15 September 2015 4:21 pm
ஓரிரு மாதம் முன்பு சென்னை அண்ணா நகரின் ஒரு முக்கிய சாலையில் நிகழ்ந்த ஒரு நிகழ்வு நினைவிற்கு வருகிறது. அந்த மத்திய வணிகப் பகுதியில் அமெரிக்காவின் பிரபல சிற்றுண்டி குழும அமைப்பின் புதிய சென்னைக் கிளை திறப்புவிழா. சாதாரணமாக பல்வேறு வகை ரொட்டித் துண்டுகளை விற்பனை செய்யும் அந்த கடை வாசலில் பல பணக்காரர்கள் அருகாமையில் தங்கள் மகிழுந்துகளை நிறுத்திவிட்டு வரிசையாய் கடைக்குள் நுழைய காத்திருக்கின்றனர். ஏராளமாய் மகிழுந்துகள் (கார்கள்)நிறுத்தப்பட்டதில் சாலையில் பெரும் ஊர்தித் தேக்கம். நின்று கொண்டிருக்கும் வாகனங்களைச் சூழ்ந்து வழக்கம் போல் பிச்சை எடுக்கும் ஏழ்மை கூட்டம். ஒருபுறம் பன்னாட்டு பதிய உணவைச் சுவைக்கப் பணக்கார கூட்டம். மறுபுறம் ஒருவேளை உணவுக்கும் பிச்சை தேடி ஓடி வரும் ஏழைக் கூட்டம். நடுவில் தாம் அவசரப் பயணம். நாம் எங்கே செல்கிறோம்.? உணவு, வாழ்வின் அடிப்படை ஆதாரம். உலகின் அத்தனை உயிரினங்களும் அதன் பரிணாமங்களும் படிநிலை வளர்ச்சிகளும் உணவைச் சார்ந்தே இருந்து வந்திருக்கின்றன. கிளாமிடாமோனசில் இருந்து கிளைத்து கிளைத்து இன்று புவி வெப்பமடைதலை யோசிக்கும் ஆறு அறிவு ஆசாமிகளாய் ஆனதற்கு உணவிற்கான தேடல் ஒரு முக்கிய காரணம். எண்சாண் உடலுக்கு வயிறே பிரதானம்" என்கிற நற்றமிழ் சொற்றொடரும், உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூம் விட்டேம் என்பார்க்கின் நிலை என்கிற குறளும் உணவும் அதற்கு ஆதாரமான உழவும் அது இல்லாமல்போனால் துறவிக்கும் இல்லை வாழ்வு என்று வேகமாய் உருக்குலையும் உணவுக் கலாச்சாரமும், உணவு உறுதிப்பாடும் 8 மகத்தான கருத்தை அறிவிப்பன. உழவின் அத்தனை சவால்களும் உணவுத் தன்னிறைவையும் பன்னாட்டு வணிகப் பிடிக்குள் திட்டமிட்டு தள்ளப்படுகின்றன. உழவிற்கான வளர்ச்சிப்பணிகள் என்று சொல்லப்படுபவை செய்யப்படுபவை, அரசியலாளருக்கும், பெரும் கான்டிராக்டரர்களின் வணிகப் பசிக்கும், பெரும் செல்வந்தர் மற்றும் கார்பரேட் விவசாய நிறுவனங்களின் வசதிக்காக மட்டுமே அமைக்கப்படுகின்றன. தேவையின்றி கட்டப்படும் அணைகளாகட்டும், உற்பத்தித் திறனைப் பெருக்கும் உத்திகள் என சான்றுடன் சந்தைப்படுத்தப்படும் மரபணு மாற்றப்பட்ட பயிர்களாகட்டும், உழவை எந்நாளும் பெருக்க வரவில்லை. மாறாக, நம் உழவுச் சந்தையை மொத்தமாக அடிமைப்படுத்தவும் அந்த மரபணு மாற்றப்பட்ட பயிர்களால், உருவாக உள்ள பெரும் நோய்களின் மூலம் மருந்து சந்தைக்கு வித்திடவுமே வழி கோலுகின்றன. உணவு பசிக்காக மட்டுமல்ல; ருசிக்காக மட்டுமல்ல; பரவச மூட்டும் சூழலில் மனசுக்கு பிடித்தவருடன் சத்தமில்லாமல் பேச சந்தர்ப்பம் தரும் இடத்திற்காக அல்ல; விருந்தாகவோ மருந்தாகவோ கூட அல்ல; அதையும் தாண்டி அர்த்தமுள்ளது. நம் எண்ணத்தைச் செயலாக்க, அந்த எண்ணத்தையும் உத்வேகமாக உருவாக்க, செயலை மிகச் சிறப்பாக செய்து முடிக்கும் உடல் திறனை உருவாக்க கூடியவரை நோயில்லா நல்வாழ்வு பெற்றிட உதவும் அமுது உணவு!. ஆறின கஞ்சியோ, லோப்ஸ்டர் மீன் துண்டோ எதுவாயிருப்பினும் உணவு நம் மனித வாழ்வின் அடித்தளம். வணிக ஆளுமையும், வளர்ந்துவிட்ட நாடுகளின் ஆளுமையும் பெருகி வரும் இந்த நூற்றாண்டில், உணவு ஒரு மிகப் பெரிய ஆயுதமாகி வருகிறது. காலையில் நீங்கள் புதினா சட்னி அரைக்கணுமா, மத்தியான சாம்பாருக்கு அவரைக்காய் போடணுமா என்பதையெல்லாம், எங்கோ ஒரு வளர்ந்த மேற்கத்திய நாட்டின் மாபெரும் ஆராய்ச்சி நிறுவனம் முடிவு செய்யும் நிலைமை வந்து கொண்டிருக்கிறது. கொஞ்சம் கவனமாய் நம் பாரம்பரிய உணவு விடயங்களை நவீன அறிவியலின் துணை கொண்டு மீட்டெடுக்கத் தவறும் பட்சத்தில் தலைவாழை இலை போட்டு பச்சைகலர் மாத்திரை பதினைந்து போட்டு, விட்டமின் சிரப் ஊற்றி பிசைந்து, வேண்டுமானால், தொட்டுக்க லேகியம், தாகத்திற்கு கசாயம் என உணவு வாழ்க்கை தலைகீழாக மாறிவிடும். உணவு மீதான அரசியலும் ஆளுமையும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக அறிந்திருப்பது மிகவும் அவசியம். அறுபதுகளின் முடிவில் நிகழ்ந்தது அது. உலகெங்கும் ஆட்சியில் இருந்தது தேங்காய் எண்ணெயும் ஆலிவ் எண்ணெயும், நல்லெண்ணையும், உணவு உறுதிப்பாடும் மட்டுமே. தென் கிழக்கு ஆசிய நாடுகள், தென் அமெரிக்க நாடுகள், மேற்கிந்தியத் தீவுகளில் முற்றும் தேங்காய் எண்ணெய் தான் முதன்மை சமையல் எண்ணெய். ஐரோப்பாவில் மட்டும் ஆலிவ் ஆட்சி. அப்போது பூரிதக் கொழுப்பு (Saturated Fat)) இதய நாடிகளில் கொழுப்பைச் சேர்த்துவிடும் என்கிற செய்தியை அவசரமாக மருத்துவ ஏடுகளும், பாமரன் படிக்கும் அத்தனை இதழ்களும் வேக வேகமாக எழுதத் துவங்க, தேங்காய் எண்ணெயின் ஆளுமை உலகெங்கும் குறையத் துவங்கி, இன்றளவில், தேங்காய் பிள்ளையாரைத் தவிர, எவரும் அஞ்சும் பொருளாகிவிட்டது. ஆனால், ‘கொழுப்பு’ என்கிற பயமுறுத்தலுக்குப் பின்னால் மிகப் பெரிய வணிகப் போட்டி இருந்தது, இப்போது தான் கசியத் துவங்கி உள்ளது. சூரிய காந்தி எண்ணெயை உலகெங்கும் வணிகப் படுத்துவதற்காக, நம்மில் பெரும் பயன் பாட்டில் இருந்த கடுகு எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெயின் இடங்களைக் காலி செய்ய, பெரும் மருத்துவ நிறுவனங்களுடன் அமெரிக்க அரசாங்கம் செய்த கூட்டுச் சதியோ என பல்வேறு நாட்டு அறிஞர்களும் இன்று புருவம் உயர்த்தத் துவங்கி உள்ளனர். உணவைத் தேர்ந்தெடுக்க ஒருபோதும் விளம்பரத்தை இறுதி விடயமாக நம்ப வேண்டாம். அதற்காக எந்த ஒரு வணிகத்திலும் விளம்பரம் இல்லாமல் இருக்க இயலாது. விளம்பரத்தில் ‘இப்படி ஒரு உணவு வந்துள்ளது’ என்கிற அறிமுகத்துடன் நிறுத்திக் கொண்டு, பின்னர் அலசி ஆராயுங்கள். அது ‘ஸ்னாக் பாக்ஸ் அயிட்டமோ’ அல்லது ‘சமையல் எண்ணெயோ’ எதுவாயிருப்பினும் மாறுவதற்கு முன் ஏன் மாறணும்? அவசியமா? மாறுவதால் உடலுக்கு என்ன நன்மை?, அவர்கள் சொல்லும் நன்மைகள் எப்போதும் நிலையாக இருக்குமா? இப்போது மூட்டுவலி போகும் என்பவர்கள் ஐந்தாண்டு கழித்து ‘மூட்டுவலி போகும்; ஆனால் முதுகு வலி வரும்’ என்றால் என்ன செய்வது? என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இனியாவது உணவின் மீதான கூடுதல் அக்கறையும் பாரம்பரியத்தினை அப்படியே புறந்தள்ளாமல் அறிவியலின் துணை கொண்டு மீட்டெடுத்தலும் நம் உறுதிமொழியாக இருக்கட்டும். நம் உணவு குறித்த அக்கறையும் பாரம்பரிய அறிவும் அலாதியானது. நம் பாரம்பரிய உணவு ஒவ்வொன்றும் வெறும் ஆற்றல் தருபவையாகவும் பசி போக்கும் ஊட்டமாகவும் அல்லது வெறும் விருந்தாகவும் மட்டுமல்லாமல் நோய் தீர்க்கும் மருந்துக்கூறாகவும், நோய் வராது காக்கும் தடுப்பாகவும் இருந்தது. பாட்டி வீட்டு, அந்த பரந்த சமையல் அறை இன்னும் மனதில் மங்காமல் உள்ளது. மண்எண்ணெய் அடுப்பும், விறகு அடுப்பும் அடுத்தடுத்து ஒரு ஓரத்திலும், மறு ஓரத்தில் அங்கணாக் குழியும் (பாத்திரம் துலக்கும் பகுதி) அமைக்கப்பட்ட அடுப்பங்கறை, அவசரங்களையும் அலட்சியங்களையும் தொலைத்த ஓர் அழகான பகுதி. அடுப்புத்தளத்தின் அரிசி மாக்கோலத்தில் எறும்புக்கும், முற்றத்து வாசலில் காகத்திற்கும் பரிமாறிவிட்டு வீட்டுப் பிள்ளைகளுக்கு தட்டு போடும் ஆன்மாக்கள் நிறைந்த பகுதி அது. கணுக்கால் வரை கண்டாங்கிப் புடவை உடுத்திய எங்கள் பாட்டியின், தட்டுல மீதி இருக்கப்பிடாது.. சொல்லிட்டேன் என்கிற அக்கறை மிரட்டலும், கூடவே தொடர்ந்து வரும், அவன் ஒழுங்கா வெளிய போறமாதிரி தெரியல.. கீரையும் வாழத்தண்டும் கூட வச்சியா? என்கிற தாத்தாவின் விசும்பிய வினவலும் தான் அன்றைய உணவின் அலங்காரங்கள். பவுர்ணமி இரவின் நிலாச் சோறுக்கு பக்கத்து வீட்டு நண்பர்களுடன் சாப்பிடுகையில், அடிச்சட்டி ஆனைபோல என மண்சட்டியில் எதிர்த்தவீட்டு அக்கா வழித்து தந்த முருங்கை சாதத்தின் குழைவும் மணமும் இன்னும் மறக்கவில்லை. அதன் உரமும் உன்னதமும் இன்னும் கெடவில்லை. ஆனால், நாங்கள் வளர்ந்துவிட்டோம். நகரம் நோக்கி நகர்ந்துவிட்டோம். பக்கத்து வீடும் நாடும், எல்லை தாண்டிய வன்முறையை எதிர்பார்த்தே தினம் முகம் மழிக்கின்றன. எங்கள் வீட்டு இந்த மாடுலார் கிச்சனில், ஏப்ரன் கட்டி, இடுப்புயர அடுப்பு மேடையில், மைக்ரொ ஒவனில் அளவாய்ச் சமைக்கும் (?) அவசர சமையலில், எதை எங்கள் வீட்டு இந்நாள் குருத்துக்கள், எடுத்துக் கொள்ளப் போகின்றன? கலோரிக் கணக்குப் பார்த்து, அலர்ஜி அறிந்து, அடையாளம் மறைத்து ட்ரஸ்சிங் செய்து அளிக்கப்படும் ‘நாக்குமூக்கு’ உணவுகள் எவ்வளவு நம்பிக்கை தருபவை?. ஒவ்வொரு முறை உணவு தயாரித்து முடித்த பின்பும் உணவைத் தாளித்து எடுக்கின்றோம். இந்த தாளிசம் செய்யும் முறைக்குப் பின்னால் ஒரு மருத்துவ பிண்ணனியே உள்ளதென்பது உங்களுக்கு தெரியுமா? வெளிநாட்டு உணவுப் பண்பாட்டில் தாளிசம் கிடையாது. ‘டிரெஸ்ஸிங்’ எனும் அலங்காரம் மட்டும்தான் உண்டு. இப்போது தாளித்து எடுக்கும் முறைக்கும் அப்போதைய தாளிசத்திற்கும் நிறையவே மாறுதல் உண்டு. இப்போது உள்ள கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை அக்காலத்தில் பயன்படுத்தப்படவில்லை. மாறாக, மிளகு, ஏலம், மஞ்சள், பெருங்காயம், பூண்டு, சீரகம், சுக்கு, வெந்தயம் பயன் படுத்தபட்டன. இப்படி தாளிசத்தின் மூலம் மசாலாக்களைச் உணவாய்ச் சேர்க்கும் பழக்கம் இந்தியாவிலும் சீனாவிலும் தான் அதிகம் உண்டு. மற்றவர் மணமூட்டியாக, தேநீர் கலவையாக மட்டுமே இந்த மசாலாக்களை அறிந்திருந்தனர். ஏன் உணவை தாளிக்கின்றோம்?. உணவு தயாரிக்கும் சமயம், சுவை ஒன்றோடு ஒன்று கலக்கும் போது, அதன் மூலப் பொருட்களும் கலக்கும். அப்போது ஏற்படும் மாறுதல்களில், நம் உடலைப் பாதிக்கும் எந்த ஒரு சிறு நிகழ்வும் ஏற்படாது இருக்க, மிளகு, ஏலம், மஞ்சள், பெருங்காயம், பூண்டு, சீரகம், சுக்கு, வெந்தயம் எனும் எட்டு வகை கார நறுமணப் பொருட்களை, (திரிதோட சமப் பொருட்கள் வாதம், பித்தம், கபம் எனும் திரிதோடத்தையும் சமமாய் நன்னிலையில் வைத்திருக்கும் பொருள்) கடைசியில் சேர்க்கும் முறையை நம் முன்னோர்கள் நமக்கு கற்பித்து இருந்தனர். இந்த திரிதோட சமப் பொருட்கள், உணவு சமைக்கப்பட்ட பின்பு சேர்க்கப்படும்போது, சுவையினைப் பெருக்குவதுடன், சீரணத்தையும் சீராக்கி, உணவால் எவ்வித கேடும் விளையாமல் உடலைப் பேணும். இனிப்பு உணவு எதைச்செய்தாலும் கொஞ்சம் ஏலம் சேர்க்க வேண்டும். இனிப்பால் அசீரணம் வராதிருக்கவும், அதன் மூலம் சளி சேராதிருக்கவும் ஏலம் உதவும். இனிப்பு உடலில் வேகமாக சேராது இருக்கவும் ஏலத்தின் அரிசி உதவிடும். புலால் உணவு எது சமைத்தாலும் பூண்டு, மிளகு, சுக்கு அவசியம் அதில் இடம்பெற வேண்டும். மிளகு ஒரு நச்சு. உடலில் அலர்ஜி ஏற்படாது இருக்கவும், மூக்கு சைனஸ் பகுதியில் சளி சேராமல் இருக்கவும் மிளகு பாதுகாக்கும். ஆஸ்துமா நோயினருக்கு, மிளகு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். மிளகில் உள்ள பைப்ரைன் (Piperine) எனும் அல்கலாய்டு (Alkaloid), ஒரு மிகச் சிறந்த நோய் எதிர்ப்பு பண்பேற்றி (Immune Modulator) என்று இன்றைய அறிவியல் உணர்ந்து உள்ளது. உங்கள் வீட்டில் இனி யாராவது உணவின் மிளகைத் தட்டில் பொறுக்கி ஓரம் வைத்தால், ‘ணங்’ என்று செல்லமாய் ஒரு கொட்டு கொட்டி, மிளகின் மகத்துவத்தைப் புரிய வையுங்கள். பூண்டு, இதயம் காக்கும் இனிய நண்பன். நெடுங்காலமாக, இதனை நாம் பயன்படுத்தி வந்தாலும், வெள்ளைமுடிக்காரன் விசாரித்துச் சொன்ன பின்பு தான் இதனை கொஞ்சம் அதிகம் பயன்படுத்தி வருகிறோம். மடி, ஆசாரம் என பூண்டு, வெங்காயத்தினை ஒதுக்குவோருக்கு ஒரு வேண்டுகோள்! உங்கள் இரத்தக்கொழுப்பை சீராக வைத்து, இதயம் என்றும் பழுதின்றி இயங்க இவ்விரண்டும் கண்டிப்பாய் உணவில் இடம்பெற வேண்டும். அதிலும் குறிப்பாய் சிறு பூண்டு, சிறு வெங்காயம் தான் உங்கள் முதல் தேர்வாக இருக்க வேண்டும். பல்லாரி வெங்காயத்தை விட சிறு வெங்காயம் 2600 மடங்கு அதிகம் நற்கூறுகள் கொண்டது என இன்றைய விஞ்ஞானிகள் சொல்லுகின்றனர். மலைப்பூண்டைக் காட்டிலும் சிறு பூண்டும் அதன் சத்துக்களில் சிறந்தது. (Allicin) எனும் அதன் சத்து மாரடைப்பைத் தடுப்பதுடன் ஒரு சிறந்த எதிர் நுண்ணியிரியும் கூட. என்ன கொஞ்சம் மெனக்கிட வேண்டும். காப்பாற்றப்படுவது உங்கள் இதயம் அல்லவா? ‘சுக்கிற்கு மிஞ்சிய மருந்தில்லை; சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுள் இல்லை’, என்று ஒரு வட்டார வழக்கு மொழி ஒன்று உண்டு. அந்த அளவிற்கு சுக்கு ஒரு தலையாய மருந்து. புலால் உணவு எளிதில் செரிமானமிக்க சுக்கு உதவிடுவதுடன், உடலில் பித்தம் சேர்ந்து, மைக்ரேன் தலைவலி வராதிருக்க சுக்கு உதவும். மைக்ரேன் தலைவலியில் அவதிப்படுவோர் தங்கள் ஒவ்வோர் உணவிலும் சுக்கை சிறு அளவில் சேர்ப்பது சிறப்பு. வாழைக்காய்ப் பொரியல், உருளை பிரட்டல், சுண்டல் வகையறாக்கள் செய்யப் போகிறீர்களா? முடிவில் பெருங்காயப் பொடி சேர்க்க மறக்க வேண்டாம். பெருங்காயம் வெறும் மணமூட்டி மட்டுமல்ல. வாய்வு உடலில் சேராதிருக்கவும் அசீரணம் ஆகிவிடாமல் இருக்கவும் உதவுவதுடன் குடற்புண்களையும் அகற்றிட உதவும். சீரகம் அகத்தைச் (இரைப்பையை) சீர் செய்வதால் அதற்குக் கிடைத்த பெயர். எந்த மந்தம் தரும் எண்ணெய்ப் பதார்த்தங்களையும் செய்து முடிக்கையில் பொன்வறுவலாய் வறுத்த சீரகத்தைச் சேர்க்க மறக்கக் கூடாது. சீரகமும் இலவங்கப் பட்டையும் குடற்புண்களைத் தரும் ‘ஹெலிகோபேக்டர் பைலோரை’ எனும் நுண்ணியிரியினைக் குடலில் வளர விடாமல் செய்யவும் உதவிடும். அசீரணம் உள்ளவர்கள், நம் அண்டை மாநிலத்து நண்பர்களைப்போல் சீரகத்தண்ணீரை அவ்வப்போது சேர்க்க வேண்டும். சீரகம் இரத்தக் கொதிப்பு நோயாளிகளுக்கும் நல்லது. அடுத்து வெந்தயம். சைவ உணவினருக்கு நல்ல காய்கறிகள், கனிகள் சாப்பிடத் தவறினால், உடலுக்கு தேவையான நார்சத்து கிடைப்பதில்லை. ஒரு நாளைக்கு கிட்டதட்ட 22 கிராம் நார்பொருள் நமக்கு தேவை. வெந்தயம் சைவ உணவுகளில் அதிக நார்சத்து கொண்ட பொருள். குறிப்பாக, கரையும் நார்ப்பொருள் தான் இதயத்தில் கொழுப்பு படியாத தன்மையைத் தரும். கரையாத நார்ப்பொருள் மலச்சிக்கலை நீக்குவதுடன், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். வெந்தயம் இந்த இரண்டு வகை நார்ப்பொருளையும் அதிக அளவில் கொண்டது. சாம்பார், இட்லி, சப்பாத்தி, என அத்தனை உணவிலும் வெந்தயம் சேர்ப்பது புத்திசாலித்தனம். நீரிழிவு, இரத்தக் கொதிப்பு, மாரடைப்பு ஆகிய முக்கிய மூன்று எதிரிகளுக்கும் வெந்தயம் ஒரு மருந்தாகும் உணவான அடிப்படை உணவு. நறுமணமூட்டும் உணவுகளிலேயே தலையாயது மஞ்சள். நம் உணவுகளில் அன்றாடம் இதை ஏதோ ஒருவிதத்தில் சேர்ப்பதினால்தான், இன்னும் சுகாதாரச் சூழல் அதிகம் இல்லை என்றாலும், பல நோய்கள் வராது இருக்கின்றது. மஞ்சள் ஒரு புழுக்கொல்லி. இயற்கை எதிர் நுண்ணியிரி. (Natural Antibiotic!) அதைக் காட்டிலும் புற்று நோய்க்கான மருந்து. கார ருசிக்காக அதிகம் சேர்க்கப்படும் மிளகாய் வற்றல் சேரும் உணவில் எல்லாம், மஞ்சள் சேர்க்கப்படுவதினைப் பார்த்திருப்பீர்கள். மிளகாய் வற்றலின் புற்றுண்டாக்கும் (Carcinogenic) இயல்பை, மஞ்சள் மாற்றிவிடும். ஆதலால்தான் அந்தக் காம்பினேஷன் சேர்க்கை எங்கும் உள்ளது. ஒவ்வொரு காய்கறிகளிலும், கூட்டிலும் சமைத்தபின் கொஞ்சம் மிளகுத் தூள், மஞ்சள், சீரகம், பெருங்காயம், சுக்கு சேர்க்க சேர்க்க உங்கள் மருத்துவச் செலவு கண்டிப்பாய்க் குறையும். நறுமணம் ஊட்டும் இந்த காரப் பொருட்கள், நம் பாரம் பரியத்தின் அடையாளங்கள். நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற நலவாழ்வுச் சூத்திரங்கள். தாளிப்பதற்கும் டிரெஸ்ஸிங் செய்வதற்கும் உள்ள வித்தியாசம் தாளிப்பதில் கூடுதலாய்க் கிடைக்கும் அதன் நலப் பண்புகள் தான். அதற்காக, உணவை அலங்கரிப்பது தவறல்ல. கூடுதலாய் அக்கறையுடன் இந்த மூலிகை மணமூட்டிகளுக்கு இடம் அளிக்க மறந்து வருவதுதான் வேதனை. உணவை அலங்கரிப்பதில் காட்டும் ஆர்வம், நம் பாரம்பரியத்தை மீட்டெடுப்பதில் இல்லை என்பதுதான் வருத்தத்திற்கான விடயம். இன்றைய உணவு வணிகம் முழுக்க முழுக்க, அதிகமான இலாபம், சந்தைக் கட்டுப்பாடு மற்றும் அதில் தனி கம்பெனிகளின் ஆளுமை மற்றும் கோலோச்சும் தன்மை மட்டுமே முதன்மையாகச் சிந்திக்கப்பட்டு வணிகம் திட்டமிடப்படுகிறது. நீடித்த உணவின் ஆயுட்காலத்திற்காக, உணவின் நன்மையைச் சிதைக்கும் பல வேதிப் பொருட்கள் ஏராளமாய் சேர்க்கப்படுகின்றன. அவசர உணவுகளில் சேர்க்கப்படும் கூறுகள் பல நேரங்களில் எந்த வாடிக்கையாளருக்கும் தெரிவதில்லை; புரிவதில்லை. சாம்பாரில் உப்பு குறைவு என்றால் சண்டைகட்ட தயாராகும் நம்மில் பலர் சந்தையில் கிடைக்கும் பீட்சாவில் எந்த கெமிக்கல் எந்த அளவு போடுகிறார்? குறைந்தபட்சம் எது அது? என்று யோசிப்பதே இல்லை. கண்ணைக் கவரவும், மூக்கை வசப்படுத்தவும் நாவை அடிமைப்படுத்தவும் படைக்கப்படும் இன்றைய பல புதிய உணவுகள் நம் வீட்டு உணவறையை அடுப்பங்கறையை ஆளத் துவங்கி விட்டன.- மருத்துவர் கு.சிவராமன்"