14 January 2017 7:24 pm
தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் பிறந்து அதைத் தன் வாழ்விடமாகவும் வணிக மையமாகவும் அமைத்துக் கொண்ட கிருஷ்ணசாமி &- தாராபாய் தம்பதியரின் மகன் நடராசன் தற்போது இந்தியக் கடலோர காவல் படையின் மிக உயர்ந்த அதிகாரி ஆவார். சென்னை டான் பாஸ்கோ பள்ளியில் படித்து பின்னர் தமிழ்நாட்டில் பெருந்தலைவர்களை உருவாக்கிய பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் மாணவர் இன்று இந்தியக் கடலோரக் காவல் படையின் கூடுதல் தலைமை இயக்குனர் (Additional Director General) என்ற பதவிக்குப் பெருமை சேர்க்கும் பெருமகனாக விளங்குகின்றார்.பொருள் வழிப் பெருமைகளையும் ஆடம்பரங்களையும் பணக்காரத் தன்மைகளையும் வெறுக்கும் குணம் கொண்ட கிருஷ்ணசாமி நடராசன் தன்னை ஒரு சாதாரண சராசரி இந்தியக் குடிமகன் நிலையிலேயே வைத்து சிக்கல்களுக்கு தீர்வு காணுகின்றார். பிறந்த நாள் கொண்டாட்டங்களின் மீது தனக்கு ஆர்வமில்லையெனினும் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ நினைக்கும் சகப் பணியாளர்கள், கடல் மாலுமிகளின் விருப்பங்களுக்கு மதிப்பளித்து வாழ்த்துகளைப் பெற்றிருக்கின்ற நேரத்தில் தமிழ் இலெமுரியா"வின் சார்பில் நாமும் அவரை வாழ்த்தும் பெருமை பெற்றோம். என்னுடைய பிறந்த நாளான இன்று என் சிப்பந்திகள் என்னை ஒரு குழந்தை நிலைக்கு எடுத்துச் சென்று விட்டனர் என்று கூறும் தளபதி நடராசன் அந்த ஆராவாரங்களுக் கிடையில் தமிழ் பேட்டி அளித்தார்.பீரங்கியிலிருந்து தொடர்ச்சியாக வெளியேறும் குண்டு போல அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட உலக அரசியல், பொருளாதாரம், அறிவியல், தொழில், உயர் எண்ணம் குறித்த செய்திகள் நம்மை வியக்க வைத்தன. அந்த நுண்ணறிவும் ஆழ்ந்த புலமையுமே 1984 ஆம் ஆண்டு ஒரு சாதாரண இளநிலை அதிகாரியாக இந்தியக் கடலோரப் படையில் நுழைந்த நடராசனை இன்று பெரும் தளபதியாக உயர்த்தியிருக்கிறது.உலகிலேயே அதி நீளமான கடற்கரைப் பரப்பைக் கொண்ட ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவின் கடல் எல்லை சற்றொப்ப 7, 516 கி.மீ நீளம் கொண்டதாகும். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கடலோரக் காவல் படைக்கு அடுத்த நிலையில் உள்ள இந்தியாவின் கடலோரக் காவல் படையில் இந்திய மேற்குக் கடற்கரைப் பகுதி அனைத்தும் இவருடைய கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றன. ஆம் இந்தியக் கடலோரக் காவல் படையின் இரு பெரும் மண்டலங்களான மேற்கு, கிழக்கு ஆகியவற்றில் மேற்குப் பகுதியின் நிருவாகத் தலைவர் கிருஷ்ணசாமி நடராசன். ஒரு தமிழ்க் குடிமகன் அப்பணியைச் செவ்வனே செய்து இந்திய அரசின் பாராட்டைப் பெற்றிருப்பது தமிழ் இனத்திற்கே பெருமை சேர்கின்ற ஒன்றாகும்!.தரைப்படை, விமானப் படை, கடல் படையென விளங்கும் முப்படைப் பிரிவு தவிர்த்து இந்தியக் கடலோரக் காவல் படை என்பது போர்க்காலங்களில் மட்டுமன்றி அமைதிக் காலங்களிலும் அரும்பணி ஆற்றி வருகின்ற ஒரு பிரிவு ஆகும். 1977 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இப்படையின் முதன்மைப் பணிகளாக, 1. இந்தியக் கடல் பொருளாதார மண்டல பாதுகாப்பு2. கடல் எல்லைப் பாதுகாப்பு3. கடற் கட்டமைப்புகளின் பாதுகாப்பு4. கடல்சார் இயற்கை வளப் பாதுகாப்பு5. கடல் மாசுக் கட்டுப்பாடு மற்றும் உதவி6. ஆழ்கடல் மீன்பிடிப்பு கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு7. அறிவியல் ஆராய்ச்சிகளுக்குத் துணை நிற்றல்8. இயற்கை இடர்பாடுகளின் போது உதவி9. மனிதாபிமான செயல்பாடுகள்10. கடற் கொள்ளை தவிர்ப்புஎனப் பலவகைப் பணிகளை திறம்படச் செய்து வரும் ஒரு படைப்பிரிவு இந்தியக் கடலோரக் காவல் படையாகும். தளபதி கிருஷ்ணசாமி நடராசன் அவர்களுடனான சந்திப்பில் அவர் நம்மோடு பகிர்ந்து கொண்ட செய்திகள் ஏராளம். எனினும் அவற்றில் சில கருத்தியல்புகள் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கவை. ஆட்சியாளர்களும் இந்திய குடிமக்களும் கவனத்தில் கொண்டு செயல்பட்டால் பல சிக்கல்களுக்கு நிரந்தரத் தீர்வாக அமையக் கூடும். அவருடைய நேர்காணலிலிருந்து சில துளிகள் மட்டுமே இதழின் இட நெருக்கலைக் கவனத்தில் கொண்டு தரப்பட்டுள்ளன.உலகில் பல நாடுகள் கடலில் பயணம் செய்யத் தயங்கிய காலத்திற்கு முன்பாகவே இந்தியக் கடல்வழி வாணிபமும் கடல்வழிப் போர்க்கால வெற்றிகளையும் குவித்த இந்திய நாட்டில் தற்போது கடல் வழித் தாக்குதல்கள் ஓர் அச்சுறுத்தலாக விளங்குகின்றதே அதன் காரணம் என்ன?இந்தியக் கடல்சார் வணிகத்திலும் போர் முறைகளிலும் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே சிறந்து விளங்கியவர்கள் நம் தமிழர்கள் என்பது நமக்கு பெருமைக்குரிய விடயங்களாகும். நம்முடைய இலக்கியங்களும் வரலாற்றுப் பதிவுகளும் இந்த உண்மையை உலகறியச் செய்துள்ளன. இதில் தமிழ் மன்னன் இராசராச சோழனின் திறமையும் தொலைநோக்குப் பார்வையும் வியக்க வைக்கிறது. ஆனால் இன்று குறிப்பாக 2008 நவம்பர் 26 வன்முறை நிகழ்வுக்குப் பின்னர் இந்தியாவின் கடல் பாதுகாப்பு குறித்து அதிகம் பேசப்படுகின்றது. அண்டை நாடான பாகிசுதான் இந்த வன்முறைகளின் ஊற்றுக் கண்ணாகவும் பார்க்கப்படுகிறது. இது குறித்து விருப்பு வெறுப்பற்ற, காழ்ப்புணர்வு கசப்பற்ற முறையில் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். மனித குல வரலாற்றில் நாகரிகமும் நவீனத்துவமும் ஓங்கியிருக்கும் தற்காலத்தில் முன்னைய மன்னர்கள் காலத்தில் நிகழ்ந்தது போல நாட்டு எல்லைகளையும் தன் ஆட்சி அதிகாரங்களையும் விரிவுபடுத்த நடைபெற்ற போர்கள் போன்று இனி உலகில் போர்கள் நடைபெற சாத்தியமில்லை. போரின் பின் விளைவுகளை அனைத்து நாடுகளும் நன்றாகவே அறிந்து வைத்திருக்கின்றன. எல்லா நாடுகளும் அமைதியையே விரும்புகின்றன. ஆனால் ஆயுத உற்பத்திகள் குறையவில்லை. இதன் அடிப்படைக் காரணம் போர்கள் மூலம் ஒரு நாட்டின் இறையாண்மை கைப்பற்றப் படுவதை விட பொருளாதார வல்லாண்மை, வணிகம், கூட்டுக் கொள்ளையடிக்கும் சில உலகக் குழுக்கள் (மாஃபியா) போன்ற சக்திகள் சில நாடுகளை உருக்குலையச் செய்கின்றன. அதன் ஒரு பகுதியே இது போன்ற தாக்குதல்கள் ஆகும். தங்கள் வணிக மையத்தையும் வல்லாண்மையையும் ஆதிக்கத் தன்மைகளையும் தொடர்ந்து செய்து வருகின்ற சில மேலை நாடுகள் இவைகளைக் கண்டும் காணாதது போலவும் சில நேரங்களில் ஊக்குவிக்கவும் தயங்குவதில்லை. எனவே பல நாடுகள் இதுபோன்ற வன்முறைத் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றது. இதை மக்களும் ஊடகங்களும் அரசும் நன்கு புரிந்து செயல்பட வேண்டும். அதை விடுத்து ஒவ்வொரு நிகழ்விற்குப் பின்னும் தத்தம் நாட்டில் தன் அரசியல் செல்வாக்கையும் வாக்கு வங்கிகளையும் நிலைப்படுத்த வேண்டி உணர்ச்சி மயமான அறிக்கைகளையும் குற்றச்சாட்டுகளையும் மதம், இன வழி வெறுப்புகளைத் தூண்டும் விதத்தில் செயல்படுவது மேலும் சிக்கலாக்குகின்றது. வளர்ந்த நாடுகளில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறும் போது அங்கு ஊடகங்களும் அரசியல்வாதிகளும் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்படுகின்றனர். ஆனால் இந்திய நாட்டில் அந்த நிலை இல்லை. சாதியம், ஏழ்மை, பற்றாக்குறை, ஏற்றத்தாழ்வுகள் நிலைத்திருக்க வேண்டும் என்கிற சிந்தனை இன்றளவும் இந்தியாவில் பலரிடத்தில் நிலை கொண்டுள்ள மனநிலையாகும். இதிலிருந்து இந்திய நாட்டு மக்கள் முதலில் வெளிவர வேண்டும். அப்போதுதான் உண்மையான நாட்டுப்பற்றைக் காண முடியும். எனவே எதிரிகள் வெளியிலிருந்து தாக்குதல் என்பதை விட உள்ளேயிருக்கும் எதிரிகளை நம்மால் அடையாளம் காண முடிவதில்லை. தற்போது வன்முறையாளர்கள் உள்நாட்டிலேயே உருவாகிறார்கள் என்பதே யதார்த்த நிலையாகும்.அண்டை நாட்டு மீனவர்கள் இந்தியப் படையினரால் கைது செய்யப்படுவதும் இந்திய மீனவர்கள் குறிப்பாக இலங்கை, பாகிசுதான் போன்ற நாட்டுப் படைகளால் கைது செய்யப்படுவதும் தொடர்கின்றதே இதன் காரணம் என்ன?பன்னாட்டு கடல்சார் விதிகளின் படி, ஒவ்வொரு நாடும் தன் எல்லையிலிருந்து 200 கடல் மைல்கள் கடல்சார் வளங்களைப் பயன்படுத்த முடியும். எனினும் அருகருகே இருக்கும் கடல்சார் வரம்புகள் அந்தந்த நாட்டில் கடற்கரைகளிலிருந்து சமமாகப் பிரிக்கப் படுகின்றன. அந்த வகையில் நம்முடைய அண்டை நாடுகளாக விளங்கும் பாகிசுதான், இலங்கை, இந்தோனேசியா, வங்காள தேச எல்லையில் மிகவும் குறுக்கப் பெறுகின்றன. இதை நம் நாட்டு மீனவர்களுக்கு உணர்த்தப்பட வேண்டும். மேலும் இந்தியப் பெருங்கடல் என்பது ஒரு வளமான கடல்சார் வளம் மிகுந்த பகுதியாகும். இந்தியப் பெருங்கடலில் கடலில் மட்டுமே மீன்கள் தன் முதுமையால் இறந்து போகின்றன. இவை வேறெந்த நாட்டுப் பகுதியிலும் நிகழ்வதில்லை. பொதுவாகவே மீனவர்களின் தொழிலை ஒரு சாதியப் பார்வையுடன் பார்க்கும் மனப்போக்கு மாற்றம்பெற வேண்டும். அது ஒரு வளமான தொழில். அதில் பல புதுமைகள் புகுத்தப்பட வேண்டும். அரசு ஊக்கம் அளிக்க வேண்டும். மீன்பிடி உத்திகளை அந்த மக்களுக்கு கற்றுத்தர வேண்டும். மீனவர்கள் நாம் எந்த மீனை உட்கொள்கிறோமோ அதை மட்டுமே பிடிப்பது, அதையும் அந்த இனமே அழிவது வரை பிடித்துக் கொண்டிருப்பது என்ற தன்மையில் நமது செயல்பாடுகள் அமைவதால் சில நேரங்களில் அந்த மீன்களுக்காக எல்லை தாண்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இந்த நிலையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். நாம் உண்ணாத மீன்களை பல்வேறு மேலை நாடுகளில் உணவாக உண்கிறார்கள். காலம் மற்றும் தட்பவெப்ப சூழ்நிலைகளுக்கேற்ப மீன்கள் கூட்டம் இந்தியப் பெருங்கடலில் பெருமளவில் நகர்ந்து செல்கிறது. எனவே பிறவகை மீன்களை அந்தந்த கால கட்டங்களில் பிடித்து அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் வணிகத்தை நம் நாட்டு மீனவர்களுக்கு கற்றுத் தருவதின் மூலம் அவர்களின் சாதி அடையாளம், வறுமை போன்றவைகளிலிருந்து விடுதலை பெறலாம். ஆனால் அந்த உத்திகளை நாம் செய்யத் தவறி விட்டோம். பிறநாட்டு மீன்பிடிப் படகுகள் குறிப்பாக சப்பான், கொரியா போன்ற நாடுகள் இந்தியப் பெருங்கடலில் உள்ள டியூனா (Tuna) போன்ற அதிக மதிப்புள்ள மீன்களைப் பிடிக்கும் செயல்முறைகளைத் தெரிந்து வைத்துக் கொண்டு ஏற்றுமதி விற்பனை செய்து நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்தியுள்ளனர். எனவே மீனவர்களை குற்றம் சாட்டுவதை விட அரசியல் ரீதியாக நாம் செய்ய வேண்டியதை செய்தால் இது போன்ற சிறை பிடிப்புகளிலிருந்து விடுதலை பெறலாம். எனினும் நம்முடைய மீனவர்களை கண்காணித்தும் போதிய அறிவுறுத்தல்களையும் கடலோரக் காவல் படை செய்து வருகின்றது. ஒவ்வொரு நாட்டுப் படகுக்கும் வெவ்வேறு வண்ணங்களை அடையாளமாகக் கொண்டால் எல்லைத் தாண்டுவோரைக் கண்டு கொள்ள இலகுவாயிருக்கும்.மேற்கண்ட இரண்டு கேள்விகளுக்கும் தாங்கள் கூறியுள்ள செய்திகளுக்கு அப்பால் இதற்குரிய தீர்வுகளாக தாங்கள் எதை முன் வைக்கின்றீர்கள்?இந்திய நாட்டின் மண் வளமும் மனித வளமும் கடல்சார் வளமும் உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவு குவிந்து கிடக்கின்ற ஒன்றாகும். இவற்றை முழுமையாகப் பயன்படுத்துவதற்குரிய வழிமுறைகள், கட்டமைப்புகள், கல்வியறிவு ஆகியவை அரசால் செய்து தரப் பட வேண்டும். பழங்கால மரபுகள் என்ற போர்வையில் சாதியம், ஏழ்மை, கீழ்மை, வல்லாண்மை போன்ற மனநிலை முற்றாக ஒழிக்கப்பட்டு அனைவரும் தாம் செய்கின்ற தொழிலை மேலை நாடுகள் போன்று வணிகமயமாக்க வேண்டும். நம்முடைய இந்திய காப்பியங்களான இராமாயணம், மகாபாரதம் போன்றவற்றில் சொல்லப்பட்ட அறம், மறம் சார்ந்த கருத்துகளை வாழ்க்கையில் வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும். திருக்குறள் போன்ற நீதி நூல்கள் உலக மக்களுக்கே வழிகாட்டுபவை. ஆனால் அக்கருத்துகளை ஏற்று நாம் செயல்படுவதில்லை. வாக்கு வங்கியும் வறுமையும் நிலை பெற வேண்டும் என எண்ணுகின்ற ஆதிக்கவாதிகளையும் அரசியல் வாதிகளையும் அறிந்து கொள்ள வேண்டிய மனப்பக்குவத்தை மக்கள் மனதில் விதைக்க வேண்டும். நாம் இவ்வுலகில் ஒரு பொம்மைகளாகக் கையாளப்படுகின்றோம். இதிலிருந்து வெளியேற வழி நாம் மற்றவர்களையும் வளர்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இந்திய மீன் வள ஆய்வுத் துறையின் கண்டுபிடிப்புகளை தகவல்களை வெளிநாடுகளுக்கு கொடுப்பதை விட நமது மீனவர்களுக்கு கற்றுத் தர வேண்டும். நாம் தனியாக அனைத்தும் செய்யக்கூடிய அளவில் உரிய பொருளாதாரம் இல்லையெனில் இந்தியப் பெருங்கடலில் உள்ள பிற நாடுகளுடன் இணைந்து கடல்சார் வளங்களை வெளிக் கொணரலாம்.அதற்காக இந்தியாவின் நிலத்தில் ஏற்படுத்தப்பட்ட ‘பசுமைப் புரட்சி’ போன்று கடல்சார் புரட்சியாக ‘நீலப் புரட்சி’ என்ற ஒரு திட்டத்தை உருவாக்க முயல்கின்றோம். இதில் இந்தியப் பெருங்கடலில் உள்ள இந்தியா, மாவே, சீச்சல்ஸ், மொரிசியஸ், இலங்கை, இந்தோனேசியா, வங்காள தேசம் போன்ற நாடுகளுடன் கூட்டாக சேர்ந்து ஒரு திட்டத்தை தயாரித்து அதற்குப் பொருளாதாரப் பங்குகளையும் பெறலாம். இதன் மூலம் இப்பகுதி நாடுகளின் கடல்வழிப் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன் கடல்சார் வளங்களும் அந்தந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை நிற்கும் என்பது என் கருத்தாகும். அமைதியைத் தேடி நாம் போவதை விட அமைதி நம்மை தேடி வரும் வகையில் நமது செயல்பாடுகளும் சிந்தனையும் அமைய வேண்டும். அதுதான் இன்று உலக மக்களின் விருப்பமும் வேட்கையும் ஆகும். கிருஷ்ணசாமி நடராசன், பி.டி.எம், டி.எம்.இந்தியக் கடலோரக் காவல் படையில் 1984 ஆம் ஆண்டு சனவரி 18 ஆம் நாள் இணைந்து தற்போது கூடுதல் தலைமை இயக்குனராகவும் இந்திய மேற்கு மண்டல தலைமை அதிகாரியாகவும் உயர்ந்துள்ளார்.பாதுகாப்பு மற்றும் செயல் உத்திக் கல்வியில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். வெலிங்க்டன் பாதுகாப்புத் துறைப் பணியாளர் கல்லூரியின் மேனாள் மாணவர். அமெரிக்காவின் விர்ஜீனியா நகரிலுள்ள அமெரிக்க நாட்டுக் கடலோரக் காவல் படைப் பயிற்சி மையத்தில் கடலோரப் பாதுகாப்பு, தேடுதல், காப்பாற்றுதல் மற்றும் துறைமுக நிருவாகம் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சிப் பெற்றவர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல முக்கியப் பொறுப்புகளின் தலைமை அதிகாரியாக கடலோரக் காவல் படை தலைமையகம், மண்டபம், கொச்சி, மேற்கு மண்டலம், காவல் படைக் கப்பல்கள் என பணியாற்றி பலமுனை அனுபவம் பெற்றவர். கடலோரக் காவல் படைக் கொள்கை மற்றும் திட்டப்பிரிவு, பணியாளர் மேலாண்மை போன்றவற்றில் துணைத் தலைமை இயக்குனராகவும், கடலோரக் காவல் படைத் தலைவருக்கு ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். இந்தியக் கடலோரக் காவல் படையின் உயரிய விருதுகளான ‘‘குடியரசுத் தலைவரின் தட்ரக்சக்மெடல் (றிஜிவி) 2011, தட்ரக்சக்மெடல் ( ஜிவி )" (1996) மற்றும் "கஷ்டிரத்னா விருது" (அக்டோபர் 2016) போன்ற விருதுகள் பெற்றுப் பெருமை சேர்த்தவர். இவருடைய தற்போதைய வயது 55 ஆகும். இவருடைய துணைவியார் திருமதி ஜெயந்தி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றார். இவருடைய முதல் குழந்தை பிறந்த தினமும் (சனவரி 18, 1991) இவர் கடலோரக் காவல் படையில் இணைந்த நாளும் (1984) ஒன்றாகும் என்பதை மகிழ்வு பொங்கக் குறிப்பிடுகின்றார். வேர்முகம்: கிருஷ்ணசாமி நடராசன்நேருரையாளர்: சு.குமணராசன்"