14 October 2013 6:46 am
2009 ஆம் ஆண்டு பல உலக நாடுகளின் ஒத்துழைப்போடு விடுதலைப் புலிகள் மீது ஏவப்பட்ட வன்முறை ஒழிப்புப் போர்" என்கிற போர்வையில் தமிழ் ஈழ மக்களின் மீது நடத்தப்பெற்ற இனப் படுகொலை முடிவுற்றபின், வேற்று நாட்டு கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு கொழும்பு திரும்பிய இலங்கை அதிபர் இராசபக்சே வானூர்தியில் இருந்து இறங்கி வந்து தன் நாட்டின் மண்ணை முத்தமிட்டுச் சிங்கள இராணுவத்தின் வெற்றிக் களிப்பை வெளிப்படுத்தினார். சற்றொப்ப எட்டு மாத காலம் நடைபெற்ற அந்தப் போரில் பின்பற்றப்பட்ட வன்முறைகள், குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், இன அழிப்பு போன்ற எவையும் கருத்தில் கொள்ளாமல் ஒரு வெறிப் போக்கையே தொடர்ந்து கடைபிடித்து தமிழர்களின் உடைமை, உயிர்கள் என அனைத்தும் சூறையாடப்பெற்றது. சிங்களக் குடியேற்றம் தமிழர் பகுதியில் ஏற்படுத்தப்பட்டது. இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டன. தமிழ்ப் பெண்களின் கற்பு சூறையாடப்பட்டது. பொதுமக்கள் அச்சுறுத்தப்பட்டனர். முள்வேலி முகாம்களில் சிறை வைக்கப்பட்டனர். இத்தனைக் கொடுமைகள் நடந்த போதிலும் அண்டை நாடான இந்தியா உள்பட உலக நாடுகள் பலவும் அந்தப் போர்க் குற்றங்களைக் கண்டிக்கத் தவறின. அய்க்கிய நாட்டு அவையின் செயலாளரான பான் கி மூன் பெயரளவில் வருத்தம் தெரிவித்துக் கொண்டு தன் கடமையை முடித்துக் கொண்டார். எனினும் பின்னாட்களில் அந்தக் கொடூரத் தாக்குதல்களின் கோர முகம் சிறுகச் சிறுக உலகுக்குத் தெரிய வந்தது. இங்கிலாந்தில் உள்ள சேனல் 4 என்னும் தொலைக்காட்சி நிறுவனம் பல்வேறு படப்பதிவுகளை உலகத்தாருக்குத் தெரிவித்தது. அதன் விளைவாக சில நாடுகள் இலங்கை விடயம் குறித்துப் பேசத் தலைப்பட்டன. போர் முடிந்து நான்கு ஆண்டுகள் முடிவுற்ற பின்னரும் இலங்கை அரசின் சர்வாதிகாரப் போக்கில் மாற்றம் நிகழாமை பல நாடுகளின் மனசாட்சியைத் தட்டி எழுப்பியது. புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் ஈழ மக்களின் தொடர் போராட்டங்களும், தமிழ்நாட்டில் மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சியும், இந்திய அரசியல் கட்சிகள் கூட தன் போக்கை மாற்றிக் கொள்ளும் அளவிற்குத் தள்ளப்பட்டன. எனவே வடக்கு மாகாணத்தில் மக்களாட்சி முறைப்படி ஒரு தேர்தலை நடத்துவது இலங்கை அரசிற்குத் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. இறுதியாக உலக நாடுகள் பலவற்றின் அழுத்தம் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் இறுதி வாரத்தில் தேர்தல் நடைபெற்றது. சற்றொப்ப முப்பது ஆண்டு காலமாக போராடி வந்த மக்களின் ஆயுதப் போராட்டம் பின்னடைவைச் சந்தித்த நிலையில், தற்போது உலக நாடுகளின் அழுத்தங்கள் காரணமாக நிகழ்ந்த மாகாணத் தேர்தலில் பங்கு பெற்று தமிழ் மக்களுடைய மக்களாட்சி உணர்வையும் உலகிற்குத் தெரிவிப்பது அவசியம் எனக் கருதப்பட்டது. இலங்கை இராணுவத்தின் கெடுபிடிகளும், அரசாட்சி செய்து வரும் இராசபக்சேவின் மிரட்டல்களும் மக்களை அச்சுறுத்தின. எனினும் அவற்றையெல்லாம் தாண்டி பெருந்திரளாக கலந்து கொண்டு வடக்கு மாகாணத் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்தனர். தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகப் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டணி என்ற அமைப்பு, தமிழரசுக் கட்சி மற்றும் பல்வேறு போராளிக் குழுக்களின் கூட்டாக அமைந்தது. தேர்தல் பரப்புரையில் தமிழ் ஈழ மண்ணின் விடுதலைக்காக உயிர் நீத்த மாவீரர்கள் ஈகம் போற்றப்பட்டது. இராணுவ முகாம்கள் அப்புறப்படுத்தப்படும், 2009 இனப்படுகொலை குறித்து பன்னாட்டு விசாரணை கோரப்படும் என்பன போன்ற தேர்தல் உத்திகள் தமிழ்த் தேசிய கூட்டணியினரால் முன் வைக்கப்பட்டன. 2009 நிகழ்வுக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கோரிக்கை குறித்து முன்னெடுக்க வேண்டிய விடயங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே ஒரு சில வேறுபாடுகள் காணப்படினும், தற்போது கிடைத்துள்ள இந்த வாய்ப்பை இராசபக்சே அரசுக்கு எதிராக பயன்படுத்த வேண்டும் என்பதில் ஒரு ஒருமித்தக் கருத்து வெளிப்பட்டது. இதற்கிடையில் தமிழர்களிடையே உள்ள இரண்டகக் கும்பல்களும், தமிழ்த் தேசிய கூட்டணியை எதிர்த்து இராசபக்சேவுடன் இணைந்து தேர்தல் களத்தில் குதித்தன. எனினும் வடக்கு மாகாணத்தில் வாழும் மக்களின் மனநிலை மிகத் தெளிவாகவே இருந்துள்ளது தெரிய வருகிறது. தங்களின் போராட்ட வடிவம், நியாயம், பன்னாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இராசபக்சேவின் நடவடிக்கைகளுக்கு எதிராக வாக்களித்து மிகப் பெரிய வெற்றியை தமிழ்த் தேசிய கூட்டணிக்கு ஏற்படுத்தியுள்ளனர். 2009 ஆம் ஆண்டு இலங்கை மண்ணை முத்தமிட்டு தன் வெற்றிக் களிப்பை உலகிற்கு அறிவித்த இராசபக்சேவிற்கு தற்போது அதே இலங்கையின் ஒரு பகுதி மக்களான வட மாகாணத் தமிழர்கள் மண்ணை கவ்வ வைத்துள்ளனர். இது காலவோட்டத்தில் நடைபெற்ற மாறுதல் ஆகும். ஆனால், தற்போது மாகாணச் சபைத் தேர்தலில் கிடைத்த இந்த வெற்றி தமிழ் ஈழ மக்களின் 60 ஆண்டு கால போராட்டத்தின் கோரிக்கைகளுக்குக் கிடைத்த வெற்றியாகக் கருத முடியுமா என்பதுதான் கேள்வி? உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டு தங்களின் உரிமை, உடைமை, நல்வாழ்வு என அனைத்தையும் இழந்து சோர்ந்து கிடக்கும் மக்களுக்கு இது ஒரு சிறு தளம் எனக் கொள்ளலாம். ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுயாட்சித் தன்மை கொண்ட மாகாணமாக வாழ வழியுண்டா? என்பது மிகவும் அய்யப்பாடான விடயமாகும். எந்த வித அதிகாரமும் இல்லாத, இந்திய மாநிலங்களின் அளவு கூட அதிகார வரம்புகள் இல்லாத, ஒரு மாகாணச் சபையினால் எப்படிப்பட்ட உரிமைகளை வாங்க இயலும்? பெரும்பான்மை சிங்கள அரசுகளால் நடத்தப் பெறும் ஒரு இராணுவ ஆட்சிமுறைக்கு எதிராக சிறுபான்மைத் தமிழ் மக்கள் தங்கள் சுய நிருணய உரிமையுடன் வாழ வழி செய்யுமா இந்த வெற்றி என்பதைக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும். கடந்த அறுபது ஆண்டு கால போராட்ட வரலாற்றில் சற்றொப்ப 30 ஆண்டுகளாக மக்களாட்சி வழியில் தந்தை செல்வா, வன்னிய சிங்கம், பேரா.வித்தியானந்தன், பேரா.கைலாசபதி, தனிநாயகம் அடிகளார், அமிர்தலிங்கம், சிவ சிதம்பரம் போன்றவர்கள் போராடி எவ்விதமான மாற்றங்களையும் காண இயலாத சூழ்நிலைக்குப் பின், தமிழர் அய்க்கிய விடுதலைக் கூட்டணி தந்தை செல்வநாயகம் தலைமையில் 1976 ஆம் ஆண்டு மே மாதம் வட்டுக் கோட்டையில் கூடி, தமிழ் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில், தன்னாட்சிக் கோட்பாட்டின் படி அமையும் தனித்தமிழ் ஈழமே எம் மக்கள் உரிமையோடு வாழ வழி வகுக்கும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் இதே நிலை மக்கள் முன் வைக்கப்பட்டு, தமிழர் அய்க்கிய விடுதலைக் கூட்டணி போட்டியிட்டு, பெரும்பான்மையான இடங்களை வென்று இலங்கையின் முதன்மை எதிர்க் கட்சியாகத் தன்னை உயர்த்திக் கொண்டது. புதிய எதிர்க் கட்சித் தலைவரான அமிர்தலிங்கம் தனது பாராளுமன்ற உரையில் பின் வருமாறு தன் கட்சியின் நிலையை வலியுறுத்தியிருந்தார். "சுய நிருணய உரிமையின் அடிப்படையில், தமிழ்த் தேசத்தின் விடுதலைக்காக உழைத்து தமிழீழத்தை நிறுவுவதற்காகவே, தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் இத்தேசிய அரசப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்" (நாடாளுமன்ற உரை 1977). கடந்த கால போராட்ட வரலாற்றில் தமிழர்கள் சந்தித்த 1956 ஆம் ஆண்டு அலுவலக மொழி குறித்த ஒப்பந்தம், 1957 ஆம் ஆண்டு பண்டார நாயகே – செல்வநாயகம் ஒப்பந்தம், 1965 இல் டட்லி சேன நாயகே – செல்வநாயகம் ஒப்பந்தம் என அனைத்தும் நிறைவேற்றப்படாமல் தமிழர் இரண்டாந்தரக் குடிமக்களாக நிலை நிறுத்தப்பட்டதன் விளைவாக, மேற்கண்ட கடினமான தீர்வை நோக்கித் தமிழர்கள் தள்ளப்பட்டனர். அதன் பின்னர் 1977 ஆம் ஆண்டு தொடங்கி, 1983 ஆம் ஆண்டு மிகப் பெரிய அளவில் தமிழர்கள் தாக்கப்பட்டு பின்னர் ஆயுதப் போராட்ட வடிவினை தமிழர்கள் தழுவிக் கொண்டனர். இதை வே.பிரபாகரன் தலைமையில் அமைந்த விடுதலைப் புலிகள் அமைப்பு முன்னெடுத்துச் சென்றது. அதன் பின்னர் இந்திய அரசின் தலையீட்டால் 1985 திம்பு பேச்சுவார்த்தை, 1987 இந்திய இலங்கை ஒப்பந்தம், 2002 போர் நிறுத்த ஒப்பந்தம் என பல்வேறு நிலைகளிலும் தமிழர்களின் சிக்கல் தீர்க்கப்படவில்லை. இந்தப் போரட்ட வடிவம் ஓரளவு வெற்றி கண்டு, விடுதலைப் புலிகள் தமிழ் ஈழப் பகுதிகளை தன்னாட்ட்சி நிலைக்குக் கொணர்ந்து சற்றொப்ப 15 ஆண்டுகள் நிருவாகம் செய்தனர். நீதி, நிருவாகம், காவல்துறை, வருவாய், கல்வி, மருத்துவம் என அனைத்து கூறுகளையும் உள்ளடக்கிய ஒரு தனி நாடு போலவே இயங்கி வந்தன. எனினும், 2009 ஆம் ஆண்டு இந்திய அரசு மற்றும் வல்லாதிக்க நாடுகள் சிலவற்றின் முழு ஒத்துழைப்புடன் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்ற போர்வையில் இரண்டு இலக்கம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதும், போர்க் குற்றங்கள், இனப் படுகொலை நடைபெற்றதும் தற்போது உலகத்தாரின் கண்களைத் திறந்துள்ளன. இந்த வரலாற்றுப் பின்னணியில் நடைபெற்ற தற்போதைய தேர்தல் எவ்விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உலகத் தமிழர்கள் ஒவ்வொருவர் மத்தியிலும் எழும் வினாவாகும். தமிழ்த் தேசிய தன்னாட்சி உணர்வையும், போராளிகளின் ஈகத்தையும் தேர்தல் உத்தியாகக் கொண்டு மக்களைச் சந்தித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் விக்கினேசுவரன் வெற்றிக்குப் பின் வெளியிட்ட அறிக்கைகள் புலம் பெயர்ந்த தமிழர்களை தமிழ்நாட்டுத் தமிழர்களை சற்று வியக்க வைத்துள்ளன. விக்னேசுவரன் மிகச் சாதரணமாக சொல்வது போல இலங்கையின் ஒற்றையாட்சி சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அனைத்தையும் இலங்கை அரசிடமிருந்து மாகாணச் சபை மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்றும், தனித்தமிழ் ஈழம் குறித்து தமிழ்நாட்டிலும், புலம்பெயர் நாடுகளில் பேசாமல் இருந்தால் உதவியாய் இருக்கும் என்றும் கூறியிருப்பது கடந்த கால வரலாறுகளை மறந்து விட்டு பேசுவது போலத் தோன்றுகிறது. பல உலக நாடுகளையும் ஏமாற்றும் வித்தைகளை தெரிந்து வைத்திருக்கும் இராசபக்சேவின் கைகளில் அனைத்து அதிகாரங்களும் குவிந்து இருப்பதால் விக்கினேசுவரனின் எதிர்பார்ப்பு எந்த அளவு முழுமை பெறும் என்பது தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ள வினாவாகும். தமிழ்த் தேசியக் கூட்டணி இராணுவ முகாம்களை அகற்றுவோம் என்னும் கோரிக்கையை முன்னெடுத்து பரப்புரை செய்து தேர்தலில் வெற்றி கண்டிருக்கும் இவ்வேளையில், அண்மையில் பிரபலமான ஒரு தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த இராசபச்சே, தமிழ்த் தேசிய கூட்டணிக் கேட்டுக் கொள்வதால் இராணுவத்தை வடக்கில் இருந்து அகற்ற முடியாது என்று தெளிவாக மறுத்திருக்கிறார். எனவே தற்போது நடைபெற்றுள்ள தேர்தல் ஏதோ மற்றொரு அரசியல் விளையாட்டு என்றே எண்ணத் தக்க அளவு நிகழ்வுகள் அமைந்துள்ளன. ஒரு வேளை இந்திய அரசின் வேண்டுகோளாகக் கூட தமிழ்த் தேசிய கூட்டணி தன் நிலைப்பாட்டை மாற்றியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. எனவே நடைபெற்று முடிந்திருக்கின்ற இந்த அரசியல் நகர்வுகள் மேலோட்டமாக ஈழத் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் நிகழ்வாகத் தோற்றப்படுத்தப் பட்டிருந்தாலும், ஈழ அரசின் யதார்த்தத் தன்மைகளை மனதில் கொண்டு, உணர்ச்சி வசப்பட்டு மகிழ்ச்சியடையும் அளவுக்கு யாரும் வந்து விட முடியாது. தமிழ்நாட்டு அரசியலாளர்களின் நிலைப்பாட்டை புறந்தள்ளினாலும், புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களின் உணர்வுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டணி எவ்வாறு வாய்ப்பளிக்கும் என்பது இன்னும் தெளிவாகவில்லை. நாங்கள் வாக்குகளைக் கேட்டோம். எம்மக்கள் பெரும்பான்மையாக வாக்குகள் தந்து வெற்றி பெற வைத்துள்ளனர். இனி எங்கள் பணி தொடங்குகிறது என்று கூறும் சி.வி.விக்கினேசுவரன் பதிலில் சற்று நம்பிக்கைத் தென்படுகிறது. ஆனால், மாகாணச் சபையின் அதிகாரங்கள் அனைத்தும் ஆளுனரைச் சார்ந்து இருக்கும். நிலம், நிதி சார்ந்த விடயங்கள் மத்திய அரசிடம் இருக்கும். இந்தச் சூழலில் தமிழர்களின் உணர்வுகளையும், இராசபக்சே அரசின் அதிகார மையத்தையும் எவ்வாறு சம்பந்தரும், சி.வி.விக்னேசுவரனும் எதிர் கொள்ளப் போகின்றார்கள் என்பதைக் காலம்தான் தீர்மானிக்கும். இரண்டு தலைமுறை காலமாக நடைபெற்ற மக்களாட்சிப் போராட்டமும், ஆயுதப் போராட்டமும் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில் கடந்த கால வரலாற்றுப் பின்னணியை மனதில் கொண்டு ஆராய்ந்தால், தமிழ் மக்களின் நிலை கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு எந்த இடத்திலிருந்து தங்கள் போராட்டத்தை தொடங்கினார்களோ அதே இடத்தில் நின்று கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது.- கட்டபொம்மன்"