14 November 2015 8:47 pm
இந்தியாவின் சிறிய, பெரிய நகரங்களில் பெருகி வரும் மகிழுந்துகளால் காற்று மாசுபாடு, வாகன நெரிசல், வாகன நிறுத்தம் மற்றும் நடந்து செல்வதற்குமான இடப் பற்றாக்குறை போன்ற முடிவில்லாத சிக்கல்கள் அதிகரித்து வருகின்றன. அளவுக்கதிகமான விபத்துகளுக்கும் ஒழுங்குமுறையற்ற சாலை பராமரிப்பினால் ஏற்படக்கூடிய அவசியமில்லாத மோதல்களுக்கும் பல்வேறு உயிரிழப்புகளுக்கும் வாகன எண்ணிக்கையின் பெருக்கமும் ஓயாத பயணங்களுமே கரணியமாக அமைகின்றன. இது ஓர் உலகளாவியச் சிக்கலாக விளங்குகிறது. பரந்த மக்கள் தொகையைக் கொண்டுள்ள இந்தியாவில் மகிழுந்தை உடைமையாகப் பெற்றிட வேண்டும் என்பதை பெருவாரியான மக்களின் விருப்பமாக நிலைபெற்றதின் விளைவாக பெருகிவரும் மிகுதியான மகிழுந்துகளினால் பல்வேறு நெருக்கடிகளை நாம் எதிர்கொள்ள வேண்டிய சூழலில் உள்ளோம். உலகிலுள்ள பெரும்பாலான நகரங்களில் ஒரு குறிப்பிட்ட நாளில் எந்தவொரு மகிழுந்தும் அன்று சாலையில் செல்லக் கூடாது எனப் பின்பற்றப்படுவதுடன் அன்றைய நாள் மக்கள் அனைவரும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி பயணம் செய்யுமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர். அந்த அளவிற்கு இது ஒரு மிகப் பெரிய சிக்கலாக உருவெடுத்துள்ளது. இந்தியாவின் அரியானா மாநிலத்திலுள்ள குர்கான் நகரில் செவ்வாய் கிழமை மகிழுந்தில்லா நாளாக கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது. ஏனைய நகரப் பகுதிகளிலும் மிகுதியான வாகனங்களின் காரணமாக எழும் மாபெரும் சிக்கல்களை எதிர் கொண்டு வருகின்றனர். தற்போது தில்லி அரசும் சில முக்கியச் சாலைகளில் வாரத்தில் ஒரு நாளை மகிழுந்தில்லா நாளாக (சாலையாக) கடைபிடித்து வருகின்றது. சில மணித்துளிகள் ஐதராபாத்தின் புறபகுதிகளில் குறிப்பிட்ட அளவுகளில் இந்நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டது. இலண்டன் போன்ற நகரங்களில் மத்திய இலண்டன் பகுதிகளில் நுழையும் வாகனங்களுக்கு கடும் போக்குவரத்து அடைசல் (Heavy Congestion Fee) கட்டணம் எனும் கட்டணத்தைச் சுமத்தினர். இதன் விளைவாக மிகுதியான வாகனங்களின் காரணமாக எழும் போக்குவரத்து நெரிசலிலிருந்து அவர்களால் விடுபட முடிகிறது. உலகின் பெருவாரியான முக்கிய நகரங்களின் மையப் பகுதிகளில் வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகன ஒட்டம் இல்லாத நகர சாலையை ஒரு குறிப்பிட்ட நாளில் கடைபிடிப்பதை பொதுமக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர். ஏனெனில், இதனால் குறைவான காற்று மாசுபாட்டையும் குறைவான வாகன நெரிசலையுமே அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்தியாவில் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது இது போன்ற சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை மகாத்மா காந்தி மிக நீண்ட காலத்திற்கு முன்பாகவே தெளிவாக உணர்ந்திருந்தார். மனித உழைப்பிற்கு பதிலாக பெருகிவரும் இயந்திரமயமாக்கல், விருப்பம் மற்றும் ஆசைகளை அடிப்படையாகக் கொண்டுள்ள நவீன நாகரிகத்தின் ஒரு தீவிர விமரிசகராக மகாத்மா காந்தி இருந்தார் என்பதை நன்கு உணர முடிகிறது. தி இந்து சுவராஜ்" எனும் அவரது புத்தகமானது நவீன நாகரிகத்திற்கு எதிரான பரப்புரையாக விளங்கியது. மேலும் பிற்கால பொருள்முதல்வாத உலக ஒழுங்கினையுடைய பைபிளாகப் போற்றப்படுகிறது. நவீன நாகரிகத்தை விமர்சிக்கும் ஒருவரை, மகிழுந்தை உடைமையாகப் பெற்றிட முன்னுரிமையளிக்கும் எந்தச் சமூகமும் அவருக்கு சாதகமாக இருக்காது. 20 ஆம் நூற்றாண்டு மக்கள் நவீன நாகரிக நகரங்களில் ஒரு மகிழுந்தில் அயிரை மீன் குஞ்சுகள் அடர்த்தியாக இருப்பது போன்று அடைக்கப்பட்டு ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்கின்றனர். 1930 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் நாள் காந்தியடிகள் நடத்திய மிக முக்கியப் போராட்டங்களில் ஒன்றான தண்டி நடைப்பயணம் (யாத்திரை) தொடங்கிய போது சிலர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் உண்பதற்காக சில பழங்களை கொண்டு வருவதற்கு ஒரு வாகனத்தை பயன்படுத்தினர். இதனால் பெரிதும் கவலையடைந்த காந்தியடிகள் மகிழுந்தை பயன்படுத்தியவரிடம் அவ்வாறு செய்யாமல் இருக்க தூண்டும் விதமாக ஒரு துரிதமான வாசகத்தைக் கூறினார், உங்களால் நடக்க முடியுமெனில் மகிழுந்தை தவிர்த்து விடுங்கள். இந்த 21 ஆம் நூற்றாண்டில் உலக மருத்துவர்கள் அனைவரும் தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அவர்கள் பரிந்துரைக்கும் முதல் மருந்து "வாகனம் ஓட்டுவதைத் தவிர்த்து முடிந்த வரை நடந்து செல்லுங்கள்" என்பதே. 1930களில் காந்தியால் எது பரிந்துரைக்கப்பட்டதோ, அதையே தற்போதைய மருத்துவர்கள் நம்மை அச்சுறுத்துகின்ற இனம் புரியாத பல நோய்களிலிருந்தும் மெதுவாகக் கொல்லக்கூடிய உயிர்க் கொல்லி நோய்களிலிருந்தும் நம் உடல் வளத்தையும் சுகாதாரத்தையும் பாதுகாத்துக் கொள்ள ஊக்கப்படுத்தும் விதமாக பரிந்துரைக்கின்றனர். 1938 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் நாள் டாக்டர் ஜான் டி போயர் என்பவர் மகாத்மா காந்தியிடம் ‘அமெரிக்க அதிபர் இராபர்ட் ஹூவர், ஒவ்வொரு அமெரிக்க குடும்பத்தினரும் இரண்டு வானொலிகளும், இரண்டு மகிழுந்துகளும் பெற்றிருக்க வேண்டும்’ என விரும்பியதாக கூறினார். ஆனால் காந்தியடிகள் ஒரு குடும்பத்திற்கு ஒரு வானொலியும், ஒரு காரும் இருக்க வேண்டும் என்பதைக்கூட விரும்பவில்லை. அப்படிப்பட்ட சமூகத்தை அவர் எதிர்நோக்கவில்லை. "நம்மிடம் அளவுக்கதிகமான வாகனங்கள் இருக்குமெனில், நடப்பதற்கு மிகவும் குறுகிய இடங்களே நமக்கு கிட்டும்" எனும் காந்தியின் கருத்துகளை கேட்ட டாக்டர் ஜான் முற்றிலும் அறிவார்ந்த இக்கருத்தை உற்றுநோக்கி கவனித்தார். 90 ஆண்டுகளுக்கு முன்பே பொதுமக்கள் நடப்பதற்கு போதுமான இடம் சாலையில் எங்கே இருக்கும் என்று சமுகம் குறித்த மகாத்மா காந்தியின் தொலைநோக்குப் பார்வை நம்மை வியக்க வைக்கிறது. ஆன்மிகச் செறிவூட்டலுக்கும் உடல்நலச் செயல்பாட்டிற்கும் முதன்மை தருகின்ற வளமான சமுகம் பற்றிய அவருடைய பார்வையிலிருந்து ஊற்றெடுத்த கருத்துகள் முற்றிலும் அறிவார்ந்தவைகளே. உண்மையில் காந்தியடிகள் மகிழுந்தை ஒரு இன்றியமையாத உடைமையாக எண்ணவில்லை. 1939, அக்டோபர் 14 ஆம் நாள் பின்வருமாறு துணிச்சலாக எழுதினார். "என்னால் கற்பனை மட்டுமே செய்து கொண்டிருக்க முடியாது. ஒரு மகிழுந்தை உடைமையாகப் பெற்றிருப்பது மிகப் பெரிய தகுதியாகக் கருதாத நாகரிகத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன்" எனக் கூறியுள்ளார். எழுபது ஆண்டுகளுக்கு முன்பே மகாத்மா காந்தி எழுதிய நாகரிகத்தை நோக்கிய பார்வையின் முதல் படி தான் இந்த மகிழுந்தில்லா நாள் கடைபிடிக்கப்பட்டிருப்பது. இந்த நவீன 21 ஆம் நூற்றாண்டில் உலகின் பிற நகரங்கள் அனுபவித்த இக்கொடிய வலியை இந்தியா தற்போது பெருகிவரும் மகிழுந்துகளின் தீமைகளால் உணர்ந்துள்ளது. ஆகவே குறைந்தபட்சம் ஒரு நாளாவது மகிழுந்தில்லா நாளாகக் கடைபிடிக்கப்படுவதன் மூலம் பெரிய மற்றும் சிறிய நகரங்களின் அர்ப்பணிப்பு நாளாக அன்றைய தினம் விளங்கும் எனும் உணர்வு மேலெழுந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட நாளில் வாகனத்தை பயன்படுத்தக் கூடாது என குர்கான் நகரிலுள்ள பொது அதிகாரிகளால் எடுக்கப்பட்ட இந்தத் தீர்மானம், காற்று மாசுபாட்டை விரைந்து கட்டுப்படுத்தவும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து மலைபோல் பெருகி வரும் எரிபொருள் பயன்பாட்டை குறைக்கவும் அதிகமான வாகனங்களின்மையால் பொதுமக்கள் செல்வதற்கான இடவசதி மற்றும் சாலை வசதியைப் பெருக்கவும் மிகவும் நலம் பயப்பதாக உள்ளது. இதனால் மகிழுந்தில்லா நாளில் குர்கான் நகரமே வாகன நெரிசலின்றி தூய்மையான காற்றை அனுபவிக்க முடிகிறது. தற்போது அக்டோபர் 22 ஆம் நாளன்று புது தில்லி முழுவதும் மாதத்தில் ஒரு நாளை மகிழுந்தில்லா நாளாக அனுசரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது இந்திய தலைநகரின் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய இலக்காகும். எனவே பெருகி வரும் வாகனங்களின் விளைவாக எழுந்துள்ள போக்குவரத்து நெரிசலைச் சமாளிப்பதற்கு இத்தகைய கொள்கைகளை (விதிமுறைகளை) பின்பற்றிவரும் இத்தருணத்தில் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் தொலை நோக்குப் பார்வையை இங்கே நினைவுகூரத் தக்கது. இத்தகையச் சிக்கல்களை எதிர்கொள்வதற்கு நகர மக்கள் பொதுப் போக்குவரத்தை அணுகுதல் சிறந்த தீர்வாக அமையும். பொதுப் போக்குவரத்துடன் தொடர்ந்து அனைத்து வயதினரும் பயன்படுத்தக் கூடிய குறிப்பாக இளைஞர்கள் மிதிவண்டியை (சைக்கிளை) பயன்படுத்துவதன் மூலம் இச்சிக்கலுக்கு மேலும் ஒரு சிறந்த அர்பணிப்பை வழங்கலாம். சாலைகளில் மகிழுந்தின் மிகுதியால் விளைகின்ற எண்ணற்ற சிக்கல்களான போக்குவரத்து நெரிசல், காற்று மாசுபாடு போன்றவைகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள தனிநபர் சார்பு போக்குவரத்தை சற்று தளர்த்திக் கொண்டு இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது காலத்தின் கட்டாயமாகும். எனவே நம் பல சிக்கல்களிலிருந்து விடுபடுவதற்கான தீர்வுகளில் ஒன்றாக இந்த மகிழுந்தில்லா நாள் திகழும். – எஸ்.என்.சாகு, புது தில்லி.(கட்டுரையாளர் எஸ்.என்.சாகு ராஜ்ய சபாவின் துணைச் செயலாளர் ஆவார். இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கருத்துகள் அனைத்தும் எழுத்தாளரது சொந்தக் கருத்தாகும். இவை ராஜ்யசபா செயலகத்தின் கருத்தல்ல)"