16 August 2014 8:17 am
வேலிக் காத்தான், சீமை வேலிக்காத்தான் வேலிக்கருவை என பல பெயர்களில் தமிழ்நாட்டில் பல பாகங்களிலும் நிலங்களில் மட்டுமல்லாது காடுகளிலும் மிக வேகமாகப் பரவி வருகின்றது. இந்த நச்சுத் தாவரம் Prospischilensis என ஸ்பேனிசு மொழிப் பெயர் கொண்டது. இத்தாவரத்தின் தாயகம் மெக்சிகோ. இந்த நச்சு மரம் தென் அமெரிக்காவிலிருந்து இங்கு பரவி வளர்கின்றது. இதனால் நல்ல பலனை விட கேடுகளே மிக அதிகமாக விளைகின்றன. இந்த வேலிக்காத்தான் மக்களுக்கும் வேளாண்மைக்கும் எதிரியென தாவரவியல் கூறுகின்றது. நிலத்தடி நீர் வளப் பெருக்கத்திற்கு இது எதிரி. நிலத்தடி நீரை 175 அடி வரை தனது வேரை பூமியின் அடியில் செலுத்தி அங்குள்ள நீரையெல்லாம் உறிஞ்சி விடுகின்றது. மேலும் காற்று வெளியில் உள்ள தண்ணீரையும் உறிஞ்சி விடுகின்றன. எனவே இது உள்ள இடம் விரைவில் வறண்ட பிரதேசமாகின்றது. இதன் வளர்ச்சி புவியை மிக விரைவில் வெப்பமாக்குகின்றது. சீமை வேலிக்காத்தான் எனப்படும் இத்தாவரம் 30 அடி உயரம் வரை அடர்ந்து படர்ந்து வளர்கின்றது. இதன் இலை பச்சையாகவும், பூ மஞ்சள் நிறமாகவும் உள்ளன. இதன் விதை அவரை விதைபோல நீளமாக அமைந்துள்ளது. இது வறண்ட பாலை நிலத்திலும் உவர்ப்பு மண்ணிலும் கூட நன்றாக வளர்கின்றது. இம்மரத்தை வெட்டி கரியாக்கி எரிபொருளாக பெருமளவில் மறைமுகமாகவும் விற்பனை செய்யப்படுவதாக இராமநாதபுரம் மாவட்டத்தில் கூறப்படுகின்றது. சுமார் 50 டிகிரி செல்சியஸ் வெப்பத்திலும் நன்றாக வளர்கின்றது. டாக்டர் ஆண்டர்சன் என்பவர் இத்தாவரம், பொருளாதார மற்றும் வேளாண்மை சீர்கேட்டை உண்டு பண்ணுவதாகக் கூறுகின்றார். சமுதாயக் கேடுகளும் விளைவதாகப் பகர்கின்றார். வேளாண் உற்பத்தி பாதிக்கப்படுகின்றது. மேய்ச்சல் நிலத்தில் உள்ள புல் பூண்டுகள் கூட அழிகின்றன. நீரை உறிஞ்சி பூமியைப் பாலையாக்குகின்றது. கால்நடைகள் இதனை உண்டு நச்சுத் தன்மையால் வயிற்றுப்போக்கு உண்டாக்கி இறந்து போகின்றன. இவை போன்றவை அவரது கண்டுபிடிப்புகளாகும். நீர்மிகு மாநிலம் கேரளா. மிக அதிகமாக தண்ணீர் கிடைக்கின்ற நம் அண்டை மாநிலமான கேரளாவில் முழுமையாக இது அழிக்கப்பட்டு விட்டது. வேலிக்காத்தான் எனப் பரவலாக அறியப்பட்ட இத்தாவரம், வேளாண் நிலங்களை மட்டுமல்லாது வாழ்வாதாரங்களையும் நாசப்படுத்தும் மிகக் கொடிய தாவரமாகும். 1950களில் பயிர்களுக்கு வேலியாக அடைக்கலாமென்ற மிகத் தவறான புரிதல் காரணமாக கொண்டு வரப்பட்டது. மிக வேகமாகப் பரவி தமிழக நிலங்களில் மட்டுமல்லாது காடுகளுக்கும் எப்படியோ பரவியுள்ளது. அதனால் காடுகளும் அழியும் ஆபத்துக்குள்ளாகியுள்ளது. அமெரிக்காவில், இத்தாவரம் வேளாண்மைக்கு எதிரி என அறிவிக்கப்பட்டு, கண்காட்சிகளில் மட்டும் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. பக்கத்திலுள்ள கேரளாவில் இவை வேறோடு பிடுங்கி எறியப்பட்டுவிட்டது. திரும்ப இவை வளரா வண்ணம் பாதுக்காக்கப்படுகின்றது. ஆனால் தமிழ்நாட்டில் விளை நிலங்களில் இவை 25 விழுக்காடு, பயிரிட முடியாமல் நிலத்தையே பாழ்படுத்தி வருகின்றது. எந்த வறட்சி காலத்திலும் வளரக்கூடியது இந்த சீமை வேலிக்காத்தான். மழை பெய்யவில்லை எனினும், நிலத்தடி நீரை உறிஞ்சி தனது இலைகளை செழுமையாக வைத்துக் கொள்கின்றது. ஆழமாக மட்டுமன்றி அகலமாகவும் உறுதியான பக்க வேர்களைக் கொண்டு வளர்வதால் இவை மழை நீரை உறிஞ்சி விடுகின்றது. நீர் நிலத்துக்குள் செல்வதைத் தடை செய்கின்றது. இதனை எந்த நோயும் பூச்சியும் தாக்குவதில்லை. எந்த இடத்திலும் இது மற்ற தாவரங்களை அழித்து விட்டு வளர்கின்றது. இவை உள்ள இடத்தில் உற்பத்தியாகும், நச்சுப் பொருளால் நிலத்தில் பிற செடிகள் வளர்வதை அறவே தடுக்கின்ற கொடிய தாவரமாக இது விளங்குகின்றது. இந்த வேலிக் கருவையால் கேடுகளே அதிகம். இது நிழல் தரும் மரமல்ல. கனி தரும் மரமுமல்ல. கதவு, சன்னல் என பயன்பாட்டுக்குரிய பொருள்களும் செய்ய பயன்படாது. இதன் தழைகளை உரமாகப் பயன்படுத்த இயலாது. குறைந்தபட்சம் பறவைகள் அமர்ந்து கூடு கட்டவும் பயன்படாது. பாதிப்புகள் மட்டுமே. வேடந்தாங்கல் ஏரிகளுக்கு வரும் வெளிநாட்டுப் பறவைகளை எல்லாம் குத்திக் கிழித்துக் கொன்றுவிட்டன. பின்னர் வனத்துறை இம்மரங்களை அங்கிருந்து பிடுங்கி எறிந்தது. இம்முள் குத்தி இறந்த விவசாயிகளும் கூட உண்டு எனப்படுகின்றது.வேலிக்காத்தானால் ஏற்படும் தீமைகள்:1. நிலத்தை வீணாக்குகின்றது.2. நிலத்தடி நீரை உறிஞ்சிவிடுகின்றது.3. விவசாயம் செய்யவிடாமல் எல்லா செடிகளையும் அழித்து விடுகின்றது.4. புல் அடியோடு வளரவிடாமல் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது.5. இது உள்ள ஊரே நீரின்றி பாலைவனம் போலச் செய்ய வல்லமை கொண்டது.6. நஞ்சு மிகுந்த முள்ளால் மக்களுக்கும் விலங்குகளுக்கும் ஆபத்து.7. நிலத்தடி நீர் குறைவதால் அரிய வகை மூலிகைகள் அழிகின்றன.8. பிற தாவரத்துடன் கலந்து இதனை உண்ணும் கால் நடைகள் உயிரிழப்பு மற்றும் வயிற்றுக் கோளாறுகளால் உயிர் இழப்பு ஏற்படுகின்றது.வேலிக்காத்தானை அழிக்கும் முறை: இயந்திரங்களைக் கொண்டும் கூரிய ஆயுதங் கொண்டும் இம்மரங்களை வெட்டி வீழ்த்தி அழிக்கலாம். வெட்டிய பிறகு அதன் வேர்களை வெட்டி எடுத்து முற்றுமாக எரித்துவிடுவதே நிரந்தரத் தடுப்புக்கு வழி. நம் தமிழ்நாடு மேற்குத் தொடர்ச்சி மலைகளால் மழை மறைவுப் பிரதேசமாக உள்ளது. தென்மேற்குப் பருவக்காற்றால் இந்தியாவெங்கும் பெரும் மழை பொழிகின்றது. ஆனால் தமிழ்நாட்டில் மழை பொழிவதில்லை. ஓரிரு நாட்கள் சிறிதே மழை தூரும் அல்லது பெய்யும். தென்மேற்குப் பருவக்காற்று மூலம் தமிழ்நாட்டில் பெரும் மழை பொழிய வாய்ப்பு இல்லை. உயிர் நதிகளும் இல்லை. மழையையே நம்பி வாழும் வானம் பார்த்த சீமை! வடகிழக்குப் பருவக் காற்றால் சிறிதளவே மழை பெறுகின்ற நிலையில் தமிழ்நாடு உள்ளது. ஆகவே நம் தமிழ்நாடு நீர் பற்றாக்குறை உள்ள மாநிலமாகும். நீர் பற்றாக்குறையில் தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாம் இடம் வகிக்கின்றது. இதுவே பூகோள அமைப்பாகும். இந்த உண்மையை நாம் அனைவரும் உணர்ந்து கிடைக்கின்ற நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். பல வழிகளிலும் இயன்றவரை முழுமையாக நிலத்தடி நீரைச் சேமிக்க வேண்டும். நிலத்தடி நீரை உறிஞ்சும் நச்சுத் தாவரத்தை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும். நிலத்தில் மட்டுமன்றி தமிழ்நாட்டின் பல காடுகளிலும் எப்படியோ இந்த நச்சுத் தாவரம் மிக வேகமாகப் பரவி வளர்கின்றது. வேதரணியம் கோடியக்கரைக் காட்டினுள் இது மிகுந்து காணப்படுகின்றது. அங்கே முன்னரே மழை இன்மைக் காலங்களில் தண்ணீர்த் தொட்டிகள் கட்டி தினமும் லாரிகள் மூலம் நீர் நிரப்பப்படுகின்றது. அங்கே வாழும் மான், குதிரை, முயல், முள்ளம்பன்றி, பறவைகள் போன்றன, சென்னை நகர குடிசை வாழ் மக்களைப் போலவே லாரியில் வழங்கப்படும் தண்ணீரை நம்பி வாழ வேண்டிய நிலை உள்ளது. முதலில் காடுகளில் உள்ள இந்த நச்சுத் தாவரத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் வனத்துறை பிடுங்கி எறிய வேண்டும். பிடுங்கிய பின்னர் காட்டில், பத்திரமாக மற்ற மரங்களை சேதப்படுத்தாமல், வேர்களை எரித்து முழுமையாக அழிக்க வேண்டும். காட்டைக் காப்பாற்றி மழை பெறும் வாய்ப்பை அதிகப்படுத்துவது வனத்துறையின் தலையாய கடமை. காட்டில் உள்ள மரங்களையும் தாவரங்களையும் இத்தாவரம் மீண்டும் முளைத்து அழித்திடாமல் முனைப்புடன் கண்காணிக்க வேண்டும். காடன்றி தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளில் ஆக்கிரமித்து சாலையோரங்களில், மக்கள் நடமாட்டமில்லாத பகுதிகளில், புறம்போக்கு நிலங்களில் என எல்லா இடங்களிலும் இந்த நச்சு மரம் வளர்ந்து கிடக்கின்றது. இவற்றை மக்கள், சமூகத் தொண்டு நிறுவனங்கள், சான்றோர் பெருமக்கள், உள்ளாட்சிகள், அரசுயென அனைவருமே இதனை ஒட்டுமொத்தமாக அழிக்க விரைந்து பாடுபட வேண்டும். குடும்பத்துடன் இராமேசுவரம், இராமநாதபுரம், பரமக்குடி, மதுரை போன்ற இடங்களுக்குச் சென்று வந்தோம். இராமநாதபுரம் மாவட்டத்தில் அடர்ந்து காணப்படும், இந்த நச்சுத் தாவரம் கண்டு மனம் சொல்லொண்ணா வேதனை அடைந்தது! வேளாண் உற்பத்தியைப் பெருக்கவும் அதன் மூலம் பொருளாதார வளர்ச்சி பெறவும் தனியார் நிலத்தில் முளைத்துள்ள இந்த நச்சுப் புதர்களை அழித்து மண்ணைப் பண்படுத்தி, மண்ணின் தன்மைக்கு ஏற்ப தேவையான இடுபொருள் மானியமாகவோ, கடனாகவோ வழங்கச் செய்யலாம். அரசு மற்றும் புறம்போக்கு நிலத்தில் முளைத்துள்ள இப்புதர்களை அகற்றும் பணியை ஊராட்சி மன்றங்களிடம் ஒப்படைத்து, வேளாண் பொறியியல் துறை மூலம் மண்ணை பண்படுத்தி பயிர் செய்யத் தக்கதாக்கி பொது ஏலத்தில் விடலாம். அங்ஙனம் ஏலம் எடுக்கின்ற நிறுவனங்கள் வேளாண் உற்பத்திக்கு மட்டுமே 99 ஆண்டுகள் அந்நிலத்தைப் பயன்படுத்த வேண்டுமென்ற நிபந்தனையுடன் கிரயம் செய்து கொடுக்கலாம். இதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் நம் நாட்டின் கருவூலத்திற்கு வந்து சேரும். இதனால் இப்பகுதி மக்கள் பலருக்கு வேலை வாய்ப்பு கிட்டும். தனிநபர் வருமானம் உயரும். வேளாண் உற்பத்தி பெருமளவில் பெருகும். இத்திட்டத்தைச் செயல்படுத்த தங்களின் ஆலோசனையும் அறிவுரையும் செயல்திட்டமும் மக்கள் வாழ்வில் உயரப் பேருதவியாக அமையும். எனவே 25 விழுக்காடு நிலம் புதிதாக பயிர் செய்யத் தக்க செயல்திட்டம் தீட்டி செயல்படுத்தி, அருள்கூர்ந்து தமிழக மக்கள் வாழ்வு வளம் பெறச் செய்து, புவியை வெப்பமயமாக்கிக் கொண்டுள்ள இந்நச்சு தாவரத்தை அழித்துக் காக்க வேண்டுகின்றோம்.-பெ.சிவசுப்பிரமணியன், சென்னை