில் (GDP) 62% விழுக்காடு என மதிப்பிடப் பட்டுள்ளது. அதாவது சற்றொப்ப 93 இலட்சம் கோடிகள். இது இந்தியாவின் முதன்மை உற்பத்தியான வேளாண்மைத் துறையின் பங்கீடான 39 விழுக்காட்டை விட அதிகாகும். இந்தநிலை நீடித்தால் ஒருநாடு எப்படி மேன்மை எய்த முடியும்? பொருளாதார நிலை போன்ற இடைவெளி போன்ற சமுக நிலையிலும் வருணாசிரம (அ) தரும அடிப்படையில் படி நிலைச் சாதிகள் ஏற்றத் தாழ்வுகள் விரிவடைந்து வருகின்றன. எனவே ஊழல் மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வினால்பெரிதும் பாதிக்கப் படுபவர்கள் அடித்தட்டு மக்களாகவே உள்ளனர். ஊழல் ஒழிப்பில் 168 நாடுகளை ஒப்பிட்டு கணக்கிடுகையில் இந்தியாவின் வரிசை 76 வது இடமாகும். இந்தியாவில் அரசமைப்பு விதியின் மூலம் அமைவுற்றிருக்கும் நடுவண் கண்காணிப்பு குழுமம் (Central Vigilance) 1988 ஆம் ஆண்டு முதல் இயங்கிவருகிறது. இது இந்தியாவின் அரசு அதிகாரிகள் மற்றும் இந்திய அரசின் கீழ் இயங்கி வரும் நிறுவனங்களை கண்காணித்து வருகின்றது. ஆனால் இது போன்ற நிலைகளிலும் கட்சிகளின் ஆயினும் தலையீடு இருப்பதினால் சுதந்தரமாக செயல் பட முடிவதில்லை. இது போன்றுதான் மத்திய புலனாய்வுத் துறை என்ற அமைப்பு. இவைகளின் தனித்தன்மைகளைத் தகர்த்திடும் வகையில் ஆளும் கட்சிகள் செயல் படுகின்றன. அண்மைக் காலமாக இந்தப் போக்கு மிகவும் அதிகரித்து வருகிறது. ஆளும் அரசு, அமைச்சகம் சார்ந்த கொள்கை முடிவுகளிலும், வேற்று நாடுகளுடன் செய்துகொள்ளும் வணிக ஒபபந்தங்களிலும் கூட ஊழல் போக்கு அதிகம் தென்படுகிறது. தனிமனித நலன்களுக்காக மக்களாட்சி அதிகாரத்தை பயன் படுத்தும் போக்கை இருமுனை தாக்குதல் மூலம் தகர்த்திட வேண்டும். (1) ஆழமாக கையாள வேண்டிய தந்திர முறை (2) வெளிப்படையாக மேற்கொள்ள வேண்டியய நடை முறைகள். முதல் நிலையில் தனியுரிமை (Monopoly) என்ற நிலையை குறைப்பது; தனியார் மயமாக்கல்; இலவயங்கள் தவிர்ப்பது, தனிமனித அதிகாரங்களைக் கட்டுப் படுத்தி ஒவ்வொரு செயலுக்கும் அல்லது முடிவுகளுக்கும் பொறுப்பேற்பதும் வெளிப்படைத் தன்மை என சட்டத்தின் மூலம் அணுகுவது. இரண்டாம் நிலை என்ற ஊழல் நடவடிக்கைகள்; எவ்வித சலனமும் இன்றி ஒடுக்குவது, ஊழல் ஒழிப்பு குழுமங்கள் அமைத்து அவர்களுக்கு விசாரணை, தண்டனை போன்றவற்றில் தனியதிகாரம் அளித்தல் மேலும் பெருச்சாளிகளை அடையாளம் கண்டு தயக்கமின்றி முடிவெடுத்தல் போன்றவையாகும். இவற்றில் சில செயல் பாடுகள் ஆயினும் கட்சிக்கு விளம்பரம் தேடுவதற்கோ அல்லது எதிர்கட்சிகளை மிரட்டுவதற்காக மட்டுமே பெயரளவில் தற்போது செயல் படுத்தப் படுகின்றன. இவற்றில் பெருமாற்றம் கொண்டு வர வேண்டிய பொறுப்பு ஆளுங்கட்சிக்கு சேர்ந்ததாகும். மன தளவில் அரசியல் வாதிகளிடம் மாற்றம் பெறுவதே ஊழல் ஒழிக்கும் வழியாக அமையும். முதல் நிலை அணுகுமுறையில் 1980 ஆம் ஆண்டு அறிமுகப் படுத்தப் பட்ட தொலைப் பேசித்துறை கொள்கை முடிவுகள் பெரும் நன்மையை விளைவித்திருக்கிறது. ஒரு காலத்தில் தொலைப்பேசியை பெறுவதற்கும், பயன் படுத்துவதற்கும் பெருந்தொகை செலவழிக்க வேன்டிய நிலை இன்று எண்ணிப்பார்க்க இயலா மாற்றத்தையும் எளிமையிலும் விளைவித்திருக்கிறது என்பது குறிப்பிட வேண்டியதாகும். ஆழமாக எடுக்கப் பட வேண்டிய முடிவுகளுக்கு எண்ணற்ற சவால்களையும் சந்திக்க வேண்டி வரும். குறிப்பிட்ட ஒரு பகுதி மக்கள் அல்லது தொழிலாளர்கள் எதிர்ப்பு போன்றவற்றைக் குறிப்பிடலாம்.ஆனால் ஆளுங்கட்சி வாக்கு வங்கி அரசியல் போக்கிலிருந்து விடுபட்டு சில திடமான முடிவுகள் எடுப்பதின் மூலமே இந்த முறையிலான அணுகு முறைகளுக்கு வெற்றியை ஈட்டித் தரும். இந்திய நாட்டில் மதம், சம்பிரதாயம் என்ற பெயரில் பல சடங்குகள் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளன என்று வெளிநாட்டவர் பலரின் கணிப்பாகும். எனவே ஊழல் கறுப்புப் பணம் போன்ற வற்றை ஒழிக்க வேண்டுமானால் அரசியல் கட்சிகள் குறிப்பாக ஆளுங் கட்சி மனப்பூர்வமாகத் தொலை நோக்குப் பார்வையுடன் செய்யப் பட வேண்டும். அதை விடுத்து ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுவது மிரட்டுவது ஊழலை கருப்புப் பணத்தை வளர்ப்பதற்கு உதவுமேயன்றி தடுப்பதற்குப் பயன் படாது எனவே வெட்டியெறியப்பட வேண்டிய முறைகளை வெட்டி யெறிவதும், புணுகு போன்ற ஆற்ற வேண்டிய பகுதிகள் மருந்திட்டு நோய் தீர்ப்பதும் இரு முறை ஆயுதங்களாக செயல் படுத்த வேண்டும். எனவே ஊழல் மிகுந்து அரசோட்சும் தன்மையும் நேர்மையும் மிகுந்திருப்பதிலும் பயன் இல்லை. ஊழல் குறைந்தும் நேர்மையும் மிகுந்திருப்பதும் பயன் இல்லை.ஊழல் குறைந்தும் நேர்மை மிகுந்தும் ஆளப்படும் நாட்டில் தான் பொருளாதார வளர்ச்சி ஏற்படுமேயொழிய விளம்பரத்திற்காகச் செய்யப்படுவைகள் அனைத்தும் தளர்ச்சியே விடையாகும். அண்மையில் மோடி அரசின் விளம்பரங்களும் கருப்புபண ஒழிப்பு நடவடிக்கைகளுமே இதனை உறுதிப் படுகிண்றன. அரசியல் வழிகளே மனதில் மனம் மாற்றம் கொண்டுவாருங்கள் அல்லது மக்களே மாற்றத்தைத் தேடி மக்களாட்சிக் கோட்பாட்டை உறுதி செய்யும் ஊழல் மலியும்; ஒழியும்மக்கள் வாழ்வு நிலை மிளிரும்; ஒளிரும்.