25 May 2013 3:09 pm
ஒவ்வொரு ஆண்டும் தமிழக விவசாயிகளின் நம்பிக்கை நசுங்கும் வகையில் காவிரி நீர்ப்பங்கீட்டுப் பிரச்சனை தொடர்ந்து தமிழக விவசாயிகளுக்கு துயரம் இழைப்பதாகவே அமைந்து வருகிறது. இது குறித்து தமிழர்கள் அதிகம் கவலைப் பட்டதாகவோ, கலக்கம் அடைந்ததாகவோ தெரியவில்லை. காரணம் ஒவ்வொரு தமிழனும் அவரவர் சார்ந்திருக்கும் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள், நடிகர், நடிகையர் சங்க விழாக்கள், தன்னிடமுள்ள பணத்தைப் பெருக்குவதற்கான வழிமுறைகள் என ஏராளமான வேலைகளில் மூழ்கியிருக்கிறான். தன் தாய்த் தமிழ் நாட்டின் வளம் நாளுக்கு நாள் குன்றி வருவதாகவோ, வருங்கால சந்ததியினரின் வாழ்க்கை இருளாக்கப் படுவதாகவோ, இந்த நிலை நீடித்தால் தன் வயிற்றுக்கு ஒரு வேளை கஞ்சிக்குக் கூட பின்னாளில் அண்டை மாநிலத்தில் பிச்சை எடுக்க வேண்டிய நிலை வரும் என சிந்திப்பதற்கோ அவர்களுக்கு நேரம் இல்லை. காரணம் அப்படி அபூர்வமான சிந்தனைகளை ஒரு வேளை மனதில் ஏற்றிப் பிரச்சாரம் செய்து தன்னை ஒரு இந்தியத் தேசியத்தின் எதிரி அல்லது தமிழ் வெறியன், நாட்டைக் கூறு போட நினைக்கும் வன்முறையாளன் என்ற பட்டத்துக்குரியவனாகவும் ஆக்கிக் கொள்ள விரும்பவில்லை.
உலக அரங்கில் ஒவ்வொரு இனமும் தன் உரிமைகளுக்காகப் போராடி, உணர்வுகளைப் பிரதிபலித்து தன் உடமைகளையும், உரிமைகளையும் காப்பாற்றி முன்னேறி வருகின்ற வேளையில் தமிழன் மட்டும் ஒரு தனிக் குணம் படைத்தவன் என்பதற்கு சான்றாக விளங்குகின்றான். ஒவ்வொரு ஆண்டும் குறுவைச் சாகுபடியின் போது தஞ்சை மண்ணில் பசுமைப் பயணற்றுப் போகிறது. வறுமை வலம் வருகிறது. இதற்குரிய காரணங்கள் என்ன? கர்நாடக அரசின் பிடிவாதப் போக்கா? அல்லது மங்கியிருக்கும் தமிழர் இன உணர்வா? என பல கேள்விகளுக்கு விடை கண்டாக வேண்டும். பொறுத்தார் பூமியாள்வார் என்ற பழமொழி தமிழில் சொல்லப்பட்டதைத் தமிழன் சரியாகவே தலையில் ஏற்றி கொண்டான் போலும்.
காவிரிப் பிரச்சனையில் உண்மை நிலையை, நியாயமான தீர்வைப் பற்றி எடுத்துரைத்தால் ஏற்பார் இல்லை. எனினும் நாம் சொல்ல வேண்டியதை திரும்ப திரும்ப உலகிற்குச் சொல்லியாக வேண்டும். இதற்கு முன்பும் இது குறுத்து விரிவாகப் பல முறை எழுதியுள்ளோம்.
தமிழகத்தின் வரலாறு, தமிழர்களின் பண்பாடு, வாழ்க்கை ஆகியவற்றோடு பிரித்துப் பார்க்க முடியாத அளவு பின்னிப் பிணைந்து இரண்டறக் கலந்துள்ள பெருமை காவிரி என்னும் பொன்னி வள நதிக்கு உண்டு.
விந்திய மலைக்கு வடக்கே வளர்ந்த நாகரிகத்தின் சின்னமாக கங்கை விளங்குவதைப் போல, தெற்கே தமிழர் நாகரிகத்தின் சின்னமாக காவிரி விளங்குகின்றது. எனவேதான் இந்திய தேசியத்தின் ஒருமைப்பாட்டை வலியுறுத்திப் பேசுகின்ற யாராக இருந்தாலும் கங்கையையும், காவிரியையும் இணைத்தே பேசுகிறார்கள். தமிழகத்தின் வாழ்விற்கும், வளத்திற்கும் காரணமாக காவிரி அகண்ட காவிரி எனத் தமிழர்களால் போற்றப்படுகின்றது. இப்படிப்பட்ட காவிரி தற்போது வறண்ட காவிரி ஆகிவிடும் என்ற அச்சம் தோன்றியுள்ளது.
தமிழகத்தின் நீர் வளத்திற்கு காவிரி இன்றியமையாதது. ஏனெனில் தமிழகம் போதுமான நீர்வளம் அற்ற மாநிலமாகும். தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் பெய்யும் மழை அளவு 3.50 இலட்சம் கோடி கன அடியாகும். இதில் 1.50 இலட்சம் கோடி கன அடி பாசனத்திற்குப் பயன்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் நிலப்பரப்பு சற்றொப்ப 3 கோடி ஏக்கருக்குச் சற்று அதிகம். இதில் சாகுபடியில் இருப்பது சற்றொப்ப 1.50 கோடி ஏக்கராகும். இந்த நிலப்பரப்பில் சற்றொப்ப 60 இலட்சம் ஏக்கருக்கு மட்டுமே பாசன வசதி உள்ளது.
இந்தியாவின் பிறபகுதி மக்கள் தொகை மற்றும் நீர்வளம் ஆகியவற்றை ஒப்பிட்டால் தலைக்கு 1,40,000 கன அடி தண்ணீர் கிடைக்கும். ஆனால் தமிழ்நாட்டில் மக்கள் தொகைக்கு ஏற்ப நீர்வளம் மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் மக்கள் தொகைக்கு ஏற்ப நீர்வளம் இல்லை என்பதை உணரலாம். எனவே தமிழ்நாடும், கர்நாடகமும் காவிரி நீரைச் சமமாக பங்கிட வேண்டும் என்பது நியாமற்ற வாதமாகும். இந்த சூழ்நிலையிலும் தமிழர் தன்னுடைய உழைப்பால் தனக்குக் கிடைக்கும் நீரை முறையாகப் பயன்படுத்தி, அதிக சேதாரம் இல்லாமல் பயிரிட்டு இந்தியாவிற்குத் தேவையான அரிசியை உற்பத்தி செய்வதில் முன்னணி மாநிலமாகத் திகழ வைத்துள்ளனர். இந்தச் சூழ்நிலையை மனதில் கொண்டு காவிரிச் சிக்கலை, நதி நீர்ப்பங்கீட்டை அணுகினால் இச்சிக்கலின் உண்மையான வடிவம் கிடைக்கும். உரிய நீதி கிடைக்கும். இதை உணரத் தவறியவர்களால் தமிழகத்திற்குரிய நீதியைத் தர இயலாது.
அந்த நாளில் அறம் செய்தவர்கள் அவ்வறம் நின்று நிலவ வேண்டும் என்ற எண்ணத்தில் “கல்லும் காவிரியும்” “புல்லும் பூண்டும்” உள்ளவரை அவ்வறம் நிலைக்க வேண்டும் என வாழ்த்தினார்கள். தமிழ்நாட்டின் “திருமேனி செழிக்க வைத்த காவிரி” என்பது மகாகவி பாரதியின் வாக்கு. சோழ நாட்டை வள நாடாக்கியதும், காவிரிதான். இங்ஙனம் காலங்காலமாக தமிழகத்தை வழம் கொழிக்கச் செய்து தமிழ் இலக்கியங்களிலும், தமிழ் நெஞ்சங்களிலும் நீங்காத இடம் பெற்றுத் திகழும் காவிரி தற்போது வறண்டு காணப்படுகிறது. தமிழகத்தின் எதிர்காலம் இருண்டு காணப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தஞ்சைச் சமவெளியில் பயிர்கள் வாடுகின்றன. கர்நாடக அரசு தண்ணீர் தர மறுக்கின்றது. கர்நாடகம் மனது வைத்தால் தமிழகத்திற்குத் தண்ணீர் இல்லாவிட்டால் இல்லை என்கிற நிலை தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதில் தமிழக விவசாயிகளுக்கு ஏற்படுகின்ற நட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. காவிரியில் நீர்வரத்து இல்லையென்றால் மேட்டூர் அணையில் மின் உற்பத்தியும் பாதிக்கப்படுகின்றது. அதன் மூலம் தமிழகத்தின் பல்வேறு தொழில்களும் பாதிக்கப்படுகின்றது. தமிழ்நாட்டின் ஆற்று நீர்ப்பாசன நிலத்தின் மொத்த பரப்பில் 60 விழுக்காடு காவிரி ஆறு ஒன்றின் மூலமே பாசனமாகிறது. ஆனால் கர்நாடகம் காவிரியை நம்பி இல்லை. தமிழகத்திற்கு காவிரியை விட்டால் வேறு கதி இல்லை. இயற்கையாகவே கர்நாடக மாநிலம் மேட்டுப் பகுதியில் அமைந்திருப்பதால் அங்கு உற்பத்தியாகும் நதிகள் நான்கு திக்கிலும் பாய்ந்து ஓடுகின்றது. துங்க பாத்திரை, வடபெண்ணை அங்கு உற்பத்தியாகி ஆந்திரா நோக்கி செல்கிறது. காவிரி, தென்பெண்ணை, பாலாறு நதிகள் தமிழகத்திற்கு ஓடி வருகின்றன. பாலாறு ஏற்கனவே வறண்டு விட்டது.
19ஆம் நூற்றாண்டில் மைசூர் சம்ஸ்தானத்தில் இருந்த திவான்கள் அப்பகுதியை வளப்படுத்த பல ஏரிகளை தமிழகத்திற்கு வரும் பல நதிகளின் குறுக்கே கட்டியதின் மூலம் பாலாறு முற்றிலுமாக வறண்டது. இதன் விளைவாக அன்றிருந்த சென்னை மாகாண அரசு விழித்தெழுந்து மைசூர் அரசுடன் பேச்சு நடத்திற்று. இதற்கிணங்க 1892 ஆம் ஆண்டு இரண்டு அரசுகளுக்கிடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள பாசன வசதிகளுக்குப் பங்கம் ஏற்படாத வகையில் காவிரியிலோ அல்லது அதன் 15 துணை நதிகளிலோ சென்னை மாநில அரசின் முன் அனுமதியின்றி எத்தகைய அணையும் மைசூர் அரசு கட்டக் கூடாது எனவும், அப்படி புதிய அணைகள் கட்ட மைசூர் அரசு திட்டமிட்டால் அதன் முழு விவரத்தையும் சென்னை மாகாணத்திற்குத் தெரிவிக்கப்பட்டு அனுமதி பெற்ற பிறகே அணைக்கட்டும் வேலையை தொடங்க வேண்டும் என ஒப்புக் கொள்ளப்பட்டது.
ஆனால் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மைசூருக்கு அருகே 10 மைல் தொலைவில் ஹேமாவதி, லட்சுமண தீர்த்தா என்ற ஆறுகள் காவிரியுடன் சேரும் இடத்தில் கிருஷ்ணராஜ சாகர் என்ற அணையை அமைக்க மைசூர் விரும்பியது. இதற்காக 1892 ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி சென்னை அரசின் ஒப்புதலைக் கோரியது. இதையொட்டி ஏற்படுத்தப்பட்ட பேச்சுகளில் முடிவு ஏற்படவில்லை. எனவே நடுவர் தீர்ப்புக்கு விடப்பட்டது. ஆனால் நடுவர் சர் ஹென்றி கிராவின் என்ற ஆங்கிலேயர் நாம் மேற்சொன்ன பல காரணங்கள், நிலை குறித்து அறியாதவராயிருந்தமையால் மைசூர் அரசுக்கு சாதகமான கருத்துக்களைத் தெரிவித்தார். இதை நிராகரித்து இலண்டனில் முறையிடப்பட்டது. பின்னர் 1921 லிருந்து 1923 வரை பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு, 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி கிருஷ்ணராஜ சாகர் அணை கட்ட ஒப்புக் கொள்ளப்பட்டது. இதுவே தமிழகத்திற்கு விழுந்த முதல் அடியாகும்.
இந்த ஒப்பந்தத்தின் படி, மைசூரில் புதிய பாசன வசதிகள் ஏற்படுத்தும் போது தமிழ்நாடு அனுபவித்துக் கொண்டிருக்கும் நீரின் அளவில் சிறிதும் குறைத்து விடக் கூடாது எனவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் இந்த ஒப்பந்தத்தின் சில பகுதிகளை 50 ஆண்டுகளுக்குப் பின்னர் மறு பரிசீலனை செய்யலாம் என்றும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய விதிகளாக
எனவே விதிமுறைகளின் படி தேக்கப்படாமல் கீழே அனுப்பப்படும் நீர் “வரம்பு நீர்’ எனப்பட்டது. இதில் தட்பவெப்ப நிலைகளுக்கேற்ப மாறுதல் இருக்கும்.
இவ்வாறு 1924 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தப்படி கிருஷ்ணராஜ சாகர் மற்றும் மேட்டூர் ஆகிய இரண்டு அணைகளும் கட்டப்பட்டு 1934 ஆம் ஆண்டிலிருந்து பயனுக்கு வந்தன.
எனினும், இதனைத் தொடர்ந்து ஹேமாவதி, கபினி ஆகியவற்றிலும் அணைக்கட்ட கர்நாடக அரசு 1970 இல் தமிழக அரசிடம் அனுமதி கோரியது. கபினி நீர் வடிவமைப்பு 1924 ஆம் ஆண்டு ஒப்பந்த சரத்துகளை மீறுவதாக அமைந்தால் தமிழ் நாடு அரசு அனுமதி வழங்க மறுத்தது. மேலும் வரம்பு நீர் வரத்துப்படி தண்ணீரை தமிழ் நாட்டுக்கு அனுப்பப்பட வேண்டுமென்றால் கர்நாடகம் தன் புதிய திட்டங்களை நிறைவேற்ற இயலாது என்ற நிலையினை உணர்ந்த மைசூர் அரசு 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தத்திற்கு கட்டுப்பட போவதில்லை என வெளிப்படையாக கூற ஆரம்பித்தது. மேலும் ஹேமாவதி மற்றும் கபினி திட்டப் பணிகளையும் தொடங்கி விட்டது. இந்நிலையில் மத்திய நீர்ப் பாசன துறை அமைச்சர் முயற்சியில் தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் மற்றும் கேரள மாநில முதல்வர்கள் இச்சிக்கல் குறித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். எந்த தீர்வும் எட்டாத நிலையில் தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்து 1971 ஆம் ஆண்டு உச்ச நீதி மன்றத்தில் தமிழக அர்சு ஒரு வழக்கைத் தொடர்ந்தது. ஆனால் அணைக்கட்டப் பணிக்கு உச்ச நீதி மன்றம் இடைக்கால தடை எதுவும் பிறக்கவில்லை. பின்னர் 1972 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் திருமதி இந்திராகாந்தி அம்மையார் தான் தலையிட்டுப் பிரச்சனையை தீர்ப்பதாகவும் அதற்கு ஏதுவாக தமிழக அரசு கர்நாடகம் மற்றும் மத்திய அரசு மீது தொடர்ந்துள்ள வழக்கைத் திருமபப் பெற வேண்டுமெனவும் வேண்டினார். அவரது உறுதியளிப்பை நம்பி தமிழகம் அந்த வழக்கைத் திரும்பப் பெற வேண்டுமெனவும் வேண்டினார். அவரது உறுதியளிப்பை நம்பி தமிழகம் அந்த வழக்கைத் திரும்பப் பெற்றது. இறுதியில் கிடைத்தது ஏமாற்றமே. இதே கால கட்டத்தில் தஞ்சை மாவட்ட விவசாயிகள் சார்பில் முரசொலிமாறன் அவர்கள் இன்னொரு வழக்கு தொடர்ந்தார். ஆயினும் அதுவும் 1975 ஆம் ஆண்டு நெருக்கடி நிலை பிரகடனத்தின் எதிரொலியாக தானாகவே மாய்ந்து போனது.
பின்னர் வி.பி.சிங் தலைமையிலான ஜனதா தள அரசு இப்பிரச்சனையை தீர்க்க நடுவர் மன்றம் அமைந்தது. அதன் படி நதி நீர்ப் பங்கீடு குறித்து ஒரு தெளிவான முடிவை அறிவிக்கும் வரையில் தற்காலிக தீர்வாக 205 டி.எம்.சி அளவு தண்ணீரை கர்நாடகம் தமிழகத்திற்கு வழங்க வேண்டுமென தீர்ப்பளித்தது. கர்நாடகம் ஒவ்வொரு வாரமும் எவ்வளவு தண்ணீரை வழங்க வேண்டுமெனவும் தெளிவுபடுத்தியிருந்தது. இந்த தீர்ப்பை நிறைவேற்றாத நிலையில் கர்நாடகம் தண்ணீர் தருவதை நிறுத்தியது. அரசியல் ரீதியாகப் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மத்திய அரசிடம் முறையிட்டு இதற்கு ஒரு நிரந்தர தீர்வு வேண்டுமென தமிழக அரசு மீண்டும் முறையிட்டது. அதன் விளைவாக காவிரி நதி நீர் ஆணையம் அமைக்கப்பட்டது. எந்தெந்த வழிகளில் கர்நாடகம் அரசை வேண்டினாலும் அனைத்தையும் மீறுகின்ற ஒரு போக்கையே கடைபிடித்து வருகின்றது.
காவிரி நதி நீர் ஆணையத்தின் ஏழாவது கூட்டம் தற்போது ஒன்பது ஆண்டுகளுக்குப் பின், உச்ச நீதி மன்றத்தின் அறிவுரையின் பேரில் கூட்டப்பட்டும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு நீதி கிடைக்கவில்லை. 22.11.1991 அன்று இந்திய உச்ச நீதி மன்றம் தெரிவித்த கருத்து “பல மாநில எல்லைகளைக் கடந்து பாயும் நதிகளின் நீரை உற்பத்தியாகின்ற மாநிலம் மட்டுமே உரிமை கொண்டாட முடியாது. நதி பாயும் அனைத்து மாநிலங்களில் நீரின் அளவு சமமாகப் பங்கிடுவதே இயற்கை நியதியும், நீதியும் ஆகும்.”
இதை கருநாடக அரசு மதிப்பதாகவோ அல்லது மத்திய அரசு வலியுறுத்துவதாகவோ இல்லை. மேட்டூர் அணையின் நீரை நம்பிதான் தமிழ்நாட்டில் 15 இலட்சம் எக்டேர் நிலப்பரப்பின் வேளாண்மை செய்யப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் பயன் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பயன் படுகிறது. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் குறுவைச் சாகுபடிக்காக 137 டி.எம்.சி நீர் தமிழ்நாட்டின் மேட்டூர் அணைக்கு திறந்து விட வேண்டும் என்று காவிரி நதி நடுவர் மன்ற தீர்ப்பாகும். ஆனால் இது தொடர்ந்து மீறப்பட்டு வருகிறது.
ஜனநாயக் நெறிமுறைகளையும், நீதி மன்ற ஆணைகளையும் கட்டி காக்க வேண்டிய ஒரு அரசே நீதிமன்றத்தை அவமதிக்கின்ற ஒரு நிலையை மேற்கொள்ளும் போது அங்கு வாழும் குடிமக்களிடம் எப்படி சட்டம், ஒழுங்கை எதிர்பார்க்க முடியும்?
சிறிதளவு தண்ணீரையும் அடைத்து விட்டு தஞ்சை விவசாயிகளின் கண்களில் பெருமளவு கண்ணீரை ஓட விட்டிருக்கின்றது கர்நாடக அரசு.
எனவே காவிரி நீர்ப் பிரச்சனை குறித்துப் பேசியவர்கள் யாராக இருந்தாலும் இந்த வரலாற்றை மத்திய, மாநில அரசின் போக்குகளை தெரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பின்னணியில் கர்நாடகம் நடந்து கொண்ட விதத்தை ஆராய்ந்தால் சில உண்மைகள் புலப்படும்.
மேற்கண்ட நிலைகளிலிருந்து கர்நாடக அரசு விடுபட வேண்டும் மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டிய இந்தப் பிரச்சனையை மாநில உணர்வுகளோடு அணுகுவது ஒவ்வொரு ஆண்டும் இரு மாநிலங்களிடையே உள்ல உறவைப் பாதிப்பதாகவே அமையும். அது இந்திய நாட்டின் ஒற்றுமையை தகர்ப்பதாகவே முடியும். அதிகாரங்களைக் குவித்து வைத்திருக்கும் மத்திய அரசிடம் ஒரு தெளிவான நதிக் கொள்கை இல்லை. பாதிக்கப்படுவது தமிழ்நாடு . பயனற்றுப் போவது தமிழ் நிலம். இதை தமிழர்கள் உணர்ந்து கொண்டு செயல்படுவது எப்போது?
“வசையில் புகழ் வயங்குவெண்மீன்
திசை தீர்ந்து தெற்கு ஏகினும்
தற்பாடிய தளி உணவில்
புள் கேற்பப் புயல்மாறி
வான்பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் தனைய கடற்காவிரி
புனல் புரந்து பொன் கொழிக்கும்”
என்று பட்டினப் பாலையில் உருத்திரங்கண்ணார் பாடினார்.
வடதிசையில் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் துருவ நட்சத்திரம் திசை தடுமாறித் தென்திசை செல்லலாம். வானத்தைப் பாடி மழைத்துளியை உண்ணும் வானம்பாடிப் பறவை மழையின்மையால் வாடலாம். ஆனாலும் குடமலையில் பிறந்து குன கடலை அடையும் காவிரி ஒரு நாளும் வளம் குன்றுவதில்லை. இதனுடைய நீர் இரு கரையெங்கும் பரவிப் பொன் கொழிக்க வைக்கும் என்பது தான் இப்பாடலின் பொருளாகும்.
-கனிடவுன் சு.குமணராசன்
முதன்மை ஆசிரியர்