தமிழ்நாட்டின் பேரிடர் - தமிழ் இலெமுரியா

15 December 2015 3:50 pm

இந்த ஆண்டு தமிழ் நாட்டில் பெய்த வடகிழக்குப் பருவ மழையின் அளவு அசாதாரணமான ஒன்றாகும். தமிழ் நாட்டின் தலை நகரமான சென்னை, அண்டை மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலோர மாவட்டங்களான கடலூர், நாகப்பட்டினம், தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பெய்துள்ள மழை சராசரி ஆண்டு மழையை விட அதிகமானதாகும். சென்னை மாநகரில் நவம்பர் மாத இறுதியிலும் திசம்பர் மாத தொடக்கத்திலும் பெய்த மழை அளவு சற்றொப்ப 114 செ.மீ பெய்துள்ளது. திசம்பர் 1, 2015 அன்று மட்டும் 27.5 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் பதிவு செய்துள்ளது. இந்த மழையை சென்னை நகரக் கட்டமைப்பும் அங்கு வாழும் மக்களும் எதிர் கொள்ள முடியாமல் தவிக்கின்ற பல காட்சிகளை தமிழ்நாடு மற்றும் அகில இந்திய அளவில் செயல்படும் பல தொலைக்காட்சி ஊடகங்கள் மூலமாக அறிய முடிகிறது. வெள்ளத்தில் தன் உடைமைகளை இழந்து பரிதவிக்கும் மக்கள், வெள்ளத்தில் கால் நடைகள் அடித்துச் செல்லப் படும் நிலை, பள்ளி மாணவர்களின் பாடப்புத்தகம் எழுது பொருட்கள், கணிணிகள், சான்றிதழ்கள் என பலவும் கண நேரத்தில் கைவிட்டுப் போய் விட்ட சோகம் என அனைத்தும் மனிதாபிமானமுள்ள அனைவரின் மனங்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வேதனைகளை வெளிப்படுத்தும் தாய்மார்கள், முதியோர்கள், குடும்ப உறுப்பினர்களைக் காணாது தவிக்கும் உறவினர்கள் என அனைத்தும் ஒரு பெரும் சோகத்தை விளைவித்துள்ளது. இதிலிருந்து சென்னை நகரமும், அங்கு வாழும் மக்களும் விரைவில் மீண்டெழுந்து தங்களின் புது வாழ்வை விரைவில் தொடங்க வேண்டும் என்பது ஒவ்வொரு இந்தியனின் விருப்பமும், விழைவும் ஆகும். ஆனால் இது போன்று நிகழ்வுகளிலிருந்து ஆள்வோரும் வாழ்வோரும் கற்றுக் கொள்ளப் பட வேண்டிய பாடங்கள் ஏராளம் என்பதை மனதில் கொண்டு அதற்குத் தக்கவாறு மனவளத்தைப் பெருக்கிக் கொண்டாலொழிய மீண்டும் இது போன்ற ஓர் இயற்கைப் பேரிடர் தவிர்க்க இயலாத ஒன்றாக மாறிவிடும். இந்தியாவின் மற்றொரு பெரு நகரமாக விளங்கும் மும்பையில் 2005ஆம் ஆண்டு ஜீலை மாதம் 26ஆம் நாள் பெய்த மழையின் அளவு உலக வரலாற்றில் ஒரு வித்தியாசமான நிகழ்வாகும். உலகின் மிக அதிகமாக மழைபெய்துள்ளதாக பதிவு செய்யப் பட்டுள்ள சிரபுஞ்சியில் 83.82 செ.மீ மழையை விடவும் அதிகமாக 94.4 செ.மீ மழை ஒரே நாளில் பதிவாகியது. மும்பையின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு போக்குவரத்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. வேலைக்குச் சென்றவர்கள் வீடு திரும்பாமல் பேருந்துகளின் கூரைகளில், அடுக்குமாடிகளின் மேல் தளத்தில், தொடர் வண்டிகளுக்குள்ளும் சற்றொப்ப 48 மணி நேரம் அமர்ந்து சமூக உணர்வுடன் ஒருவருக்கொருவர் உதவி செய்து தங்களின் கூட்டுணர்வை வெளிப்படுத்தி இரண்டு நாட்களுக்குப் பின்னர் தத்தம் குடும்பத்துடன் இணைந்தனர். குடிசைப் பகுதிகளில் ஆற்றுக்கரையோரம் வாழ்ந்த மக்கள் சற்றொப்ப 1000 பேருக்கு அதிகமாக பலியாயினர். வானூர்திப் போக்குவரத்து இரண்டு நாள் முடக்கப்பட்டது. வணிகர்கள் தங்கள் கையிருப்புகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக வழங்கினர்.  ஆனால் சென்னை நகரைத் தாக்கிய தற்போதைய மழை அந்த அளவு இல்லையெனினும் சென்னை நகர மக்கள் படும் அவதியும், அலங்கோலங்களும் சொல்லி இயலாதவை. இவற்றிற்கான காரணங்களை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். தமிழ்நாட்டின் அனைத்துச் செயல்பாடுகளும் கட்சி அரசியலோடு பிணைக்கப்பட்டிருக்கின்ற ஒன்றாகக் காட்சி தருகிறது. தமிழ் நாட்டில் ஆளும் கட்சி முதலாளிகள், எதிர் கட்சி முதலாளிகள், பெரும் பணக்காரர்கள் என ஒவ்வொருவரும் தனக்கென தொலைக்காட்சி, அச்சு ஊடகங்களை கையில் வைத்துக் கொண்டு அவரவர்கள் விருப்பப்படி செய்திகளை ஒளி பரப்புவதும், தங்களைத் தாங்களே வெளிக்காட்டி கொள்ளும், பிற கட்சிகளைக் குறை கூறுவதும் வாடிக்கையான ஒன்றாகி விட்ட நிலையில் தமிழ் நாட்டுக்கு வெளியில் இருந்து இந்த நிகழ்வுகளைக் கவனிக்கின்ற பிற இந்திய மக்கள் குழப்பமடைந்துள்ளனர். ஒரு தொலைக்காட்சி வெள்ளப் பெருக்குகளை மிகைப் படுத்துகிறது. மற்றொரு தொலைக்காட்சி மீட்புப் பணிகளை மிகைப் படுத்தி ஏதோ இயல்புநிலையில் மக்கள் வாழ்வதாகப் படம் பிடிப்பதும் பாராட்டுவதும் தமிழ்நாட்டில் நிலவிவரும் கட்சி அரசியல் ஒவ்வாமையை வெளிக் காட்டுகின்றதேயொழிய மக்கள் மீதான அக்கறையை வெளிக்காட்டுவதாக இல்லை. இது போன்ற இயற்கைப் பேரிடர் நிகழ்கையில் அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் எதிர்கொள்ள வேண்டியதைத் தவிர்த்து, இன்னும் கட்சி அரசியல், தலைமை வழிபாடு, குறை கூறிக் கொண்டும் சுய விளம்பரத்திற்காகவும் செயல் படுவது தமிழ்நாட்டு மக்களின் அரசியலாளர்களின் அறியாமைப் போக்கையே வெளி உலகிற்கு விளம்புவதாக உள்ளது. அவசரமாக வழங்கப்பட வேண்டிய நிவாரணப் பொருள்களில் கூட ‘அம்மா படம்’ இடம் பெற வேண்டுமென நினைக்கின்ற கட்சி ஆர்வலர்களும் அதிகாரிகளும் தமிழ்நாட்டில் செயல்படுகிறார்கள் என்பது எவ்வளவு கீழ்மையானது என்பதை உணர வேண்டும். எதிர்க்கட்சிகளோ அனைத்து நிகழ்வுகளுக்கும் ஆளும் அரசே காரணம் எனக் குற்றம் சாட்டுவதிலேயே குறியாக உள்ளனர். இது அரோக்கியமான அணுகுமுறை அல்ல. மேலும் இது போன்று அசாதாரணமான இயற்கைப் பேரிடர்கள் நிகழ்ந்து மக்கள் துன்புறும் போது இயன்ற அளவு அவர்களைக் சந்தித்து ஆறுதல் கூறுவதும் அரசின் நடவடிக்கைகளை மக்களுடன் பகிர்ந்து கொள்வதும் ஆளும் கட்சிக்கும் முதலமைச்சருக்குமான கடமையாகும். அனைத்துப் பகுதிகளையும், மக்களையும் நேரடியாகச் சென்று சந்திப்பது ஆறுதல் கூறுவது இயலாத ஒன்று எனினும் தொலைக்காட்சி ஊடகங்கள் வாயிலாக நாட்டு நிலைமையை விளக்கி, அரசு எடுக்கும் நடவடிக்கைகள் போன்றவற்றை நாட்டு மக்களிடம் பகிர்ந்து கொண்டு ஒரு சமுக உரையாடலை ஏற்படுத்தியிருந்தால் வேதனையில் துடித்த மக்களுக்கு ஓர் ஆறுதலை எற்படுத்தியிருக்கும். ஆனால் இது போன்ற செயல்பாடுகள் தமிழ்நாட்டில் நடைபெறவில்லை.  இவை அனைத்திற்கும் மையமாக விளங்குவது தமிழ்நாட்டு அரசியலில் புறையோடியிருக்கும் தன்மதிப்பு, தலைமை வழிபாடு, அரசியல் ஒவ்வாமை, வெறுப்புணர்வு ஆகியவைகளேயாகும். ஆனால் இது ஒரு புறம் இருக்க, நாம் எந்தந்த வகையில் கடமை தவறியிருக்கிறோம் என்பதும் ஆய்வு செய்ய வேண்டிய ஒன்றாகும். இதில் பல்லாண்டு காலமாக ஆண்டவர்களுக்கும், ஆள்வோர்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் பங்கு உண்டு. எனவே தற்போதைய அரசை மட்டுமே குற்றம் சாட்டுவது பொருத்த முடையது அல்ல. ஒவ்வொரு தேர்தல்களின் போதும் மாநகரங்களில் வலம் வரும் அரசியல் கட்சிகள், மும்பை சாங்காயாக மாற்றம் பெறும் என்றார்கள், சென்னை சிங்கபூராக மாறும் என்றார்கள் பெங்களுர் டெக்சாசாக மாறும் என்றார்கள். இதை நம்பி மக்களும் வாக்களித்தனர். ஆனால் அதுபோன்ற அதிசயங்கள் எதுவும் நடந்து விடவில்லை. அரசு நிருவாகம் என்பது ஒரு கட்சியை சார்ந்தோ அல்லது தலைமையை சார்ந்தோ இயங்குவது அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  இந்திய அரசியலில் 1970களுக்கு பிறகு பல்வேறு கட்சிகளில் ஏற்பட்ட தலைமைப் போட்டியும், குடும்ப உறுப்பினர்கள் கட்சியில் பங்கு, வாரிசு அரசியல் என பல்வேறு கூறுகள் அரசு அதிகாரிகளின் தன்னிலை அதிகாரத்திற்கு அறைகூவல் விடுத்து யார் சொல்லைக் கேட்பது? யார் சொல்லை மீறுவது என்கிற குழப்பதிற்கு ஆளாக்கப் பட்டனர். எனவே அரசு நிருவாகம் ஓரளவு ஆளும் கட்சியின் நிருவாகம் என்ற நிலைக்குச் சிறுகச் சிறுக தள்ளப்பட்டது. இந்திரா காந்தி காலத்தில் தொடங்கப்பெற்ற இக்குழப்பத்தை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தத்தம் கட்சிகளுக்கும் அரசியலுக்கும் சாதகமாக வளர்த்தெடுத்தனர். எனவே கொள்கை அரசியலும் சித்தாந்தப் பிடிப்பும் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டு தலைமை வழிபாடு மேலோங்கியது. எனவே எந்தக் கட்சி ஆட்சியில் அமர்ந்தாலும் அமைச்சர்களானாலும் அனைவரின் அறிவுத் திறனும் பயன்படா வண்ணம் நிருவாக மந்த நிலை ஏற்பட்டது. அதன் விளைவாகவே யார் ஆட்சிக்கு வந்தாலும்  எவை எவை நிருவாக முறைமையாக ஒழுங்குபடுத்தப்பட்டிருக்க வேண்டுமோ அவைகள் செயல்படாமல் தங்களின் ஆட்சி அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கு தேவையான செயல்பாடுகளில் மட்டுமே கவனம் செலுத்துவது என்ற போக்கிற்கு இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் அடிமையாயின. அதில் முதன்மை வகிப்பது தமிழ்நாடு ஆகும். தமிழ்நாட்டில் கடந்த 60 ஆண்டுகளில் ஆண்டவர்கள், ஒரு முறையான நீரிடர்களை, இயற்கைப் பேரிடர்களை எதிர் கொள்ளும் திட்டத்தை வகுத்து உரிய நிதி ஆதாரங்களுடன் அதற்கான செயல்முறைகளை நிருவாக ரீதியாக ஏற்படுத்தியிருந்தால் தமிழ்நாட்டை யார் ஆண்டாலும் சரி இதுபோன்ற இயற்கைப் பேரிடர்களின் சீரழிவுகளையும் பொருட் சேதங்களையும் நிச்சயம் கட்டுப்படுத்தியிருக்க முடியும். ஆனால் அதுபோன்று ஒரு அமைப்பு நம்மிடம் இல்லை. தற்போது ஏற்பட்டுள்ள இந்த தொடர் மழை, இடர் மழை பேரிடர் ஆகியவற்றிற்கான காரணங்களை கீழ்க்கண்டவாறு அறியலாம். 1. உலக அளவில் வெப்பமயமாதலின் விளைவினால் மாற்றம் பெறும் பருவநிலை.2. இயற்கை வளம், மாசுக் கட்டுப்பாடு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு போன்றவற்றில் நமது நிலைப்பாடு.3. இயற்கை நிகழ்வுகள் மிகைப்படும் போது நாம் மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு, ஒழுங்கு நடவடிக்கைகள், பேரிடர் மேலாண்மைக் கூறுகள்.4. தன்னல உணர்வுடன் நீர்நிலைப் பகுதிகளைத் தனதாக்கிக் கொண்டு கல்வி வணிகம், நில வணிகம் போன்றவற்றை ஊக்குவித்தமை. மும்பை, சென்னை நகர மழை மற்றும் இயல்பு நிலைத் திரும்பல் ஆகியவற்றை ஒப்பிடும் போது சில விடயங்களில் இரு நகரங்களும் மாறுபடுகின்றன. மும்பையில் மித்தி நதி, உல்லாஸ் நதி, மேலும் சில கழிவு நீரோடைகள் மும்பையின் வடிகாலாக அமைகின்றன. இவை ஒவ்வொரு ஆண்டும் முறையாகப் பராமரிக்கப்பட்டு பருவ மழைக்கு முன்பு தூய்மைப்படுத்தப்படுகின்றன. எனவே இயற்கைச் சீற்றத்தினை ஓரளவு தாங்க முடிகின்ற நிலை. முழுமையான மாநகர ஆணையரின் கட்டுப்பாட்டில் சிறப்பாக செயல்படுகிறது. இதில் அரசியல் பார்வை என்பது இல்லை.  சென்னையில் அடையாறு, கூவம், பக்கிங்காம் போன்ற நதிகள் மற்றும் கழிவு நீரோடைகள் இருப்பினும் இவை பருவ மழைக்கு முன்பு முறையாகத் தூய்மைப்படுத்தப் படுவதில்லை. மேலும் மேற்கண்ட நதிகள் சென்னையில் பெய்து வரும் மழை மட்டுமன்றி சென்னைக்கு அருகிலுள்ள பிற ஏரிகளின் உபரி நீர் வரத்தின் வடிகாலாகவும் உள்ளன. எனவே சென்னையில் பெய்து வரும் மழை நீருக்கும் மேலாக பல ஏரிகள், குளங்களிலிருந்து வரும் உபரி நீரையும் தாங்குகின்ற அளவு கொள்ளளவு மிக்கதாக இல்லை என்பது தற்போது அறியப்பட்டுள்ள உண்மையாகும். எனவே தான் இந்த வெள்ளப் பெருக்கைத் தாங்கும் வலிமை சென்னை நகருக்கு இல்லை. மேற்கண்ட இடர்களையும் யதார்த்த நிலையையும் மனதில் கொண்டு அதற்கேற்றவாறு ஒரு பேரிடர் மேலாண்மைத் திட்டம் முறையாக நிருவாகக் கட்டமைப்பிற்குள் ஏற்படுத்தப் பட வேண்டும். உரிய நிதியாதாரம் ஒதுக்கப்பட வேண்டும். அப்படி ஏற்படுத்தப்பட்டால் ஆட்சியில் யார் அமர்கிறார்கள் என்பது பற்றி பொது மக்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. இதுபோன்ற பெரிய பேரிடர்களை எதிர் கொள்ளும் வலிமை நமக்கு வந்து சேரும். அதற்கு பொதுமக்களின் கடமைகளும் மிகவும் முக்கியமானதாகும். தற்போது சென்னை நகருக்குள் வரும் பல்வேறு உபரி நீர் வரத்துக் குறித்து சரியான புள்ளி விபரங்கள் அரசிடம் இல்லை. ஏரிகள், குளங்கள் பல்வேறு ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளானதால் அவைகளின் கொள்ளளவு மிகவும் குறைந்து அனைத்து மழை நீரும் வீணாகக் கடலில் கலக்கின்றது. இதற்கு கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டு முற்றாக ஆக்கிரமிப்புகள் நிறுத்தபட வேண்டும். – பொதுமக்கள் தங்கள் இல்லம் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றார்களேயொழிய நாம் வாழும்  நகரம், சுற்றுச்சூழல் தூய்மையானதாக இருக்க வேண்டும் என எண்ணுவதில்லை. ஏராளமான நெகிழ் (பிளாஸ்டிக்) கழிவுகள் நதிகளில் வீசப்பட்டும் முகத்துவாரங்களில் அடைப்பட்டும் குப்பை போன்று காட்சியளிப்பது நம்முடைய சமுக ஒழுக்கத்திற்கு ஒரு எடுத்துக் காட்டாகும். இது சரி செய்யப் பட வேண்டும். – அரசியல் வாதிகள், தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்வதற்கும் எதிர்க்கட்சிகளை தூற்றுவதற்கும் தான் தங்களின் பேச்சு நேரத்தை செலவிடுகிறார்களேயொழிய எந்தத் தலைவராவது இதுவரை தங்கள் அரசியல் கட்சியினருக்கு இயற்கைப் பாதுகாப்பு, சமூகத்தூய்மை, மனத்தூய்மை குறித்து அறிவுரை வழங்கியது உண்டா? தலைவர்கள் எவ்வழியோ அவ்வழியே தொண்டர்கள் என்கிற நிலை தொடர்கிறது. இதில் மாற்றம் காண வேண்டும். அரசியல் கட்சிகளும் சமுக சேவை செய்யும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் தங்கள் கட்சிகளில் அல்லது அமைப்புகளிலுள்ள உறுப்பினர்களில், வலிமையான உடலமைப்பு கொண்ட இளைஞர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு மழை, வெள்ளம், பூகம்பம், ஆழிப் பேரலை போன்ற பேரிடர் காலங்களில் மக்களுக்கு எவ்வாறு தொண்டாற்றுவது என பயிற்றுவிக்க வேண்டும்.  இன்றைய சென்னை மக்களின் துயரை துடைத்து அவர்களின் உயிருக்கு பாதுகாப்பு அளித்த இராணுவத்தினரை மக்கள் பெரிதும் மதிக்கின்றனர், நம்புகின்றனர். காரணம், இராணுவத்தினர் நன்கு பயிற்சி பெற்றவர்கள்; உடல் தகுதி மிக்கவர்கள்; அவர்கள் நான்கு பேர் செய்யும் வேலைகளை தனி ஒருவரே செய்திடுவர். அது மட்டுமன்றி வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட மக்களுக்கு போதிய மருத்துவ வசதிகளை செய்து அவர்களின் உயிரை காப்பாற்றினர். இத்தகைய பேரிடரில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அவர்களால் இயன்ற அளவு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட முற்பட்டதும் பொதுமக்கள் சாதி, மத பேதமின்றி மனித நேயத்துடன் ஒருவருக்கொருவர் உறுதுணையாக செயல்பட்டதும் உள்ளபடியே மனதுக்கு ஆறுதல் தந்த நிகழ்வாகும். மனிதநேயம் உள்ளவரை மனிதம் வாழும்! – திருமதி நங்கை, மும்பை

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி