கல்வி கற்க வேண்டிய வழியும் மொழியும் - தமிழ் இலெமுரியா

18 July 2014 12:16 am

தமிழர்கள் ஆங்கிலேயர்கள் ஆக முடியாது. ஆங்கிலம் நமக்கு ஒரு கருவி மொழியே; வேலை வாய்ப்புக்கு உதவும் துணை மொழியே. எனவே அதனை அடிமுதல் முடிவரை ஒரு மொழிப் பாடமாகக் கற்றால் போதும். மொழிப்பாடம் வேறு; வழிப்பாடம் வேறு. ஆங்கில இலக்கியம் படிப்பவருக்கு உரிய பாடத்திட்டம் வேறு. ஆங்கிலத்தை தொடர்புக்கு எனக் கற்பவர்க்குரிய பாடத்திட்டம் வேறு. பொதுவான தேவைக்குப் படிக்கும் போது, அதனை பிழையின்றி எழுத, பேசக் கற்பித்தல், கூச்சமின்றி உரையாடக் கற்பித்தல், பொது அறிவுடன் வேண்டுகோள் எழுதுதல், பலவகைப் படிவங்களை நிரப்புதல் போன்ற பயன்பாட்டு ஆங்கிலமும், பேச்சு மொழி ஆங்கிலமும் போதுமானவை. கல்விக் கூடப் பாடத்திட்டம் இவ்வாறு திட்டமிட்டு அமையாததால், பேச்சுமொழி ஆங்கிலம் (Spoken English) பற்றி, தனியார் பலர் பாடம் நடத்துகின்றனர். வேதியியல், விலங்கியல், உயிரியல், இயற்பியல் என்பன ஆங்கில வழியில் கற்பிக்கப்பட்டால், ஆங்கில மொழித்திறன் முக்கியத்துவம் பெறாது; அந்நோக்கத்தின் அடிப்படையே வேறு. ஆதலின் பாடப் பொருளில் மட்டுமே ஓரளவு வளரும், மொழிப் பாடமாக மட்டும் கற்பித்தால் ஆங்கில மொழித்திறன் கைக்கூடும். அதனை ஊடகமாக – மீடியம் ஆகக் கற்பித்தால் பாடப்பொருளும் மனத்தில் தங்காது; மொழித் திறனும் கிடைக்காது. ஆங்கிலத்தை ஒரு மொழிப் பாடமாகவே அழுத்தமாக, திறனுடையதாக, பயனுடையதாகக் கற்பிக்க வேண்டும். பள்ளிப் படிப்பாயினும் பட்டப் படிப்பாயினும் மொழிப் பாடமாகப் படிப்படியாகக் கற்பிக்கப் பாடத் திட்டங்கள் உருவாக வேண்டும். ஆங்கில வழிக் கல்வியை நீக்குவோம். ஆங்கில மொழிக் கல்வியைப் போற்றுவோம்.ஆங்கில வழி அரைகுறை வழியே: பொறியியல், மருத்துவம் முதலானவை ஆங்கில நாட்டில் போல, இங்கு நடைபெற வாய்ப்பில்லை. ஆசிரியர்களின் திறமைக்கு ஏற்ப, பொருட் பாடங்களுக்கு, குறிப்பு (Notes) தயாரித்து, அதைப் பார்த்துப் படிப்பவர் உளர். மனப்பாடம் செய்து வந்து சொற்பொழிபவரும் உளர். அவ்வாறு ஆசிரியர்களும் காலம் காலமாக கல்வியறிவு ஒப்பித்து மாணவர்களும் ஒப்பித்து நடைபெறுகின்றது. இடையே மாணவன் ஐயம் கேட்பதே இல்லை. போதிய ஆங்கிலப் பயிற்சி இன்மையால் அவ்வாறு அவன் எழுதி வந்து கேள்வி கேட்டால், ஆசிரியர் ஒன்று திணறுகிறார்; அல்லது தமிழின் துணையை நாடுகிறார். பெரும்பாலான ஆசிரியர்கள், பொருள் பாடங்களை, தமிழும் ஆங்கிலமும் கலந்த இரு மொழிப் பாடம் போலவே நடத்துகின்றனர். நூற்றுக்கணக்கான வகுப்புத் தேர்வுகள், திரும்பத் திரும்ப ஒரே விடையை எழுதி எழுதி மனப்பாடம் ஆதல்; அதை அப்படியே பொதுத் தேர்விலும் எழுதி நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறுதல்; இதுதான் நடைமுறையில் உள்ளது. இதனால் நேரும் பயன் ஆங்கில மொழியில் பயிற்சியும் இல்லை, பாடப் பொருளும் மனப்பாடத் தளவில் முடிவுறுகின்றது. இதனால் சுய அறிவுச் சிந்தனையுள்ள அறிஞர்களை உருவாக்க இயலாது. தமிழை, ஆங்கிலம் கலந்த கலப்பு மொழி ஆக்கவும், தமிழிலும் மொழித்திறன் அமையாது போகவும், வழி வகுப்பதே இவ்வழி. ஆங்கில மோகம் தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளும் கதையாகி விட்டது.ஆங்கிலம் மட்டுமே உதவுமா? ஆங்கில வழியில் கற்பவர் இன்று அமெரிக்கா செல்கின்றனர். மிகச் சிலர் ஆசுதிரேலியா போகின்றனர். இது நீடிக்கும் என்றோ, பயிலும் அனைவருக்கும் வாய்ப்புண்டு என்றோ கருத இயலாது. இது வாடகை வீட்டில் குடியிருப்பது போன்றது. இன்று இரசியத் தொடர்புக்கு அம்மொழியைக் கற்றவரே செல்ல முடியும். செருமன் மொழி படித்தவர்களுக்கே அங்கு வாய்ப்புண்டு. பிரெஞ்சு மொழி, சீனம் என அவ்வந் நாட்டவர் அனைவரும் தத்தம் மொழி கற்றவர்க்கே கதவைத் திறக்கின்றனர். சப்பானியரோ தம் நாட்டிற்கு வருபவருக்கு அவர்கள் தேடும் படிப்பு, பதவி போன்றவற்றிற்கு தமது மொழியை ஆறுமாதம், ஓராண்டு, ஈராண்டு கற்பித்த பின்பே இடம் கொடுக்கின்றனர். இதை அவர்கள் செலவிலேயே தூதரகம் மூலம் செயல்படுத்துகின்றதும் உண்டு. நாம் இந்தி ஆதிக்கம் வந்துவிடும் என எதிர்த்தது போல, ஆங்கில மொழி ஆதிக்கத்தை அவர்கள் அறவே வெறுக்கின்றமையும் கூடுதலாகப் பரவி வருகிறது. எனவேதான் தமிழில் மட்டும் அனைத்தையும் கற்பித்து, ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாக கற்பிப்பதே போதுமானது எனக் கூறுகிறோம். தேவைக்கேற்ப அவர்கள் ஏனைய மொழிகளையும் கற்க வேண்டி வரக் கூடும். தமிழே பயிற்று மொழி; ஆங்கிலம் முதலானவை தொடர்பு மொழி என்பதே உளவியலுக்கும் உலகியலுக்கும் உலகளாவிய நிலையில் பொருத்தமுடையதாகும். ஆங்கிலம் முன்பே இந்திய மொழிகளில் ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளமையால் அதனை ஒரு மொழிப்பாடமாகக் கட்டாயம் படிக்க வேண்டும். ஏனையவற்றை அதாவது தேவைப்படும் மொழியை விருப்பப் பாடமாகக் கற்க வேண்டும். மீண்டும் மீண்டும் நாம் வற்புறுத்துவது இதுதான். ஆங்கிலத்தை ஒரு மொழிப் பாடமாக, பேச்சுக்கு, உரையாடலுக்கு ஏற்ற வகையில், அதாவது பல நிலையிலும் தொடர்பு கொள்ள உதவும்படி கற்பிக்க வேண்டும். ஆங்கில "மீடியத்தால்" ஆங்கிலமும் வராது. பொருட் பாடங்களும் விளங்காது. தமிழைக் கலப்படமாக்கிச் சிதைக்கவே இது பயன்படும்.ஆங்கில ஆசிரியர்களுக்கு எங்கே போவது? ஆங்கில மொழி, இலக்கியத்தில் இளங்கலை, முதுகலை படித்தவர்களே ஆங்கிலம் கற்பிக்கும் தகுதியுடைய ஆசிரியர்களாவர். ஆனால் அவர்கள் முதுகலை போன்றவற்றில் பாடம் நடத்தப் போய்விடுவர்; பிறதுறைகளுக்குப் போய் விடுவர். பல நூறு பாடப் பிரிவுகள், மெட்ரிக் பள்ளிகள் எல்லாம் இத்தகைய பயிற்சியுள்ள ஆசிரியர்களைக் கண்டு பிடித்துச் சேர்ப்பது கடினம். தனியார் பள்ளிகளில் சம்பளம் மிகக் குறைவு; அரசுப் பள்ளிகளில் கூடுதல் சம்பளம் கிடைப்பதால், கடமையுணர்ச்சியைக் கைவிட்டு, சுக வாழ்க்கை தேடுபவர்கள் சிலர். மெட்ரிக் பள்ளிகளிலும் பிற பொறியியல் கல்லூரிகள் போன்றவற்றிலும் தொடக்க நிலையில் நல்ல ஆசிரியர்கள் கிடைப்பது அரிது. சில பள்ளி, கல்லூரிகளின் நிலை வருந்தத்தக்கது. பல முறை, படையெடுத்துத் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது முற்ற முடிக்காதவர்கள் என்று இத்தகையவர்களை வைத்தே சில இடங்களில் பாடம் நடத்தச் செய்கின்றனர். சில போது மேல்வகுப்பு மாணவர்களைக் கொண்டு, தொடக்க நிலை மாணவர்களுக்குப் பாடம் சொல்லச் சொன்னதாகக் கேள்விப்படுகிறோம். நாம் ஆங்கிலேயர்களாயின் வேறு பேச்சுக்கே இடமில்லை. இங்கு பிறமொழியைக் கற்று, முற்ற முடியப் பயிற்சி பெறாததால், இது அரைகுறைக் கல்வியாய் முடிந்து விடுகிறது. தகுதி குறைந்த நிலையில், மனப்பாடம் செய்து ஒப்பிப்பதும், மாணவரும் மனப்பாடக் கல்வியாய்க் கற்பதும், பள்ளியின் புறத்தே வெளிவந்த பிறகு பயனற்றுப் போகின்றன. ஒட்டுமொத்தமாக எல்லாப் பள்ளிகளின் மேலும் பழி சுமத்துவதா என்ற கேள்வி எழும். உண்மைதான்; இத்தகைய அவல நிலைகளும் ஆங்காங்கு உள என்பதே கருத்து. பெரும்பாலும் வேதியியல், இயற்பியல், விலங்கியல், கணிதம் போன்ற பொருள் பாடங்களைக் கற்றவர்கள், ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாக மட்டும் ஒரு பாடப் பிரிவில் பயின்றவர்கள் ஆங்கிலத்தைக் கற்பிக்க வல்லவராதல் அரிது. அவ்வப்பொருள் பாடங்களையே கற்பிக்கும் திறனுடையவராவர். எல்லாவற்றையும் வெளிப்படையாக எண்ணிப் பார்க்கும் பொழுது, சிலருக்குச் சீற்றம் பொங்கலாம். ஆயினும் கல்வியாளர்கள் உண்மையை ஒப்புக் கொள்வார்கள்.ஆங்கில மொழியைக் கற்பதற்கும் ஆங்கில வழியில் கற்பதற்கும் உள்ள வேறுபாடு: வேலைவாய்ப்புக்கு, உலகெலாம் சென்று உயரிய நிலைகளை அடைவதற்கு ஆங்கிலமே உதவும். தமிழ் வழியில் கற்றால், தமிழகத்திற்குள் கூட வேலை கிடைக்காது. ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் முடங்கிப் போகாமலிருக்க ஆங்கிலமே உதவும். இவ்வாறு விவாதிப்போர் பலருளர். இதனை நாம் ஒப்புக் கொள்வோம். ஆனால் இன்று ஐந்தாண்டுகள் பொறியியல் படித்து வெளியேறிய மாணவனிடம் பேசிப் பாருங்கள். அவன் ஆங்கிலத்தை முறையாக உச்சரித்து, தயக்கமின்றி "சரளமாக" உரையாடுகின்றானா? ஆங்கிலத்தில் தொடங்கித் தமிழைத் துணைக்கழைத்து ஒரு புதிய தமிங்கில் மொழியைத்தான் பயன்படுத்துகின்றான். நூற்றில் பத்துப்பேர் இதில் தேறுவார்கள். பிறர் எல்லாம் தாய் மொழியின் துணையையே நாடுவார்கள். ஆங்கில வழியில் பிறபாடங்களைக் கற்பது விளங்கிப் படிப்பதன்று. அது என்றும் மனப்பாடக் கல்வியாகவே அமையும். அவ்வாறு படிப்பவர்கள்தான் பெரிதும் குறுகிய வட்டத்திற்குள் முடங்கிப் போகிறார்கள். அவர்கள் படித்த துறையுடன் ஒன்றிப்போய் வேலை வாய்ப்பைப் பெற்று வாழலாம். ஆனால் பரந்துபட்ட பொது அறிவு வளர்ப்பதில்லை. உலகில் எம்மொழியில் புதிய சிந்தனைகள் வந்தாலும் அதனை ஏற்கும் மனப்பக்குவம் இவர்களுக்கு அமைவதில்லை. மேலும் ஒரு மொழியைப் பழுதறக் கற்றவனே மொழிக் கட்டமைப்பை முழுமையாய் அறிந்து கொள்வான். அவன் பிற மொழிகள் எதுவாயினும், தான் கற்ற தாய்மொழி அறிவால் ஒப்பிட்டு உடனே விளங்கிக் கொள்வான்; கற்று கொள்வான். வேற்றுமைத் தொடர் பற்றித் தமிழில் நன்கு கற்றுத் தேர்ந்தவன். ஆங்கிலத்தில் வேற்றுமைத் தொடர் பற்றி படிக்கும் போது, தான் கற்ற தாய்மொழி அறிவுடன் ஒப்பிட்டு முழுமையாய் விளங்கிக் கொள்வான். உண்மையை உணராமல், ஆங்கில மோகத்தைத் தூண்டிவிட்டது அரசியல் கட்சிகள்தான். இன்று அந்த மோகத்தைக் கைவிட அவைதான் வழிவகை காண வேண்டும்.ஆங்கில வழியையே எல்லோரும் விரும்புகின்றனர். ஏன்? ஆங்கில வழியை எல்லோரும் விரும்புவதாகக் கூறுவது ஒரு மாயையே. ஏன் அரசுப் பள்ளிகளை நாடவில்லை. இதற்கு பல காரணங்கள் உள. அரசுப் பள்ளிகளில் கண்கவரும் கட்டிடங்கள் இல்லை. சீருடைகளும் சீராக இல்லை. பல பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை. இருக்கும் ஆசிரியர்களும் கடமையுணர்ச்சியுடன் பாடம் நடத்துவது இல்லை. தனியார் பள்ளிகள் ஆசிரியர்களுக்குக் குறைந்த சம்பளம் கொடுத்து, நிறைய வேலை செய்ய வைக்கின்றன. அங்குக் கண்டிப்பு அதிகம். இங்கு பள்ளி நடைமுறையை யாரும் கண்டு கொள்வதில்லை. ஆங்கில மொழிப்பாடம் அரசுப் பள்ளிகளில் முனைப்புடன் நடத்தப்பட வேண்டும். ஆங்கில வழிப் பள்ளிகளை விட, இங்கு ஆங்கிலம் நெறி முறையோடு நடத்தப்படுகிறது என்ற உணர்வை வளர்க்க வேண்டும். தாய்த் தமிழ்ப் பள்ளிகளுக்கு அரசு முழுமையாக நிதியுதவி வழங்கி, ஐந்தாண்டுகளில் அவை தன்னிறைவுடன் சிறந்து விளங்கச் செய்ய வேண்டும். அரசு தானும் நிரம்ப நிதியுதவி செய்தும் பொதுமக்களிடமும் வள்ளல்களிடமும் நிதியுதவி பெற்றும் அரசுப் பள்ளிகளை வளர்த்தால், மக்கள் மனம் மாறும்.எப்போது தமிழ் வழிக் கல்வி வெற்றி பெறும்? சவரிராயன் சேசுதாசன் என்பவர், ஆங்கிலேயர்களே ஆசிரியர்களாக இருந்த காலத்தில், சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்தவர். இறுதி ஓராண்டு பயிற்சிப் படிப்பை இலண்டன் சென்று படித்தவர். அவர் எம்.பி.பி.எஸ் போன்ற தொழிற் கல்விகளுக்குட்பட அனைத்தையும் தமிழில் கற்பிக்க வேண்டும் என முனைப்புடன் செயற்பட்டவர். "வைத்திய விஞ்ஞானம்" என்ற நூலைத் தமிழில் எழுதி வெளியிட்டவர். அவர் தமிழ்வழிக் கல்வி வெற்றி பெற வழிகாட்டும் கருத்தொன்றைக் குறிப்பிட்டுள்ளார். அதாவது மேலே இருந்து தொடங்கி கீழ்நிலை வரை தமிழ் வழி வர வேண்டும்; கீழேயிருந்து தொடங்கினால் விரைந்து வெற்றி பெறாது. அதாவது அனைத்துக் கலையியல், அறிவியல் துறைகளையும் தமிழில் கற்கலாம்; மருத்துவம், பொறியியல் அனைய தொழிற் கல்விகளையும் தமிழில் கற்கலாம் என வாய்ப்பளித்தால், கீழே இளங்கலை, முதுகலை அனைத்தையும் தமிழில் படிக்க முந்துவர். அவ்வாறல்லாமல் இளங்கலைப் பாடங்கள் தமிழில், முதுகலைப் பாடங்கள் ஆங்கிலத்தில் என்றால், முன்னைய தமிழ்வழி வெற்றி பெறாது. இது அவர் கருத்தாகும். அரசு நினைத்தால் ஆகாதது இல்லை. தமிழையும் தமிழ் வழிக் கல்வியையும் கற்பவருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தர வேண்டும். தமிழை ஒரு பொழுதுபோக்கு மொழியாக இன்று பயன்படுத்துகின்றனர். இதனை மாற்றி வருமானம் தரும் மொழியாக, பதவியும் பதவி உயர்வும் தரும் மொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இன்று தமிழை ஒரு மதிப்புமிக்க மொழியாக ஆக்காமல், நாலாந்தரச் சூத்திர மொழியாக ஆக்குவதால் அது இழிவுபடுத்தப் படுகிறது. தமிழ் வழிக் கல்வி வெற்றி பெற, உண்மையிலேயே எண்ணினால், மேற் சுட்டியவை போல ஆக்க நெறிகளில் முயல வேண்டும். மக்கள் விரும்புகிறார்கள் என்று கையை விரிப்பது, அரசுக்கு அழகாகாது; விரும்ப வைக்க வல்ல அரசே திறமைமிக்க அரசாகும்.ஆங்கிலப் பிரிவுகளைக் கூட்டுவது தமிழை அவமானப்படுத்துவதாக முடியும் முன்பு பள்ளியில் முதல் பிரிவு ((‘A’ Section) ஆங்கில வழியாகவும் பிற பிரிவுகள் அனைத்தும் தமிழ் வழியாகவும் நடந்ததுண்டு. இதனால் பெற்றோர் ஆங்கில வழி உயர்ந்தது போலும் என எண்ண இடம் ஏற்பட்டது. எல்லோரும் முதற்பிரிவையே ஆசைப்பட்டுக் கேட்டுத் தடுமாறினர். ஆங்கில வழி முதற்பிரிவுக்கு 30 இடங்களே என்றால் வற்புறுத்தல் தாங்காமல் 60 மாணவர்கள் வரை சேர்த்தனர். பள்ளியில் கூடுதல் பயிற்சி பெற்ற ஆசிரியர்களையும் முதற் பிரிவுக்குப் பாடம் சொல்ல வைத்தனர்.  மாணவர்களிடையே உயர்வு தாழ்வு எண்ணம், சாதி வேற்றுமை போல வளரலாயிற்று. தமிழும் தமிழ் வழியும் தாழ்வு மனப்பான்மைக்கு இடமாகி, அவமானப் படுத்தப்பட்டன. இன்று ஆங்கில வகுப்புக்களைக் கூட்டுவதால், இந்நிலைதான் வளரும். மூவாயிரம் ஆண்டுக்கு மேற்பட வாழும் ஒரு மொழியை, மறைமுகமாக அவமானப்படுத்தவும், இழிவுபடுத்தவும் சிதைக்கவும் முனைதல் தகாது என்பதை, மிகுந்த அக்கறையுடன் வலியுறுத்த விழைகின்றோம்.குழந்தைகளின் உளவியலுக்கு எதிரானது இது குழந்தைகளுக்கு ஏற்புடைய கல்விமொழி பற்றி ஆராய்ந்த சு.ப.திருப்பதி என்ற இளம் மருத்துவர் மிக ஆழமாக, பல நிலைகளிலும் கண்டு எடுத்த முடிவுகளை ஒருநாள் விளக்கினார். அதன் சாரமான ஒரு கருத்தை மட்டும் இவன் காணுதல் பயன் தரும். குழந்தை வளர்ச்சி தனக்கு முற்பட்ட ஏழு தலைமுறையோ, கூடவோ வளர்ந்த மரபணுக்களின் (D.N.A) வழிப்பட்டதாகும்.  இரண்டு தலைமுறைக்கு முற்பட்ட தாத்தாவின் தாத்தா இசைப் புலமைமிக்கவராக இருந்திருந்தால், அவர்கள் வழிவந்த பிள்ளை பத்து வயதில் இசை அறிஞன் ஆகக் கூடும். இத்தகைய வழிவழி வரும் மரபு அணுக்கள் தமக்கு இயைபுடையதை உடனே ஏற்றுக் கொண்டு ஒளிரும்; இயைபில்லாததைப் புறந்தள்ளி விடும். ஒருவருக்கு இரத்தம் செலுத்தும் பொழுது அவரது குருதிக்கு இயைபுடைய குருதி வகையைத் தானே செலுத்துகின்றனர். இயைபில்லாத வகை இரத்தத்தைச் செலுத்தினால் ஆபத்தாக முடியும். கல்வியிலும் இயைபுடையது தாய்மொழி வழிக் கல்வியே. அதுவே ஒருவனது ஆழ்மனதில் பதிந்து அவனை ஆளாக்கும். வேற்று மொழியைப் புகுத்தினால் அதனைப் புறந்தள்ளி விடும். வேற்று மொழி வழிப் படிப்பென்பது, இவ்வாறு உளத்துடனும் உயிருடனும் ஒட்டாமல், தனி மனிதனுக்கு "அற்றைப் பரிகாரமாய்" அமைவதோடு நின்று விடும்.காலம் பொல்லாதது! காலப்போக்கில் தமிழ் வழிக் கல்ல்வியே வெற்றி பெறும். ஏனெனில் இயற்கைக்கு மாறானவற்றை அவ்இயற்கையே மாற்றிவிடும் ஆற்றலுடையதாகும்.- தமிழறிஞர் தமிழண்ணல்"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி