புவியைத் தவிர வேறு எங்காவது உயிரினம் உண்டா? - தமிழ் இலெமுரியா

16 November 2016 7:10 pm

நம் வானம் நீலமாக உள்ளதல்லவா? இதைக் கடந்து மேலே ஒரு விண்வெளிக் கலத்தில் செல்வதாகக் கொள்வோம். அவ்வாறு மேலே செல்லச் செல்ல கீழே உள்ள நம் புவி ஓர் உருண்டையான பந்தின் உருவத்தில் சுழல்வதைக் காண மனம் களிப்படையும். நீல நிறத்தில் ஒளிர்ந்து வெளியில் சுழன்று, சூரியனைச் சுற்றி வருகின்ற அற்புதமான காட்சி காணக் கிடைக்காததுதான். அங்கிருந்து வெளியைப் பார்த்தால் ஒரே கறுமையாகத் தெரியும். புவியிலிருந்து பதினைந்து கோடி கிலோ மீட்டர் தொலைவில் சூரியன் உள்ளதை நாம் புவியிலிருந்தே கணக்கிட்டு அறிய முடியும். வானில் உள்ள நட்சத்திரத்தைப் போன்ற ஒரு நட்சத்திரந்தான் சூரியனும். நம் சூரியனைப் போன்றே வானில் உள்ள நட்சத்திரங்களும் சூரியன்கள்தாம். சில, சூரியனை விடப் பெரியதாகவும் பல சிறியனவாகவும் உள்ளன. நம் சூரியன் தோன்றி 450 கோடி ஆண்டுகளாகின்றன. மேலும் இது 500 கோடி ஆண்டுகள் வரை தொடர்ந்து ஒளிரக் கூடியது. அதன் பிறகு ஒளிவிடாது. சுருங்கக் கூறினால் ஒரு நட்சத்திரம் முதலில் தோன்றி, குறிப்பிட்ட காலம் வரை ஒளிர்ந்து பிறகு ஒளியிழக்கிறது. உயிரினங்கள் பிறந்து, வாழ்ந்து இறுதியில் இறப்பது போன்றே ஒரு நட்சத்திரமும் பிறந்து, சிலகாலம் வாழ்ந்து, பின் இறக்கிறது. வெளியில் இந்த விளைவு நிகழ்ந்து வருவதை நாம் மிகச் சிறந்த தொலைநோக்கி வாயிலாக அறிய முடிகிறது. நம் சூரியனும் அதேபோல் பிறந்து இப்போது நடுத்தர வயதை எட்டி உள்ளது. மீண்டும் ஏறக்குறைய இதே கால அளவில் சூரியனும் இறந்து விடுவான். தொடக்கத்தில் சூரியன் பிறந்த போது இளஞ் சிவப்பாகத் தோன்றி, பின் மஞ்சள் நிறமாக ஒளிர்ந்து இப்போது நடுத்தர வயதில் வெண்மையாக ஒளிர்கிறது. இவ்வாறு தொடர்ந்து இறுதியில் நீல நிறத்தில் ஒளிர்விடும். நீல நிறமாகும் போதுதான் அதன் வெப்ப நிலையும் உச்சத்தை அடையும். வீட்டில் மண்ணெண்ணெய் அடுப்பு அல்லது வாயு அடுப்பு நீல நிறத்தில் எரிந்தால் தான் அதிக வெப்ப ஆற்றலைப் பெற முடியும் என்பது அனைவரும் அறிந்ததுதானே! சூரியன் பிறந்தது முதல் மாறுபடுகின்ற வெப்ப நிலைகளில் ஒளிர்கின்றதைப் பார்த்தோம். எல்லாத் திசைகளிலும் சூரிய ஒளி தொடர்ந்து வெளியேறிக் கொண்டேயுள்ளது. இவ்வொளி அணுக்கரு வினை சூரியனில் நிகழ்வதாலேயே வெளிப்படுகிறது. ஹைட்ரஜன் அணுக்கள் சூரியனில் முழுவதுமாக உள்ளன. நான்கு ஹைட்ரஜன் அணுக்களின் மொத்த நிறையானது ஒரு தனி ஹீலியம் அணுவாக உருவாக்கப்படுகிறது. இந்த நிகழ்வுதான் அணுக்கரு வினையாகும். நான்கு ஹைட்ரஜன் அணுக்களின் மொத்த நிறையானது ஒரு தனி ஹீலியம் அணுவை விட சற்று அதிகமானது. அதிகமாக இருக்கின்ற நிறைதான் அணுக்கரு வினையின் போது ஒளியாற்றலாக மாற்றப்படுகிறது. சூரியனில், நிறை, ஐன்ஸ்டைன் தொடர்புப்படி (E=mc2) ஆற்றலாக மாறி வெளியேறிக் கொண்டே உள்ளது. இவ்வொளி ஒரு வினாடிக்கு மூன்று இலட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. எல்லாத் திசைகளிலும் இவ்வொளியாற்றல் சென்று கொண்டேயுள்ளது. சூரியனிலிருந்து பதினைந்து கோடி கிலோ மீட்டர் தொலைவில் நம் புவி சுழன்று, சூரியனைச் சுற்றி வந்து கொண்டுள்ளதை அறிவோம். சூரியன் வெளியிடுகின்ற ஆற்றல், புவியில் உயிரினங்கள் தோன்ற ஏதுவாக அமைந்தது. புவி, இப்போது உள்ள தொலைவை விட சற்று குறைவான தொலைவில் சூரியனுக்கு அருகில் இருந்திருக்குமேயாயின், உயிரினங்கள் தோன்றியிருக்க முடியாது. அதிக ஒளியாற்றல் – அதாவது வெப்பம் கடல் நீரை ஆவியாக்கியிருக்கும். அதன் விளைவுகள் வேறாக நிகழ்ந்திருக்கும். அவ்வாறே சூரியனை விட்டுச் சற்று அதிக தொலைவில் புவி இருந்திருக்குமேயானால், குறைந்த வெப்ப நிலையில் அனைத்தும் மிகுதியான குளிரில் உறைந்திருக்கும். இந்நிலையிலும் உயிரினம் தோன்ற வாய்ப்பில்லை. எனவே, மிதமான வெப்பநிலையில் உயிரினம் தோன்றியுள்ளது என்பது தெளிவாகிறது. சூரியனின் பருமன், வெளிவரும் ஆற்றல் இவற்றைப் பொறுத்து பதினைந்து கோடி தொலைவில் சுழன்று வரும் புவியில் உயிரினம் தோன்றியது போல், சூரியனுக்கு அருகில் உள்ள புதன், வெள்ளி போன்ற கோள்களில் உயிரினங்கள் உருவாகவில்லை. அவ்வாறே புவிக்கு அப்பால் உள்ள செவ்வாய், வியாழன், சனி போன்ற கோள்களிலும் உயிரினங்கள் தோன்றவில்லை. குளிர் காய்வது போல் அதிக நெருக்கத்திலும் இன்றி, அதிக தொலைவிலும் இன்றி ஒரு கோள் அதுவும் நம் புவி போன்ற ஒரு கோள் இருந்தால் அங்கு உயிரினம் தோன்ற வாய்ப்புள்ளதென்பதை நம்மால் இப்போது புரிந்து கொள்ள முடிகிறது. இதுபோன்ற அமைப்பு வெளியில் உள்ள அண்டங்களில் இருக்கின்றதா? என்றால், வாய்ப்பு உள்ளதென்பதுதான் அறிவியலின் முடிவு. இவ்வெளியில் உள்ள பத்தாயிரங்கோடி அண்டங்களில் ஏதேனும் ஒன்றிலாவது, இச்சூரியக் குடும்ப அமைப்பு போன்று இருக்க வாய்ப்புள்ளது. நாம் இருக்கக்கூடிய அண்டமான பால்வெளி அல்லது ஆகாய கங்கையில் மட்டும் பத்தாயிரங்கோடி நட்சத்திரங்கள் அதாவது பத்தாயிரங்கோடி சூரியன்கள் உள்ளன என்பதைத் தொலைநோக்கிகள் மூலம் கண்டுள்ளோம். இந்த ஒரே ஒரு அண்டமே இவ்வளவு நட்சத்திரங்களை உடையதானால், இன்னும் பத்தாயிரங்கோடி அண்டங்களில் (ஒவ்வொன்றிலும் நம் அண்டத்தில் உள்ளது போன்ற சூரியன்கள்) உள்ளன. இவ்வாறு கடற்கரை மணலின் எண்ணிக்கையை விட அதிக அளவில் சூரியன்கள் வெளியில் உள்ளன என்றால், அவற்றில் ஒன்றில் கூடவா நம் சூரிய குடும்ப அமைப்புத் தோற்றம் போன்ற ஒன்று இல்லாமல் போகும். நிச்சயம் வாய்ப்பு உண்டு என்றே அறிவியல் நிகழ்தகவு சொல்கிறது. இதில் அறிவியல் அறிஞர்களிடம் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. எங்காகிலும் உயிரினங்கள் உள்ளனவா என அறிவதில் உள்ள பெரிய தடையே தொலைவுதான். ஆம்! நட்சத்திரங்களுக் கிடையே உள்ள தொலைவு மிக மிக அதிகம். இத்தொலைவைப் பொதுவாக ஒளியாண்டுகளில் அளப்பது வழக்கம். ஒரு வினாடியில் ஒளி மூன்று கிலோ மீட்டர் தொலைவு கடக்கிறது. இந்த வேகத்தில் ஓராண்டில் கடக்கும் தொலைவு ஏறத்தாழ லட்சங்கோடி கிலோ மீட்டராகும். பெரிய பெரிய எண்களில் கூறாது, சுருக்கமாக ஒளியாண்டு என அழைக்கலாம். ஒளியாண்டு எனப்படுவது ஒளி ஓராண்டில் கடக்கின்ற தொலைவாகும். வானியலில் இது மிகமிகச் சிறிய அளவுதான். ஏனென்றால் நம் அண்டமான பால்வெளியைக் கருதுவோமானால் இதன் ஒரு எல்லையிலிருந்து எதிர் எல்லைக்குச் செல்ல (ஒளியின் திசைவேகத்தில்) பத்தாயிரம் ஆண்டுகளாகும். நம் அண்டம் ஓரளவு பெரியதுதான். இதை விடப் பெரிதும் உண்டு சிறியனவும் உள்ளன. அண்டங்கள் என்பன நட்சத்திரங்களின் தொகுப்புகளாலானதே. ஒரு மையத்தை அச்சாகக் கொண்டு அதில் உள்ள நட்சத்திரங்களும் சுழல்பவைதாம். இச்சுழற்சியால் உண்டாவது சுருள் போன்ற வடிவங்கள்தாம். தீபாவளி நாளில் அசோக சக்கரம், தரைச் சக்கரம் போன்ற ஒளியுமிழ் பட்டாசுகள் பீரிட்டு ஒளிவிடும் காட்சிகளைப் பார்த்திருப்பீர்கள். அப்படிப்பட்ட சக்கரம் சுழலும் போது தோன்றுகின்ற சுழல் வடிவங்களே இந்த அண்டங்களின் வடிவங்களும். ஆனால் அவ்வடிவங்களில் பல வகைகள் உள்ளன. பல வடிவங்களில் அண்டங்கள் இருப்பினும் அவை ஒரு மையத்தைச் சுற்றி ஒவ்வொரு அண்டமும் அதனதன் மையத்தைச் சுற்றி, அதில் உள்ள நட்சத்திரங்கள் வலம் வருகின்றன. இந்த நட்சத்திரங்கள் இரண்டு அல்லது மூன்று புயங்களில் அமைத்து சுற்றி வருகின்றன. அண்ட மையப் பகுதியில் நட்சத்திரங்கள் நெருக்கமாகவும் வெளிப் பகுதிகளில் அதிக இடைவெளியுடனும் உள்ளன. வெளியில் பத்தாயிரங்கோடி அண்டங்கள் உள்ளன. இங்கே பேசப்படுகிற எண்ணிக்கை கற்பனையில் எழுவதன்று. நவீன தொலைநோக்கிகள் மூலமாக கணிக்கப் பட்டவைதான் இவை. இத்தனை அண்டங்களில் நிறைந்துள்ள நட்சத்திரத் தொகுப்புகளில் நம் சூரியனுக்குள்ள அமைப்பு போன்ற ஒன்று ஏன் இருக்காது? ஆகவே, ஐயமின்றி நாம் கூறலாம், உயிரினங்கள் இம்மாபெரும் வெளியில் ஏதேனும் ஓரிடத்தில் அல்லது பல இடங்களில் இருக்கலாம். அவ்வாறு ஏதேனும் ஒரு நட்சத்திரக் குடும்பத்தில் ஒரு கோளில் உயிரினம் தோன்றியிருப்பதாகக் கொள்வோம். அந்த உயிரினம் இங்குள்ள அமைப்பு போல் இருக்கத் தேவையில்லை. அக்குறிப்பிட்ட கோளின் பருமனைப் பொறுத்து வளர வாய்ப்புண்டு. உதாரணமாக, நம் புவியை விட அக்கோள் பெரிதாக இருந்தால், நம்மைப் போன்ற உயரங்களில் மனிதர்கள் வளர்ந்திருக்க வாய்ப்பில்லை. அப்படிப்பட்ட கோள்களில் பொருண்மை ஈர்ப்புவிசை அதிகளவில் செயல்படுவதன் காரணமாக வளர்ச்சி குறுக்கப்படும். ஆனால் பக்கவாட்டு வளர்ச்சி அதிகமாய் அமையும். நம்மைப் போன்று அறிவு ஜீவிகளின் வடிவமைப்புகளில் இருந்து மாறுபட்ட வளர்ச்சியைப் பெற்றிருக்கலாம்; உருவமே வேறாக இருக்கவும் வாய்ப்புண்டு. எப்படி உயிரினங்கள் தோற்றமளிக்கலாம் என்பதை கற்பனைதான் செய்ய முடியும். அதேபோல் அறிவு வளர்ச்சி பெற்று நம்மை விட சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கவும் வாய்ப்புண்டு. ஒரேயொரு சிக்கல் தொலைவுதான். பிற அண்டங்களில் அறிவு ஜீவிகள் தோன்றியிருந்து நம்மைத் தொடர்பு கொள்ள முயன்றாலும் ஒளியின் திசைவேகத்தில் வந்தாலும் இப்போதைக்கு நம்மைத் தொடர்பு கொள்ள இயலாது. அப்படிப்பட்ட அறிவு ஜீவிகள் எங்காயினும் இருக்க வாய்ப்புண்டு என்ற எண்ணத்தில்தான், புவியிலிருந்து இரண்டு விண்வெளிக் கலங்கள் முடிவிலாப் பயணத்தை மேற்கொள்வதற்காக இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே அனுப்பப்பட்டன. அவற்றில் இப்புவியில் உள்ள விவரங்கள், தொழில் நுணுக்கங்கள், அறிவியல் வளர்ச்சி, மக்கள் வரலாறு போன்ற செய்திகளைப் பத்திற்கும் மேற்பட்ட மொழிகளில் பதிவு செய்யப் பட்டுள்ளன. மேலும் நம்மைப் போன்ற தொழில் நுணுக்க அறிவைப் பெற்றிருக்கக் கூடிய அறிவு ஜீவிகள் இக்கலங்களுடன் தொடர்பு கொள்ள முடியும். ஏன் இக்கலங்களை அவர்களுடைய கோள்களில் இறக்கி நம்முடன் தொடர்பு கொள்ளவும் முடியும். இதுவரை அறிகுறி எதுவும் தென்படவில்லை. இப்போதுதான் சூரியக் குடும்ப எல்லையை விட்டே இரண்டும் கடந்துள்ளன. முடிவிலாப் பயணத்தில் உள்ள அவ்விரண்டு கலங்களும் நமது பேரப் பிள்ளைகளுடைய பேரன்களுக்காகவாது கிட்டுமா என்பது ஐயமே! தொடர்பு கொள்ள முடிந்தால் மனித இனம் பெறப்போகும் அறிவியல் முடிவுகளும் வியப்புகளும் பன்மடங்கில் இருக்கும். அந்நாளை நினைத்து கற்பனையில் மகிழ்வதைத் தவிர வேறு வழியில்லை. – பேராசிரியர் கே.நவநீதன்

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி