14 April 2014 4:56 am
ஒரு கல்லூரி மாணவரைப் போன்ற இளமைத் தோற்றம்; கள்ளம் கபடமற்ற புன்னகை தேங்கிய முகம்; கோப்புகள் அனைத்தையும் ஒவ்வொரு நாளும் பார்வையிட்டு உடனுக்குடன் முடிவெடுக்கும் அதி வேகத் திறன்; தமிழ், ஆங்கிலம், இந்தி, மராத்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தன்னைச் சந்திக்க வரும் தொழில் துறையினருடன் சரளமாகப் பேசும் புலமை என பன்முகம் கொண்ட டாக்டர் பொன்.அன்பழகன், ஐஏஎஸ்., மகாராட்டிரா மாநில தொழில் வளர்ச்சிக் குழுமத்தின் இணைத் தலைவராகப் பொறுப்பேற்று திறம்பட செயல்பட்டு வருபவர் ஆவார். அவரை நம் தமிழ் இலெமுரியாவின் நேர்முகத்திற்காக சந்திக்க விரும்பிய போது தன்னுடைய பல்வேறு பணிகளுக்கிடையில் நமக்கு வாய்ப்பளித்து, தம் பணி குறித்த பல செய்திகளை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அவருடைய இந்த மனப் பகிர்வு தமிழ் இனத்திற்கே பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. மகாராட்டிரா மாநில தொழில் வளர்ச்சிக் கழகத்தின் (MIDC) இணை நிருவாகத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள பொன்.அன்பழகனின் திறமைகளை அறிந்த மகாரட்டிரா அரசு அப்பதவியுடன் கூடுதலாக மகாராட்டிரா மாநில தகவல் தொழில்நுட்பத் துறையின் இணைத்தலைவர்; மகாராட்டிரா மாநில தொழில் மற்றும் வணிக முதலீட்டுக் குழுமத்தின் பொறுப்பாளர் (MAITRI) மற்றும் டில்லி, மும்பை தொழில்துறை வளாகத்தின் (DMIC) மாநிலப் பொறுப்பாளர் என பல பொறுப்புகளை வழங்கி அவரை ஊக்கப்படுத்தித் தானும் பயன் பெற்று வருகிறது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கம் வட்டம் அரியப்பம்பாளையம் ஊரைச் சேர்ந்த நா.பொன்னுசாமி – பழனியம்மாள் தம்பதியினரின் இளைய மகனாகப் பிறந்த பொன்.அன்பழகன் மருத்துவத்தில் கால்நடை மருத்துவம் கற்று, கால்நடை மருத்துவராகவும், தமிழ்நாடு குடிமைப் பணி ஆட்சியர் தேர்வில் வெற்றி பெற்று தமிழ் நாட்டில் துணை ஆட்சியராகவும் பணியாற்றி பின்னர் இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் வெற்றி பெற்று கடந்த 15 ஆண்டுகளாக மகாராட்டிரா மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்தவர் ஆவார். அவருடைய பணி குறித்து நம்முடைய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் நம்மை வியக்க வைத்தன. அவற்றுலிருந்து சில துளிகள் இங்கே தரப்பட்டுள்ளது……தற்போதைய கால கட்டத்தில் பொருள் தேடும் நோக்கில் பல துறைகளைத் தேர்ந்தெடுத்து கல்வி பயிலும் நிலையில் தாங்கள் மருத்துவத் துறையிலிருந்து இந்திய ஆட்சிப் பணியைத் தேர்வு செய்யக் காரணம் என்ன? நான் பள்ளி இறுதி தேர்வு படித்த கால கட்டத்தில் என்னுடைய ஆர்வம் பொறியியல் துறை சார்ந்ததாகத்தான் இருந்தது. எனினும், பள்ளியில் தேர்வில் பெற்ற மதிப்பீடுகளின் அடிப்படையில் நான் கால்நடை மருத்துவத்தைப் பயில வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். எனினும், என் அம்மாவிற்கு ஆர்வம் இல்லை. என்னுடைய தாயாரின் விருப்பமெல்லாம் தன்னுடைய மகன் தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சியராக (கலெக்டர்) வர வேண்டும் என்பதுதான். 1989 – 90களில் வேளாண்மைத் துறையிலிருந்து பல மாணவர்கள் இந்திய ஆட்சிப் பணித் தேர்வு எழுதி வெற்றி பெற்றனர். திரு.இறையன்பு ஐ.ஏ.எஸ் போன்றவர்கள், என்னுடன் படித்த முதுநிலை மாணவர்களின் உந்து சக்தியின் செயல்பாடுகளுமே நான் ஆட்சிப் பணியைத் தேர்ந்தெடுக்கக் காரணமாக இருந்தது. எனவே அந்த இலட்சியத்தை முன்னிறுத்தி தொடக்கத்தில் தமிழ்நாடு குடிமைப் பணி தேர்வு எழுதி, திருநெல்வேலி மாவட்டம் தென்காசியின் துணை மாவட்ட ஆட்சியராகப் பணி புரிந்து பின்னர் இந்திய ஆட்சிப் பணி தேர்வு எழுதி வெற்றி பெற்றேன். மராத்திய மாநிலத்தில் தாங்கள் எந்தெந்த பகுதியில் பணியாற்றி இருக்கிறீர்கள்? சத்தாரா மாவட்டம் கராட் உட்கோட்ட நடுவர்; பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் நந்தூர்பர் தலைமைச் செயல் அலுவலர்; அகமத்நகர் மாவட்ட ஆட்சியர் என சற்றொப்ப 11 ஆண்டுகால பணிகளுக்குப் பிறகு 2012 முதல் மராத்திய மாநில தொழில் வளர்ச்சிக் கழகத்தின் இணை தலைவராக பணியாற்றி வருகின்றேன். இதில் நந்தூர்பர் மாவட்டத்தில் ஆற்றிய பணி மிகவும் சவாலானதாகவும், மன நிறைவைத் தந்ததாகவும் அமைந்த ஒன்று. இந்த மாவட்டம் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் இடமாகும். அந்த மக்களுக்கு மருத்துவச் சேவை, சத்துணவு, குடிநீர், கல்வி போன்றவைகளுக்கு உரிய வாய்ப்பு எட்டாத நிலையில் என்னுடைய பணி ஒரு சவாலாக அமைந்தது. அவர்களுக்கு மருத்துவக் கட்டமைப்பு, அங்கன்வாடிகளை விரிவுபடுத்தி, குடிநீர் சிக்கலையும் ஓரளவிற்கு தீர்த்து வைத்தேன். 1025 அங்கன்வாடிகளாக இருந்த நிலையிலிருந்து 2027 என்ற நிலைக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு குழந்தைகளுக்குத் தேவையான கல்வி, சத்துணவு மற்றும் மருத்துவத் தேவைகள் நிறைவேற்றப்பட்டன என்பதில் எனக்கு பெருத்த மனநிறைவு ஏற்பட்டது. அதுபோல, பரப்பளவில் பெரிய மாவட்டமான (18,000 ச.கி) அகமதுநகரில் மாவட்ட ஆட்சியராக பணி புரிந்ததுவும் ஒரு வித்தியாசமான அனுபவமாகும். அகமத் நகரில் சிரிஐ விமான தளம் உருவாக்கத் தேவையான நிலங்களைக் கையகப் படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தேன். அதன் மூலம் விரைவாக விமான நிலையம் உருவானது.தற்போது பணியாற்றும் மராத்திய மாநில தொழில் வளர்ச்சிக் குழுமத்தில் தங்களின் சாதனைகளை விளக்க முடியுமா? சாதனைகள் என்று சொல்வது தவறு. நம்முடைய கடமையை முறையாக, நேர்மையாக நிறைவேற்றினாலே உரிய வளர்ச்சியை எட்ட முடியும் என்பதே என் பார்வை. அந்த வகையில் இந்தியாவிலேயே பெரிய தொழில் வளர்ச்சி நிறுவனமாகவும் ஆசியா கண்டத்திலேயே அதிக தொழில் துறை சார்ந்த 280 தொழில் பூங்காக்களை உருவாக்கி இரண்டு இலட்சம் ஏக்கர் பரப்பளவு கொண்ட மராத்திய மாநில தொழில் வளர்ச்சிக் கழகம் (MIDC) ஒரு பெரிய நிறுவனம் ஆகும். இது 1961 ஆம் ஆண்டு அந்நாளைய மராத்திய மாநில முதல்வர் யஷ்வந்தராவ் சவான் அவர்களுடைய தொலைநோக்கான பார்வையின் விளைவாக, மாநில சட்ட அங்கீகாரத்துடன் நிருணயிக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். இதில் மாநில தொழில் வளர்ச்சிக்காக நில எடுப்பு மற்றும் நிலப் பகிர்வு என்பது உணர்வுப் பூர்வமான விடயமாகும். எனவே பொதுமக்களிடமிருந்து புஞ்சை நிலங்களை அவர்களுடைய விருப்பத்துடன் கையகப்படுத்தி அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் உரிய இழப்பீடு வழங்கி, கொள்முதல் செய்வதும் சற்றுக் கடினமான ஒன்றாகும். எனினும், கடந்த இரண்டரை ஆண்டுகளில் சற்றொப்ப 25,000 ஏக்கர் நிலப்பரப்பு எடுக்கப்பட்டு ரூ.40,000 கோடி அளவில் தொழில் துறையில் முதலீடு பெறும் வகையில் வளர்ச்சியடையச் செய்திருக்கிறோம். இது ஏறக்குறைய 10 ஆண்டுகால மொத்த வளர்ச்சிக்கு இணையானதாகும். மேலும் தொழில் துறையினுடைய நீர் ஆதாரத்தை நிறைவு செய்யும் வகையில், பார்பி அணையினுடைய உயரத்தை அதிகப்படுத்துவதன் மூலம் 11டி.எம்.சி கொள்ளளவு பெறுமளவு உரிய பணிகள் 95 விழுக்காடு முடிவடைந்துள்ளன.அரசியல் மற்றும் அரசு நிருவாகத்தில் ஊழல் பெரிதாக ஆட்கொண்டிருக்கும் வேளையில் தாங்கள் எந்தளவுக்கு நேர்மையாகப் பணியாற்ற முடிகிறது? ஆங்காங்கே நடைபெறுகின்ற சில ஊழல்களை வைத்து இவற்றை பொதுமைப்படுத்த முடியாது. கடந்த 15 ஆண்டுகால என் பணியில் சில நேரங்களில் அரசியல் அழுத்தங்களைச் சந்தித்தது உண்டு எனினும், நாம் நேர்மையாகவும் நடுநிலைமையோடும் பணியாற்றுகின்ற போது அவைகள் இதுபோன்றச் சிக்கலை எதிர்கொள்ளத் தேவையான வலிமையைப் பெறுகிறது. எனவே என் பணிகளுக்கு அது போன்ற அரசியல்வாதிகளிடமிருந்து ஊக்குவிப்பு கிட்டாமல் போகலாம். ஆனால் தடங்கல் ஏற்படுவதில்லை. பணம் மட்டுமே வாழ்வின் குறிக்கோளாக அன்றும், இன்றும் என்றும் என்னிடம் இருந்ததில்லை.தமிழ்நாடு, மராத்தியம் ஆகிய மாநிலங்களை சமுகம், பொருளாதாரம், கல்வி, அரசியல் போன்றவகளில் தாங்கள் எவ்வாறு ஒப்பிடுகிறீர்கள்? இந்தியாவில் மகாராட்டிரம், தமிழ்நாடு, குஜராத், ஆந்திரம், கர்நாடகம் போன்ற மாநிலங்கள் ஓரளவு நல்ல வளர்ச்சிப் பெற்ற மாநிலங்களாகும். இம்மாநிலங்களில் தனி மனித அதிகாரங்களை விட நிறுவனங்களின் செயல்முறைகள் (Systems) தெளிவாக உருவாக்கப்பட்டிருப்பதன் விளைவாக, ஒரு சீரான வளர்ச்சியைக் காண முடிகிறது. ஆட்சி மாற்றங்களினால் அதிக வேறுபாடுகளைக் காண முடிவதில்லை. மராத்தியத்தில் மகாத்மா புலே, அம்பேத்கர், சாகுமகராஜ் போன்ற சமுகவியலாளரின் பங்களிப்பும், தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் குறிப்பாக தந்தை பெரியார் போன்றவர்களின் பங்களிப்பும் ஓரளவு கல்வி வளர்ச்சிக்கும் சமுக மறுமலர்ச்சிக்கும் உறுதுணையாக விளங்கியுள்ளது, எனவேதான் தமிழ்நாடு, மகாராட்டிரா மாநிலங்களில் கல்வி பெற்றவர்கள் விகிதம் சற்றொப்ப 75-80 என்ற அளவில் ஒரே சீராக உள்ளது. மராத்திய மாநிலத்தில் எல்லா சமுகத்தினருக்கும் ஓரளவு நிலம் உள்ளது. எனவே இங்கு சமுக ரீதியான உணவுச் சிக்கல் இல்லை. தமிழ்நாட்டில் சற்று மாறுபாடான நிலை உள்ளது. மராத்திய மாநிலத்தில் 3,000 தொழில்நுட்ப கல்வி நிலையங்கள் ஒவ்வொரு ஆண்டும் சற்றொப்ப 10 இலட்சம் கல்வியறிவு பெற்ற இளைஞர்களை உருவாக்குகின்றது.தங்களுடைய குடும்ப பின்னணி குறித்து ஏதாவது பகிர்ந்து கொள்ள விரும்புகிறீகளா? நாங்கள் ஒரு சாதாரண நெசவாளர் குடும்பத்தைச் சார்ந்தவர்கள். என்னுடைய துணைவியார் கனிமொழி அவர்கள் முன்னாள் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சண்முக சுந்தரம் அவர்களின் புதல்வியார் ஆவார். என்னுடைய தாய் தந்தையர் இருவருமே திராவிட இயக்க ஈடுபாடும் அண்ணா, பெரியார் போன்றோரினுடைய சிந்தனை தாக்கத்தையும் பெற்றவராவர். எனவே இயல்பாகவே எனக்கு தமிழ் ஆர்வமும், நேர்மை உணர்வும் என்னை ஊக்கப்படுத்தின. இரண்டு குழந்தைகள். மூத்த மகனுடைய பெயர் சத்திரபதி. மராத்திய மாநிலத்தில் சமுக இடர்பாடுகளுக்கிடையில் ஒரு ஆண்மைமிக்க வீரனாக திகழ்ந்த சிவாஜி மன்னனின் சிறப்பு முன்னொட்டாக அமைந்த சத்திரபதி" என்பதை என் மூத்த மகனுக்குப் பெயராகச் சூட்டினேன். அடுத்து, உலகில் மனித உரிமைகளுக்காகவும் தேசிய விடுதலைக்காகவும் போராடிய சேகுவேராவின் பெயர் என் இரண்டாவது மகனுக்குச் சூட்டப்பட்டுள்ளது. இது அவர்களை எதிர்காலத்தில் தத்துவார்த்த ரீதியாக சிந்திக்கும் அளவு உயர்த்தும் என்று எண்ணுகின்றேன். தமிழ்நாடு, இந்தியா (பிற மாநிலம்), உலகம் என்ற அளவில் சிந்திக்க வேண்டும்; நம் சிந்தனை விரிவடைய வேண்டும். அதே போன்று நம் பண்பாட்டு விழுமியங்களை நமக்கு உரமாக அமைத்துக் கொள்ள வேண்டும்.தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு தாங்கள் கூற விரும்புவது என்ன? தற்காலச் சூழலில் எந்தத் துறையை விரும்புகிறார்களோ அந்தத் துறையிலேயே ஒரு இலட்சிய நோக்கோடு பயில வேண்டும். மருத்துவம், பொறியியல் என்பவை மட்டுமன்றி எல்லாத் துறைகளிலும் இன்று ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே தான் விரும்புகின்ற கல்வி கிடைக்கவில்லை என்று ஏமாற்றமடைவதை விட நாமே நம்முடைய பாதையை அமைத்துக் கொள்வது விவேகமானதாகும். "பருவத்தே பயிர் செய்" என்பது போல உரிய காலத்திலேயே கல்வி தொடர்ச்சியாக இலட்சிய நோக்கோடு பயில்வது அவசியம். தமிழினம் என்பது ஒரு அருமையான தேசிய இனம். அதனுடைய வேர்களை மறந்து விட்டு, காய்களையோ கனிகளையோ எட்ட வேண்டும் என நினைப்பது தவறாகும். தமிழர்கள் தமிழை மறவாது நம்முடைய இலக்கியச் சுரங்கங்களின் அறிவார்ந்த செய்திகளையும் உள்வாங்கிக் கொள்ள முயற்சிப்பதே நல்வழியாகும். என்னுடைய குழந்தைகள் வீட்டில் தமிழிலே உரையாடுவதை நான் பெருமையாகக் கருதுகிறேன். நன்றி, வணக்கம்.- நேர்காணல்: சு.குமணராசன்"