15 December 2014 6:03 pm
தெற்காசிய நாடுகளுக்கிடையேயான பிராந்திய ஒத்துழைப்பை ஒருங்கிணைக்கவும் உறுப்பு நாடுகளுக்கிடையே ஒரு நல்லுறவு மனப்பான்மையை மேம்படுத்துவதற்கும் ஏற்படுத்தப்பட்ட அமைப்பே தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு அல்லது சார்க் (SAARC) என்று சொல்லப்படுகின்ற அமைப்பு ஆகும். உலக அளவில் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் ஒவ்வொரு நாடும் இது போன்று பல கூட்டு நாடுகளை மனித குல நன்மைக்காகவும், நாடுகளுக்கிடையேயான ஒற்றுமைப் போக்கை வளர்ப்பதற்காகவும் ஏற்படுத்தப்படுகின்றன என ஏட்டில் சொல்லப்பட்டாலும் ஆழ் மனதில் ஒருவரை ஒருவர் எப்படி கவிழ்ப்பது என்ற அரசியல் சதுரங்க விளையாட்டுகள் நடைபெற்றுக் கொண்டே தானிருக்கின்றன. வல்லரசாகத் துடிக்கும் எந்த நாடாக இருப்பினும் இந்த கயமை எண்ணங்களுக்கு விதிவிலக்கானவை அல்ல. அமைதிக்கான போர், மனித நேயத்திற்கான போர் என பலமுறை பல நாடுகளைத் துணைக்கழைத்துப் போரிடும் அமெரிக்காவின் அரசியல் ஆதிக்கம் எவ்வாறு என்பதை உலகறியும்! இந்திய அரசியல்வாதிகள் எந்தக் கட்சியைச் சார்ந்தவராக விளங்கிடினும் வெளிவிவகாரக் கொள்கைகளை பிற நாடுகளைப் போன்று அறிவார்ந்த முறையில் செயல்படுத்துவோராக இல்லை என்பதே வரலாற்றில் நாம் கண்ட உண்மையாகும். இந்தியா யார் யாரை நட்பு நாடுகள் என்று கருதுகின்றதோ அவைகள் அனைத்தும் இந்திய நாட்டிற்கு எதிராக கூட்டணி அமைத்து இந்திய நாட்டை மிரட்டும் தொனியிலே தங்கள் நடவடிக்கைகளை அமைத்து வருகின்றன என்பது தற்காலத்தில் நடைபெறும் சில நிகழ்வுகள் மூலம் அறியப் பெறுகின்றது. 1983 ஆம் ஆண்டு முதல் ஆயுதப் போராட்டக் களத்திற்கு ஈழத் தமிழ் மக்கள் தள்ளப்பட்ட காலந்தொட்டே இந்தியாவின் எதிர்கால நன்மைக்கு ஈழம் அமைவது அவசியமாகும் என்று தொலைநோக்காகச் சொல்லப்பட்ட கருத்துகள் பின் தள்ளப்பட்டு இலங்கை அரசின் இன அழிப்பு வேலைகள் உட்பட அனைத்திற்கும் இந்திய அரசு ஆதரவு வழங்கி வந்தது. எனினும் இலங்கை அரசானது சீனா, பாகிசுதான், மலேசியா போன்ற இந்திய எதிர்ப்பு நாடுகள் பக்கமே தன் உறவை வலுப்படுத்தி வருகின்றது. இதன் வெளிப்பாடு அண்மையில் நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் நிகழ்ந்த 18வது தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு மாநாட்டில் வெளிப்பட்டது. தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு என்பது 1985 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் நாள் துவங்கப்பட்ட ஒன்றாகும். இதில் இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலத்தீவு மற்றும் பூடான் ஆகிய நாடுகள் இணைந்தன. பின்னர் 2007 ஆம் ஆண்டு இக்கூட்டமைப்பின் 14வது உச்சி மாநாட்டில் ஆப்கானிஸ்தான் என்ற நாடும் உறுப்பு நாடாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இந்த கூட்டமைப்பு நடத்தும் மாநாடுகளில் பார்வையாளர்களாக மக்கள் சீனக் குடியரசு, ஐரோப்பிய ஒன்றியம், ஈரான், ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகள் உள்ளன. அண்மையில் நடைபெற்ற 18வது உச்சி மாநாட்டில் இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடி கலந்து கொண்டு இந்தியாவின் ஆளுமைத் தன்மையை நிருபித்தார் எனவும், மாநாட்டில் காய்கறி உணவைச் சாப்பிட்டு ஒரு தனித்துவத்தை ஏற்படுத்தினார் என்று பெருமையுடன் வெளியில் சொல்லிக் கொண்டாலும் இதைத் தாண்டி அம்மாநாட்டு நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனிக்கும் போது, இம்மாநாட்டினால் எவ்வித பயனும் அடையவில்லை என்பது மட்டுமல்ல இந்தியாவின் பெரியண்ணன்" தகுதிக்கே சவால் விடுகின்ற வகையில் "சீன மக்கள் குடியரசு" இந்த அமைப்பில் அங்கத்தினராவதற்குரிய நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளது. சார்க் நாடுகளின் கூட்டமைப்பு தெற்காசியப் பகுதிகளில் இணைந்து இதுவரை எதையும் சாதித்து விடவில்லையெனினும் இக்கூட்டமைப்பு பயனற்றது என்று கூறி விட முடியாது. அய்க்கிய நாடுகள் அவை அல்லது பல பன்னாட்டு அமைப்புகள் போன்று சில நாடுகளின் விருப்பங்களுக்கு ஒப்ப செயல்படும் அமைப்புகள் போன்றதாகும். எனினும் இக்கூட்டமைப்பின் பார்வையாளர் நாடுகளான அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், ஈரான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இந்த அமைப்பை விரிவுபடுத்த வேண்டுமெனவும் சீனா போன்ற நாடுகள் முழு உறுப்பினர் தகுதியைப் பெற வேண்டுமெனவும் விரும்புகின்றன. இந்தக் கோரிக்கை இந்திய நாட்டிற்கு ஒரு பேரிடியாகவேத் தெரிகின்றது. முந்தைய தலைமையமைச்சர் மன்மோகன் சிங் சீனாவின் ஆதிக்க வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் அமைதி காத்தது போலவே தற்போதும் இந்திய நாடு உள்ளது! பிராந்தியங்களின் பொருளாதார ஒத்துழைப்பு குறித்த மோடியின் வெளிப்படையான நேர்மறை பார்வையானது சீனாவின் பங்களிப்பை முன்னெடுக்கும் வகையில் அரசியல் போரின் பின்னணிக்கு தாழ்த்தப்பட்டுள்ளது. உச்சி மாநாட்டில் இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடி சார்க்கை வலுப்படுத்த பிராந்தியத்தின் மிகப் பெரிய நாடான இந்தியா என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து உரக்க ஆற்றிய தொடக்க உரை மிகவும் தெளிவான மற்றும் அழுத்தமானதாக இருந்தது. அவர் வர்த்தகம், சுற்றுலா, தகவல் தொடர்பு ஆகியவற்றை எளிமையாக நடைபெற வேண்டும் எனும் பழைய கருப்பொருளை மீண்டும் வலியுறுத்தினார். பிராந்தியக் குழுக்களில் இந்தியாவின் மேலாதிக்க இருப்பு குறித்து மோடியின் உறுதியான அறிவிப்புக்கும், சார்க் உறுப்பினர்கள் சீனாவின் பங்கு அதிகரிக்க வேண்டும் எனும் விருப்பத்திற்கு இடையில்தான் முரண்பாடுகள் தென்படுகின்றன. சார்க் கூட்டமைப்பு மிகவும் வெளிப்படையாக சீனாவிற்கு ஆதரவாக கோரிக்கை வைத்திருப்பது இதுவே முதல் முறை. இது இராஜதந்திர முணுமுணுப்பிற்கோ அல்லது இதில் பின்புல நடவடிக்கைகள் உள்ளனவா என்ற பேச்சுக்கே இடமளிக்கவில்லை. இந்தியா ஒரு பெரியண்ணன் போலச் செயல்படுவதாக உறுப்பு நாடுகளின் கண்ணோட்டம் அமைந்துள்ளது என்பதை இச்செயல் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. மேலும் அவர்கள் இவற்றை எதிர்கொள்வதற்கு மற்றொரு பெரிய நாடு தேவைப்படுகிறது. இது வரத்தகம் பற்றியதல்ல; அதிகார உறவுகள் பற்றியது. இந்தியா உட்பட ஏனைய நாடுகள் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பிலிருந்து வெளியே இருக்கும் நாடுகள், பேச்சுவார்த்தை பங்காளர் உட்பட அனைத்து குழுவிலும் உறுப்பினராக முயல்கின்றனர். துடிப்பான பொருளாதார குறிப்பேட்டில் அங்கம் வகிக்கவும், வர்த்தக அனுகூலங்களை அனுபவிக்கவும் எதிர்நோக்கியுள்ளனர். வளமான பொருளாதார மண்டலம் என்ற வகையில் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்புடன் தெற்காசிய கூட்டமைப்பு நாடுகளை (சார்க்) ஒப்பிட முடியாது. எப்போது சார்க் நாடுகள் சீனாவை உள்ளிழுக்க விரும்புகிறதோ, அப்போதே அவர்கள் மனதில் வர்த்தகம் மற்றும் பிற பொருளாதார அனுகூலங்கள் குறித்து எண்ணவில்லை என்பதை உணரலாம். சிறிய சார்க் நாடுகளின் பொருளாதார விடயங்களில் இந்தியாவைப் போன்றே சீனாவும் அதே ஆபத்தான நிலையையே பாவிக்கிறது. இந்தியாவை எதிர்கொள்ளும் அரசியல் வியூகங்களைக் கொண்டுள்ள நாடாக சீனா விளங்கும் என சார்க் நாடுகள் நம்புகின்றன. வங்காள தேசம், இலங்கை, நேபாளம், பாகிஸ்தான் போன்ற பிராந்திய நாடுகள் சீன நாட்டுடன் வைத்திருக்கும் மறைமுக மற்றும் நேரடி உறவுகளை வெளிப்படுத்தும் வண்ணம் உள்ளன. இந்தியப் பங்களிப்பை சுருக்கி சார்க் நாடுகளை விரிவுபடுத்துவதனுடைய சிக்கல்களின் தரைமட்ட விளைச்சல் இந்தியாவிற்கு சாத்தியமற்றதாக இருக்கும். எதிரான விளைவுகளை ஊக்குவிக்கும். மோடியின் நன்நம்பிக்கையும் உத்திரவாதமும் அவரது பேச்சில் இருந்த போதிலும், உறுப்பு நாடுகளிடம் இந்தியா பற்றிய தவறான எண்ணங்கள், தடைகள் மற்றும் அச்ச உணர்வை தீர்க்க முடியவில்லையெனில், சார்க் நாடுகள் முன்னேறிச் செல்வது மிகவும் கடினமான ஒன்றாகும். இதன் முழு திறனை ஆராயாமலேயே கடந்த 27 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நிலையே மீண்டும் தொடரும். எனினும் சில மாற்றுச் சூழ்நிலைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. வர்த்தகக் கட்டுப்பாடுகளில் அரசியல் நிர்பந்தங்கள் புறக்கணிக்கப்பட வேண்டும். இது சார்க் நாடுகளுக்கு மத்தியில் நெருக்கமான பொருளாதார ஒத்துழைப்பை படிப்படியாக மாற்றி வரக் கூடும். பாகிஸ்தான் இந்தியாவுடனான பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதில் மிகவும் தீவிரமாக உள்ளது. ஏனெனில், பாகிஸ்தான் தொழிலாளர்களுக்கு இந்தியா பேரச்சந் தரத்தக்க நாடாகக் கருதுகிறார்கள். ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார மந்தநிலையால் தடுமாறுகின்ற நிலையில், வங்காள தேசம், பூடான், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இந்தியா அவர்களின் பொருள்களுக்கு கவர்ச்சிகரமான சந்தையாக திகழ வேண்டும் என்பதில் விழிப்புடன் உள்ளனர். ஓர் உயிர்ப்பான இந்தியாவால் பொருளாதார பிணைப்புகளை நோக்கி அதன் உறுப்பு நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து மட்டுமே கவனத்தை ஈர்க்க இயலும். ஆனால் அது கூட சிலவேளையில் இயலாது. இந்திய நாட்டை ஒரு சந்தை வெளியாகவே அண்டை நாடுகள் தத்தம் பொருளாதார வாய்ப்புகளுக்காகப் பயன்படுத்துகின்றார்களேயொழிய, அரசியல் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் உறுப்பு நாடுகள் இலங்கை, பாகிஸ்தான், வங்காள தேசம் உட்பட பல சீனாவுடன் கைக்கோர்க்கவே விரும்புகின்றன என்பதை தற்போதைய போக்குகள் எடுத்துக் காட்டுகின்றன. மேலும் இந்தியா – பாகிஸ்தானிடையே நிகழ்வுகின்ற போட்டியுணர்வு சார்க்கை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. சார்க் உறுப்பினர்கள் முதலில் இவ்விரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு சிக்கல்களும் தீர்க்கப்பட வேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால் இந்தியா – பாகிஸ்தான் நாடுகள் இதை ஏற்றுக் கொள்ள முற்றிலும் விரும்பாத நிலையில் உள்ளது. அப்போதுதான் இக்குழுமம் முன்னேறிச் செல்ல இயலும். ஏனெனில் அவர்களால் பிரச்சனைக்குரிய வரலாற்று மரபுரிமையை உதிர்க்க இயலவில்லை. எனவே சார்க்-கின் தோற்றத்தில் ஒளிக்கீற்றுகள் ஏதும் தென்படவில்லை. எனவே தெற்காசிய நாடுகளில் யார் பெரியண்ணன் என்கிற ஆய்வில் இந்தியா தனித்து விடப்பட்ட நிலையே தென்படுகிறது. அமெரிக்காவைப் போன்றே சீனாவும் அனைவருக்கும் அண்டை வீட்டுக்காரர் போல் உள்ளது. அமெரிக்காவைப் போல சீனாவும் அனைத்து நாடுகளையும் பினாமிகளாக வைத்துள்ளது. இனி சார்க்கின் ஒவ்வொரு உச்சி மாநாட்டிலும் யானை நுழைந்தது போல சீனா இருக்கும். இந்தியாவும் இந்த உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். எனவே தெற்காசிய நாடுகளின் அடிக்கலாக இந்தியா மேம்படுவதற்கு புதிய வியூகங்களை வகுக்க வேண்டும்.- வெற்றிச் செல்வன்"