17 March 2015 4:54 pm
உலக அரசியல் அரங்கில் நினைத்துப் பார்த்திராத அதிசயங்கள் அவ்வப்போது நடைபெறுவது வழக்கம். உலகின் சென்நெறியில் மாற்றத்தை ஏற்படுத்திவிடக் கூடிய அத்தகைய அதிசயங்கள் நடைபெறுவதற்கு சில வேளைகளில் அற்பமான விடயங்களேக் கூட காரணமாக அமைந்து விடுகின்றன. அண்மையில் வெளிவந்த இரண்டு சேதிகள் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் நினைத்துப் பார்த்திருக்கக் கூடியவையே அல்ல என்ற அளவிற்குப் பிரமிப்பு ஊட்டுபவை. ஒன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பாலஸ்தீன நாட்டின் இருப்பை அங்கீகரித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம். மற்றையது கியூபா நாட்டுடன் இராஜதந்திர உறவுகளைப் பேண அமெரிக்கா முன் வந்துள்ளதாக வெளி வந்துள்ள அறிவிப்பு. உலகிலேயே அதிக வலிமை மிக்க பரப்புரை இயந்திரத்தைக் கொண்ட நாடு இசுரேல். அப்பட்டமான மனித உரிமை மீறல்களை நிகழ்த்திக் கொண்டு, போர்க் குற்றங்களை இழைத்துக் கொண்டு, அன்றாடம் சிறார்களையும் இளையோரையும் கொன்று குவித்துக் கொண்டு, தட்டிக் கேட்க ஆளிள்ளாத தண்டப் பிரசண்டனாக வலம் வந்து கொண்டிருக்கின்ற போதிலும் உலக அரங்கில் கண்டனத்துக்கு அப்பால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் பார்த்துக் கொண்டு கடந்த 67 ஆண்டுகளாக தன்னைத் தக்க வைத்துக் கொண்டுள்ள நாடு. உலக வல்லரசான அமெரிக்கா, அமெரிக்காவின் கொள்கைகளுக்கு வடிவம் தரும் ஐரோப்பிய நாடுகள், ஆசுதிரேலியா, கனடா என்பவற்றின் அனுசரணையோடு தன்னைத் தக்க வைத்துக் கொள்ளும் இசுரேல் நாட்டின் நாட்டாண்மை அண்மைக் காலமாக ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது. உலகளாவிய அடிப்படையில் பன்னாட்டரங்கில் ஏற்பட்டு வரும் அரசியல் மாற்றங்கள், அமெரிக்க ஒற்றைத் தலைமைத்துவ வழிகாட்டலில் இருந்து பல நாடுகள் விடுபட்டு தனித்துவமாகச் செயற்பட ஆரம்பித்துள்ளமை, உலகப் பொருளாதார வல்லரசு எனும் தன்னுடைய இடத்தை சீனாவிடம் இழக்கின்ற நிலையில் அமெரிக்கா உள்ளமை, குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஏற்பட்டு வரும் சிந்தனை மாற்றம் போன்றவை இதற்கான காரணங்களாகக் கொள்ளப்படலாம். இது தவிர, அமெரிக்காவில் அடக்குமுறைக்கு ஆளாகியுள்ள மக்களிடம் ஏற்பட்டு வரும் விழிப்புணர்வு, குறிப்பாக கறுப்பின மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் விரக்தி, போருக்கு எதிரான மன உணர்வு, பொருளாதாரச் சுமை, அண்மைக்காலமாக அமெரிக்காவின் உலகளாவிய அடக்குமுறைச் செயல்பாடுகள் தொடர்பில் பகிரங்கப் படுத்தப்பட்டுவரும் நிலைப்பாடு என்பவை அமெரிக்க ஆளும் வர்க்கத்தை தமது கொள்கைகள் தொடர்பில் மாற்றங்களைச் செய்ய நிர்பந்தித்து வருகின்றன. இத்தகைய பின்னணியிலேயே பாலஸ்தீன அரசாங்கத்தை அங்கீகரிக்கும் தீர்மானம் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது. தீர்மானத்திற்கு ஆதரவாக 498 உறுப்பினர்களும் எதிராக 88 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர். 111 பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. பாலஸ்தீனத்தின் தற்போதைய நிலைப்பாட்டில் எந்தவித மாற்றதையும் இந்தத் தீர்மானம் ஏற்படுத்தி விடாத போதிலும், பாலஸ்தீன தனிநாட்டுக்கான முயற்சியில் ஓர் உந்து சக்தியாக இது அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இதனை தொடர்ந்து பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கத்துவம் கோரும் விண்ணப்பத்தையும் பாலஸ்தீன அரசு கையளித்து உள்ளது. பெரும்பாலும் இந்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இசுரேல் நாட்டிற்கு எதிராகப் போர்க் குற்றங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யும் வாய்ப்பு பாலஸ்தீன அரசுக்குக் கிட்டும் என நம்பலாம். இந்த விண்ணப்பம் தொடர்பாகக் கருத்து வெளியிட்டுள்ள இசுரேலிய தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ போர்க் குற்றங்களுக்குப் பதில் கூற வேண்டியவர்கள் பாலஸ்தீனியர்களே எனத் தெரிவித்துள்ளார். பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்திற்கான பட்டயத்தில் இசுரேலும் அமெரிக்காவும் இதுவரை கையொப்பம் இடவில்லை என்பது இந்த இடத்தில் நினைவு கூரத்தக்கது. பன்னாட்டு அங்கீகாரத்தைக் கோரும் பாலஸ்தீன அரசின் மற்றொரு செயல்பாடாக ஐ.நா. சபையில் பாலஸ்தீனம் தொடர்பில் பாதுகாப்புச் சபையில் முன்மொழியப்பட்ட தீர்மானத்தைக் கூறலாம். 22 அரபு நாடுகளின் சார்பில் யோர்தான் நாட்டால் சமர்பிக்கப்பட்ட இந்தத் தீர்மானத்தை 2 ஆண்டு கால இடைவெளியினுள் பாலஸ்தீன தனிநாட்டுச் சிக்கலுக்குத் தீர்வு காணும் அம்சங்களைக் கொண்டது. தொடக்கம் முதலே இந்தத் தீர்மானத்திற்கு எதிரான கருத்துகளை வெளியிட்டு வந்த அமெரிக்கா அதன் நட்பு நாடான அசுதிரேலியா என்பவற்றின் எதிர்ப்பால் தீர்மானம் நிறைவேற்றப்படாமல் போய்விட்டது. தீர்மானத்தை நிறைவேற்ற 9 வாக்குகள் தேவைப்படும் நிலையில் ஆதரவாக யோர்தான், உருசியா, சீனா, பிரான்சு, அர்ஜென்டீனா, சாட், சிலி, லக்ஸம்பேர்க் ஆகிய 8 நாடுகள் வாக்களித்திருந்தன. பிரித்தானியா, லித்துவெனியா, நைஜீரியா, உருவாண்டா மற்றும் தென் கொரியா ஆகிய 5 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. 9 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்படும் நிலை தோன்றியிருந்தால் கூட அமெரிக்கா தனது ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி அதனைத் தடுத்திருக்கும் என்பது வேறு விடயம். எனினும் இதனால் துவண்டு விடாத பாலஸ்தீன அரசாங்கம் குறித்த தீர்மானத்தை மீண்டும் சமர்பிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளது. மறுபுறம் கியூபா நாட்டுடன் இராஜதந்திர உறவுகளைப் பேண அமெரிக்கா முன் வந்துள்ளது. இதன் ஓர் அங்கமாக அமெரிக்காவிடம் கைதிகளாக இருந்த கியூப நாட்டவர் மூவர் விடுவிக்கப்பட, பதிலுக்கு கியூபாவில் கைதியாக இருந்த அமெரிக்கர் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார். தனது கொல்லைப் புறத்தில் உருவாகிய கம்யூனிச நாட்டை நிர்மூலம் செய்து விட அமெரிக்கா மேற்கொண்டு வந்த சீர்குலைவு நடவடிக்கைகள், அந்த நாட்டின் தலைவர் பிடல் காஸ்ட்ரோவைக் கொல்ல அமெரிக்கா மேற்கொண்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட முயற்சிகள் என்பவற்றில் இருந்து தப்பிப் பிழைத்து இன்று அந்த நாடும் அதன் ஆட்சியாளர்களும் அமெரிக்கவைத் தம்மை நோக்கி வரச் செய்திருப்பது காலத்தின் கட்டாயம் அன்றி வேறில்லை. இதில் ருசிகரமான ஓர் உண்மையும் இருக்கிறது. அது ஐரோப்பிய ஒன்றியம். அமெரிக்க உளவு நிறுவனங்களின் உள்வீட்டுத் தகவல்களை எட்வட் ஸ்னோடன் வெளியிட்டதன் பின்னான உலகச் சூழலில் அமெரிக்காவின் செல்வாக்கு வளையத்தினுள் இருந்து ஓரளவேனும் விலகிச் செல்லும் போக்கை ஐரோப்பிய ஒன்றியம் வெளிக்காட்டி வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது. அது மட்டுமன்றி ஒன்றியத்தினுள் பிரித்தானியாவின் செல்வாக்கு வீழ்ச்சி கண்டு ஜெர்மனியின் கை ஓங்கி வருவதையும் காண முடிகின்றது. இவ்வாறான சூழலில் கியூபாவுடனான இரு தரப்பு வர்த்தகத்தை ஐரோப்பிய ஒன்றியம் அண்மையில் மீள ஆரம்பித்து இருந்தது. இதுவும் அமெரிக்காவின் முடிவில் செல்வாக்குச் செலுத்தி இருக்கும் என்பதை நம்பலாம். இந்த விடயங்களை வைத்துக் கொண்டு உலகின் காவல்காரன் என வருணிக்கப்படும் அமெரிக்காவின் இடம் கைநழுவிச் செல்கின்றது என சிலர் வாதாடுகின்றனர். மாறும் உலகில் மாறாதது மாற்றம் மட்டுமே என்பது நடைமுறை யதார்த்தமே. ஆயினும், உலக முதலாளித்துவத்திற்குத் தலைமை தாங்கும் அமெரிக்கா நடைமுறைச் சூழலுக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொண்டு மற்றொரு பாய்ச்சலுக்குத் தயாராகிறது என்று கூட இதனைப் புரிந்து கொள்ள முடியும். – பூமிபுத்திரன்