நீர்ப் போர் மூளுமா? - தமிழ் இலெமுரியா

14 November 2013 8:52 am

தண்ணீர் இயல்பாகவே தீயை அணைக்கக் கூடியதேயல்லாமல் தீயை மூட்டி விடக் கூடியது அல்ல. ஆனால், பெயரிலேயே குளிர்ச்சியைக் கொண்டிருக்கும் இந்தத் தண்ணீர் இனிமேல் நாடுகளுக்கிடையே போரை மூட்டி விடும் எரி எண்ணெய்" -ஆக இருக்கப் போகிறது என்ற அச்சம் இப்போது பன்னாட்டு அளவில் தொற்றிக் கொண்டுள்ளது. ஆம்! எண்ணெய் காரணமாகப் போர்கள் மூளும் என்று பல்வேறு நாடுகளின் அரசுத் தலைவர்களும் ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரிகளும் எச்சரிக்க ஆரம்பித்துள்ளார்கள். 1979 ஆம் ஆண்டு எகிப்திய அதிபர் அன்வர் சதாத், எகிப்து இனி சண்டையில் இறங்க நேரிட்டால் அதற்குக் காரணம் நைல் நதி நீராகத்தான் இருக்கும் என்று பிரகடனம் செய்தார். பின்நாளில் ஐ.நா. பொதுச் செயலாளராகப் பதவி வகித்த பூட்ரோஸ் காலி 1989 இல் எகிப்தின் வெளியுறவு அமைச்சராக இருந்த போது, எகிப்தின் தேசியப் பாதுகாப்பு நைல் ஆற்றின் பள்ளத்தாக்குகளில் உள்ள எட்டு ஆப்பிரிக்க நாடுகளின் கரங்களிலேயே தங்கியுள்ளது என்று அமெரிக்க காங்கிரசு முன் பேசும் போது அறிவித்தார். 1990 ஆம் ஆண்டு ஜோர்டான் மன்னர் ஹூசேன் "இசுரேலுக்கும் ஜோர்டானுக்கும் இடையில் உருவாக்கி வைத்திருக்கும் சமாதான உறவு சிதறுவதானால், அது இரண்டு நாடுகளும் தண்ணீரைப் பகிர்ந்து கொள்வதில் உருவாகும் சிக்கலால் மாத்திரமே ஏற்படும்" என்றார். 2002 ஆம் ஆண்டில் அப்போதைய ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அனான் "உலகத் தண்ணீர் தினம்" தொடர்பான தனது அறிக்கையில் நீர் விவகாரங்களில் பெரும் வன்முறைக்கான வித்துகள் புதைந்து போயிருக்கின்றன என்ற அச்சத்தை நீர்வள ஆதாரங்களின் மீது தேசிய அளவில் ஏற்பட்டுள்ள கடுமையான போட்டிகள் கொண்டுள்ளன" எனக் கோடிட்டுக் காட்டியுள்ளார். தற்போதைய பொதுச் செயலாளர் பான் கி மூனும் தன் பங்குக்கு, நீர்ப் பற்றாக்குறைவு பொருளாதார, சமுக நலன்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதோடு முரண்பாடுகளையும் போர்களையும் மூளச்செய்யும் வீரியமான எரிபொருளாகவும் இருக்கின்றது என எச்சரித்து வருகிறார். சோமாலியாவின் உள்நாட்டுப் போரின் போது கிணறுகளைப் பாறைக் கற்களால் நிரப்பியும், தண்ணீர்க் குழாய்களைச் சேதமாக்கியும், நீரை வாரி இறைக்கும் இயந்திரங்களைச் சூறையாடியும் நகரங்களின் குடிநீர் வழங்கும் அமைப்பு முழுவதுமே துவம்சம் செய்யப்பட்டது. வளைகுடாப் போரில் ஈராக், குவைத்தில் இருந்த உப்பு நீரை குடிநீராக மாற்றும் இயந்திரங்களைத் தகர்த்துக் குடிநீருக்குப் பஞ்சம் உண்டாக்கியது. பதிலுக்கு, பாக்தாத் நகரத்துக் குடிநீர் வசதிகளை நேசநாட்டுப் படை குறிவைத்துத் தாக்கியது. பொஸ்னியாவிலும் செர்பியர்கள், இசுலாமியர்கள் மீதான தாக்குதலுக்குக் கடைப்பிடித்த தந்திரங்களில் தண்ணீரும் ஒன்றாக இருக்கிறது. சராஜிவோவில் மின் விநியோகத்தைத் துண்டித்துத் தண்ணீர் இறைக்கும் இயந்திரங்களுக்குக் கட்டாய ஓய்வைக் கொடுத்து, கிணறுகளைத் தேடிக் கூட்டம் கூட்டமாக அவர்களை இடம்பெயர வைத்தார்கள். குளக்கரைகளில் நீர் தேடி வரும் காட்டு விலங்குகளைக் காத்திருந்து வெடி வைத்துப் பிடிப்பதைப் போல கிணறுகளைச் சூழக் குழுமிய இசுலாமியர்கள் செர்பியர்களின் ஏவுகணைகளால் சாகடிக்கப் பட்டிருக்கிறார்கள். இக்காலப் பகுதியில், சாம்பியாவின் தலைநகரம் லுசாக்காவில், அந்நகரின் மூன்று மில்லியன் மக்களுக்கும் குடிநீரைக் கொண்டு செல்லும் முதன்மையான நீர்க்குழாய் கிளர்ச்சிக்காரர்களால் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. இப்படி, போரின் போது போர் அறிவியலையும் மீறி நீர்நிலைகளை நிர்மூலமாக்குவது காலந்தோறும் நடைபெற்றே வருகிறது. ஆனால், போரில் ஒரு உத்தியாக நீர்நிலைகளைத் தாக்கி அழிப்பதைப் போல அல்லாமல், தண்ணீருக்காக நடக்கும் போர்கள் மிகவும் அரிதாகவே நிகழ்ந்துள்ளன. 4, 500 ஆண்டுகளுக்கு முன்னர் யூப்பரட்டிஸ் (Eupharates), தைகிறஸ் (Tigris) நதிகள் பொறுத்து இரண்டு மெசப்பத்தோமிய நாடுகள் (தற்போதைய ஈராக்கின் தென்பகுதி) போரிட்டதாக வரலாறு கூறுகிறது. அதன் பின்னர், பல நாடுகள் நீர் தொடர்பான கொந்தளிப்புகளால் உராய்ந்து கொண்ட போதும், குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு நீருக்கான போர் எங்கேயும் ஏற்படவில்லை. ஆயினும், ஓநாய் வருகிறது என்பது போல, கடந்த முப்பதாண்டுகளாகக் (மூன்று தசாப்தங்களாக) கேட்டுக் கொண்டிருக்கும் "நீர்ப்போர்" ஓலமும் ஒருநாள் உண்மையிலேயே அரங்கேறிவிடுமா? தன் மீது போர்த்தியுள்ள நீராடை காரணமாக "நீலக்கோள்" என அழைக்கப்படும் புவியில் தண்ணீருக்குப் பற்றாக்குறை என்பது நம்ப முடியாத ஒன்று போலவே தோன்றும். ஆனால், உண்மை நிலவரம் கலவரப் படுத்துவதாகவே உள்ளது. பூமியில் உள்ள நீரில் 97.5 விழுக்காடு நீர், கடல் நீராக உப்பேறிக் கிடக்கிறது. எஞ்சிய தண்ணீரிலும் பெரும் பகுதி கைகளுக்கெட்டாத வெகு ஆழத்தில் நிலத்தடி நீராகவும், அன்டார்டிக்காவிலும், கிறீன்லாந்திலும் பனிப்பாறைகளாகவும் சிறைபட்டு இருக்க, வெறும் 0.26 விழுக்காடு நீர் மாத்திரமே இலகுவில் வசப்படும் நீராக இருக்கிறது. இது, பூமியில் உள்ள மொத்த நன்னீரில் 0.007 விழுக்காடு ஆகும். இருக்கின்ற இந்தச் சொற்ப அளவு நீருக்கும் ஆபத்து என்பதுதான் இன்றுள்ள சிக்கலே. நீர்வள ஆதாரங்களை உலகளாவிய ரீதியில் 1975 முதல் மதிப்பிட்டு வரும் ஐ.நா. கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு (யுனெஸ்கோ) நீரின் அளவும், தரமும் அச்சம் ஊட்டும் அளவுக்குப் படியிறங்கி வருவதைப் புள்ளி விபரங்களுடன் அறிவித்துள்ளது. சென்ற நூற்றாண்டில் உலக மக்கள் தொகைப் பெருக்க வீதம் இரட்டிப்பாக உயர, நீர்த் தேவையோ ஆறு மடங்காக எகிறியுள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவருக்குக் கிடைத்து வந்த நீரின் அளவில் பாதிதான் இன்று நமக்குக் கிடைக்கிறது. 1950 ஆம் ஆண்டு வேளாண்மை, தொழிற்துறை, வீடுகள் ஆகியவற்றின் தேவைகளுக்குப் போக ஒருவருக்குச் சராசரியாக 450 கனமீட்டர் என்னும் அளவில் இருந்த உலகின் நீர்வள இருப்பு இன்று 200 கனமீட்டர் என்னும் அளவாகக் குறைந்து விட்டிருக்கிறது. இந்த அளவும் இன்னும் 25 ஆண்டுகளில் 130 கனமீட்டராக வற்றிப் போய்விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நன்னீர் கையிருப்புக்கும், உலக மக்கள் தொகைக்கும் இடையிலான விகிதத்தைப் பார்க்கும் போது நீர் இருப்பு போதுமானதாகவே தோன்றும். ஆனால் நாடுகளிடையே பகிரப்பட்டிருக்கும் நீரின் அளவில் பெரும் ஏற்றத் தாழ்வு நிலவுகிறது. இயற்கையின் இந்த ஓரவஞ்சனையால் அமெரிக்காவில் உள்ள ஒருவர் நாளொன்றுக்கு 425 லிட்டர்கள் நீரை அனுபவிக்க மடகாசுகரின் கிராமப் பகுதியிலுள்ள ஒருவருக்கு 10 லிட்டர்கள் அளவு நீர் மட்டுமே பயன்படுத்தக் கிடைக்கிறது. இது, ஒருவர் உயிர் வாழத் தேவையான மிகக்குறைந்த அளவு நீராகும். இப்படி மிகவும் வறண்ட பகுதிகளில் இன்று 46 கோடி மக்கள் குடிநீர்ப் பற்றாக்குறையால் அவதிப்படுகிறார்கள். இங்கு பெரும்பாலும் பெண்களும், குழந்தைகளும் அன்றாடம் நீரைத் தேடி 15 கிலோமீட்டர்கள் வரையில் நடந்து செல்ல வேண்டியிருக்கிறது. நீர் வேட்கை இத்துடன் அடங்கி விடுவதாக இல்லை. எதுவிதத்திலும் அதிகரிக்கச் செய்ய முடியாத நீர்வள ஆதாரங்களை, இவற்றை ஒட்டிய சூழலை உகந்த முறையில் முகாமைத்துவம் செய்யத் தவறின், இந்த நூற்றாண்டின் கால்வாசியின் போது உலகில் மூன்றில் இரண்டு பகுதியினர் கடுமையான நீர்ப் பற்றாக்குறைவால் தவிக்க நேரிடும். மேலும், மக்கள் தொகை அதிகரிப்பும் இதே கதியிலேயே தொடருமாயின் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தண்ணீர்ப் பஞ்சத்தினால் உலகில் எல்லாப் பகுதிகளுமே அல்லாட வேண்டி வரும் எனவும் யுனெஸ்கோ எச்சரித்துள்ளது. தண்ணீர்ப் பற்றாக்குறை மட்டுமல்ல, தண்ணீரின் தரம் பற்றிய யுனெஸ்கோவின் கணிப்புகளும் பீதி ஊட்டுவனவாகவே உள்ளன. இன்று உலகின் ஐந்தில் ஒரு பகுதி மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் என்பது வெறும் கானல் நீராகவே உள்ளது. உலக மக்கள் தொகையில் பாதிபேர் அடிப்படைச் சுகாதார வசதிகள் இன்றித் திண்டாடுகிறார்கள். முறையான கழிப்பிட வசதிகள், வடிகால் அமைப்புகள் இல்லாததால் கழிவுகள் குடிநீருடன் தடையின்றிக் கலந்து விடுகின்றன. இந்தத் தொற்றுள்ள நீர் ஒன்று காரணமாகவே வளர்முக நாடுகளின் அரைவாசிப் பேரளவில் வயிற்றோட்டம், மலேரியா என்று நீர் சார்பு நோய்களுக்கு ஆளாகி வருகின்றார்கள். இந்த நோய்கள் ஆண்டுதோறும் ஐம்பது இலட்சம் பேரை, அதுவும் குறிப்பாக மூன்றாம் உலகின் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பரிதாபமாகப் பலிவாங்கிக் கொண்டிருக்கிறது. இந்தத் தொகை இதுவரையில் போர்களினால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை விடப் பத்து மடங்கு அதிகமாகும். நீரின் தூய்மையைத் தம் பங்குக்குத் தொழிற்சாலைகளும் பலாத்காரம் செய்கின்றன. தொழிற்சாலைக் கழிவுகளுடன் வந்து சேரும் இரசம், கட்மியம், குரோமியம், ஈயம் போன்ற பார உலோகங்களும், சயனைட்டு வேதிகளும் "குடம் பாலுக்குத் துளி நஞ்சு" போல நீரைப் பாவனைக்கு உகந்ததல்லாததாக்கி விடுகின்றன. இரசத்தில் ஒரு மில்லி கிராமில் ஆயிரத்தில் ஒரு பங்கே ஒரு லிட்டர் நீரை நஞ்சூட்டப் போதுமானது என்று உலக சுகாதார அமைப்பு கணக்கிட்டுள்ளது. தொழிற்சாலைக் கழிவுகளினாலும் அதிகம் பாதிக்கப்படுவது ஏற்கனவே நீர்ப் பற்றாக்குறைவால் உள்ள மூன்றாம் உலக நாடுகள்தான். கடுமையான சட்ட விதிகளினால் கைத் தொழில் நாடுகளிலிருந்து விரட்டப்படும் தொழிற்சாலைகள் "உலக மயமாக்கல்" என்னும் கதவுகளினூடாக மூன்றாம் உலக நாடுகளினுள் நுழையத் தொடங்கியிருப்பது அவற்றின் நீர் ஆதாரங்களை மேலும் மேலும் நச்சு வளையத்தினுள் தள்ளுவதாகவே உள்ளது. இதற்கு சீனா ஒரு உதாரணம். புகழ் பெற்ற அதன் மஞ்சள் ஆறு 10 விழுக்காடு அளவுக்கு, ஆற்றங்கரையில் உள்ள ஆயிரக்கணக்கான தொழிற் சாலைகள் வெளியேற்றும் கழிவுகளால் சாக்கடையாக மாறிவிட்டது. இதே நிலைதான் சீனாவின் யாங்க்சே என்ற ஆறும் மாற்றமடைந்துள்ளது. 2006 ஆம் ஆண்டுத் தரவுகளின் படி, அந்த ஓர் ஆண்டில் மட்டுமே யாங்க்சே ஆற்றில் 26 பில்லியன் டன்கள் கழிவு நீர் கலக்க விடப்பட்டுள்ளது. சீனாவின் முக்கிய இரண்டு ஆறுகளுமே  மாசுபட்டிருப்பதால் 78 விழுக்காடு சீன மக்கள் தொற்றுள்ள நீரையே பருகி வருகின்றனர். உலக நீர்ப் பயன்பாட்டில் 80 விழுக்காடு நீரை விழுங்கிக் கொண்டிருக்கும் வேளாண்மையும் நன்னீர் ஆதாரங்களின் இருப்புக்கு வேட்டு வைப்பதாய் உள்ளது. இதில் 20 விழுக்காடு நீர் மட்டுமே பயிர்களைச் சென்றடைகிறது. மீதி 60 விழுக்காடு நீர் குழாய்களில் கசிவு, ஆவியாதல் என்று வீணாகிப் போவதுடன் தேங்கி நின்று ஆவியாகும் இடங்களில் உப்புகளைத் தேக்கியும் வருகிறது. இப்படி, உலகின் நீர்ப்பாசன நிலைகளில் 30 விழுக்காடு நிலம் இனிமேலும் பயிர்களைத் தாங்க முடியாத அளவுக்கு உவர்ப்பேறி உள்ளது. அளவுக்கு மிஞ்சி வேகமாக நீரை இறைத்துத் தள்ளுவதாலும் நன்னீர் வில்லையினுள் கடல் நீர் புகுந்து உப்புக்கரிக்க ஆரம்பித்துள்ளது. "பசுமைப் புரட்சி" ஒருபுறம் குடிநீரில் உப்பேற்றிக் கொண்டிருக்க, இன்னொரு புறம் இறால் வளர்ப்பு "நீலப்புரட்சி" யில் கடல் நீர் உள்வாங்கப்படுவதாலும் குடிநீர் உவராகி வருகிறது. வேளாண் வேதிகளின் பயன்பாடு வரம்பை மீறிய இடங்களிளெல்லாம், குடிநீரில் வேளாண் வேதிகளும் குடியேறியுள்ளது. இன்று குடிநீரை அதிகம் அச்சுறுத்தும் வேளாண் வில்லன் பசளைகளில் இருந்து வந்து சேரும் "நைத்திரேற்" (Nitrate)தான். லிட்டருக்கு 50 மில்லி கிராம்களிலும் அதிகமாகக் குடிநீரில் "நைத்திரேற்" கலக்குமாயின் அது "நீலக்குழந்தை" நோயை (இரத்தத்தில் ஓட்சிசன் காவப்படுவதில் தடங்கல் ஏற்பட்டு குழந்தை இறத்தல் – Methaemoglobinemia) ஏற்படுத்தும் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. திரவத் தங்கமான நீர் வள ஆதாரங்கள் இப்படி அளவிலும் தரத்திலும் வேகமாகக் கீழ் இறங்கி வருவதால் அதனைப் பங்கு போட்டுக் கொள்வதில் நிலவும் கடுமையான போட்டியே "நீர்ப் போர்" பற்றிய அச்சத்தை உருவாக்கியுள்ளது. அதுவும் ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகள் ஒரு நதி நீரைப் பங்கு கொள்ளும் இடங்களில் நீர்ப்போர் அபாயம் அதிகம் உணரப்பட்டுள்ளது. எத்தியோப்பியாவில் உற்பத்தியாகி எகிப்தினால் பெரும் தாகத்துடன் குடிக்கப்படும் நீல நைலின் நீர் குறித்து நெடுங்காலமாக வாக்குவாதங்கள் நடந்து வருகின்றன. நீல நைலின் 2 விழுக்காடு நீரை மட்டுமே பயன்படுத்தும், வறட்சியால் வதங்கும் எத்தியோப்பியா தனது எல்லையினுள் அணைகளைக் கட்ட முயன்ற போதெல்லாம் 86 விழுக்காடு நீரை நுகர்ந்து கொண்டிருக்கும் எகிப்து படை மிரட்டல் விடுத்து அணை முயற்சிகளுக்கு அணை போட்டு வந்துள்ளது. இந்தியாவும் – வங்காள தேசமும் கங்கை ஆற்றுக்காகவும், மெக்சிக்கோவும் – அமெரிக்காவும் கொலராடோ ஆற்றுக்காகவும், கங்கேரியும் – சுலோவேக்கியாவும் டான்யூப் ஆற்றுக்காகவும், தாய்லாந்தும் – வியட்நாமும் மேகாங் ஆற்றுக்காகவும் பரசுபரம் வெறுப்பு நஞ்சைக் கக்கி வருகின்றன. இந்தியாவில், தமிழ்நாடும் – கருநாடகமும் காவிரி நதி நீர்ப் பங்கீட்டுக்காக நரம்பு புடைக்க முறைத்துக் கொள்வதையும் இன்னொரு உதாரணமாகக் குறிப்பிடலாம். இன்று ஏறத்தாழ 300 ஆறுகள் நாடுகளின் தேசிய எல்லைகளைக் கடந்து பாய்ந்து கொண்டிருக்கின்றன. உலக மக்கள் தொகையில் 40 விழுக்காட்டினர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகள் கை நனைக்கும் ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலேயே வாழ்கின்றனர். பல்வேறு மொழி, பண்பாட்டுப் பாரம்பரியங்களை ஒருங்கிணைத்துப் பாயும் இந்த நீர் ஆதாரங்களினுள்ளே போர் அபாயத்தையும் தாண்டி அமைதிக்கும் ஒத்துழைப்புக்குமான மெல்லிய இழையோடிக் கொண்டிருப்பதையும் மறுப்பதற்கில்லை. பகைமைக்கான மற்றைய காரணங்கள் அப்படியே இருப்பினும் பல நாடுகளிடையே நீர் பொறுத்து இணக்கம் உண்டாகியுள்ளது. இதுவரை பன்னாட்டு நீர்ப் படுகைகள் பொறுத்து 150 உடன்படிக்கைகள் செய்து கொள்ளப்பட்டுள்ளன. காஷ்மீரிலுள்ள இமயமலைப் பகுதியில் உற்பத்தியாகி பாகிஸ்தானை ஊடறுத்து ஓடும் சிந்து நதி தொடர்பாக இந்தியத் துணைக் கண்டம் இந்தியா – பாகிஸ்தான் என்று பிரிவினையானது முதல் சச்சரவு இருந்து வந்துள்ளன. பிரிவினையான மறு ஆண்டே இந்தியா சிந்து நதி நீரைத் தடுத்து நிறுத்திய போது போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகியது. உலக வங்கியின் முயற்சியினால் 1960 ஆம் ஆண்டு சிந்து நதி நீரைச் சம்மாகப் பகிர்ந்து கொள்ளும் உடன்படிக்கை கையெழுத்தானது. அதன் பின்னர், இரண்டு நாடுகளுக்கும் இடையே இரண்டு முறை போர்கள் நிகழ்ந்த போதும் சிந்து நதி நீர்ப் பங்கீடு தொடர்பான கூட்டுறவு முறியவில்லை. இசுரேல் – பாலஸ்தீனம் இடையே பீரங்கிச் சூடு கேட்டுக் கொண்டிருக்கின்ற போதிலும், ஒஸ்ஸோ உடன்படிக்கையின் அடிப்படையில் இரண்டு தரப்பினரும் மேற்குக்கரைப் பகுதியில் தண்ணீர் தங்கு தடையின்றி கிடைக்க முறையாகக் கூடிப் பேசி வருகிறார்கள். இந்நீர்த் தூதாண்மையில் மாய மந்திரம் ஏதும் இல்லை. நீர் உற்பத்தியைச் சண்டை போட்டு அதிகரிக்கச் செய்ய இயலாத நிலையில் நீருக்கான உரிமையை விடவும் தேவையின் அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒத்துழைப்பதைத் தவிர இவர்களுக்கு வேறு வழி இருக்கவில்லை. முதல் உயிரி தோன்றிய நாளில் இருந்து புவியில் உயிர்ப் பசையை ஒட்டி வைத்திருக்கும் நீர்வள ஆதாரங்கள் இன்று பற்றாக்குறை காரணமாக முரண்பாடுகளின் மூல வளமாக மாறி இருக்கும் அதே சமயம் ஒத்துழைப்புக்கான ஊக்கியாகவும் இருக்கிறது. இதனாலேயே ஐ.நா. கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு, மிகெயில் கோர்பச்சேவ் தலைமையிலான சர்வதேச பசுஞ்சிலுவை அமைப்புடன் (Green Cross International) இணைந்து தண்ணீரைப் "போர்" வாய்ப்பிலிருந்து சமாதான வாய்ப்புக்கு நகர்த்தும் திட்டமொன்றைப் பெரிய அளவில் சமீபத்தில் முன்னெடுத்துள்ளது. கொள்கை வகுப்பாளர்களையும், நீரியல் அறிஞர்களையும், சிக்கல்களைச் சரியாகக் கையாளக் கூடிய மாணவர்களையும் பயன்படுத்திச் சர்வதேச அளவில் ஏற்பட்டு வரும் நீர் நெருக்கடிகளையும் முரண்பாடுகளையும் எதிர்கொண்டு நீர்ப் போரைத் தடுப்பதே இப்புதிய கூட்டுத் திட்டத்தின் நோக்கமாகும். போரா – சமாதானமா? தீர்வு நம்மிடமே!- பொ.ஐங்கரநேசன்."

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி