எது தேசியம்? - தமிழ் இலெமுரியா

16 June 2016 5:27 pm

பொதுவாக மக்கள் அனைவரையும் ஐக்கியப்படுத்துவதிலும் பல்வேறு விடயங்கள் குறித்து அவர்களை ஒன்று திரட்டுவதிலும் ஓர் உந்து சக்தியாக செயல்படுவது நாட்டுப்பற்று என்னும் தேசிய உணர்வே. மனித வரலாற்றின் பல கட்டங்களில், வஞ்சகத்தை தூண்டி விடுகின்ற ஒரு கடுமையான கோட்பாடாகவும் பிறநாட்டு தேசிய இனத்தவருக்கு எதிரான வன்முறைகளை தூண்டுவதாகவும் வன்முறை மற்றும் போரினை பற்ற வைப்பதற்காகவுமே நாட்டுப்பற்று அல்லது தேசியவாதம் என்னும் சொல்லின் பயன்பாடு மிகுதியாகக் காட்டப்பட்டுள்ளது. ஐரோப்பாவும் உலகின் பிற பகுதிகளும் தேசியம் என்னும் பெயரில் ஒவ்வொரு கண்டத்திலும் ஒரு தீவிர வடிவமாக உருவாகியுள்ள ஆக்கிரமிப்பு மற்றும் பகைமை உணர்வினால் பேரழிவினை தரக்கூடிய விளைவுகளை எதிர்நோக்கி உள்ளது. இதுவே போர் வெறிக்கான பின்புலமாகவும் நாடுகளிடையே விரோதப் போக்கினை ஏற்படுத்தும் முக்கியக் கரணியமாகவும் உருவாக்கி வருகிறது. கவிஞர் இரவீந்தரநாத் தாகூர் ஜப்பான் மற்றும் ஐரோப்பாவின் தேசியவாதத்திற்கு தீவிர மாறுநிலை கொண்டவராக இருந்ததுடன் அவற்றிற்கு எதிராகவும் எழுதினார். குறுகிய மனப்பான்மை, சுயநலம், கர்வம் ஆகியவற்றின் வடிவங்களாகவே தேசியம் திகழ்கிறது" என நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விளக்கமளித்துள்ளார். இந்தியாவில் நம்முடைய விடுதலைப் போராட்டத்தின் பின்னணியில் உருவான தேசிய உணர்வானது அனைத்து துறைகளிலும் சகிப்புத் தன்மையுடன் பொறுத்துக் கொண்டிருந்த சுரண்டல்களுக்கும் காலனித்துவ ஆட்சிக்கும் பதிலளிக்கும் வகையில் எதிர்ச் செயலாக இருந்தது .  அதன் பின் தற்போது தேசியம் எனும் சொல் வன்மையின் முக்கியத்துவம் உரக்கத் தொடங்கியுள்ளது. "பாரத மாதா கி ஜெய்" (இந்திய அன்னைக்கே வெற்றி) எனும் ஒற்றை முழக்கம் நாட்டுப்பற்றின் உன்னதத்தை நிலைநாட்டுவதற்கு பயன்படுத்துவதுடன் இந்தியர்களின் நாட்டுப்பற்றையும் தேசிய உணர்வையும் விரிவுபடுத்துவதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இத்தகைய முயற்சிகளுக்கு எதிராக பரவலான அதிருப்திகள் (சீற்றங்கள்) எழுந்துள்ளன. மகாராட்டிரா சட்ட மன்றத்தின் புகழ்பெற்ற சட்டமன்ற உறுப்பினர் வாரிஸ் கான் "ஜெய் ஹிந்த்" என முழங்கத் தயாராக இருந்த போதிலும் "பாரத மாதா கி ஜெய்" என முழங்க மறுத்ததால், வாய்மொழி வாக்கெடுப்பின் மூலம் பேரவையினரால் ஒருமனதாக இடைநீக்கம் செய்யப்பட்டார். ஒரு குறிப்பிட்ட முழக்கத்தை மையமாகக் கொண்டு இந்தியத் தேசியம் அமைந்துள்ளது தொடர்பாக பல கேள்விகள் எழுந்துள்ளன. இச்சூழலில் நாம் இச்சிக்கலை வரலாற்றின் ஊடாக நோக்குவது அவசியம் எனக் கருதுகிறேன். "பாரத மாதா கி ஜெய்" குறித்த சிக்கலுக்கு இந்திய நாட்டின் தந்தை மகாத்மா காந்தியை தவிர வேறு யாரும் நிலையான தீர்வை நிலைநாட்டிட இயலாது. பிரிட்டிசு அரசு இந்தியர்கள் மீது திணித்திருந்த பிரித்தானிய தேசிய கீதம் ஒலித்துக் கொண்டிருந்த காலத்தில், அதற்கு எதிராக முதன் முதலாக "வந்தே மாதரம்" பாடல் இயற்றப்பட்டது. மகாத்மா காந்தி பாரத மாதா கி ஜெய் எனும் முழக்கத்தை வந்தே மாதரத்திற்கு சமமாகக் கருதினாலும் முந்தைய காலத்திலும் சரி, அதற்கு பின்பும் சரி வந்தே மாதரம் முழக்கத்திற்கே முன்னுரிமையளித்து வந்துள்ளார் என்பது அவருடைய தொடர் பணிகளிலிருந்து நமக்கு புலனாகிறது. அவர் எழுதிய எண்ணற்ற கடிதங்களிலும் கட்டுரைகளிலும் வந்தே மாதரத்தை மிகுதியாகப் பயன்படுத்திய மகாத்மா, பாரத மாதா கி ஜெய் எனும் முழக்கத்தை அரிதாகவே பயன்படுத்தியுள்ளார். 1882 ஆம் ஆண்டு பக்கிம் சந்திரரால் வெளியிடப்பட்ட ஆனந்த மடம் (ஆனந்த் மத்) எனும் நாவலிலிருந்து பெறப்பட்ட சொல்லே வந்தே மாதரம் ஆகும். ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் "இறைவனே இராணியை காப்பீர்" (நிஷீபீ ஷிணீஸ்மீ tலீமீ னிuமீமீஸீ) என்று தொடங்கும் இங்கிலாந்து இராணியை புகழ்ந்து பாடும் பிரித்தானிய தேசிய கீதத்தை பாடுமாறு இந்தியர்கள் கட்டாயப்படுத்தப் பட்டிருந்த போது, பக்கிம் சந்திரர் "வந்தே மாதாரம்" (தாய் மண்ணே வணக்கம்) பாடலை இயற்றினார். வந்தே மாதரம் எனும் முழக்கம் இந்திய மக்களின் உணர்வுகளை பூர்த்தி செய்யும் வகையிலும் தங்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் ஓர் உயரிய முழக்கமாகவும் கருதப்பட்டது. 1896 ஆம் ஆண்டு முதல் முறையாக இரவீந்திரநாத் தாகூர் இந்திய தேசிய அமர்வில் வந்தே மாதரம் முழுப் பாடலையும் பாடினார். வங்காளம் முழுவதும் ஒலிக்கப்பட்ட இப்பாடல் பின்னர் 1905 ஆம் ஆண்டு சுதேசி இயக்கத்தின் போது இந்தியாவின் பிற பகுதிகளிலும் பாடப்பட்டது. 1937 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசு, இப்பாடலின் முதல் இரண்டு சரணங்களை மட்டும் இந்தியாவின் நாட்டுப்பண்ணாக (தேசிய கீதம்) அறிவித்தது. பிற சரணங்கள் தாய் மண்ணை இந்து கடவுளாகிய துர்க்கைக்கு சமமாக ஒப்புமைப் படுத்தப்பட்டிருந்ததால் அவற்றை அப்புறப்படுத்தி விட்டனர். உண்மையில் வந்தே மாதரம் பாடலின் ஒரு பகுதி இந்துக் கடவுளாகிய துர்க்கைக்கு அர்பணிக்கும் விதமாக இயற்றப்பட்டதால் இசுலாமியர்கள் தொடக்கத்திலேயே இப்பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், இப்பாடல் அவர்களின் மத நம்பிக்கைக்கு எதிரான உருவ வழிபாட்டிற்கு இட்டுச் செல்லும் எனக் கருதினர். லாலா லஜபதி ராய் லாகூரில் "வந்தே மாதரம்" என்ற பெயரில் நாளிதழ் ஒன்றைத் தொடங்கினார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சில இந்தியர்கள் சுவிட்சர்லாந்திலுள்ள பத்திரிகைகளில் "பந்தே மாதரம்" என எழுதத் தொடங்கினர். இது வன்முறைச் செயல்களுக்கு வழிகோலியது. இவ்வாறு எழுதியவர்களை கோழைகள் என வருணித்ததால் கோபால கிருஷ்ண கோகலே, பிரோசா ஆகியோர் வன்மையாகத் தாக்கப்பட்டனர். இத்தகைய அணுகுமுறையை ஏற்றுக் கொள்ளாத மகாத்மா காந்தி "வன்முறையை தூண்டி விடுவது விடுதலையை அடைவதற்கான ஒரு வழிமுறை ஆகுமா?" எனக் கேள்வி எழுப்பினார்.இந்தியாவின் உணர்ச்சிப்பூர்வ வழிபாடே வந்தே மாதரம் 1905 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் நாள் மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவில் இருந்த போது வந்தே மாதரம் குறித்து "வங்காளத்தின் வீரப் பாடல்" எனும் தலைப்பில் ஒரு சிறிய கட்டுரையை எழுதினார். "இப்பாடல் வருங்காலத்தில் இந்தியாவின் தேசிய கீதமாக திகழும் அளவிற்கு மிகப் புகழ்பெற்ற பாடலாக அமைந்துள்ளது" எனக் கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். "பிரிட்டன், ஜெர்மனி, பிரான்சு போன்ற மேற்கத்திய நாடுகளின் தேசிய கீதத்தின் கருத்துருவை நன்கு உணர்ந்து புரிந்து கொண்டு பக்கிம் சந்திரர் வந்தே மாதரத்தை இயற்றியுள்ளார். பிற நாட்டு பாடல்களை விட இனிமையானதாகவும் உணர்வுப் பூர்வமானதாகவும் வந்தே மாதரம் பாடல் திகழ்வதாக" காந்தியடிகள் வலியுறுத்தினார். மேலும் கூறிய அவர் "பிற தேசிய கீதங்கள் உணர்ச்சிக் கருத்துகளைக் கொண்டிருக்கும் பொழுது, அவை மற்றவருக்கு கண்ணியம் குறைந்ததாகவும் இழிவு படுத்துவதாகவும் அமைந்து விடுகின்றன. இக்குறைகளை முற்றிலும் தவிர்ப்பதற்கே பந்தே மாதரம் உருவாகியுள்ளது." நாட்டுப்பற்று உணர்ச்சியை தூண்டுவதற்கான உயர்தரமான பாடலான வந்தே மாதரம் இந்தியாவிற்கு ஓர் உணர்ச்சிப்பூர்வ வழிபாடாக அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். வந்தே மாதரம் பாடல் குறித்த காந்தியடிகளின் மேற்கூறிய கட்டுரையிலிருந்து அவரது ஆழ்ந்த, உள்ளார்ந்த அன்பை அறிய முடிகிறது.முதல் சத்யாகிரகமும் வந்தே மாதரமும் காந்தியடிகளால் தென் ஆப்பிரிக்காவில் தொடங்கப்பெற்ற முதல் சத்யாகிரகத்தில் பங்கேற்ற பல இந்தியர்களுக்கும் காந்தியடிகளுக்கும் இடையே ஒரு உறுதியான பிணைப்பு எழுத்தாக வந்தே மாதரம் என்ற முழக்கம் விளங்கியது. இதற்கு 1914 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவர் எழுதிய "கடைசி சத்தியாகிரக போராட்டம்: என் அனுபவம்" எனும் கட்டுரையே சான்றாகும். அணி வகுப்பில் கலந்து கொண்ட பொதுமக்கள் "இராமச் சந்திரருக்கு வெற்றி", துவாரகநாத்திற்கு வெற்றி, வந்தே மாதரம் ஆகிய முழக்கங்களை எழுப்பினர் என இக்கட்டுரையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்திய தாய்க்கான எழுச்சிப் பாடல் இந்திய விடுதலைப் போராட்டத்தின் போதும், விடுதலைக்கு பின்னும் பல சந்தர்ப்பங்களில் காந்தியடிகள் வந்தே மாதரத்திற்கு புகழாரம் சூடியதுடன் அச்சொல்லின் மீது உயர்ந்த மரியாதை வைத்திருந்தார். 1918 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் நாள் இப்பாடலை "பேரழகு வாய்ந்த நாட்டுப்பண்" என போற்றினார். மேலும் "இப்பாடலின் ஒலி அதிர்வு, இராகம் என இதன் முழு பெருந்தன்மையையும் நாம் இன்னும் அறியவில்லை" என எழுதினார். 1911 ஆம் ஆண்டிற்கு பிறகு காந்தியடிகள் எழுதிய ஏறத்தாழ 650 கடிதங்களிலும் கையப்பமிடுவதற்கு மேலே எழுதக் கூடிய "தங்கள் உண்மையுள்ள", தங்கள் நம்பிக்கைக்குரிய என்ற சொற்களுக்கு பதிலாக "வந்தே மாதரம், மோகன்தாஸ்" என்றே குறிப்பிட்டுள்ளார். இசுலாமியர்களுக்கு எழுதிய பல கடிதங்களில் "ஆதாப்", வந்தே மாதரம், ஆசீர்வாதம் ஆகிய சொற்களை பொருத்தமான இடங்களில் பயன்படுத்தியுள்ளார். பிரோசாபென் தால்யேரகான் எனும் பெண்மணிக்கு எழுதிய ஒரு கடிதத்தில் காந்தியடிகள் சர்தார் மற்றும் மகாதேவ் சார்பாக வந்தே மாதரத்தை தெரிவித்துள்ளார்.  பிற நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வருகை தரும் மக்கள் காந்தியைச் சந்தித்து கலந்துரையாடிய பின் விடைபெறும் தருவாயில் கூட "வந்தே மாதரம்" அல்லது "சலாம்" என்று கூறியே வழியனுப்பும் முறையைக் கொண்டிருந்தார் என்றால் அம்மந்திரச் சொல்லின் தாக்கம் அவரது மனதில் எவ்வளவு ஆழ்ந்து தவிர்க்க முடியாததாய்த் திகழ்ந்தது என்பதை அறியலாம். அவரது வந்தே மாதரத்தின் ஆழ்ந்த தாக்கத்தை புரிந்து கொள்ள வேண்டுமெனில் அவருடைய உள்ளார்ந்த எழுத்துகளில் அச்சொல் ஒளிமயமாக பிரதிபலிப்பதன் வாயிலாக அறியலாம். 1947, ஆகஸ்டு 23 ஆம் நாள் கல்கத்தாவில் ஒரு வழிபாட்டு கூட்டத்தில் உரையாற்றும் போது, இந்தியத் தாய்க்கான எழுச்சிப் பாடலாக வந்தே மாதரத்தை குறிப்பிட்டார். "ஏறத்தாழ இந்தியா முழுவதும் தூங்கிக் கொண்டிருந்த வேளையில் வங்காளத்தின் தேசிய கூச்சலான தேசிய கீதமே இந்தியத் தாயை நிலைநிறுத்தியது" எனவும் குறிப்பிட்டார்.  1947 ஆம் ஆண்டிற்கு முன்பே 1939, சூலை 1 ஆம் நாள் "அரிஜன்" இதழில் "தேசியக் கொடி" எனும் ஒரு கட்டுரையை எழுதினார். அவற்றிலும் வந்தே மாதரத்தின் உணர்ச்சியே (தாக்கமே) பிரதிபலித்தது. "இப்பாடலின் மூலப் பொருள் எங்கிருந்து பெறப்பட்டது, இப்பாடல் எப்போது உருவாக்கப்பட்டது என்பது முக்கியமல்ல; இவை இயற்றப்பட்ட காலகட்டத்தில் வங்காள இந்துக்களுக்கும் இசுலாமியர்களுக்கும் இடையில் மிகப் பெரிய போர் முழக்கமாக மாறி விட்டது. ஆனால் அப்பாடல் ஓர் ஏகாதிபத்திய எதிர்ப்புக்கான முழக்கம் ஆகும். முதலில் ஆனந்த மடம் குறித்து அறியாதவனாய் இன்னும் சொல்லப் போனால், இப்பாடலை இயற்றியது பக்கிம்தான் என்பது கூட அறியாத ஓர் இளைஞனாய் இப்பாடலைக் கேட்ட போது நான் மிகவும் ஈர்க்கப்பட்டு வந்தே மாதரம் என் நாவில் பற்றிக் கொண்டது" என உணர்ச்சித் ததும்ப எழுதியிருந்தார். "நான் இதனுள் இருந்த தூய்மையான தேசிய உணர்வுடன் இரண்டரக் கலந்து விட்டேன். இப்பாடல் இந்து மதப் பாடல் என்றோ அல்லது இந்துகளுக்கு மட்டுமே எனப் பொருள்படும் படியோ ஓரிடத்தில் கூட எனக்கு தோன்றவில்லை. எதிர்பாராத விதமாக நாம் தீய நாட்களுக்கு இரையாகி விட்டோம்… வங்காளத்தின் உள்ளேயும் வெளியேயும் இருக்கின்ற இலட்சக்கணக்கான நாட்டுப் பற்றாளர்களின் உயிரைத் தூண்டுகிறது. இதில் தேர்ந்தெடுக்கப் பட்ட சரணங்கள் நாடு முழுவதும் வாழும் பல கோடி மக்களுக்கு மத்தியில் வங்காளப் பரிசாகத் திகழ்கிறது" என வலியுறுத்தினார். எனினும், பல இனங்கள் கூடியிருக்கும் கூட்டத்தில் பாடப்படும் வந்தே மாதரத்தால் ஒரு சிறு சச்சரவு கூட ஏற்படக் கூடாது என அவர் திட்டவமாக கூறினார்.காந்தியடிகள் பரிந்துரைத்த மும்முழக்கம் வந்தே மாதரத்தின் மீது அவருக்கு இருந்த மரியாதை இறுதி வரை கடுகளவு கூட குறையவோ மறையவோ இல்லை. இந்திய மக்களின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கவும் நாட்டுப்பற்றை ஊக்குவிப்பதற்காகவும் இதனுடைய ஆழமான முக்கியத்துவத்தை கபட மனமின்றி அவர் அறிந்து வைத்திருந்தார். அதே நேரத்தில் நம்முடைய பன்முக சமுகம் மற்றும் மத வேறுபாடுகளுக்கு ஏற்ப பலவாறான முழக்கங்களை முழங்கிட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டினார். இதற்கு 1920 ஆம் ஆண்டு நிகழ்ந்த கிலாபத் கிளர்ச்சியின் போது "மகாத்மா காந்திக்கு ஜெய்" "முகமது அலி & சவுகத் அலிக்கு ஜெய்" என முழக்கமிட்டு காந்தியடிகளையும் அலி சகோதர்களையும் பொதுமக்கள் வரவேற்றதால் கிளர்ச்சி முடிவுக்கு வந்ததே தகுந்த சான்றாகும். சில நிகழ்வுகளில் இந்துக்கள் வந்தே மாதரம் என்றும் இசுலாமியர்கள் அல்லாஹ் -ஓ- அக்பர் என்றும் முழக்கமிட்டனர்.  இத்தகைய வேறுபட்ட முழக்கங்களைக் கண்ட காந்தியடிகள் 1920 செப்டம்பர் 20 ஆம் நாள் "யங் இண்டியா" பத்திரிகையில் "மூன்று தேசிய முழக்கங்கள்" எனும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். அல்லாஹ் -ஓ -அக்பர், வந்தே மாதரம் அல்லது பாரத மாதா கி ஜெய், இந்து முஸ்லீம் கி ஜெய் ஆகிய மூன்று முழக்கங்களை மத நம்பிக்கைகளுக்கு ஏதுவாக பொதுமக்களிடம் வலியுறுத்தினார். இத்தகைய மூன்று தேசிய முழக்கங்களை அவரவர் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் எவ்வித சிக்கலுமின்றி மக்கள் மனமார ஏற்றுக் கொள்வார்கள் என்பதில் அவர் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். குறிப்பாக, கடவுளே பெரியவர் எனும் பொருள் பொதிந்த "அல்லாஹ் -ஓ- அக்பர்" எனும் முழக்கத்திற்கு எவரும் எவ்வித ஆட்சேயபனையும் கூறாததை அவர் உணர்ந்தார். "இந்து முஸ்லீம் கி ஜெய் எனக் கூறாமல் பாரத மாதா கி ஜெய் எனும் முழக்கம் முழுமை அடையாது" என்பதை ஆழ்ந்த சிந்தனையுடன் கூறினார். ஆகவே, வந்தே மாதரத்தை 1911 முதல் 1948 வரை அவர் எழுதிய பல கடிதங்களின் உணர்ச்சி வெளிப்பாடாக பயன்படுத்தியும் அம்முழக்கத்தில் அசாதாரண பற்று கொண்டிருந்த போதும் பன்மை முழக்கங்களை காந்தியடிகள் வலியுறுத்தினார் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. உள்ளபடியே காந்தியடிகளின் மும்முழக்க அறிவுரையை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் பல சந்தர்பங்களில் இந்துக்களும் வந்தே மாதரம், அல்லாஹ்- ஓ- அக்பர் என்று இணைத்தே முழங்கியுள்ளனர்.இந்தியத் தாய்க்கு கோயில் 1936 ஆம் ஆண்டு சிவபிரசாத் குப்தா என்பவரின் வேண்டுகோளுக்கிணங்க, மகாத்மா காந்தி பனாரசில் உள்ள இந்தியத் தாய் (பாரத மாதா) கோயிலை தொடங்கி வைத்தார் எனும் செய்தி மிகவும் கவனிக்கத்தக்கது. அக்கோயிலில் ஒரே ஒரு இந்திய வரைபடம் இருந்தது. இவ்வரைபடம் பூனேயிலுள்ள பேராசிரியர் கார்வி கைம்பெண் காப்பத்திற்கு சிவபிரசாத் குப்தா சென்றிருந்த போது, அங்கிருந்த இந்தியாவின் மீட்பு வரைபடத்தை மாதிரியாகக் கொண்டு குப்தா வடிவமைத்திருந்தார். 1936, அக்டோபர் 25 ஆம் நாள் இக்கோயிலை தொடங்கி வைத்த போது நாட்டின் அனைத்து பகுதியிலிருந்தும் இந்துக்கள், இசுலாமியர்கள், சீக்கியர்கள், பார்சிகள், சமணர்கள், புத்த மதத்தினர், தாழ்த்தப்பட்டோர் என 25, 000க்கும் அதிகமானோர் பெருந்திரளாகக் கூடியிருந்தனர்.  கோயிலை தொடங்கி வைத்த பின் காந்தியடிகள் "இந்த கோயில் எந்த ஒரு இறைவன் அல்லது இறைவியின் உருவத்தையும் கொண்டிருக்க வில்லை. மாறாக சலவைக் (மார்பிள்) கற்களால் பொறிக்கப்பட்ட ஒரே ஒரு இந்திய மீட்பு வரைபடம் மட்டுமே வைக்கப் பட்டுள்ளது. இந்த கோயில் தாழ்த்தப்பட்டோர் உட்பட அனைத்து சாதி, மத, இன மக்களுக்குமான பொது குடியிருப்பு மேடையாகவும் இந்நாட்டில் அன்பு, அமைதி, மத நல்லிணக்கம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் சிறந்த வழித் தலமாகவும் விளங்குகிறது" என உரையாற்றினார். மகாத்மா காந்தியின் இத்தகைய பொதுத்தன்மை கொண்ட பார்வையே வந்தே மாதரம் அல்லது பாரத மாதா கி ஜெய், தேசியம் குறித்த சிக்கல்களுக்கு அவருடைய அணுகுமுறையாக வரையறுக்கப் படுகிறது.முழக்கங்களை திணிப்பதற்கு எதிர்ப்பு 1940களின் தொடக்கத்தில், வன்முறையற்ற சமுக மாற்றத்தால் இந்திய விடுதலையை அடைவதற்கான 18 அம்சங்கள் அடங்கிய ஆக்கப்பூர்வ செயல்முறை திட்டம் ஒன்றை மகாத்மா வகுத்தார். அதில் மாணவர்களுக்கான அம்சத்தில் "மற்றவர்களின் மீது தேசிய கொடியை அல்லது வந்தே மாதரத்தை திணிக்கக் கூடாது" எனத் திட்டவட்டமாகக் கூறியிருந்தார்.  நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் "ஜெய் ஹிந்த்" என்ற முழக்கத்தை உருவாக்கிய போது நாட்டையே திடுக்கிடச் செய்தது. மேலும் சமுகத்தின் அனைத்து பிரிவினரின் மனநிலையைப் பொறுத்தே நாட்டுப்பற்று மற்றும் ஒன்றுபட்ட தேசியத்தின் மதிப்பு இருந்ததை ஆழ பதிய வைத்தது. 1946, பிப்ரவரி 26 ஆம் நாள் காந்தியடிகள் பத்திரிகைக்கு வெளியிட்ட ஓர் அறிக்கையில் "ஜெய் ஹிந்த் என முழங்குவதற்கு மற்றவர்களைக் கட்டாயப்படுத்தும் முயற்சியில் சிலர் ஈடுபடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது" என வலியுறுத்தினார். ‘‘ஜெய் ஹிந்த் அல்லது வேறு எந்த ஒரு முழக்கதையும் முழங்க ஒரு தனிநபர் கட்டாயப்படுத்தப்பட்டால் கூட, அது தன்னாட்சியின் சவப்பெட்டிக்கு அடிக்கப்படும் ஆணியாகும்’’ என எச்சரித்தார்.தேசிய கீதம் அடங்கிய தொகுதி 1945, டிசம்பர் 23 ஆம் நாள் அரசியல் பணியாளர்களுடனான கலந்துரையாடலின் போது, வந்தே மாதரத்திற்கு பதிலாக "கதம் கதம் படாயாகே" எனும் புதிய பாடலை நாட்டுப் பண்ணாக மாற்ற வேண்டும் எனக் காந்தியிடம் கேட்ட போது, காந்தியடிகள் புகழ்பெற்ற தியாகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட வந்தே மாதரம் பாடலை ஒரு போதும் புறம் தள்ளக் கூடாது என்று வலியுறுத்தினார். எனினும், ஒரு புதிய பாடலை அல்லது பாடல்களை நிச்சயமாக பின்நாள்களில் நமது தேசிய கீதத்துடன் சேர்க்கப்பட்டு  தேசிய கீதங்கள் அடங்கிய தொகுதிகளாக உருவாக்கி எந்த பாகுபாடுகளுமின்றி அவர்களுடைய சிந்தனையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனப் பரிந்துரைத்தார்.  எந்தவொரு முழக்கத்தையும் மக்களிடம் திணிப்பதற்கு எதிராகவும் அதற்கு பதிலாக பல பாடல்கள் அடங்கிய தேசிய கீதத்தின் தொகுப்பை உருவாக்கலாம் என்பதும் காந்தியின் நிலைப்பாடாக இருந்தது. ‘‘பீகாரில் சிலர் தொடர் வண்டியில் பயணச் சீட்டின்றி பயணிப்பதற்காக "ஜெய் ஹிந்த்" என முழங்கிக் கொண்டே பயணிக்கின்றனர். கொலை மற்றும் கொள்ளைக்கான கூச்சலாக இது போன்று முழக்கமிடுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள இயலாது’’ என 1947, மார்ச் 5 ஆம் நாள் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அதற்கு முன்பே 1939, பிப்ரவரி 18 ஆம் நாள் ‘‘இந்து மாநிலம் இசுலாமியர் மாநிலம் என அழைக்கப் படுவது ஒன்றுபட்ட தேசியக் கட்டமைப்பின் மிகப் பெரிய அவதூறு’’ என வருணித்தார்.வந்தே மாதரம் மட்டுமே போதாது சிலர் "பாரத மாதா கி ஜெய்" முழக்கத்தைச் சுட்டிக்காட்டி முழங்குவது மட்டுமே தேசியம் என்று கருதியிருந்த வேளையில், 1919 அக்டோபர் 9 ஆம் நாள் பரோடாவில் மகாத்மா காந்தி ஆற்றிய உரை தற்போது செவி மடுத்து கேட்கத் தக்கது. "இந்தியா தற்போது மிகுந்த நெருக்கடியான நிலையில் உள்ளது. படையணி திரட்டுவதிலும் ஊர்வலம் செல்வதிலும் வந்தே மாதரம் என முழங்குவதிலும் தாய்நாட்டிற்கே வெற்றி என கூச்சலிடுவதிலும் நேரத்தை வீணடிப்பதை அனுமதிக்க முடியாது. இன்றைய இந்தியா மூன்று கொடிய நெருப்புக்கு இரையாகிக் கொண்டிருக்கிறது. உயர்ந்து வரும் நோய் நொடிகள், பெருகி வரும் மக்களின் ஆடை பற்றாக்குறை, பரந்த அளவிலான பட்டினி ஆகியவையே இக்கொடிய மூன்று நெருப்புகளாகும். பட்டினிப் பஞ்சம் நிலவிக் கொண்டிருந்த சூழலில், பம்பாயிலுள்ள இலட்சாதிபதிகளும் கோடீஸ்வரர்களும் இந்தியாவின் நிலை குறித்த உண்மைக் குறியீட்டைக் காட்டுவதில்லை. அவர்களுடைய நிபந்தனைகளின் அடிப்படையில் வளமான இந்தியாவை உருவாக்க இயலாது. பல ஆண்டுகளாக இந்தியாவிலுள்ள ஏழரை இலட்சம் கிராமங்களிலும் வாழும் விவசாயிகளும் நெசவாளர்களும் முற்றிலும் வறுமையால் பீடிக்கப் பட்டுள்ளனர். இத்தகைய நிலையில் நாம் இந்தியாவை வளமான நாடு எனக் கூற முடியாது. எனவே இத்தீயிலிருந்து நம் தாய்நாட்டை மீட்பதற்கு, நமக்கு ஊர்வலங்கள் தேவையில்லை; நல்ல மருத்துவர்கள்தான் தேவை. ஆர்பாட்டங்கள் தேவையில்லை; பயனுள்ள தீர்வுகள்தான் தேவை. தற்போது நமக்கு வீரமான ஆண்களும் வீரமான தாய்மார்களுமே தேவை".முழக்கங்கள் மற்றவர்களை மிரட்டுவதற்காக அல்ல இந்திய நாடு எதிர்கொள்ளவிருக்கும் பல்வேறு சவால்களுக்கு "வீரமான ஆண்களும் வீரமான தாய்மார்களுமே" தீர்வாக  அமையக் கூடும். இது முழக்கங்களை மக்களிடம் கட்டாயப்படுத்தி திணிப்பதால் நடந்து விடாது. 1947 மார்ச் 3 ஆம் நாள் பாட்னாவில் ஒரு வழிபாட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய மகாத்மா காந்தி, வெவ்வேறு மத நம்பிக்கை கொண்ட மக்களின் மனதிலும் இதயத்திலும் அச்சத்தை உண்டாக்கும் நோக்கில் சிலர் முழக்கங்களை முழங்கி வருகின்றனர் என்பதை மிகுந்த வலியுடனும் வேதனையுடனும் கூறினார். மேலும் அவர் கூறியதாவது, இங்கே கூடியிருக்கும் இந்துக்கள் இசுலாமியர்களைக் காணும் போது அவர்களை அச்சுறுத்தும் விதமாகக் கூச்சலிடுவதாக நான் கேள்விப்பட்டேன். அவர்கள் ‘ஜெய் ஹிந்த்’ ‘வந்தே மாதரம்’ என்ற முழக்கத்தை உரக்க எழுப்புகின்றனர். இவ்வாறு முழக்கமிடுவதில் தவறு ஒன்றுமில்லை; ஆனால் இம்முழக்கங்கள் மற்றவர்களுக்கு எந்த வருத்தமும், அச்சுறுத்தலும் இல்லாததாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இல்லையேல் இது ஒரு மிகப் பெரிய பாவச் செயலாகும். இத்தகைய நடவடிக்கைகளால் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என்பதற்காக இம்முழக்கங்களை எழுப்புகிறீர்களா? அல்லது இவற்றை சரியான நடவடிக்கையாகக் கருதுகிறீர்களா?  அதே போன்று நவகாளியிலுள்ள இந்துக்களும் இசுலாமியர்களால் எழுப்பப்படும் அல்லாஹ்- ஓ- அக்பர் முழக்கத்தால் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். உண்மையில் இவ்விரண்டு முழக்கங்களும் இறைவனே உயர்ந்தவர்" எனும் ஒரே பொருள் கொண்டவையாகும். எனவே யாரும் இம்முழக்கங்களைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. ஆனால் இத்தகைய முழக்கங்கள் தவறான நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் போது, அவற்றின் அர்த்தங்கள் தவறாக சித்தரிக்கப்பட்டு வரங்களுக்கு பதிலாக சாபங்களையே பெறுகின்றனர். ஜெய் ஹிந்த் என்பது இந்துக்களுக்கு வெற்றி; இசுலாமியர்களுக்கு தோல்வி என்று பொருளல்ல. நம்முடைய தவறான அணுகுமுறையால் அச்சுறுத்தப்பட்ட இசுலாமியர்கள் தற்போது இதே ஆயுதத்தை அவர்களும் கையில் எடுத்துள்ளனர். இன்னொரு மனிதரின் முழக்கத்தை நாம் கேட்கும் போது, சக மனிதன் சண்டைக்கு தயாராகி விட்டான் நாமும் தயாராக இருக்க வேண்டும் என எண்ணுகிறோம். நாம் இவ்வாறு சண்டையிட்டுக் கொண்டு ஒருவர் இன்னொருவரை பழிதீர்த்துக் கொண்டிருந்தால், இந்தியா முழுவதும் இரத்த ஆறு ஓடுவதுடன் பழிவாங்கும் எண்ணம் காலாகாலத்திற்கும் தணியாது. ஒரு இசுலாமியச் சிறுவன் இந்துக்கள் வசிப்பிடத்திற்கு வருகிறான் எனில், அச்சிறுவனை குளிப்பாட்டி, நல்ல ஆடை உடுத்தி அன்பு காட்டி அவன் முழு மகிழ்ச்சியை பெறும் அளவிற்கு இந்துக்கள் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு நடந்தால் மட்டுமே இந்துக்கள் நமது நண்பர்கள் என இசுலாமியர்கள் உணர்வார்கள்". தீர்வு:  புராணங்களில் சிவ பெருமானை வழிபடுமாறு கட்டளையிட்ட  தந்தை இரணிய கசிபு-வின் ஆணையை மீறி மகன் பிரகலாதன் அரி கிருஷ்ணனின் நாமத்தை துதித்து வழிபட்டதால் தந்தையே மகனுக்கு தண்டனை வழங்க முற்பட்டதைப் போல, அமைச்சர் வாரிஸ் கான் வேறு எந்த முழக்கத்தையும் எழுப்பத் தயாராக இருந்த போதிலும் "பாரத மாதா கி ஜெய்" எனச் சொல்லாததால் தண்டைப் பெற்றுள்ளார். சத்யாகிரகத்தின் சிறந்த முன் உதாரணமாக மீராபாய், இமாம் உசைன், ஏசு கிறிஸ்து ஆகியோருடன் இணைத்து பிரகலாதனை எண்ணிப் பார்க்கிறார் மகாத்மா காந்தி. பாரத மாதா கி ஜெய் குறித்த தற்போதைய சர்ச்சைக்குரிய விவாதத்திற்கு, ஒன்றுபட்ட தேசியத்தை அணுவதற்கான மகாத்மா காந்தியின் பொதுத் தன்மையையும் புராணக் கதைகளிலிருந்து கற்றுக் கொண்ட பாடத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்பது பொருத்தமானதாக இருக்கும்.  - எஸ்.என்.சாகு, புதுதில்லி(கட்டுரையாசிரியர் எஸ்.என்.சாகு மறைந்த மேனாள் குடியரசு தலைவர் கே.ஆர்.நாராயணனின் ஊடகச் செயலாளராகவும் தலைமையமைச்சர் மாளிகையின் இயக்குநராகவும் சிறப்பு அதிகாரியாகவும் பணியாற்றியவர். தற்போது மாநிலங்களவை செயலகத்தின் துணைச் செயலாளராக பணியாற்றி வருகிறார். இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகள் அனைத்தும் கட்டுரையாசிரியரின் சொந்த கருத்துகளாகும். இவை மாநிலங்களவை செயலகத்தின் கருத்துகள் அல்ல.)"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி