வெள்ளிப் பணமாகும் வேர்க்கடலைத் தோல்! - தமிழ் இலெமுரியா

15 February 2017 6:44 pm

தமிழ்நாட்டில் விளையும் பணப் பயிர்களில் ஒன்று வேர்க்கடலை. இதை நிலக் கடலை என்றும் மணிலா என்றும் கூறுவார்கள். இதை ஊடு பயிராகவும் பயிடலாம். இறைவைப் பாசனத்தின் மூலமாகவும் மானாவாரியாகவும் கடலைப் பயிரிடப்படுகிறது. வேர்க்கடலைப் பருப்பில் இருந்து கடலை எண்ணெய் எடுக்கிறார்கள். தென் மாநிலங்களில் உணவு எண்ணெய் என்று முக்கியமாகக் குறிப்பிடுவது கடலை எண்ணெயைத்தான். வேர்க்கடலையை விளைவிக்கும் விவசாயி அதை விளைவிப்பதோடு சரி, முன்பு செக்குகள் மூலம் கடலை எண்ணெய் எடுத்து வந்தார்கள். இப்பொழுது செக்குகளின் இடத்தை எந்திரங்கள் பிடித்துக் கொண்டு விட்டன. கடலை எண்ணெய் தயாரிப்பது பெருந் தொழிலாகி விட்டது. எண்ணெய் வியாபாரம் பெரும் வர்த்தகம் ஆகிவிட்டது. செக்குகள் மூலம் கடலை எண்ணெய் எடுக்கும் பொழுது மீதமுள்ள வேர்க்கடலைத் தோலைப் பெருமளவில் திரட்டுவது கடினமான வேலையாக இருந்தது. இப்பொழுது எந்திரங்கள் மூலம் கடலை எண்ணெய் தயாரிக்கப் படுவதால், ஆண்டு முழுவதும் வேர்க்கடலைத் தோலைப் பெருமளவில் மிக எளிதாக வாங்க வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் விளையும் 100 விழுக்காடு வேர்கடலையில் 35விழுக்காடு அதன் தோலாகும். இதனை ஆங்கிலத்தில் ‘எபிகார்ப்’ என்பார்கள். இந்த வேர்க்கடலைத் தோல் இப்பொழுது ஒரு எரிபொருளாகப் பயன்படுகிறது. வேர்க்கடலைத் தோலை அரைத்து செங்கல் வடிவிலோ, சிறிய உருளைகள் வடிவிலோ மாற்றி சிலர் எரிபொருளைத் தயாரிக்கிறார்கள். கிராமப் புறங்களில் சாணத்துடன் கலந்து வரட்டி தட்டி அடுப்பெரிக்கப் பயன்படுத்துகிறார்கள். இன்னும் ஒரு பகுதி குப்பையுடன் சேர்த்துக் கொட்டப்படுகிறது. குப்பையுடன் சேர்த்து மக்கவிடப்பட்ட வேர்க்கடலைத் தோல் நல்ல இயற்கை உரமாகிறது. இவற்றை விட அனுகூலமான முறையில் வேர்க்கடலைத் தோலைப் பயன்படுத்தலாம். வேர்க்கடலைத் தோல் தொழிலை  குறைந்த முதலீட்டில் செய்யலாம். இதனால் இலாபமும் அதிகமாகும். வெள்ளிப் பணத்தைக் குவிக்க உதவும் வேர்க்கடலைத் தோல் தொழிலைத் தொடங்குவது எப்படி? வேர்க்கடலைத் தோலைப் பயன்படுத்தி ஒட்டுப் பலகை (பிளைவுட்), நார்ச் சத்துணவு, கடலைப் பருப்பின் மேல் ஒட்டியிருக்கும் சிவப்பு நிற உள்தோலில் இருந்து சாயப்பொருள், டானின் என்ற வேதிப் பொருள் ஆகியவற்றைத் தயாரிக்கலாம்.ஒட்டுப்பலகை முதலில் வேர்க்கடலைத் தோலை வேற்று அசுத்தங்கள் இல்லாமல் சுத்தம் செய்ய வேண்டும். வேர்க்கடலைத் தோல்  குவியலை ஒருபுறமிருந்து கிளறிக்கொண்டே சென்று வேற்றுப் பொருள்களைப் பொறுக்கி அகற்றிவிடலாம். அடுத்தகட்டமாக, வேர்க்கடலைத் தோலைச்  சன்னமான தூளாக அரைக்க வேண்டும். இதற்கு தேவையான அரவை எந்திரங்களை வட மாநிலமான அரியானாவிலிருந்து பெறலாம். நமது தேவைக் கேற்றபடி கோயமுத்தூரில் இருந்தும்  இந்த எந்திரங்களை தருவிக்கலாம். தூள் தூளாக அரைக்கப்பட்ட வேர்க்கடலைத் தோலுடன் அடுத்து இராசாயனப் பசையைக் கலக்க வேண்டும். இதற்கும் கலவை  எந்திரங்கள் உள்ளன. குறிப்பிட்ட விகிதத்தில் இரசாயனப் பசை கலக்கப் படவேண்டும். கலவை  சீராக அமைய எந்திரமே பொருத்தமானதாகும். ஒருமணி நேரம் கழித்து அந்த தூள் கலவையைக் கடினப்படுத்தவும், செய்யவிருக்கும் பிளைவுட்டின் மேற்பரப்பு பளபளப்பாக அமையவும் ‘ஹார்டனர்’, ‘மெழுகு’ ஆகியவற்றைக் கலக்க வேண்டும். நீரினால் பிளைவுட்டுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை மெழுகு மட்டுப்படுத்தும். பிளைவுட்டுகளைக் கறையான் மற்றும் வண்டுகள்  துளைக்காதிருக்க பூச்சிக்கொல்லி மருந்துகளை உரிய விகிதத்தில் சேர்க்க வேண்டும். இவ்வாறு  தயாரிக்கப்பட்ட கலவையை ஒரே சீராகப் பரப்பி, சமச்சீரான வகையில் அழுத்தம் தரவேண்டும். அப்பொழுதுதான் ‘பார்ட்டிகிள் போர்டு’ இறுக்கமானதாகவும் வலுவுள்ளதாகவும் மேற்பரப்பு சமமானதாகவும் அமையும். இதற்கான ‘அழுத்தும்’ (பிரசர்) எந்திரங்களைக் குறிப்பிட்ட நீளம், அகலம் உள்ளதாக நாமே தயாரித்துக் கொள்ளலாம். சாதாரணமாக 7 அடி நீளம், 4 அடி அகலம்  உள்ள போர்டுகளே தயாரிக்கப் படுகின்றன. கலவையைக் கொட்டி ‘அழுத்தும்’ எந்திரத்தின் மூலம் அழுத்தும்போது  அழுத்தம் சமச்சீராக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் பலகை சமமான கனம் உள்ளதாக கிடைக்காது. பலகை தரம் வாய்ந்ததாகவும், கூடுதல் வலு உள்ளதாகவும் அமைய அத்துடன் மரத்தூளையும் சேர்த்துக் கொள்ளலாம். மரம் அறுக்கும் பட்டறையில் இருந்து மரத்தூளைக் குறைந்த விலையில் பெறலாம். வேர்க்கடலைத் தோலில் இருந்து ‘பார்ட்டிகிள் போர்டு’ களைத் தயாரிப்பதோடு, கனமான பிளைவுட்டுகளையும் இவற்றை பயன் படுத்தி தயாரிக்கலாம். இரு மெல்லிய பிளைவுட் பலகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றின் நடுவே குறிப்பிட்ட அளவில் வேர்க்கடலைத்  தூள் கலவையைப் பரப்பி, அதன் மீது சமமான அழுத்தம் பரவச் செய்ய வேண்டும். இம்முறை மூலம் கனமான ஆனால் விலை மலிவான பிளைவுட்டுகளைத்   தயாரிக்கலாம்.  எண்ணெய் சுத்தகரிப்பு ஆலைகளில் உபபொருளாக ‘பிட்யுமின்’ என்ற கருப்பு பசைப் பொருள் கிடைக்கிறது. கம்பந்தட்டை,சோளத்தட்டை, வேர்க்கடலைத் தோல் ஆகியவற்றை அரைத்துத் தூளாக்கி, அவற்றுடன் இந்த கருப்பு பசையைக் கலந்து ‘பார்ட்டிகிள் அட்டை’களைத்  தாயாரிக்கிறார்கள். பல வண்ணங்களில் கூட இந்த பர்ட்டிகிள் அட்டைகள் தயாரிக்கப் படுகின்றன. சுவிட்சர்லாந்தில் கூட இயற்கையான புல்வகைத்  தாவரங்களின்  தாள்களைப் பயன்படுத்தி உள்-கூரைகளுக்கான பலகைகளைத்  தயாரிக்கிறார்கள். இவற்றில் குளிர்பதன அறைகளுக்கு என்றும், சாதாரண அறைகளுக்கு என்றும் பல வகை வண்ணப் ‘பார்ட்டிகிள் அட்டை’களும் உண்டு. வேர்க்கடலைத் தோலைப் பயன் படுத்தும் தொழில்களுக்கு தேவையான ‘பிட்யுமின்’ பொருளை சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையிலும், களப்பாலில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையிலும் பெறலாம். தேவையான முக்கிய கச்சாப் பொருளான வேர்க்கடலைத் தோல் மரத்தூள், பிட்யுமின் முதலியவற்றை நம் மாநிலத்திலேயே பெற முடியும். இந்தச் சூழ்நிலை தொழிலுக்கு நல்ல வாய்ப்பாகும்.நார்ச்சத்துணவு பிளைவுட், பார்ட்டிகிள் போர்டு தயாரிக்க உதவும் வேர்க்கடலைத் தோல், சிலவகை நோயாளிகளுக்குத் தேவையான உணவைத் தயாரிக்கவும் உதவுகிறது. குடல் புற்றுநோய், இருதய நோயில் ஒருவகை, வயிறு தொடர்பான கோளாறுகள் உள்ளவர்களுக்கு நார்ச்சத்துள்ள உணவு அவசியம். குடல் இயல்பாக இயங்க, உணவில் உள்ள நார்ச்சத்து உதவுகிறது. மலச்சிக்கலை முழுக்க ஒழிக்கிறது. நார்ச்சத்தில் ‘செல்லுலோஸ்’, ‘ஹெமிசெல்லுலோஸ்’, ‘விக்னின்’ ஆகிய சத்துகளைத் தவிர, கியூடின், புரதம், பொட்டாசியம், மக்னீசியம் போன்றவையும் உள்ளன. இவை உடலுக்குத் தேவையான சில தாது உப்புகளின் தேவையை பூர்த்தி செய்ய உதவுகின்றன.  நார்ச்சத்து உள்ள உணவுப் பொருள்களில் மாவு சத்தின் அளவு குறைவாக இருப்பதால், உடல் பருமனை குறைக்க விரும்புவோர், இதைத்  தாராளமாக சாப்பிடலாம். அளவுக் கட்டுப்பாடுகளை உறுதியாகப் பின்பற்றுவது அவசியமில்லை. உடல் அழகாக இருக்கும். வேர்க்கடலைத் தோலைச் சாப்பிடக்கூடிய நார்சத்து உணவுப்பொருளாக மாற்றுவதற்கு தேவையான தொழில் நுணுக்கம் மிகவும் எளிமையானது. சுத்தமான வேர்க்கடலைத் தோலைப் பெரிய தொட்டிகளில் கொட்ட வேண்டும். சூடான தண்ணீரை தொட்டிகளில் ஊற்றவேண்டும். வேர்க்கடலைத் தோல் மூழ்கும் அளவிற்குச் சூடான நீரை ஊற்றிய பின்பு, சலவைத்  தூளைக்  (‘சாஃப்ட் டிடெர்ஜென்ட்’) கொட்டி நன்கு கழுவி விடவேண்டும். சுத்தமான  தண்ணீரில் நன்கு  கழுவுவது அவசியம். இல்லாவிடில் சலவைத் தூளின் வேதிப்பொருள் வேர்க்கடலைத் தோலில் தங்கிவிடும். சுத்தமான வேர்க்கடலைத் தோலை நன்கு காயப்போட வேண்டும். வேர்க்கடலைத் தோல் நன்றாக மொறு மொறுவென்று காய வேண்டும். அதன் பிறகு பெரிய வாணலி மூலமோ அல்லது வறுக்கும் எந்திரங்களைக் கொண்டோ 70 முதல் 80  டிகிரி உட்பட்ட வெப்பத்தில் வறுத்தெடுக்க  வேண்டும். வேர்க்கடலை தோல் கருகி நிறம் மாறிவிடக்கூடாது. இவ்வாறு  வறுத்தெடுக்கும் தோலை சன்னமான தூளாக்க வேண்டும். அதை 100ஆம் எண்ணுள்ள சல்லடைகளை கொண்டு சலிக்க வேண்டும். இவ்வாறு சலித்த பின் கிடைக்கும் மாவு மென்மையாக இருக்கும். இது முழுமையான நார்ச்சத்து ஆகும். இது நாளடைவில் கெட்டுவிடாமல் பாதுகாக்க சில வழிமுறைகள் உள்ளது. தண்ணீர் படாமல் தவிர்ப்பதன் மூலமும் ஈரப்பதம் உள்ள காற்று படாமல் பாதுகாப்பதன்  மூலமும் இந்த மாவை நீண்ட நாளைக்குக் கெட்டுப்போகாமல் வைத்திருக்கலாம். இந்த நார்ச்சத்து மாவுப் பொருள்களை மற்ற தானிய மாவுகளுடன் கலந்து அருமையான உணவுப் பொருள்களைத் தயாரிக்கலாம். நார்ச்சத்து 60 விழுக்காடு மற்ற தானிய மாவுகள் 40 விழுக்காடு என்கிற விகிதத்தில் கலக்க வேண்டும். இந்த கலப்பு மாவு அருமையான உணவுப் பொருளாகும். இதனைக் கொண்டு ரொட்டி, மாச்சில் (பிஸ்கட்டு) போன்றவற்றைத் தயாரிக்கலாம். முழுமையான நார்ச்சத்துள்ள மாவை வர்த்தக ரீதியாக விற்பனைக்கு அனுப்புமுன், சில வகையான சோதனைகள் அவசியம் செய்ய வேண்டும். ‘அஃப்லாடாக்ஸின்’ என்ற பொருள் நார்ச்சத்தில் உள்ளது. நார்ச்சத்தின் அளவு, உணவுப்பொருளின் காரத்தன்மை, அதன் நிறம் ஆகியவற்றைத் தகுதி வாய்ந்த அய்வகங்கள் மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டும். நார்ச்சத்தில் உள்ள புரத அளவு, ஈரப்பதம், நிகர நார்ச்சத்தின் விழுக்காடு, பொட்டாசியம், மக்னீசியம்,  துத்த நாகம் போன்ற உலோகத் தாது உப்புகளின் அளவுகள் ஆகியவற்றையும் ஆய்வகங்கள் மூலம் கண்டறிய வேண்டும். அந்த விவரங்களை சிப்பங்களின் மேல் புறத்தில் அட்டவணையாக அச்சிட வேண்டும். இத்தகைய ஆய்வும் அவற்றை அட்டவணைப் படுத்தி சிப்பத்தின் மேற்பகுதியில் குறிப்பிடுவதும், இந்த நார்ச்சத்துப் பொருளை பயன்படுத்த நோயாளிகளுக்கு அல்லது நார்ச்சத்து தேவைப்படுவோருக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்க  வசதியாக இருக்கும்.  வணிக ரீதியில் இந்த தொழில் வெற்றி பெற இவற்றை அவசியம் செய்ய வேண்டும். சாயப்பொருள், டானின் வேர்க்கடலைப் பருப்பின் மேற்புறம் ஒட்டியிருக்கும் சிவப்பு நிற உள் தோலில் இருந்து சிவப்பு வண்ணச் சாயப் பொருளைப் பிரித்தெடுப்பதையும் உப தொழிலாகச் செய்யலாம். சுமார் இரண்டரை கிலோ சிவப்பு நிற உள்தோலில் இருந்து 89 கிராம் சுத்தமான சிவப்பு நிறச் சாயப் பொருளைத் தயாரிக்கலாம். இத் தோலில் இருந்து ‘டானின்’ சத்தையும் பிரித்தெடுக்கலாம். ‘லியுக்கோ-அந்தோ சயனின்’ என்ற டானின்-முன் பொருளும் இதிலிருந்து கிடைக்கிறது. இந்த பொருளுக்கு ஏற்றுமதி வாய்ப்பும் உள்ளது. எனவே நாம் குப்பையாக நினைக்கும் வேர்கடலைத் தோலை முறையாக பயன்படுத்தினால் வெள்ளிப் பணமாக்கலாம்.-என்.கே.சண்முகம்

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி