17 June 2014 8:08 am
அப்பா தமிழாசிரியர்ங்கிறதால பள்ளிக்-காலத்திலேயே இலக்கிய ஆர்வம் வந்திடுச்சு. நிறையப் படிப்பேன். ‘கதிரவன்’ங்கிற புனைபெயரில் கதைகள் எழுதுவேன். ‘தேன்துளி’ங்கிற பேர்ல ஒரு கையெழுத்துப் பத்திரிகையும் நடத்தினேன். சிவகங்கையைச் சேர்ந்த பல படைப்பாளிகள் அந்தப் பத்திரிகையில் எழுதினாங்க. அப்படி ஒரு நண்பர் எழுதின ஒரு கதை பெரிய சர்ச்சையை கிளப்பிடுச்சு அந்தப்பகுதியில். ஊர்லேயே தலைகாட்ட முடியாதபடி நெருக்கடி அதிகமானதால சென்னைக்கு கிளம்பி வந்துவிட்டேன். என்னோட கூடப் பிறந்தவங்க ரெண்டு சகோதரர்கள். அம்பத்தூர் தொழிற்-பேட்டையில வேலை செஞ்சுக்கிட்டிருந்தாங்க, அவங்ககூட தங்கிக்கிட்டு அவங்க வேலை செஞ்ச நிறுவனத்துலேயே கணக்கு எழுதுபவராக வேலைக்குச் சேர்ந்தேன். என்னோட வேலையைக் கவனிச்ச முதலாளி அவர் கட்டிக்கிட்டிருந்த கோவிலோட திருப்பணிப் பொறுப்பை என்கிட்ட ஒப்படைத்தார். அதையும் திறம்படச் செய்து முடித்தேன். பிறகு அங்கிருந்து விலகி மதுக்கடையில் மேலாளராக வேலைக்குச் சேர்ந்தேன். அந்த கடை உரிமையாளருக்கு நிறையக் கிளைகள் இருந்துச்சு. எல்லாக் கடைகளுக்கும் போய் பணம் வசூல் பண்ணனும். பல நாட்கள் பணத்துக்கு மேலயே படுத்து உறங்கியிருக்கேன். ஓரளவுக்கு நல்ல சம்பளம், தேவையான வசதிகள் இருந்தும் அந்த வேலை அவ்வளவா மனசுல ஒட்டல பச்ச மண்ணும் சுட்ட மண்ணும் மாதிரி… பாரம்பரியமான ஆசிரியர் குடும்பம். நானும் பட்டதாரி. என்னோட இயல்புக்கும் மனநிலைக்கும் ஒத்துவராத பொருந்தாத அந்த வேலையை உதறிவிட்டு சொந்தமா ஒரு தொழில் தொடங்கலாம்னு சிந்திச்சேன். அந்தத் தருணத்தில் அம்பத்தூர் ரயில்நிலையம் பக்கத்துல மதராஸ் கஃபேயை ஒட்டி ஒரு பெட்டிக்கடை விற்பனைக்கு வந்துச்சு. என்னிடம் இருந்த பணத்தைக் கொண்டு அந்தக் கடையை வாங்கி நடத்தினேன். இன்னொரு பக்கம் தீவிரமா எழுதவும் தொடங்கிட்டேன், திரைத்துறையில சாதிக்கினுங்கிற கனவோட நிறையப் பாடல்கள் கவிதைகள் எழுதினேன். தயாரிப்பாளரும் இயக்குநருமான சித்ரா லட்சுமணன் அவர்கள அடிக்கடி போய்ப் பார்ப்பேன், அவரோட யோசனைப்படி திரைப்படப் பயிற்சிக் கல்லுரியில சேர்ந்தேன். சத்தியராஜ் நடித்த ‘ஜல்லிக்கட்டு’- படத்துல உதவியாளரா வேலை செய்தேன். ஆனா நான் எதிர்பார்த்த மாதிரி வண்ணத்திரையில வாய்ப்புகள் கிடைக்கல. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நான் ஆசிரியரா ஆகனும்னு ஆசை. எனக்கு ஆசிரியர் பணி மேல ஆர்வம் இருந்தாலும் அதைவிட அதிகமா சினிமா கனவு இருந்துச்சு. சினிமாவுக்கு அலைஞ்ச நேரம் போக மற்ற நேரங்களில் பெட்டிக்-கடையைத் திறப்பேன். ஆசினிப் பள்ளியோட தாளாளரும் மாஸ்டர் ஆஃப் லா படிச்ச கல்வியாளருமான உடையப்பா என்னோட பெட்டிக்கடைக்கு அடிக்கடி வந்து போவார். நான் பட்டப்படிப்பு முடிச்சவன்னு தெரிஞ்சுக்கிட்ட அவர், ஆசினிப் பள்ளிக்கு ஆசிரியரா நியமிச்சார். சினிமாவோட எதார்த்தத்தைப் புரிஞ்சுக்கிட்ட நான், அம்மா அப்பாவோட கனவையாவது நிறைவேற்றலாங்கிற எண்ணத்துல பள்ளிக்-கூடத்துல ஆசிரியரா சேர்ந்தேன். சென்னைக்கு வந்து வேலைக்குச் சேர்ந்ததுல இருந்தே எங்க வசிப்பிடத்தச் சுத்தியிருக்கிற பிள்ளைகளுக்கு மாலை நேரத்துல தனிப்பயிற்சி (டியுசன்) எடுப்பேன். பெட்டிக்கடை நடத்தினவரைக்கும் அந்த வேலைய மட்டும் தொடர்ந்து செஞ்சுக்கிட்டு வந்தேன். அதனால ஆசிரியர் பணியில எனக்கு எந்தக் குழப்பமும் ஏற்படலே. நான் ஆசிரியர் ஆனதுல என் அம்மாவுக்கு ரொம்ப மகிழ்ச்சி பி.எட்., படிக்கச் சொல்லி வற்புறுத்தினாங்க. பி.எட்., முடிச்சதும் சொந்தமா நாமளே ஒரு பள்ளிக்கூடம் தொடங்கலாமேங்கிற எண்ணம் வந்திடுச்சு. ஆனால், கையில அதற்கான முதலீடு இல்லை. என்னோட தாய்மாமா சேது பாஸ்கரா பெரிய சினிமா தயாரிப்பாளர். ‘ஜப்பானில் கல்யாணராமன்’ உள்பட பல திரைப்படங்களத் தயாரித்தவர். அவர்கிட்டப் போய் பள்ளிக்கூடம் ஒன்னு தொடங்கப்போறேன் உதவி செய்யிங்கனு கேட்டேன். பத்தாயிரம் ரூபாயக் கொடுத்து என்னை உள்ளன்போடு வாழ்த்தினார். அம்பத்தூர்ல ரெண்டு இடங்களைத் தேர்வு செஞ்சு ஒப்பந்தம் போட்டேன். கடைசி நேரத்துல இடத்தைக் கொடுக்க முன்வந்த ரெண்டு பேருமே பின் வாங்கிட்டாங்க. இறுதியா உறுதியா இப்போ பள்ளிக்கூடம் செயல்படுற பாரதிநகர் இடத்தைத் தேர்வு செஞ்சேன். 1988 இல் பத்தாயிரம் முதலீட்டில் வெறும் எட்டே எட்டுக் குழந்தைகளோட வாடகைக் கட்டடத்தில் தொடங்கப்பட்டதுதான் சேது பாஸ்கரா(மெட்ரிக்) பள்ளி. இன்றைக்கு ஏழாயிரம் மாணவியர் மாணவரோடு பரந்து விரிஞ்ச பரப்பளவுல இயங்கிக்கிட்டிருக்கு. இந்த வளர்ச்சிக்குப் பின்னால் ஆசிரியர்கள் பணியாளர்-களோட முழுமையான பங்களிப்பு இருக்கு… என்கிறார் சேதுகுமணன். அம்பத்தூர் மாதானங்குப்பத்தில் சேதுகுமணன் நடத்திவரும் மற்றொரு கல்வி நிறுவனமான சோகா இகேதா மகளிர் கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர். தற்போது மாலைநேரக் கல்லூரியும் தொடங்கப்பட்டுள்ளது. இக்கல்லூரிக்கு சோகா இகேதா என்னும் பெயர் வைத்ததற்கான காரணத்தைச் சொல்கிறார்… ‘சோகா இகேதா’ சப்பான் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர், கல்வியாளர். உலகக் கவிஞர்கள் மாநாட்டில் அவரைச் சந்திக்கும் அரிய வாய்ப்பைப் பெற்றேன். அவரது கவிப்புலமையும் கல்விப் பணியும் என்னை வெகுவாக ஈர்த்தன. நூற்றுக்கணக்கான கல்வி நிறுவனங்களை சப்பான் நாட்டில் நடத்தி வருகிறார். சோகா இகேதாவை பெருமைப்படுத்தும் வகையிலேயே கல்லூரிக்கு அவர் பெயரை வைத்தேன் என்கிறார் கல்லூரி வேந்தர் சேதுகுமணன். தாம் பிறந்த ஊரான கண்டரமாணிக்கத்தில் ஏழை எளிய மாணவர்களுக்காக தொழிற்பயிற்சிக் கல்லூரி ஒன்றையும் சேது பாஸ்கரா (மெட்ரிக்) பள்ளி என்னும் பெயரிலும் கல்விப்பணி ஆற்றி வருகிறார் சேதுகுமணன். தனியார் பள்ளி என்றாலே மக்கள் மனத்தில் ஓர் எதிர்மறையான பிம்பம் தோன்றுகிறது.அது ஏழைகளுக்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாதது என்னும் எண்ணமே மேலோங்கி இருக்கிறது. ஆனால் சேதுகுமணன் தம் பள்ளியின் வழி அந்த பேருருவான பிம்பத்தை உடைத்து எறிந்துள்ளார். ஓர் ஆண்டுக்கு 240 குழந்தைகளுக்கு இலவசக்-கல்வி கொடுக்கிறதுல எந்தப் பாதிப்பும் இல்லை. எல்லோருக்கும் தரமான கல்வி கிடைக்கணும். அதுதான் எங்களுடைய நோக்கம்என்கிறார். இதைத்தவிர இன்னொரு மறுமலர்ச்சியையும் விதைத்திருக்கிறார் சேதுகுமணன். புலன்பார்வை இழந்த மாற்றுத்திறனாளிக் குழந்தைகள் இயல்பான குழந்தைகளோடு இணைந்து படிக்க இயலாத நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது. அவர்களுக்கென்று தனிப்பள்ளிகள் செயல்படும் சூழலில் இருபதுக்கும் மேலான புலன்-பார்வையற்ற சிறார்களுக்கு தம் பள்ளியில் இடம் அளித்திருக்கிறார். கல்விப்பணியோடு சேர்த்து பலவேறு சமுகப்பணிகளையும் செய்து வருகிறார். நடக்கும் எந்தச் செயலுக்கும் நான் காரணமல்ல சமுகத்தில் நல்ல விதைகளை விதைக்கிறோம். அவை விளைந்து பலன் கொடுக்கின்றன என்று புன்னகை பூக்கிறார். கல்விப்பணிக்கெனத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து வாழும் சேதுகுமணனை கண்டரமாணிக்கம் என்னும் ஊரில் இவரைக் கண்டு எடுத்த மாணிக்கமாகவே கல்வி உலகுக்குத் தந்தவர்கள் இவரின் அம்மா ஐராணி _ அப்பா சேது. சொல்லிலும் செயலிலும் மாணிக்கமாகவே ஒளிரும் சேதுகுமணனுக்கு இன்னொரு முகமும் இருக்கிறது. ஏறத்தாழ அறுபது நாடுகளுக்கு இலக்கியப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். உலகக்கவிஞர்கள் மாநாடுகளில் பங்கேற்று கவிதைகள் பாடியிருக்கிறார். சப்பான் நாட்டின் சோகா பல்கலைக் கழகம் சேதுகுமணனின் அளப்பரிய தொண்டுகளைப் பாராட்டி ஆய்வறிஞர் என்னும் முனைவர் (டாக்டர்) பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது. மதுக்கடை மேலாளராக அன்று…. சப்பான்நாடு மதிக்கும் வேந்தராக இன்று…. வாழ்க சேதுகுமணன் வளர்க.நேர்முகம் : தென்மாவை தருமு.