பகடி வதை – தவிர்க்கப்பட வேண்டிய ஒரு குற்றம் - தமிழ் இலெமுரியா

16 October 2014 7:45 am

குற்றங்கள் நடைபெறுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அவை பெரும்பாலும் குறிப்பிட்ட பருவ காலங்களிலும் பணியிடப் பகுதிகளிலும் மாநில வாரியாகவும் நடைபெறுகின்றன. உதாரணமாக பண்டிகை நாட்களில் மிகுதியாக நடைபெறும் நகைப் பறிப்புக் குற்றங்கள், பெரும்பாலும் நகர்புறங்களில் காணப்படும் இணையதளக் குற்றங்கள் (சைஃபர் க்ரைம்) மற்றும் கேரள மாநிலத்தில் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வது ஆகியவற்றைக் கூறலாம். அதே போல பகடிவதை (ராக்கிங்) என்பது குறிப்பிட்ட நாடுகளில் குறிப்பிட்ட பருவ மக்களிடம் நடைபெறும் குற்றமாகும். இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் மட்டுமே நடைமுறையில் உள்ள இக்குற்றம் தற்போது அதன் உணர்ச்சியலைகளை பிற ஆசிய நாடுகளுக்கும் பரப்பி வருகிறது. பெரும்பாலும் கல்லூரிகளில் நடத்தப்பெறும் இத்தகைய ராக்கிங் நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள் பிற்காலத்தில் அவர்களின் வாழ்நாள் முழுவதும் ஏதோ ஒரு வடிவில் அரிதான பெயர்களில் கொடூரச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் சிறுசிறு மீன்கள் பிடிபட்டாலும் பெரிய சுறாக்கள் தப்பி விடுகிறார்கள். எந்தவொரு அறிவியல் குணமும், ஏரணமும் (லாஜிக்) இல்லாத மதச் சடங்குகள் குறித்து பெரியவர்கள் எதைக் கூறினாலும் அதை அப்படியே இளையவர்களும் பின்பற்றும் முறைமைகள் இருப்பதைப் போல், சமுகம் மற்றும் வீடுகளிலுள்ள சமுக – பண்பாட்டு – முரண்பாடுகளிலிருந்து பிறக்கும் உளவியல் நோய்க் கிருமியே (வைரஸ்) இத்தகைய நெறிபிறழ்வுகளுக்கு காரணம் ஆகும். மானுட மதிப்பு பற்றாக்குறையே இதுபோன்ற எதிர்மறை உணர்ச்சிகள் நிறைந்த நபர்கள் தோன்றுவதற்கு மூலக் காரணமாகும். இத்தகைய மன நோயை தீர்க்க எளிதான, ஏற்றுக்கொள்ளக் கூடிய, நடைமுறைக்கேற்ப மற்றும் மகிழ்ச்சியடைவதற்குமான ஓர் யுக்தி உள்ளது. கவனமான பயிற்சி இருந்தால், ஒவ்வொரு தனி மனிதனிடமுள்ள தீய எண்ணங்களை பெருவாரியாக அழிக்க முடியும்.பகடிவதை (ராக்கிங்) என்றால் என்ன? காலின்ஸ் அகராதியைப் பொருத்தவரையில், ராக்கிங் என்பது ஒரு குறிப்பிட்ட சூழலில் அல்லது செயல்முறைகளில் பெரிய வன்முறையை உருவாக்கும் விதமாக மேற்கொள்ளப்படும் முரட்டுத் தனமான நடத்தைகள் எனப்படும்.  காம்பிரிட்ஜ் அகராதியின் படி வேடிக்கையான அதே சமயத்தில் இரக்கமற்ற சிறிய கொடூரச் செயல். தற்போதைய பதிப்பில், எவ்வகையான வாய்மொழி, வாய்மொழியற்ற பிற செயல்கள், பாவனைகள், எழுத்து வடிவில் அல்லது அறிகுறிகள் மூலம் உடல் ரீதியாக, உணர்வு மற்றும் உளவியல் ரீதியாக இடையூறுகளை விளைவிக்கக் கூடியதே ராக்கிங்" எனப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தனக்கு விருப்பமில்லாத ஒரு நடத்தையை ஒரு ஆண் அல்லது பெண்ணின் மீது சுமத்தப்படுகிறது. இவைகள் நேரடி அல்லது மறைமுக கட்டளைகள் மூலம் திணிக்கப் படலாம். விரிவாகக் கூறினால், ராக்கிங் என்பது ஒரு ஆண் அல்லது பெண் தனக்கு விருப்பமில்லாத ஏதேனும் ஒரு செயலை செய்யுமாறு யாரோ சிலரால் தொடர்ந்து கேட்கப்படல் / துரத்துதல் அல்லது அழுத்தம் கொடுத்தல் ஆகும். படிக்கும் பொழுதோ, உணவை தேர்ந்தெடுப்பதிலோ, கூட்டங்களிலோ, படம் பார்க்கும் பொழுதோ, நண்பர்களுடன் இருக்கும் பொழுதோ மற்றும் பிற நேரங்களிலோ ராக்கிங் செய்யப்படலாம். இத்தகைய ராக்கிங்கிற்குக் காரணமான ஆணிவேரைக் கண்டறிந்து அதற்கான தீர்வை விரைவில் காண வேண்டும். ராக்கிங் என்பது மேற்கத்திய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையல்ல என்பதை ஓர் ஆய்வு வெளிப்படுத்துகிறது. (இவை இந்தியா, இலங்கை தவிர உலகின் வேறு எந்த பகுதிகளிலும் காணப்படுவதில்லை).   ஒரு குழுவில் ஒரு பையனோ அல்லது பெண்ணோ ஒரு செயலை வெளிப்படுத்தும் போது, அவன் அல்லது அவளுடைய நடத்தை மாறுபடுகிறது. ஒரு கூச்ச சுபாவமுள்ள அல்லது பழமைவாத மனிதர்களே ஓர் ஒழுங்கற்ற கும்பலால் வன்முறையாகவும், மூர்க்கத்தனமாகவும் நடத்தப்படுகிறார்கள். இங்கே ஓர் ஒழுங்கற்ற கும்பலின் உளவியல் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு சராசரி மனிதன் ஓர் ஒழுங்கற்ற கும்பலில் இருக்கும் போது காவல் துறையினரை விட மோசமாக நடந்து கொள்வான் எனும் உண்மை உங்களுக்குத் தெரியுமா? ஓர் ஒழுங்கற்ற கும்பல் ஒரு மனநிலைப் பாதிக்கப்பட்ட அப்பாவிச் சிறுவனைப் பிடித்து, அவனை ஒரு திருடனைப் போல பாவித்து அடித்து, அவனை மது அருத்துச் செய்து இன்னும் பல தீங்குகளை இளைத்துள்ளனர். அச்சிறுவன் அவற்றை வாந்தி எடுத்த போது, அக்கும்பல் அவனது வாயில் டீசல் குழாயைத் திணித்து, அவனது நகங்களைப் பிடுங்கி, இறுதியில் சித்திரவதை செய்து சாகடித்தனர். (இக்கும்பலில் ஒருவர் கூட தண்டிக்கப் படவில்லை). நீங்கள் அனைவரும் இளம் குழந்தைகளின் உடல் பாகங்களை வெட்டிக் கொல்லப்பட்ட "ஹெர்லான்ஜி" படுகொலையை மறந்து விட்டீர்களா?  நாம் ஓர் ஒழுங்கற்ற கும்பல் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதையே காண்கிறோம்; அவர்கள் நடவடிக்கைகளுக்கான நோக்கத்தை யாரும் காண்பதில்லை. வாய்ப்பு எழுகின்ற பொழுது அவர்கள் மனதில் அடக்கி வைத்துள்ள உணர்வுகளை வெளிப்படுத்துவதே அவர்களின் இத்தகைய நடத்தைகளாகும். கொஞ்சமும் துணிவற்ற நிலையிலுள்ள ஆண் அல்லது பெண் கூட அக்கும்பலில் ஒருவராக இருக்கும் போது வன்முறையை உருவாக்குபவர்களாக மாறிவிடுவர். மற்றொரு நாள் சில இளைஞர்கள் திரையரங்கிலுள்ள பஞ்சாலான இருக்கைகளை பிளேடால் கிழித்துக் கொண்டிருந்ததைக் கண்டேன். அதே போல தொடர் வண்டிகள் உள்ளிட்ட பிற பொது இடங்களில் பாலியல் வக்கிரம் கொண்ட காட்சிகள் அல்லது கேலிச் சித்திரங்கள் வரையப்பட்டிருப்பதைக் காணலாம். மேலும் தெருவில் நாய்கள் இனப்பெருக்கம் செய்யும் போது இளைஞர்கள் அதன் மீது கற்களை வீசுத் தாக்குவதைக் கண்டிருப்பீர்கள். கலவர சமயங்களில் வன்முறைக் கும்பல்கள் மிகவும் அழகான கட்டிடங்கள், சிலைகள் மற்றும் உருவபடங்கள் ஆகியவற்றை உடைப்பது, எரிப்பது, சேதப்படுத்துவது போன்ற காட்சிகளை கவனித்திருப்பீர்கள். ஒரு மகிழுந்தை அதன் ஓட்டுனரோ அல்லது உரிமையாளரோ ஓட்டிச் செல்லும் போது முன்னே செல்லும் மகிழுந்து வழி விடவில்லையெனில், தொடர்ந்து ஒலி எழுப்பி வெறுப்படையச் செய்வது அன்றாடம் நடக்கும் ஒரு நிகழ்வாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, ராக்கிங் செய்யும் மாணவன் ஓர் அறிவார்ந்த மாணவனின் புத்தகத்தை திருடுதல் அல்லது எரிக்கும் காட்சியும் பொதுவான ஒன்றாகிவிட்டது. ஒரு குடும்பத்தில் தனது பிள்ளைகளின் விருப்பத்தை விட பெற்றோரின் விருப்பத்தை தனது குழந்தைகளின் மேல் சுமத்தும் காட்சியை பலரும் கண்டிருப்பீர்கள் அல்லது அனுபவித்திருப்பீர்கள். பெற்றோரின் வடிவமைப்பிற்கு அவர்களின் குழந்தைகள் இரையாகின்றனர். சிலநேரங்களில் அசாதாரணமாக, பிள்ளைகள் தற்கொலைக்கு முயற்சிப்பது, வீட்டை விட்டு ஓட முயற்சிப்பது அல்லது வீட்டில் இருந்து கொண்டே பட்டினி கிடப்பது என பெற்றோர்களை அச்சுறுத்தி தங்களின் சில வடிவமைப்புகளுக்கு (விருப்பத்திற்கு) பெற்றோர்களை பணிய வைத்து விடுவர். மிகவும் சுவராசியமான நிகழ்வு ஒன்றை மும்பை நகரில் கண்டேன். ஒரு பையன் அவன் செய்ய விரும்பிய செயலை அவனது பெற்றோரின் அனுமதியுடன் ஒரு செயலைச் செய்து கொண்டிருந்தான். அதாவது 14 வெள்ளைச் சட்டைகளின் மீது பல வண்ணத் திரவவியங்களைத் தெளித்துப் பாழாக்கிக் கொண்டிருந்தான். அவனிடம் சிறிய மற்றும் பெரிய வண்ணந் தீட்டும் தூரிகைகள் இருந்த போதும், ஒரு குவளையைப் பயன்படுத்தி சுத்தமான வெள்ளைத் துணியில் ஊற்றிக் கொண்டிருந்தான். (இதுபோன்ற காரியங்களைக் குழந்தைகள் செய்வதற்கு அனுமதிக்க ஏதேனும் பெற்றோர்கள் தயாராக இருக்கிறீர்களா?)மேற்கண்ட அனைத்து வெளிப்பாடுகளும் ராக்கிங்கின் பல்வேறு வடிவங்கள் ஆகும். எப்போதாவது பிள்ளைகளின் விருப்பத்திற்கேற்ற ஒரு படக் காட்சி வரும் போது கத்துவதும் விசிலடிப்பதும் கைத்தட்டுவதும் அவர்களின் சில உணர்ச்சி வெளிப்பாடாகும்.  சரி நாம் இனி ராக்கிங் எனும் குணவியல்பை (தீய எண்ணங்களை) உருவாக்கக் கருவியாக விளங்கும் கரணியங்களைக் காண்போம்.மதம் / பண்பாடு: பெரும்பாலான மத இதிகாசங்கள் ஒரு சில விதிவிலக்குகளுடன் கூடிய போர் மற்றும் வன்முறைகள் பற்றியே கூறுகின்றன. நீதியை நிலைநாட்டுதல் என்னும் பெயரில் போரைக் கூட நியாயப்படுத்தி சில மதங்களின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. போருக்கும் வன்முறைக்கும் இடையே பொதுவான கருப்பொருள்கள் உள்ளன. இவற்றைக் கேட்கும் குழந்தைகளுக்கு அவர்களை அறியாமலேயே வன்முறை குறித்த கருப்பொருள்கள் அவர்களின் ஆழ் மனதில் பதிவு பெறுகின்றன. சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் பழிவாங்குவதற்கும் வன்முறைதான் ஒரே வழி எனும் எண்ணம் அவர்களின் மனதில் மேலும் வளர்ச்சியடைகிறது. பக்தர்கள் தங்கள் நாக்கை துளைத்து அலகு குத்துவது, வேல் குத்துவது, தீ மிதிப்பது போன்ற செயல்களைக் கண்டு குழந்தைகள் எழுப்பும் கேள்விகளுக்கு விடையளிக்காமல் அவர்களின் வாயை அடைக்க முயற்சிப்பதால் அவன் / அவள் நாளடைவில் மதவெறியராக உருவாகலாம். அப்பாவி விலங்குகளை அடித்துக் கொல்லப்படுவதை, சித்திரவதை செய்யப்படுவதைக் கண்டு இன்புறும் நபரே, பின்நாளில் ஆடு அல்லது கோழிச் சண்டைகளுக்கு நிதியளித்து பார்த்து ரசிப்பவராகவும் திகழ்கிறார்.வீடு: பெரும்பாலான பெற்றோர்கள் தங்களின் நிறைவேறாத ஆசையை அல்லது விருப்பத்தை தங்களின் பிள்ளைகள் மூலம் நிறைவேற்ற முயற்சிக்கிறார்கள். பெற்றோர்கள் தான் ஒரு மருத்துவராகவோ அல்லது பொறியாளராகவோ வர விரும்பியிருந்து அவை நிறைவேறாத பட்சத்தில் தனது மகன் அல்லது மகளை ஒரு பொறியாளராகவோ அல்லது விஞ்ஞானியாகவோ ஆக வேண்டுமென கட்டாயப் படுத்துகிறார்கள். இதற்காக பலவிதமான அழுத்தங்களை அவர்களுக்குக் கொடுக்கிறார்கள். இறுதியாக அவர்கள் கையாளும் நுட்பம்தான் பயமுறுத்தல் என்பது. வீட்டிற்கு விருந்தினர் வந்திருக்கும் போது அவர்கள் முன்பு தங்கள் பிள்ளைகளை பாடச் சொல்லி, அதைக் குழந்தை செய்யத் தவறினால் அந்நிகழ்வைப் பெற்றோர்கள் அவமானமாகவும், குறை மதிப்பாகவும் கருதுவார்கள் என்பதற்கு நாம் அனைவரும் சான்று. சில நேரங்களில் அண்ணன் தனது தனிப்பட்ட பணியை தன் தம்பியைச் செய்து கொடுக்குமாறு அதிகாரத் தோனியில் கட்டளையிடுவார்.சமுகம்: பொதுவாக சமுதாயத்தில் சமுகப் பண்பாடுகள் எனும் பெயரில் செய்யத் தகுந்தவை, செய்யத் தகாதவை என சில நிபந்தனைகளை நாம் கடைபிடித்து வருகிறோம். சில சமுகச் சடங்குகளில் நம் கட்டாயப் பங்கேற்பு, நிதியம், ஆடை அணியும் விதம் போன்றவைகளும் ராக்கிங் நடைபெறுவதற்கு முக்கியக் காரணமாகும்.திரைப்படங்கள்: வன்முறை, வக்கிர எண்ணம், காட்டுமிராண்டித் தனம், மனித நேயமின்மை ஆகியவை திரைப்படங்களில் முக்கிய உள்ளீடுகளாக உள்ளன. இவை இளைஞர்கள் மத்தியில் உணர்வற்ற வெளிப்பாட்டை உருவாக்குகிறது. இரட்டை அர்த்த நகைச்சுவை இல்லாத படத்தை உங்களால் காட்ட இயலுமா? இதன் மூலம் நகைச்சுவையை உருவாக்குவதற்கு நகைச்சுவைக் கலைஞர்கள் எவ்வளவு நலிந்துள்ளனர் என்பதைக் கவனியுங்கள்.பள்ளி / கல்லூரிகள்: நான் இந்து நாளிதழில் ஒரு கட்டுரையைப் படித்தேன். ஒரு பெண் குழந்தை பசு பால் தரும் எனக் கூறுவதற்கு பதிலாக பசு சாணம் தரும் எனக் கூறியுள்ளது. எண்ணிக்கையின் அடிப்படையில் பார்க்கும் போது, இரண்டு முறை மட்டுமே பால் கொடுக்கும் பசு 30 முறை சாணமிடுவதால் அக்குழந்தை அவ்வாறு கூறியது சரியே. அச்சிறுமி தான் விளையாடுவதற்காக மட்டுமே பள்ளிக்கு வருவதாக கூறியதைக் கேட்டு ஆசிரியர் சற்று மென்மையாக கண்டித்துள்ளார். தற்போது இக்குழந்தை கூறியிருப்பது விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. கல்வி என்பது ஒரு விளையாட்டுடன் கூடிய மகிழ்ச்சியைத் தருவதாக அமைய வேண்டும். ஆனால் இன்றையக் கல்விமுறை அவ்வாறின்றி கல்வி என்பது மன அழுத்தங்களை ஊக்குவிப்பதாக உள்ளது. தற்போதைய கல்விநிலை மாற்றம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றல்லவா? சரி தற்போது ஆசிரியர்கள் எவ்வாறு தங்களின் மாணவர்களைத் தண்டிக்கிறார்கள் என்று பார்ப்போம். ஆசிரியர்கள் மாணவர்களின் முன்மாதிரிகளாக இருப்பதில்லை. ஆனால் பள்ளி விதிகளுக்கு ஏற்ப அவர்கள் நடக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். எந்தவொரு ஆசிரியரும் மாணவர்களுக்கு வணக்கம் செலுத்துவதோ அல்லது சற்று தாமதமாக வந்தால் மாணவர்களிடம் மன்னிப்புக் கோருவதோ கிடையாது. சில ஆசிரியர்கள் அரிதாக இருக்கலாம். ஆனால் அதற்கு மாறாக மாணவர்கள் தாமதமாக வந்தால், அவர்களுக்கு வாய்மொழி அல்லது எழுத்து வழியான தண்டனைகள் வழங்கப்படுகிறது. ஒரு மாணவர் தனது பட்டப்படிப்பை முடிக்கும் போது 20 வயதை எட்டியிருப்பார். 20 வயதை எட்டிய மாணவன் தனது 70% (30% வாழ்க்கை தூக்கத்தில் கழிக்கிறான்) வாழ்க்கையை வீடு, சமுகம் மற்றும் கல்வி நிறுவனங்கள் என தன் வாழ்நாளைச் செலவழிக்கிறார். தெரிந்தோ தெரியாமலோ ஓவ்வொரு தனி மனிதனின் சிறப்பியல்புகளை மேம்படுத்துவதற்கு இந்த மூன்று அமைப்புகளே முக்கிய பங்கு வகிக்கிறது. மதக் கோட்பாடுகளால் விளக்க முடியாத கருத்து வேறுபாடுகள் மற்றும் முரண்பாடுகள், செய்யத் தகுந்தவை மற்றும் தகாதவை என சமுதாயத்தால் வகுக்கப்பட்டுள்ள செயல்முறைகள், அரசால் கையாளப்படும் கல்வி நிறுவனங்களின் ஒழுங்கற்ற கல்விமுறை ஆகிய மூன்றுமே ஒரு அப்பாவித் திருடன் சிக்கிக் கொண்ட அவனைப் பகுத்தறிவற்ற முறையில் காவலர் கையாளுவது போன்ற தவறான பண்புள்ள மனிதர்களை உருவாக்குகின்றது. ஏனெனில் அவனுள் அடக்கி வைத்துள்ள உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்க்க இதை விட வேறு வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அதே போல்தான் சில குழந்தைகள் தங்களின் பெற்றோரை விட மோசமாக நடந்து கொள்கிறார்கள். இதுதான் காலம் காலமாக நடந்து வருகிறது. சுருக்கமாகக் கூறினால் மேற்கூறிய மூன்று அமைப்புகள்தான் நம் இன்றைய நிலைக்கு காரணம். மாற்று நடவடிக்கைகள்: பகடி வதை செய்யும் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்குவதுடன் கடுமையான சட்ட திட்டங்களையும் அமல்படுத்தலாம்; ஆனால் அவை அனைத்தும் தொடர்ந்து அவர்களின் உணர்வு ரீதியான சிக்கல்களை தடுத்து அடக்கும் முயற்சியாக இருக்கக் கூடாது. இல்லையேல் அவர்களுள் அடக்கி வைத்துள்ள உணர்ச்சி என்றாவது ஒருநாள் வெடித்துக் கொண்டு வெளிவரக் கூடும். இதனால் அவர்களின் மனைவி, குழந்தை, உறவினர், அண்டை வீட்டார், ஏதுமறியா வீட்டு விலங்குகள் அல்லது சில உயிரற்ற உடமைகள் கூட பலியாகக் கூடும். இதற்கு சீனா உட்பட அனைத்து வளரும் நாடுகளுக்கும் அறிவியல் பூர்வமான மனோ ரீதியான நுட்பங்கள் தேவை என்பதை ஒரு உளவியலாளனான நான் கருதுகிறேன். இத்தகைய சமுக அச்சுறுத்தலை சமாளிப்பதற்கு சில எளிய, வலுவான சாத்தியக் கூறுகளையும் நடைமுறைத் தீர்வுகளையும் பரிந்துரைக்கின்றேன்.பெற்றோர்களின் பங்கு:1. பெற்றோரின் கனவுகளை தங்கள் பிள்ளைகளின் மீது திணிக்க முயற்சிக்காதீர்கள். 2. தங்கள் குழந்தைகளை பக்கத்து வீட்டு பிள்ளைகளுடன் ஒப்பிடுவதைத் தவிருங்கள். ஏனெனில் ஒவ்வொரு தனிமனிதருக்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. எந்தவொரு குழந்தையாவது தங்களின் பெற்றோரை பக்கத்து வீட்டு பெற்றோருடன் ஒப்பிட்டத் தொடங்கினால் தங்களின் நிலை என்னவாகும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.3. பொருளீட்டுவதற்கு தகுந்த கல்விப் படிப்பை எடுக்குமாறு குழந்தைகளை வற்புறுத்துவதற்குப் பதிலாக அவர்களுக்கு விருப்பமான பாடத் திட்டத்தை தேர்ந்தெடுப்பத்தில் ஆலோசகராகவும் வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும்.4. கல்வி நிலையங்களிலுள்ள மதிப்பெண் / தரப் பட்டியலானது அவர்களின் படிப்புத் திறனிலுள்ள சிறப்பியல்பைக் குறிக்கிறது. இது ஒரு தனிச் சிறப்பு அவ்வளவுதான். அவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கு சுய மரியாதை, தன்னம்பிக்கை, தகவல் தொடர்பு திறன், நன்நடத்தை, சுகாதாரம், விளையாட்டுத் துறை என பற்பல பண்புகள் உள்ளன. 5. ஒரு நண்பராக இருங்கள். ஒரு குழந்தை பாலியல் தொடர்பான கேள்விகளைக் கேட்கும் போது அவற்றை ரகசியம் என்றோ தேவையற்றவை என்றோ மறைக்காதீர்கள். தங்களின் மகன் தற்புணர்ச்சி குறித்து கேட்கும் பொழுது சரியோ தவறோ உங்களுக்கு தெரிந்ததைச் சொல்லிக் கொடுங்கள். பாலியல் நோய் குறித்து எந்த தயக்கமுமின்றி அறிவியல் அல்லது வரலாற்றுச் சந்தேகங்களுக்குப் பதிலளிப்பது போல வெளிப்படையாக சொல்லிக் கொடுங்கள். (அவர்களின் சந்தேகங்களை நீங்கள் தீர்க்கத் தவறினால், அவர்கள் வேறு வழிகளில் பதில்களைத் தேடிக் கொள்வார்கள். எனவே பிற கதவுகளைத் தட்டுவதற்கு அனுமதிக்காதீர்கள்).6. நீங்கள் பலவகையான தகவல்களைப் பெற்றிராத போதும் உங்கள் பிள்ளைகளால் நேசிக்கப் படலாம்; ஆனால் மதிக்கப் பட மாட்டீர்கள். எனவே ஒவ்வொரு தந்தையும் அறிவுச் சுரங்கமாக இருக்க வேண்டும். தங்கள் குழந்தை சமுக விதிமுறைகளுக்கு மாறாகவோ அல்லது எதிராகவோ செயல்பட்டால், நீங்கள் கண்டிப்பதை விட ஒரு மனோதத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெறுங்கள். அவர் தங்களின் குழந்தை பருவத்தை பிரதிபலிக்கிறார்.7. அழுதல், கத்துதல், நடனம் ஆடுதல், உடைத்தல் ஆகிய அனைத்தும் அவர்களின் உணர்வுகளை வெளிக்காட்டும் ஓர் அங்கமாகும். முடிந்தவரை அவர்களை வீட்டிற்குள்ளோ அல்லது வெளியிலோ அனைவருடனும் பழக அனுமதியுங்கள். அதே போல் பல குடும்பங்கள் இணைந்து சுற்றுலா செல்லும் போது நூற்றுக்கணக்கான வெற்று கண்ணாடி பொத்தல்கள், எரியும் பொருள்கள், இசை அமைப்புகள் போன்றவற்றை எடுத்துச் செல்வர். பின்னர் அந்த கண்ணாடி பொத்தல்களை தங்கள் குழந்தைகள் தூக்கி எறிந்து உடைப்பதற்கும், தேவையில்லாத காகிதத்தை எரிப்பதற்கும், சிறு நெருப்பூட்டி, அந்த நெருப்பில் தேவையில்லாத பொருள்களை அவர்கள் விருப்பம் போல் எறிவதற்கும் அனுமதிப்பார்கள். உயர் மின்னழுத்த இசைக் கருவிகளால் இசைத்து, நடனமாடி தங்களுள் மறைந்திருந்த உணர்வை வெளிப்படுத்தும் பொழுது கத்திக் கூச்சலிடுவதும் ஆராவாரச் சிரிப்பும் ஒரு பொழுதுபோக்குப் பகுதியாக இருக்கும். (மிகச் சிறந்த ஆசான் ஓசோ இது போன்ற நடத்தைகளை டைனமிக் தியானத்தில் கூறியுள்ளார்).கல்வி நிறுவனங்களின் பங்கு: என்னுடைய பள்ளி நாட்களில் பள்ளிக்கூடத்தின் ஒரு பகுதியாக அமைந்திருந்த விளையாட்டுத் திடல் தற்போது மிகுந்த ஆடம்பரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பள்ளிக் குழந்தைகள் தனக்கு விருப்பமான விளையாட்டைத் தேர்ந்தெடுத்து தனது ஆற்றலை வெளிக்கொணர, அன்றைய நாட்களில் பள்ளியின் விளையாட்டுத் திடல் அல்லது மைதானம் 5 முதல் 10 ஏரியா அளவிற்கு பெரிதாக இருந்தது. நகரமயமாக்கல் மற்றும் மக்கள் தொகை பெருக்கம் போன்ற சூழலில், பள்ளியின் விளையாட்டுத் திடல் குறுகிய அளவில் இயங்குவதைக் கூட ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் மிகப்பெரிய அடுக்குமாடிகளால் வடிவமைக்கப்பட்டுள்ள கல்லூரிகளில் மாணவர்கள் விளையாடுவதற்கான வாய்ப்பு அரிதாகவே உள்ளது. சக மாணவர்களுடன் இணைந்து விளையாடுவதால் மாணவர்களின் எதிர்க்கும் (போர்தொடுக்கும்) சுபாவங்கள் கட்டுப்படுத்தப்படும். அதே நேரத்தில் மாணவர்கள் இந்த வயதில் நெற்பயிர் எவ்வாறு உற்பத்தியாகிறது என்பதைக் கூட அறிய வாய்ப்பில்லாத சூழலில் வளர்கின்றனர். நாம் இத்தகைய இடர்களைக் களைவதற்கான வழிகளைக் கண்டறிவதுடன் கல்வி நிறுவனங்களும் மறைந்து போன சில உள்கட்டமைப்புகளை வெளிக்கொணர வேண்டும். பெரிய அல்லது சிறிய அளவில் கூட விளையாட்டு மைதானத்திற்கான உள்கட்டமைப்பு இல்லாத தனியார் கல்வி நிறுவனங்கள் வாரத்திற்கு ஒருமுறையாவது குதிரை சவாரி, நீச்சல் குளம், ஓவியக் கூடம், நடன அரங்கம், மலை ஏற்றம் போன்ற இடங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல வேண்டும். அங்கே மாணவர்கள் சத்தமாக சிரிப்பது, அழுவது, கூச்சலிடுவது, இசைப்பது ஆகிய செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். இது போன்ற விளையாட்டுகளின் மூலம் மாணவர்கள் தங்களுள் அடக்கி / அழுத்தப் பெற்றுள்ள உணர்வுகளை வெளிப்படுத்திக் கொள்வார்கள். விளையாட்டு என்பது கோப்பையை வெல்வதற்காக மட்டுமே உருவாக்கப் பட்டதல்ல என்பதை உணர்க. இதன் மூலம் சக மாணவர்களை பகடிவதை செய்யும் முரட்டுத் தனம் கட்டுப்படுவது மட்டுமல்லாது, மனதிலுள்ள எத்தகைய மனக் கோளாறுகளையும் அகற்ற இயலும். அப்போதுதான் பகடிவதையின் பல்வேறு பரிணாமங்களுக்கு கணவன், மனைவி, குழந்தைகள் உட்பட யாரும் இரையாக மாட்டார்கள். சீன நாட்டில் நடைமுறையிலுள்ள கீழ்க்காணும் சில தீர்வுகளை ஏற்பது சற்று கடினமே என்றாலும் நல்ல பயனைத் தருகின்றது. உலகில் வளர்ந்து வரும் நாடுகளில் முதன்மை இடத்திலுள்ள சீனாவில் தனி மனிதனின் திறமைகளை மேம்படுத்துவதற்கு அனைத்து நுட்பங்களையும் உட்புகுத்தியுள்ளனர். விஞ்ஞான அறிவு நிறைந்த புத்தமதம் அங்கே இருப்பதுடன், மதத்தையும் தாண்டி தங்களின் வாழ்வை மேம்படுத்திக் கொள்வதற்காக முன்பிருந்தே வழக்கத்திலிருந்த யோகா, தியானம், தற்காப்புக் கலைகள் போன்றவையே சீனாவின் கடந்த கால, நிகழ் கால மற்றும் எதிர்கால வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தவைகளாகும். நான் சீனா சென்றிருந்த போது சென்யாங் (Shenyang) என்னுமிடத்தில் ஒரு சுவாரசியமான மற்றும் மறக்க முடியாத நிகழ்வைக் கவனித்தேன். அங்கே "ஆத்திரக் கூண்டு" (Rage Cage) எனும் பெயரில் திறக்கப்பட்டுள்ள ஒரு கடையில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி என்றும், அங்கே அவர்கள் விரும்பிய பொருள்களை உடைத்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. குளிர் சாதன பெட்டியிலிருந்து தொலைக்காட்சி, சமையல் சாதனங்கள், சலவை சாதனம், மரச் சாமான்கள் என வரிசையாக தரமிடப்பட்டு, அவற்றை பெண்கள் அடித்து உடைப்பதற்கு ஏதுவாக கையில் ஒரு தடியும், தலைக்கு கவசமும் (ஹெல்மெட்) வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் விரும்பிய பொருள்களை உடைப்பது அவர்களின் மனதிலுள்ள ஆத்திரத்தைக் கொட்டித் தீர்ப்பதற்கும் அவர்களின் மனச் சுமையிலிருந்து வெளிவருவதற்கும் வாய்ப்பாக உள்ளது. இவை தற்போது மேற்கத்திய நாடுகளிலும் பரவலாக பரவி வருகிறது. இத்தகைய நிகழ்வுகள் சீனா முழுவதும் நடைமுறையில் உள்ளது. இது குறித்து மேலும் அறிய இணையதளத்தில் கீழ்க்காணும் முகவரியில் அணுகவும். http://www.dailymail.co.uk/news/article-1295893/Hell-hath-fury-Rage-cage-opens-Chinese-shopping-mall-women-vent-frustration-men-allowed.html. மற்றொரு நிகழ்வு சாங்காய் (Shanghai) எனுமிடத்திலுள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் கண்டேன். ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களின் உருவப்படம் வரைந்துள்ள மணல் மூடைகளை மேலேயிருந்து கட்டித் தொங்கவிட்டு, பின்னர் மாணவர்கள் அந்த மூடையை அவர்களின் அனைத்து வித உணர்வுகளையும் வெளிப்படுத்தும் விதமாக வெறி தீர அடிக்க அனுமதிக்கிறார்கள். இதன் மூலம் ஆசிரியர்களின் மீதான எதிர்மறை எண்ணங்கள் வெளிப்படுத்தப்பட்டு மனம் இலகுவாகிறது.  மேற்கத்திய பாணியில் உடை அணிதல், முட்கரண்டி பயன்படுத்துதல், பப் கலாச்சாரம், டேட்டிங், மணவிலக்கு போன்ற பற்பல பண்பாடுகளை அப்படியே பின்பற்றும் நாம் ஏன் பகடிவதையை கட்டுப்படுத்தும் இத்தகைய வழிமுறைகளைப் பின்பற்றக் கூடாது? சில தனி மனிதர்களோ அல்லது சில அமைப்புகளோ அல்லது சில தொண்டு நிறுவனங்களோ இது போன்ற ஆத்திரக் கூண்டுகளை உருவாக்கி அர்த்தமுள்ளதாக்கலாம். மதிப்பிற்குரிய பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு இது போன்ற சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் போது அவர்களின் மன அழுத்தம் குறைந்து பகடிவதை எண்ணங்கள் எழாது தவிர்க்கலாம். நீங்கள் தயாரா?- ப.இரா.சுபாஷ் சந்திரன், ஐதராபாத்"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி