நிழலுலகின் புகலிடமா மும்பை? - தமிழ் இலெமுரியா

15 December 2016 3:48 pm

இந்தியாவில் குற்ற நடவடிக்கைகளுக்கு உகந்த இடம் எது என்று பத்து பேரிடம் கேட்டால் ஒன்பது பேர் மும்பை என்பார்கள். ஏன்? இந்திய விடுதலைக்குப் பிறகு, சென்னை, ஐதராபாத், பெங்களூர், கொல்கத்தா போன்ற பிற நகரங்களை விட மும்பை இந்தியாவின் வர்த்தக வளர்ச்சியில் மிக முக்கிய நகரமாக கருதப்பட்டது. இதனால் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து தொழில் செய்யவும் வேலைவாய்ப்பு தேடியும் மக்கள் படையெடுக்க ஆரம்பித்தனர். பிற நகரங்களோடு ஒப்பிடும்போது மும்பையின் பொருளாதாரம் செழிப்பானது. மும்பை ஒரு வர்த்தக நகரம் என்பதால் பணபுழக்கம் அதிகம். உள்ளூர் பணத்தாள்கள் மட்டுமல்ல; அனைத்து நாடுகளின் பணத்தாள்களும் மிக எளிமையாக இங்கு புழங்கும். வர்த்தகம் எங்கு அதிகமோ அங்குதானே கடத்தலும் செழிப்புடன் வளரும்! மேலும் மும்பையின் புவியியல் அமைப்பு குற்றவாளிகளுக்கு மிகவும் ஏற்றது. திரை மறைவு வேலைகள் செய்வது இங்கு சுலபம். ஒளிந்து கொள்வதும் சுலபம். தாராவிப் போன்ற அகண்ட வெளியில் ஒருவர் ஒளிந்து கொள்வார் என்றால் அவரைக் கண்டுபிடிப்பது இயலாத காரியம். குற்றவாளிகள் ஒளிந்து கொள்ள யாருமற்ற காடுகள்தான் தேவை என்பது கிடையாது. மும்பை என்கிற நெருக்கடி கட்டடக் காடுகளே போதும். இந்தியாவில் வேறு எங்கும் இல்லாதபடி மும்பையில் மட்டும் நிழலுலகத்தின் ஆட்சி ஆலமரமாய்  விரிந்துள்ளதற்கு இதுதான் காரணம். மும்பை என்றில்லை, உலகெங்கிலுமுள்ள பல துறைமுகங்கள் கடத்தல் காரர்களின் புகலிடமாகவே இன்று வரையில் நீடிக்கிறது. இன்று  நேற்றல்ல, துறைமுகம் என்ற ஒன்று என்று உருவானதோ அன்றிலிருந்தே இதுதான் நிலைமை.  ஏன்? சற்று விரிவாகப் பார்க்கலாம். பெரும் பயணம் மேற்கொள்ளும் கப்பல் ஊழியர்கள் எப்போதாவதுதான் தரையை வந்தடைகிறார்கள். அவர்களின் பெரும்பாலான வாழ்க்கை, கடல் பயணத்திலேயே கழிந்து விடுகிறது. கப்பலில் அவர்களுக்கு பொழுது போக்குகள் குறைச்சல். ஒருவித இறுக்கமான சூழலிலேயே வாழ வேண்டிய கட்டாயம். ஆகவே கரையை தொடும் போதெல்லாம் அவர்களது உற்சாகம் கரை புரண்டு ஓடத் தொடங்கிவிடும். இவர்களது தேவையை உணர்ந்தே துறைமுகத்தை ஒட்டிய பகுதிகளில் மது வியாபாரம் தொடங்கப் பெற்றது. இதே காரணத்துக் காகத்தான் பாலியியல் தொழிலும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கவனிக்கவும். இவை இரண்டுமே அரசாங்கத்தின் பார்வையில் படாமல் நடத்தப்பட வேண்டிய சங்கதிகள். அப்படியானால் இவற்றை யார் எடுத்து நடத்த முடியும்? பெரிய ஆள்கள்? சரி, ஆள்கள் இருக்கிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம். அவர்களை காவல்துறை மோப்பம் பிடித்து உள்ளே தள்ளி விட்டால்? ஆக வியாபாரம் நடத்த ஆள்கள் தேவை, காவல்துறையின் குறுக்கீடுகள் இல்லாமல் கவனித்துக்கொள்ள ஆள்கள் தேவை. மது, மாது போன்றவற்றை தங்கு தடையில்லாமல் விநியோகிக்க ஆள்கள் தேவை. மிகமுக்கியமாக, இவை அனைத்தையும் ஒருங்கிணைக்க ஒரு தலைமை தேவை. இங்குதான் வன்முறையாளர்கள் (தாதாக்கள்) நுழைகிறார்கள். அன்றைய கரீம் லாலா தொடங்கி இன்றைய தாவூத் இப்ராகீம் வரை அனைவரும் இதிலிருந்துதான் ஆரம்பித்தார்கள். அப்போது மது, மாது மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் இப்போது கூடுதலாக அபின், கஞ்சா, வெடி குண்டு (ஆர்.டி.எக்ஸ்), தங்கம், வெள்ளி என்று தேவைகள் பெருகிவிட்டன. முதலில் கப்பலில் பணிபுரிந்த ஊழியர்களுக்காக மட்டுமே திரை மறைவு வேலைகள் செய்யப்பட வேண்டியிருந்தது. இப்போது இந்த வட்டம் விரிவடைந்து விட்டது. அடிமட்ட ஆள்கள் முதல் மேல்தட்டு வர்க்கம் வரை போதை மருந்துகளை உட்கொள்ளும் ஆள்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. அதே போலத்தான் ஆயுதங்களின் தேவைகளும். ‘இன்ன ரகம், இன்னஅளவு, இத்தனை மணிக்குள், இத்தனை வேண்டும்’ என்று விண்ணப்பம் கொடுப்பவர்கள் பெருகிக் கொண்டே போகிறார்கள்.  மேலும் பெரும் வணிகர்களும் பணக்காரர்களும் தங்களின் கொள்ளை இலாபத்திற்கு தடையாக இருப்பவர்களை அழிப்பதற்காக நிழலுலகை நாடுகின்றனர். நிழலுலகை நம்பித்தான் இவர்கள் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை நம்பிதான் நிழலுலகம் பிழைத்துக் கொண்டிருக்கிறது. மும்பையை, அரசாங்கம் – நிழலுலகம் ஆகிய இரண்டும் சரி சமமாக நிருவகித்து வருகின்றது. ஒருவர் வழியில் மற்றது குறுக்கிடாது. இது கிட்டத்தட்ட ஓர் எழுதப்படாத ஒப்பந்தம். நட்ட  நடுப்பகலில் மோட்டார் சைக்கிளில் வந்து கடைக்கு கடை கப்பம் வாங்கிச் செல்லும் சிறு தாதாக்களை இங்கு சாதாரணமாகவே காணலாம். இந்திய பொருளாதாரத்தில் மட்டுமல்ல. இந்திய சினிமாவுக்கும் மும்பைதான் தலைநகரம். 1960களில் காதல் கதைகளை மட்டுமே எடுத்து வந்த மும்பை திரைப்பட உலகம் (பாலிவுட்), பின்னர் மெல்ல மெல்ல வன்முறை படங்களுக்கு மாறியது. காரணம் கரீம் லாலா, ஹாஜி மஸ்தான், தாவூத் இப்ராகிம், சோட்டா இராஜன் போன்ற பெயர்கள் மக்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டதுதான். இவர்கள் ஒன்றும் நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கித் தந்த தியாகிகள் அல்லவே? ஆனாலும் அப்போதைய பாலிவுட் திரை நட்சத்திரங்களான திலீப் குமார் முதல் சாருக்கான் வரை இவர்களோடு நட்பு வைத்திருந்தனர் என்பதைக் கவனிக்க வேண்டும். 1980களிலிருந்து இன்று வரை வன்முறைப் படங்களே வாரா வாரம் வெளியாகி வருகின்றன. இராம்கோபால் வர்மா, மணிரத்னம் போன்றோர் எடுத்த நாயகன், சத்யா, கம்பெனி போன்ற படங்களெல்லாம் கற்பனையில் உதித்தவையாக மட்டுமே இருக்க முடியாது. உண்மை வாழ்க்கையின் கண்ணாடிகள் அவை. திரைப்பட காட்சிகள் போலவே நடைமுறையிலும் பல நிகழ்வுகள் நடக்க ஆரம்பித்தன. அவை திரைப்படங்களை விட படு பயங்கரமானவை.  சரி இவர்கள் திரைத்துறைக்குள் எவ்வாறு கால்பதித்தனர் என்பதை பார்ப்போம். 1990களில் ஒரு தயாரிப்பாளர், ஒரு பெரிய நட்சத்திர நாயகனை வைத்து ஐம்பது கோடி பட்ஜெட்டில் ஒரு படம் பண்ண ஆசைப்படுகிறார். அவர் கைவசம் இருப்பது 20 கோடிகள்தான். மீதித் தொகைக்கு ரிசர்வ் வங்கியில் கடன் வாங்கினால் ஒழிய பணத்தை வேறு எங்கும் புரட்ட முடியாது. ஒரு வங்கிக்குச் சென்று ஒரு படம் எடுக்கிறோம். கடன் கொடுக்க முடியுமா" என்றால் வங்கி மேலாளர் வாய்விட்டுச் சிரிப்பார். பிறகு எப்படித்தான் பணம் புரட்டுவது?  இது மாதிரியான வேளையில்தான் சுலபமாக உள்ளே நுழைந்தனர் நிழலுலகவாதிகள். பணம் எடுக்கும் இயந்திரத்தைப் போன்று கேட்ட தொகையை அடுத்த நொடியே கொடுப்பார்கள். எப்போது வந்து கேட்டாலும் பணம் கிடைக்கும். ஆனால் 50 விழுக்காடு வட்டி, இலாபத்தில் பங்கு அல்லது இசைத்தட்டு உரிமம், உள்நாட்டு – அயல்நாட்டு வெளியீடுகளின் உரிமம் என அவர்கள் கேட்கும் உரிமைகளைக் கொடுத்து விட வேண்டும்.  அதன் பிறகு நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்குப் பிறகு மெல்ல மெல்ல நிழலுலகப் பிடியிலிருந்து தளர்ந்தது திரை உலகம். எனினும் நேரடியாக கோலோச்சியிருந்த நிலைமை மாறி மறைமுகமாக நடைபெற்று வருகிறது. ஆக, ஒரு சிறிய வியாபாரம் தொடங்கி பெரு வணிகம், சினிமா என்று எதுவாகிலும் நிழலுலகத்தின் உதவி கட்டாயம் தேவை. உங்கள் வியாபாரம் சட்டப்பூர்வமான ஒன்றாக இருந்தால், ஒரு தாதாவின் மிரட்டலிலிருந்து தப்பிக்க மற்றொரு தாதாவுக்கு கப்பம் கட்ட வேண்டியிருக்கும். சட்டத்துக்கு புறம்பான வியாபாரம் என்றால் கேட்கவே வேண்டாம் அங்கு நிழலுலகின் பங்கு அதிகமாகவே இருக்கும். அரசு அதிகாரிகளோ, பத்திரிகையாளர்களோ நிழலுலகவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டால் வெகு விரைவில் அவர்கள் இறப்பை சந்திக்க நேரிடுகிறது. இதையும் மீறி அவ்வப்போது "சுட்டுப் பிடித்தல் (எண்கவுன்ட்டர்)" என்ற பெயரில் காவல் துறையினர் இத்தகைய சமுக விரோதிகளை சுட்டுக் கொல்லும் செய்தியும் தொடர்ந்து வெளிவந்து கொண்டேதான் இருக்கிறது. இருப்பினும் இதற்கு யாரும் முற்றிப்புள்ளி வைப்பார் இல்லை. – வளவன், மும்பை"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி