14 January 2016 8:40 pm
வாழ்க்கை என்பது ஒவ்வொரு மனிதனும் பிறந்தது முதல் உலகில் எய்தும் நுகர்ச்சியாக, சூழ்நிலையின் தாக்கத்தால் உருவானதாக, அவரவர் அறிவு நிலைக்கேற்பவும் முயற்சிக்கு ஒப்பவும் வாய்ப்பைப் பொறுத்தும் அமைவதாகிறது. ஒருவனின் வாழ்வைப் போல் மற்றொருவன் வாழ்வு அமைவதில்லை. ஊரும் பேரும் ஒன்றானாலும், வயதும் கல்வியும் ஒன்றானாலும், குடிவழியும் தொழிலும் ஒன்றானாலும், அவரவர் இயல்புக்கும் வாய்ப்புக்கும் ஏற்ப வாழ்க்கைத்தடம் தனித்தனியாகி வெற்றியும் தோல்வியும் & இன்பமும் துன்பமும் வேறுவேறு அளவிலும் நிலையிலும் வாய்ப்பனவாகி வாழ்க்கை வேறுபடுகிறது.உழைப்பு, – உணவு, – உடுக்கை, – உறையுள் யாவும் ஒரே வகையாயினும், வாழ்க்கையை உணரும் வகையில், இன்பதுன்பங்களைப் பொருட்படுத்தும் முறையில், மனநிறைவு கொள்ளும் பக்குவத்தில், அவரவர் மனப்பான்மைக்கு ஏற்ப வாழ்வை உணரும் வகையாலும் அது வேறுபடத்தான் செய்யும். வாழ்க்கை என்பது – வெறும் காலச் செலவு – நாளோட்டம் அல்ல; காலம் ஓர் அளவுகோல். அது ஒருவர் வாழ்ந்திடும் காலத்தைக் கணக்கிடும் கருவியே. அது ஒரு வண்டியின் சக்கரம் சுழல்வதைப் போன்றது. எந்தத் திக்கில் வண்டி செல்கிறது, எதற்காகச் செல்கிறது, அடையும் பயன் என்ன என்பதைப் பொறுத்து, வண்டிப் பயணம் வேறுபடுவது போன்று வாழ்க்கைப் பயணமும் பயன் காணும் வகையினால் வேறுபடத்தான் செய்யும். ஓர் ஓட்டப் போட்டியில் ஈடுபட்ட பலருக்கும் வெற்றிபெறும் ஆர்வமும், தகுந்த பயிற்சியும் இருப்பினும் ஒருவன்தான் முதலிடம் பெற முடியும். ஒரு கல்லூரியில் படித்த பல்லாயிரவரும், ஒரே வகுப்பில் பயின்ற பலரும் ஒரே தகுதி பெறுவதில்லை. குறிப்பிட்ட தொரு நூலைப் படித்த பலரிடமும் அந்த நூல் ஒரே வகையான சிந்தனையை உருவாக்குவதில்லை. திருக்குறள் படித்த பலரும் உணர்ந்த அளவிலும், பின்பற்றும் வகையிலும் ஒரே வகையினர் ஆவதில்லை. வாழ்வு மனிதன் விரும்பியவாறே அமைந்துவிடுவதில்லை. விருப்பமின்றியோ, உடன்பாடின்றியோ எல்லாம் நடத்துவிடவும் இல்லை. விரும்பிய வண்ணம் வாழலாம் என்பது நல்ல நம்பிக்கை. முயற்சியுடையாராக வாழ அது துணையாகும். ஆனால் விரும்பிய வண்ணத்தில் சில குறை ஏற்படலாம். தமது விருப்பத்தில் ஏமாற்றம் ஏற்பட்டுவிட்டதாகக் கருதும் நிலையும் வரலாம். நல்ல நெஞ்சுடையராய்ப் பிறர் நலம் கருதுவாராய், கடமை உணர்வு கொண்டோர்க்கு ஏமாற்றம் குறைவாகத்தான் ஏற்படும். தன்னல நோக்கில், பிறர் வாழ்வைக் கருதாத மனத்தினராய்க் கடமையை மறந்தவர்கட்கு, அவர்கள் விருப்பம்போல் நடக்கும் துணிவும் சூழலும் அமையும் போது, பிறரை வஞ்சிக்கும் மனத்தினராக இயங்குதலால் பெரும் ஏமாற்றமே விளையும். பேராசைக்கு இடந்தராது எளிய வாழ்வில் பழகியவர்கட்கு வறுமையினால் வரும் துன்பம் தாங்கிக் கொள்ளக் கூடியதாகும். பெரியநிலை காணும் பேராசையால் உந்தப்பட்டு, ஆடம்பரமான வாழ்வில் அல்லும் பகலும் திரிந்தவர்கட்குச் செல்வ நிலையில் வீழ்ச்சி ஏற்பட்டால் அதுவே வறுமையிலும் கொடிய துன்பமாகும். நிலத்தில் நேர்நின்று காணும்போது மலையெனத் தோன்றும் யானை, மலையுச்சியில் நின்று காணும்போது பூனையோ எனத் தோன்றும் பெருஞ்செல்வரை – அவர்தம் சூழலைக் காணும்போது, தம்மை வறியராய் எண்ணும் நிலைக்காளானோர், அடுத்த வேளை உணவுக்கு உழைப்போரைக் காணும்போது தம் நிலையே ‘செல்வவாழ்வு’ என்று உள்ளங் கொள்ளலாகும். மனம் அப்படித்தான், நிலைக்கேற்ற நினைப்பு கொள்கிறது. அந்த நினைப்பும் – பிறரோடு ஒப்பு நோக்குவதிலேயே உருவாகிறது. மகளிரின் நெஞ்சில் ஏற்படும் எண்ணத்தில் பெரும்பகுதி – தம்மைப் போன்றவர், ஒத்தவர் என்று தாம் கருதிக் கொண்டிருக்கும் அண்டை வீட்டு மகளிர், உறவுப் பெண்கள் உடுத்திய சேலையையும் அணியும் நகைகளையும் பார்த்ததால் உருவானதே. தம் குடும்ப வருமானம் &- பிறர் குடும்ப வருமானம், தமது குடும்பப் பொறுப்பு வகை & பிறர் குடும்பப் பொறுப்பு வகை முதலானவை வேறுபடும் அளவை உணரக்கூடிய மகளிரும்; சேலையும் அணிமணியும் இன்றியமையாதவை அல்ல, அவற்றால் வாய்க்கும் பெருமை எதுவாயினும், அது உண்மையல்ல என்று தெளிந்த மகளிருமே, அந்த நோக்கத்திலிருந்து விடுபட்டவராவர். காலம் மாறுவதால் கருத்து மாறுகிறது. மாறுவதே வளர்ச்சியின் விளைவு. நல்லதைத் தேர்ந்து ஏற்கும் உரிமை மனிதனுக்கு உண்டு. நல்லவற்றைப் போற்றி, அல்லவற்றை நீக்கி, எல்லோரும் வாழ ஏற்றதைச் செய்வதே மனிதத்தன்மை.யாதும் ஊரே யாவரும் கேளிர்!உலகம் வாழ நாமும் வாழ்வோம்!என்பதே மனித வாழ்வின் உயர்ந்த குறிக்கோள்!அன்பின் வழியது உயிர்நிலை; அதனை வளர்ப்பதே மனிதனின் அறிவுடைமை! மனித வாழ்வு மேம்படுதற்கு வேண்டிய இப்படிப்பட்ட பொது நியாயங்கள், மனித மனத்தில் ஆழ வேரூன்றுமானால் – மக்கள் தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராக விளங்குவர், அவர்கள் எந்தத் துன்பத்தையும் துயரத்தையுங்கூட உலகியல்பு இதுவெனக் கொண்டு, தாங்கும் ஆற்றல் பெறுவதும் எளிதாம். தனி மனிதனின் ஆற்றல் வேறு, தொண்டு வேறு, அறிவுத்திறன் வேறு, அது மற்றவர்கட்குப் பயன்படுதல் வேறு. புலமைப் பேராற்றல் வாய்ந்த ஒருவன், அவையோர் ஏற்றிட எடுத்துக்கூறும் ஆற்றல் அற்றவனாகலாம். அறிவிற் சிறந்தவனாக மதிக்கப்படும் ஒருவன் – மக்கள் உரிமைக்கு மாறாக வாதிடலாம். எனவே அவரவர் அறிவுத் திறன் எதுவாயினும் – மக்கள் நலம் நாடிய செயலாலேயே அது பயனுடையவனிடம் செல்வம் சேர்ந்தால், உள்ளூரில் பயன் மரம் பழுத்து நின்றது போலவும், ஊரார் நீருண்ணும் குளம் நீர் நிறைந்தது போலவும் பலருக்கும் பயன்படும் என்றார் வள்ளுவர்.பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்நயனுடை யான்கண் படின்""ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்பேரறி வாளன் திரு"ஆகிய குறட்பாக்கள் சமுதாயத்திற்குப் பயன்படும், சிறப்புடையாரை நயனுடையான் என்றும், பேரறிவாளன் என்றும் குறித்தமை காணலாம். வாழ்க்கை நேர்வழியில் – திறந்த புத்தகமாக நடைபெறுவதே சிறப்பு. மறைத்து வாழவேண்டிய நிலையைத் தேடிக் கொள்வோர் -மருட்சியுடன் வாழ நேரிடுவதுடன், பிறர் நெஞ்சில் ஐயுறவை விளைவித்து நம்பிக்கையை இழப்பர். நம்பிக்கையும் நாணயமும் காப்பாற்றப் படுவதிலேயே வாழ்க்கையின் பாதுகாப்பு இருக்கிறது. பண்புடைய கணவனும் – மனைவியும் இல்லற வாழ்வில் என்றும் தோற்பதில்லை. மனத்தால் இணைந்த வாழ்வு, மணக்கும் வாழ்வாம்! பண்பின் அருமை – அதனைக் காவாதார் உறும் இழுக்கினைக் (கேவலம்) காணும்போதே விளங்கும். சீர்திருத்த நோக்கத்தை ஏற்றவர்கள், மிகவும் சிக்கனமாக நடத்த முடியும். ஒரு தலைவர், இரண்டு பூமாலைகள் அளவில் செலவைச் சுருக்கமாகவும் செய்யலாம். அதற்கு மேற்பட்டவை எல்லாம் அவரவர் வசதி – வாய்ப்பு – செல்வாக்கு ஆகியவற்றையும், நட்பும் உறவும் தொடர்புமுடையார் எண்ணிக்கையையும் பொருத்ததாகும். இத்திருமண விழா நிகழ்ச்சிக்குப் பெருந்தொகை செலவு செய்ய இயலாதாரும், மாத ஊதியத்தைக் கொண்டே வாழ்க்கையை நடத்துவோரும், செலவையும் திருமண வேலைகள் பலவற்றையும் குறைத்திடப் பதிவுத் திருமணம் செய்வதும் விரும்பத்தக்கதே. மணமக்களின் நெருங்கிய குடும்பத்தாரும் நண்பர் சிலரும் கலந்து கொண்டாலே போதும். பல குடும்பங்களுக்குத் திருமணச் செலவு ஒரு பெருஞ்சுமையாகத் தான் உள்ளது. தமது மக்களின் திருமணங்களை நடத்துவதற்கெனக் கடன்பட்டுக் கடன்பட்டே நிலபுலங்களை இழந்த செல்வக் குடும்பங்கள் பல. நமது மக்களில் பெரும்பாலோர் அன்றாட வாழ்க்கை நடத்துவதற்கான ஊதியம் தேடும் உழைப்பிலேயே உழல்வதாலும், தகுந்த கல்வி வாய்ப்பு இன்மையாலும், பழமையில் ஊறிய மனத்தினராவதாலும் பகுத்தறிவைப் பயன்கொள்ள வல்ல சுயசிந்தனை பெற முடியாதவர்களாகவே உள்ளனர். தலைமுறை பலவாகப் படிப்பறிவைப் பெற முடியாத சூழலில் தள்ளப்பட்டவர்கள், தமது அறிவையே – நம்பாதவர்களாகி யுள்ளனர். "படித்தவர்களே சிந்திக்கக் கூடியவர்கள்; படிக்காத நமக்கெப்படி அவை விளங்கும்" என்னும் அவநம்பிக்கையே அவர்களைச் சிந்திக்க விடுவதில்லை. பகுத்தறிவைப் பயன்படுத்திச் சிந்திக்கும் திறனிழந்தமையால், அவர்கள் நாளும் மனிதத் தன்மையை இழந்தவர்களாகிறார்கள். நமது மகளிரின் நிலையோ பல வகையிலும் ஆடவரின் நிலையினும் தாழ்ந்தே உள்ளது. குறிப்பாக – இருட்டறையில் உள்ளதொரு குருட்டுச் சமுதாயமாகவே நாம் வாழ்கிறோம். அன்றாட வாழ்வில் நாம் அறிய நேரும் செய்திகள், பொருள்கள், தொழில்கள், போட்டிகள், பலன்கள், விலைவாசி ஆகியவற்றை அவரவர் சூழ்நிலைக்கேற்ப அறிந்தவர்களாக இருப்பதொன்றே ‘அறிவுடைமை’யாகக் கருதப்படுகிறது. நமது நம்பிக்கைகள், எண்ணங்கள், பழக்கவழக்கங்கள், முயற்சி, பயன், சூழ்நிலை மாற்றங்கள், உலகத்தின் போக்கு, நாம் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி மாற்றங்கள், நமது சுயமரியாதை, ஜனநாயக உரிமைகள், சமுதாயச் சீர்த்திருத்தங்கள் முதலானவை பற்றி அறிந்து கொள்ளவோ, எண்ணிப் பார்க்கவோ முயற்சிப்பதில்லை. சிந்திக்க முற்படாத சமுதாயம் – செயலற்ற மனிதனாகவே முடங்கும். சமுதாயக் கூட்டுணர்வு மங்கும்.சிந்திக்கத் தெரியாதவன் முட்டாள்.சிந்திக்கத் தெரிந்தும் சிந்திக்காதவன் அறிவிலி, சிந்தித்துத் தெளிந்தும் அதை ஏற்காதவன் கயவன், சிந்தித்துக் தெளிந்ததை ஏற்றுப் பின்பற்றுபவன் அறிஞன், என்றான் ஒரு சிந்தனையாளன் அப்படிச் சிந்திக்கத் தூண்டுவதற்கு – சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு நமது திருமண நிகழ்ச்சிகளே ஏற்றதொரு வாய்ப்பாகும். ஆணும் பெண்ணுமாய் உறவும் சுற்றமும், ஊரும் நட்பும் கூடியுள்ள மண விழாக்களே அவர்களை எல்லாம் சமுதாயச் சிந்தனை கொள்ளச் செய்யவும், பகுத்தறிவு மனப்பான்மை ஏற்கச் செய்யவும் வாய்ப்பான அமையமாகும். எனவேதான் சுயமரியாதைத் திருமணங்களில் பலரைச் சொற்பொழிவாற்றச் செய்வது ஒரு வழக்கமாகி உள்ளது. கூடியுள்ள மக்களிடையே அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டிய பல கருத்துகளை – குறிப்பாகத் திருமண முறை, சீர்திருத்தம், பகுத்தறிவைப் பயன்படுத்தல், தன்மான உணர்வு, சமுதாயக் கடமை, வாழ்க்கை நெறி முதலானவை குறித்துப் பேசுவது பயனுடையதாகின்றது. அவையினரின் நிலை அறிந்தும், அவர்கள் ஏற்கக்கூடிய முறை அறிந்தும் பேசுவது அவர்களைச் சிந்திக்கத் தூண்டும். மணவிழாவில் ஒருவர் தலைமை ஏற்பதும் – சிலர் சொற்பொழி வாற்றுவதும் புரோகிதருக்குப் பதிலாக வந்தவர்கள் ஆற்றும் பொருளற்ற சடங்குகள் அல்ல. குப்பையைக் கூட்டி அகற்றி, மெழுகிய தரையில் கோலம் போடுவது – குப்பைக்குப் பதிலாகக் கோலம் இடப் பெற்றதாகாது. குப்பை நீங்கியதற்கான தூய்மையின் அடையாளம் கோலம். அது போன்ற பயனுள்ள நிகழ்ச்சியே சொற்பொழிவும் வாழ்த்துரையும். திருமண நிகழ்ச்சியைச் சமுதாய முன்னேற்றத்துக்கு ஒரு கருவியாகக் கொள்வோர், மூன்று நான்கு பேரை மட்டுமே தேர்ந்து வாழ்த்துரை வழங்கச் செய்ய வேண்டும். திருமணம் ஒரு மணியில் இருந்து இரண்டு மணி நேரத்தில் நிறைவடைய வேண்டும். தலைவரோ முதன்மையான பேச்சாளரோ விரிவாக விளக்கிப் பேசும் வாய்ப்பை உருவாக்க வேண்டும். திருமண நிகழ்ச்சி மணமக்களுக்கும் மற்றவர்கட்கும் மகிழ்ச்சியை ஊட்டுவதோடு, புதிய எண்ணங்களையும் மனமாற்றத்தையும் ஏற்படுத்தப் பயன்பட வேண்டும் என்பதை வாழ்த்துரை வழங்குவோர் கருத்தில் கொள்ள வேண்டும். இந்தக் காலத்தில் ஒருவரையொருவர் அறிந்தும் – பழகியும் – நட்பு கொண்டும் தேர்ந்தும் மணக்கும் நிலையில் இவை மிகையான சடங்குகளே. பழமையில் இருக்கும் பிடிப்பும், திருமணம் என்றால் மணமக்களைக் கொண்டு நடத்தும் சில நிகழ்ச்சிகள் தொடர வேண்டும் என்னும் விழைவும், உறவின் முறையார் கலந்து மகிழ வாய்ப்பாவது என்னும் எண்ணமுமே இவை தொடர ஏதுவாகின்றன.திருமணம் நிறைவேறியபின், மணமக்களை, மணமகன் அல்லது மணமகள் வீட்டிற்கு அழைப்பதும், அங்குச் சில நாட்கள் விருந்து நடத்துவதும் அவரவர் குடும்ப, சமூக வழக்கமாக நிகழ்கின்றன. மணமக்கள் இருவரும் இணைவிழைச்சு கொண்டு களித்திடுதற் கென ஒரு நாளையும் – நேரத்தையுங் கூடத் தேர்ந்து முகூர்த்தம் பார்த்து – சாந்தி முகூர்த்தம் நடத்துவது பல குடும்பங்களில் இன்றும் தொடர்வதாகும். திருமணம் ஆனபின் பல நாட்கள் இடையீடும். அதற்கொரு முகூர்த்தம் பார்க்கச் செய்வதும் இக்காலத்தில் வேண்டப்படுவதல்ல. கருத்தொருமித்து மணங்கொண்ட வயது வந்த மணமக்கள் இயற்கையாக உளம்பூரித்த நிலையில், உடலுறவு கொள்ள உரிமையுடையராய் விட்டு விடுவது காலத்தின் தேவையாகும். அவர்களிடையே மலரக்கூடிய இயல்பான இன்பத்திற்குக்கூடச் செயற்கையான சடங்குகள் அறிவுடைமையாகா. "திருமணம் என்பது இருவர் இணையும் வாழ்க்கையை உறுதிப்படுத்தும் முறை என்பதைவிட, இருவர் வாழ்க்கை இணைப்புக்கு உலகம் உடன்படும் முறை என்பதே பொருந்தும்." என – டாக்டர் மு.வ வின் கருத்தை நினைவில் நிறுத்துதல் நலம். – பேராசிரியர் க.அன்பழகன்"