வளர்ப்பும் வாழ்வும் - தமிழ் இலெமுரியா

15 September 2014 5:08 am

மரபணுக்களும் மானுடப் போக்கும் நெருங்கிய தொடர்புடையவை. எண்ணமே வாழ்வு எனும் போது, எண்ணங்களுக்கு அடிப்படையான வாழ்வு விமர்சனத்துக்குள்ளாகிறது. காப்போனைக் காட்டிலும் கள்ளனுக்கே வலுவதிகமாயினும், ஒழுக்கப் பிறழ்வுகளுக்கு வாய்ப்பின்றிக் கண்ணின் மணிபோலக் கவனமாக வளர்ப்பது தனித்துவம் தரும். சரியாக வளர்க்கப்படாத பிள்ளைகளைச் சமுதாயத்துக்கு ஒப்படைப்பவர்கள் சமுக விரோதிகள். அன்னையிடம் பால் பருகும் போதே அப்படியே அண்ணாந்து பார்த்து வானத்து விண்மீன்களைச் சுவைத்திடவும், அக்கம் பக்கம் ஓடிப் பறக்கும் பறவைகளைப் பார்த்து மகிழ்ந்திடவும் பழகும் குழந்தையானது சீராக வளர்ந்து சிறப்பான அறிவு நிலை பெறும். மரபணு மூலம் மனித உருவாக்கம் குறித்த ஒழுக்க நெறிகள்" (The Ethics of Human Cloning) எனும் நூலில் வில்லியம் டட்லி என்பவர், மனித மனமும் உடல் கூறுகளுமே மரபணுக்களுக்கும் சூழலுக்குமிடையேயான பல்வேறு காரணிகளின் ஒட்டுமொத்த அமைப்புகளென அறிவியலாளர்கள் கருதுவதாகக் கூறுகிறார். இசையை நேசிக்கும் இல்லச் சூழலில் வளர்பவரே இசையுணர்வளிக்கும் மரபணுவைப் பெறுவர் என்பது வாழும் இல்லமும் வளரும் சூழலும் மரபணுவின் ஆற்றலை விட வலுவானவையென உறுதிப்படுத்துகிறது.இல்லறம்: தரமான இல்லறம் தந்த உயர்வான பெற்றோர்களுக்கு முறையாகப் பிறந்து, வகையாக வளர்க்கப்பட்டவர்கள் ஈனச் செயல்களுக்கு இடமளிக்காமல் உன்னத நோக்கில் பயணிப்பர். உடலிலுள்ள எலும்பு வலுவுக்கான சுண்ணாம்புச் சத்தைத் திருடிக் கொஞ்சங் கொஞ்சமாக நின்று கொல்லும் நச்சுத் தன்மை கொண்ட வெள்ளைச் சீனிபோல், குழந்தை வளர்ப்பில் நேரிடும் குறைபாடுகள் குணக்கோடுகளை உண்டாக்கி, வாழ்வைப் பாழாக்கும் கொடுந்தன்மை கொண்டவையாக உருவெடுக்கும். தந்தை தனது முகத்தைப் பயங்கரமாக மாற்றிக் கொண்டு பயமுறுத்தியதால், பாடகர் மைக்கேல் சாக்சன் சிறு வயதில் தந்தை மீது கொண்ட வெறுப்பானது தணியவேயில்லையாம்.உணவு: பசிக்கு உண்பது பண்பை வளர்க்கும். சுவைக்கு அடிமையாகி உண்பது வன்மத்தை வளர்க்கும். செயற்கைக் குளிர்பானங்களுக்கு அடிமையாகியுள்ள அமைதிக்கு விரோதமான அமெரிக்க இளைஞர்களிடையே பரவி வரும் வன்ம உணவு உலகறிந்தது. வாயை வசப்படுத்தி விட்டால் நோய் வசப்படுவதைத் தவிர்க்கலாம். அவலங்களில் பெரும்பாலானவை வாய்வழியே வருபவை. சொல்லிலும் சுவையிலும் அழுக்குச் சேராது, வாயைத் தூய்மையாக வைத்துக் கொள்ளல் வளந்தரும்.உணர்வு:  பெற்றுக் கொடுப்பவள் கற்றுக் கொடுப்பதால் தாய்மொழி எனப் பெயர் பெறும் மொழியுணர்வு வாழ்வின் வழியாகும். உணர்வுடையோரிடம் உரைப்பவைதாம் உரிய பயன்தரும். "மு.வ" என்று மரியாதையுடன் அழைக்கப்பட்ட வரதராசனார், மனிதரிடம் இருக்க வேண்டியவையென வலியுறுத்திய, நோயற்ற உடலும், கவலையற்ற மனமும், பிறருக்குதவும் வாழ்வுப் பண்பும், மொழியுணர்வு கொண்டோரிடம் குடிபுகும். ஈன்றாள் பசிபோக்கவும் ஈனமான வினைக்கு ஆளாகாது, மானத்தை மனதிற்கொள்ளும் தரமுடையோரே மனிதர். "மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக்கூடாது தன்மானமில்லாக் கோழையுடன் சேரக் கூடாது" என்று குமாரராசா திரைக்கீற்றில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் சுட்டியுள்ள மான உணர்வு மதிப்பையுயர்த்தும். "மானம் பெரிதன்றி மூச்சுப் பெரிதில்லை காண்" என்ற பாரதிதாசனின் வீர வாழ்க்கை உணர்வுத் தூண்டலாகும். உழைப்பு: காலக்கணக்கின் கடைசி எழுத்து வரை உழைப்புத் தொடர வேண்டும். உயிர்ப்பின் அடையாளம் அசைவு. இடைவிடா முயற்சியும் எந்நேர விழிப்புணர்வும் உழைப்பின் அடையாளம். உழைப்புக் குறைவால் ஏற்படும் வளர்ச்சித் தளர்ச்சியில் ஆக்கம் கெட்டு ஊக்கமற்ற தூக்கநிலை உருவாகும். "இட்டுப் பார்; உண்டவர்கள் இன்புற்றிருக்கையில் தொட்டுப் பார்" எனும் பாரதிதாசன் கூற்றை நினைவு கூர்ந்து பொது நலம் பேணும் வகையில் உழைத்து ஈந்து இன்புறலாம். "வையகம் காப்பவரேனும் – சிறு வாழைப் பழக்கடை வைப்பவ ரேனும் பொய் அகலத் தொழில் செய்தே – பிறர் போற்றிட வாழ்பவர் எங்ஙனம் மேலோர்" என்கிற பாரதியின் வரிகளில் பயணித்துத் தொழில் செய்து மேன்மை பெறலாம். "தன்னலம் கருதாது பிறருக்குரியவராக வாழ்வார், பேராற்றல் கொண்டவராய், நீண்ட நாள் வாழ்வார்" என்று உழைப்புக்கு இலக்கணம் தருகிறார் அறிஞர் பித்ரிம் ஏ.சோனோகின் (Pitrim A.Sonokin). கிடைக்கும் வேலையில் விருப்பங் கொள்ள இயலாவிடில், கோயில் வாசலில் கையேந்தி, மகிழ்ச்சியாக வேலை செய்தவர்கள் வழங்கும் பிச்சையை வாங்கிப் பிழைப்பதே மேல்" என்றார் 1883 – 1931களில் வாழ்ந்த லெபனான் நாட்டுக் கவிஞர், கலீல் ஜிப்ரான். செய்யும் தொழிலே தெய்வமெனக் கொண்டு கையில் கிடைத்த வேலையில் அன்பு செலுத்திக் கவனம் செலுத்தி, பிடித்த பணியைத் தேடிக் கொள்வதே சிறப்பு. "ஓய்வு என்பது சோம்பிக் கிடப்பதல்ல" எனும் ப்பால் பீல் (Paul Peel) தரும் உணர்வை ஏற்று, உயிருள்ள வரை இயன்றவரை உழைக்கலாம். உழைப்பாளனுக்கு என்றும் உடல்நலச் சிக்கலில்லை.வளர்ப்பு: குழந்தை வளர்ப்புக் குறித்து தொராதி லா நோட்டில் (Dorothy Law Nottle) கூறுவதுவளர்ப்புச் சூழல் குழந்தை கற்றுக் கொள்ளும் வாழ்க்கை முறை குறை கூறப்பட்டு ஆக்கப் பூர்வமற்ற விமர்சனத்துக்குள்ளாதல் பழிக்கப்பட்ட குற்றவாளி பரிதாபமான சூழல் தனக்காக வருந்துதல் பகைமை சார்ந்த எதிர்ப்பு கலகம் உருவாக்கும் உணர்வு பொறாமைச் சூழல் பகைமை எள்ளி நகையாடும் ஏளனத்தை எதிர்கொள்ளல் தேவையற்ற வெட்க உணர்வும் ஒதுங்கி  வாழும் தயக்க நிலையும் அச்சமான சூழல் ஐயங் கொள்ளும் தயக்கவுணர்வு சகிப்புத் தன்மை சேர்ந்த வெறுப்பின்மை பொறுமை நிறைந்த வாழ்வு ஊக்கமூட்டல் தன்னம்பிக்கையும் உன்னத வாழ்வும் உடன்பாட்டுடன் கூடிய நிறைந்த நட்புணர்வு உலகுக்குத் தேவையான அன்பு உரிய அங்கீகாரம் சிறந்த இலக்கு பகிர்ந்து வாழும் சூழல் பெருந்தன்மை நேர்மையும் கூர்மையும் உண்மையும் நீதியும் பாதுகாப்பு தன்னையும் சுற்றியிருப்போரையும் நம்புதல்நட்பு உலகம் வாழ வளம் தருமெனும் உணர்வு விட வேண்டியவற்றை விட்டுத் தொலைப்போம். தொட வேண்டியவற்றைத் தொட்டு அணைப்போம். "பன்றியுடன் சேர்ந்த கன்றும் மலம் தின்னும்"; சேருமிடம் அறிந்து சேருவதுதான் சிறப்பு; நல்ல தொடர்புகள் நலம் தரும். கேள்வி கேட்க தோன்றிய போது, பதில் சொல்வதற்குப் பெற்றோரைப் பக்கத்தில் கொண்டுள்ள குழந்தைக்கு ஊக்கம் கிடைக்கும். ஒன்றுக்கும் உதவாரென ஒதுக்கப்பட்டோரெல்லாம், உரிய வளர்ப்புத் திறனால் உச்சத்தைத் தொட்டதை வரலாற்றின் பக்கங்கள் நிரப்பியுள்ளன. நடைவண்டி பயிலும் குழந்தை, அதே நடைவண்டியை இன்னொரு குழந்தையின் பயன்பாட்டுக்காக ஓரமாக வைத்து விட்டுத் தானாகவே நடப்பதுதான் வளர்ச்சி. நடைவண்டியே இறுதி வரையில் பயண வண்டியாகப் பயன்படுத்தப்படுமானால், அது தீரா நோயாகும். தேவையான உதவியைக் குறைவாகப் பயன்படுத்தி, விரைவாக வலுப்பெற்றுப் பிறருக்குதவும் நிலை பெறுதலே திறனும் அறிவும் பொதிந்த வளர்ப்பு முறையின் வெற்றியாகும். பழக்கம் வழக்கமாகிறது. வழக்கமே வாழ்க்கையாகிறது.நிறைவு: "தன்னை அறிய தனக்கொரு கேடில்லை" என்றார் திருமூலர். புறத்திலிருந்து வருகின்ற செய்திகளை ஆய்ந்து, அகத்தில் ஊறுகின்ற அறிவை வளர்த்து, அதற்கேற்ப வாழும் துணிவு வேண்டும். "கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வினிதே" என்கிறது இனியவை நாற்பதின் இருபத்தெட்டாம் பாடல். இறப்பின் வருகையை எண்ணுகின்ற வாழ்வின் இனிமையை உணர வேண்டும். 1601 – 1658களில் வாழ்ந்த கிரேசியன் டால்டசர் கணித்தவை, மனித வாழ்வு மலர்ந்திடத் தூண்டுபவை. "இருபதுகளில் மயில் போன்ற அழகும், முப்பதுகளில் சிங்கம் போன்ற வீரமும், நாற்பதுகளில் ஒட்டகம் போன்ற கடின உழைப்பும், ஐம்பதுகளில் வித்தை காட்டி போன்ற பல் நோக்கும், அறுபதுகளில் நாய் போன்ற அலைச்சலும், எழுபதுகளில் குரங்கு போன்று திரியும் மனமும், எண்பதுகளில் ஒன்றுமற்ற நிலையும் மனிதருக்கு வந்து சேரும்" வந்து சேருவது நிதர்சனம். உடல் நலத்தையும் குடும்ப நலத்தையும் பணயம் வைத்துப் பணம் சேர்த்து, இழந்த நலன்களை ஈடு செய்யும் எண்ணத்தில் ஈட்டியவற்றையும் இருப்பவற்றையும் இழந்து தவிக்கும் நிலை தவிர்க்கப்பட வேண்டியது. பெற்ற தாயின் பாரத்தைக் குறைப்பது போல, பிறந்த பூமிக்கு அழுத்தம் தராது மென்மையான வாழ்முறையைக் கற்றுக் கொள்ள வேண்டும். ஓங்கி உயர்ந்த மரத்தின் உச்சங் கிளையிலுள்ள இலையானாலும், பிரியும் நேரம் கூடும் போது, அதிர்வில்லாமல் அமைதியாக அகன்று காற்றோடு கலக்கிறது. வானுயர்ந்த கட்டடத்தைத் தாங்கிட அக்கறை கொண்ட பராமரிப்புடனான தரமுயர்ந்த அடித்தளம் தேவைப்படுவது போல், வனம் நிறைந்த வளர்ப்பு, தரமான மானுடத்தை அமைக்கும். இயற்கையைப் பின்பற்றி உணவு, உணர்வு, உழைப்பு, வளர்ப்பு போன்றவற்றில் நிறைந்து அமைதியடைவோம். வாழ்வை நிறைவு செய்வதில் வளர்ப்பின் வெற்றி தொனிக்கட்டும். வள்ளுவம் வழிகாட்டும் மெய்யுணர்வை வளர்த்து வாழ்வை நிறைவு செய்வோம்.- நா.முத்தையா,  மதுரை"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி