25 July 2013 3:47 pm
கடந்த மே மாதம் 18 ஆம் நாள் இலங்கை அரசு “வெற்றி விழா நாள்” என்னும் பெயரில் அரசு விழாவாக இலங்கை நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு நகரங்களில் கொண்டாடியது. தமிழர்கள் வாழும் வடக்குப் பகுதியில் இலங்கை இராணுவத்தினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, வெற்றி விழா நினைவுச் சின்னங்களையும் திறந்து வைத்தார் இலங்கை அதிபர் இராசபக்சே. இந்த நினைவுச் சின்னங்கள் ஈழப் போரில் தன்னுயிரை ஈந்த மாவீரர்களின் கல்லறைகளை தரை மட்டமாக்கி “போர் வெற்றிச் சின்ன நினைவிடங்கள்” என்னும் பெயரில் காட்சி தருகின்றன. இது ஒருபுறம் நடந்தேறிய சூழலில், வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழர்கள் அதே மே 18 ஆம் நாளை தங்களின் துக்க தினமாக அறிவித்து, மறைந்து போன மாவீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் அஞ்சலி செலுத்தி பகிர்ந்து கொண்டனர். இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒரே நாட்டில் தான் நிகழ்ந்தேறியுள்ளன. அரசுக்கு “வெற்றி விழா” குடிமக்களுக்கு “துக்க நாள்” என்பது எவ்விதமான சனநாயகம் என்பதைப் புரிந்து கொள்ள இயலவில்லை? எனினும், இந்தியா இது போன்ற விடயங்களில் கருத்து சொல்வதில்லை.
ஈழ விடுதலைப் போரை, வன்முறை ஒழிப்புப் போர் என உலக நாடுகளிடையே விளம்பரப் படுத்தி தமிழ் மக்களை கொன்று அழித்த இராசபக்சே அரசு, இனப்படுகொலையை அரங்கேற்றி முடித்து நான்கு ஆண்டுகள் முடிவுற்ற நிலையிலும், அங்கு ஒரு சமஉரிமை மிக்க குடியாட்சி நடைபெற வில்லை. இதுகாறும் இலங்கை அரசு உலக நாடுகளை ஏமாற்றி வந்துள்ளது என்பதைக் கூட இன்னும் பல நாடுகள், இந்தியா உட்பட ஏற்க மறுக்கின்றன. போர் மற்றும் வன்முறை நிகழ்வுகளினால் மனித இனத்திற்கு ஏற்படும் உயிர்ச் சேதங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிற சிந்தனை முதலாம் உலகப் போருக்குப் பின்னர் (1918) தோன்றிய ஒன்றாகும். ஒவ்வொரு தேசிய இனமும் தன்னுடைய பாதுகாப்பை உறுதி செய்ய எண்ணும் போது எழும் சிக்கல்களே பல்வேறு வகையான அடக்கு முறைகளுக்கும், போர்களுக்கும் கரணமாக இருந்திருக்கிறது. அதிகார எண்ணமும், ஆசையும் நிறைந்த தனிமனிதர்கள் சிலரின் சிந்தனையும், செயல்களும் இது போன்ற மனிதப் பேரழிவுகளுக்கு காரணிகளாக வரலாற்றில் அமைந்துள்ளன.
ஒவ்வொரு தேசிய இனமும் இவ்வுலகில் சுய நிர்ணய உரிமையுடன் வாழ உரிமையுண்டு என்று ஒரு பொதுவான கொள்கையெனினும் 1700 களில் உலகில் ஐரோப்பிய நாடுகள் சில, இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகள் மட்டுமே இருந்தன. பின்னர் 1800 -1900 காலங்களில் தேசிய வேட்கை பரவலாக்கப் பட்டு ஸ்பெயினிலிருந்து அர்ஜென்டைனா என்ற நாடு, ஒட்டமன் பேரரசிடமிருந்து கிரீஸ் நாடு, செக்கோஸ்லேவாக்கியா, சோவியத் ஐக்கிய குடியரசு, யுகேசுலோவேக்கியா போன்ற நாடுகள் சுயநிர்ணய உரிமை மிக்க நாடுகளாக முகிழ்த்தன. அது போலவே 1,916 களில் இந்தியாவிலிருந்து பர்மா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளும், 1947 ஆம் ஆண்டு பாகிசுதானும் பிரிந்து, அதே ஆண்டு இந்தியாவும் பிரிட்டிசாரிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு இறையாண்மை மிக்க நாடாக மாறியது.
இந்த கால கட்டத்தில் 1939 ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின் பேரழிவுகளும், தேசிய எழுச்சிகளும் முக்கிய பங்கு வகிக்கின்ற ஒன்றாகும். இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனிய நாசியின் கொள்கைகள் யூதர்களை இன அழிப்பு செய்ய எண்ணியது. இதன் விளைவாக பல்லாயிரக் கணக்கான யூதர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். அது போன்று சிலி நாட்டில் அகஸ்டதோ என்ற கொடுங்கோலன், இத்தாலியின் முசோலினி, ஜெர்மனியின் ஹிட்லர் போன்றவர்கள் மனித இனத்தின் உயிர் கொலைகளுக்கு ஈவிரக்கமின்றி வித்தாக அமைந்தது உலக வரலாற்றின் வடுக்கள் என்பதை மறந்து விட முடியாது. இது போன்ற இனப்படுகொலைகளின் விளைவே 1941 ஆம் ஆண்டு அட்லாண்டிக் ஒப்பந்தம் (Atlantic Charter) என்கிற ஒன்று உருவாகக் காரணமாக அமைந்தது. அன்றைய நாளின் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டி.ரூஸ்வெல்ட், இங்கிலாந்தின் தலைமையமைச்சரான வின்சென்ட் சர்ச்சில் ஆகியோர் கூட்டாக உலக அமைதிக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் தார்மீக அரசை அமைத்துக் கொள்வதற்கு வழிகோலும் நோக்கிலும் எட்டு அம்சங்கள் நிறைந்த கொள்கைப் பிரகடனம் வெளியிடப்பட்டது. இதற்கு அப்போதிருந்த நாடுகளில் 26 நாடுகள் ஆதரவு தெரிவித்து உலகெங்கும் நடைமுறைப் படுத்த ஒப்புக் கொண்டன. இதன் அடிப்படை அம்சமே தனித் தேசிய இனங்களின் உரிமை, போரற்ற உலகம் என்பவையாகும். இந்த ஒப்பந்தத்தின் விரிவாக்கமே 1945 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அய்க்கிய நாடுகள் மன்றம் ஆகும். இதன் தொடக்கத்தில் அய்க்கிய நாட்டு மன்ற கொள்கைகள் அறிவிக்கப்பட்டு 50 நாடுகள் ஒற்றுமையுடன் செயல்பட ஆதரவு தெரிவித்துக் கையெழுத்திட்டன. தற்போது இந்த அய்.நா.மன்றத்தில் 194 உறுப்பு நாடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது 1945 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உலகில் 230க்கும் அதிகமான நாடுகள் உருவாக்கப்பட்டு, அதில் 194 நாடுகள் அய்.நா வில் உறுப்பு நாடுகளாக அங்கம் வகிக்கின்றன என்பது ஒவ்வொரு தேசிய இனமும் தங்களைத் தாங்களே நிருவகித்துக் கொள்கின்ற வகையில் தனித்தனி நாடுகளாக பிரிந்து சென்றதும், அதை உலக அரங்கம் ஒப்புக் கொண்டதும் வரலாற்றில் ஏற்பட்ட மாற்றங்களாகும். இவ்வாறு தன்னாட்சி உரிமை பெற்ற நாடுகளில் கூட பின்னாட்களில் மக்களின் இன, மத வழி விருப்பு, வெறுப்புகளுக்குட்பட்டு பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
ஒவ்வொரு நாட்டில் அரசு, சட்டம், நீதித்துறை என பல வரம்புகளின் விதிகளுக்குட்பட்டு அமைந்தாலும் மக்களின் மனநிலையை, சமூக மாற்றங்கள், உலக வளர்ச்சிக்கு ஏற்றவாறு மாற்றம் அடைவதை பல நேரங்களில் குடிமக்களின் “பொது வாக்கெடுப்பு” முறை அரசுகளுக்கு உணர்த்தியுள்ளன. இது தேர்தல் காலங்களில் நடக்கலாம் அல்லது ஒரு சட்டமோ, அரசமைப்போ மாற்றியமைக்கப்படும் போது பொதுமக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்க ஏதுவாகவும் அமைவதுண்டு. இது போன்ற பொது வாக்கெடுப்புகள் பல அரசுகளின் சட்ட திருத்தங்களை, நடை முறைகளை மாற்றியமைத்துள்ளன என்பது மட்டுமன்று சில நேரங்களில் ஒரு நாட்டிலிருந்து பிரிந்து போய் தன் இன வழி, மத வழி, இருப்பிட வழி நாட்டு அரசை அமைக்கும் அளவுக்கு மாற்றியிருக்கின்றன. உலகில் மனிதப் பேரழிவையும், வன்முறைகளையும் ஒழிக்க வேண்டும் என்ற விருப்பத்துடனும், ஒவ்வொரு தேசிய இனமும் தன்னுரிமையுடன் வாழ உரிமையுண்டு என்று எண்ணுகின்ற பல நாடுகள் இது போன்ற பொது வாக்கெடுப்பை நடத்தி தங்கள் முடிவுகளை தீர்மானித்துக் கொண்ட வரலாறு இந்த நூற்றாண்டில் பெரும்பான்மையான ஒன்றாகும். சில நேரங்களில் பொது வாக்கெடுப்புகள் பல நாடுகளுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்ல வழிகாட்டிகளாக அமைந்துள்ளன என்பதும் இங்கு நினைவு கூர வேண்டும்.
1905 ஆம் ஆண்டு முதல் உலகப் போருக்கு முன்பே கூட இக்கொள்கையின் அடிப்படையில் ஸ்வீடன் நாட்டிலிருந்து நார்வே தனி நாடாகப் பிரிந்து செல்வது என முடிவெடுக்கப் பொது வாக்கெடுப்பு முறை பயன்படுத்தப்பட்டு 99 விழுக்காடு மக்கள் ஆதரவுடன் நார்வே நாடு 13.08.1905 அன்று தனி நாடாகியது. ஸ்வீடன் நாட்டு மக்களும் இதற்கு மதிப்பளித்து தங்கள் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு ஸ்வீடன், நார்வே தனித் தனி நாடுகளாக நட்பு நாடுகளாக இன்றளவு செயல்படுகிறது.
1944 ஆம் ஆண்டு அய்ஸ்லாந்து (ICE LAND) நாட்டிலிருந்து டென்னிஸ் மொழி பேசும் மக்கள் விருப்பத்திற் கொப்ப 23.05.1944 அன்று பொது வாக்கெடுப்பு நடத்தப் பட்டு 99.5 விழுக்காடு மக்கள் ஆதரவுடன் டென்மார்க் தனி நாடாகியது.
1958 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் ஆதிக்கத்திலிருந்து, கினியா (GUNIEA) என்னும் நாடு 28.09.1958 அன்று உருவாகியது. 1965 ஆம் ஆண்டு மலேசியா நாட்டின் ஒரு நகரமாக விளங்கிய சிங்கப்பூர் பல்லின மக்கள் வாழும் ஒரு பகுதியாக அமைந்த ஒன்றாக இருந்த நேரத்தில் சிங்கப்பூர் தனி நாடாக வேண்டும் என்கிற கொள்கை முன்னெடுக்கப் பட்டு அன்றைய தினம் மலேசிய தலைமையமைச்சரான டுங்கு என்பவர் அக்கருத்தை ஏற்றுக் கொண்டதன் விளைவாக 1965 ஆம் ஆண்டு சிங்கப்பூர் தனி நாடாக உருவாகியது. அந்நாட்டில் 5 விழுக்காடு தமிழ் பேசும் மக்கள் காலங்காலமாக வாழ்ந்து வரும் தேசிய இனம் என்பதைக் கருத்தில் கொண்டு சிங்கப்பூரில் தேசிய மொழியாகவும், அலுவல் மொழியாகவும் “தமிழ்” உள்ளது. இன்றளவும் மலேசியா – சிங்கப்பூர் இருநாட்டு உறவு அண்ணன் – -தம்பி உறவும் போன்று விளங்குகின்றது.
1990 ஆம் ஆண்டு பொதுவுடைமைத் தேசமாக விளங்கிய சோவியத் நாட்டிலிருந்து பொது வாக்கெடுப்பின் மூலம் 88.5 விழுக்காடு மக்கள் ஆதரவுடன் 26.12.1990 இல் ஸ்லோவேனியா (Slovenia) என்ற நாடு தனி நாடாகியது.
1991 களில் யூகேசுலோவக்கியா என்னும் நாட்டில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பின் மூலம் குரோசிய இன மக்கள் 19.05.81 அன்று தனி நாட்டு உரிமை பெற்று குரோசியா (Croatia) என்கிற நாட்டை அமைத்தனர். அதே யூகேசுலோக்கிய நாட்டிலிருந்து பொது வாக்கெடுப்பின் மூலம் பிரிக்கப்பட்ட மற்றொரு நாடு மசடோனியா (Macedonia) என்பதாகும். 96.4 விழுக்காடு மக்கள் ஆதரவுடன் 8.9.1991 ஆம் ஆண்டு தனிநாடு ஆகியது. ரஷியா நாட்டிலிருந்து 1991 ஆம் ஆண்டு பிரிந்த மற்றொரு நாடு உக்ரைன் (Ukrain) ஆகும். மேலும் குரோசியாவைத் தொடர்ந்து ஜியார்ஜியா (Georgia) என்கிற நாடு பொது வாக்கெடுப்பு மூலம் 31.03.1991 ஆம் நாள் பிறந்த நாடு ஜியார்ஜியா ஆகும்.
1993 ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவிலுள்ள எத்தியோப்பியா நாட்டிலிருந்து 27.04.1993 ஆம் நாள் பிரிந்த நாடு எரித்திரியா ஆகும். விடுதலை இயக்கம் என்கிற பெயரில் ஆயுதக் குழுவாய் போராடிய மக்கள் போராட்டம் சற்றொப்ப 25 ஆண்டுகள் நடைபெற்றது. பின்னர் அய்.நா மற்றும் பிற நாடுகளால் ஒப்புக் கொள்ளப்பட்டு எரித்தியா இன்று தனிச் சுதந்திர நாடாக உள்ளது. 1994 ஆம் ஆண்டு ருமேனியா என்கிற நாட்டிலிருந்து பொது வாக்கெடுப்பின் மூலம் 97.6 விழுக்காடு மக்கள் ஆதரவுடன் பிரிந்த நாடு மோல்டோவியா (Moldovia) ஆகும்.
1995 ஆம் ஆண்டு இந்தோனேசியத் தலைமையமைச்சரின் வேண்டுதலின் பேரில், அய்க்கிய நாட்டு அவையே முன்னின்று நடத்தியப் பொது வாக்கெடுப்பு மூலம் 30.08.1999 ஆம் நாள் அங்கீகாரம் பெற்ற நாடு கிழக்கு தைமூர் (East Timor) ஆகும். 2006 ஆம் ஆண்டு ருமேனியா நாட்டிலிருந்து அய்.நா முன்னிலையில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பு மூலம் தங்கள் உரிமையைப் பெற்ற நாடு மாண்டேநீக்ரோ (Montinegro) என்னும் நாடாகும். 21.05.2006 ஆம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பு முடிவுக்குப் பின்னர் அய்.நா.சபையின் பாதுகாப்புச் சபை நாடுகள் அனைத்தும் உடனடியாக இந்நாட்டை அங்கீகரித்தன. 2006 ஆம் ஆண்டு தெற்கு காகசஸ் என்ற நாட்டிலிருந்து பொது வாக்கெடுப்பு மூலம் பிரிந்த நாடு தெற்கு ஒஸ்டியா (South Ostia) ஆகும்.
2010 ஆம் ஆண்டு செரூபியா நாட்டிலிருந்து தன்னுடைய விடுதலையை தன் மக்களின் விருப்பப்படி விடுதலையைத் தானே அறிவித்துக் கொண்ட நாடு கொசோவா (Kosova) ஆகும். இதை எதிர்த்து செரூபியா நாடு பன்னாட்டு நீதி மன்றத்தின் அறிவுரையை வேண்டி மனுசெய்து தடை விதிக்கக் கோரியது. எனினும், பன்னாட்டு நீதிமன்றம் விடுதலை அறிவிப்பை தடை செய்ய மறுத்து உறுதி படுத்தியது. அய்.நா அவையில் உள்ள 88 நாடுகள் உடன்டியாக கொசாவாவை விடுதலை பெற்ற நாடாக ஏற்றுக் கொண்டன. இந்தியத் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் தொலைபேசியில் உடனடியாக அந்த அதிபருக்கு வாழ்த்து தெரிவித்தார் என்பதும் செய்தியாகும்.
2011 ஆம் ஆண்டு சூடானிலிருந்து 9.7.2011 ஆம் ஆண்டு நடத்தப் பெற்ற பொது வாக்கெடுப்பின் மூலம் பிரிந்த நாடு தெற்கு சூடான் (South Sudan) ஆகும். அய்.நா அங்கீகரித்தது இந்தியா வாழ்த்து தெரிவித்தது.
வரலாற்றில் இதுகாறும் நடைபெற்ற பல பொது வாக்கெடுப்புகள் அய்.நா அவையினராலும், சனநாயக நாடுகளாலும் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று எனினும், சில நாடுகளில் பொது வாக்கெடுப்பின் முடிவுகள் அந்நாட்டுப் பிரிவினையைத் தடுத்தும் வைத்துள்ளன என்பதும் வரலாற்று நிகழ்வுகளாகும். அமெரிக்கா நாட்டின் காலணியாக விளங்கும் பியூரொடோரிகோ என்கிற நாட்டில் 1967, 1993,1998, 2012 ஆகிய ஆண்டுகளில் நடத்தப் பெற்ற பொது வாக்கெடுப்பு உரிய வாக்குகள் இன்றி தோல்வியுற்ற நிகழ்வுகளும் உண்டு. இன்றளவும் பியூரொட்டோரிகோ என்ற நாடு அமெரிக்காவின் ஓரு பகுதியாகும். அதுபோன்றே கனடாவிலிருந்து கியூபெக் இனமக்கள் பிரிந்து செல்வதற்கான பொது வாக்கெடுப்பு 1980 மற்றும் 1995 ஆகிய இரண்டு முறை நடைபெற்றும் கியூபெக் தனி நாடாக இயலவில்லை. இது போன்றே பெர்முடா நாட்டில் 1995 இல் நடைபெற்ற பொது வாக்கெடுப்பு, நேவிஸ் என்ற நாட்டில் 1998 இல் நடைபெற்ற பொது வாக்கெடுப்பு இவைகள் அந்தந்த நாட்டு மக்களின் தேசிய உணர்வுகளுக்கு அப்பால், பிரிந்து போகும் உள்ள உணர்வுகளைத் தடுத்து நிறுத்தியுள்ள செய்திகளும் உண்டு.
எனவே சனநாயகத்தின் மீதும், மக்களின் சுப நிர்ணய உரிமைகள் மீதும், அய்.நா.வின் ஏற்றுக் கொண்டுள்ள கொள்கைக்கு ஒப்ப, மக்களின் மனநிலை குறித்து தெளிவான நிலையினை அறிந்து கொள்வதற்கு இது போன்ற பொது வாக்கெடுப்பு ஒரு நல்ல கருவியாக விளங்குகின்றது. இதை அய்.நா வின் அங்கம் வகிக்கும் எந்த நாடும் எதிர்த்து வாதாட இயலாது. ஒரு நாட்டைப் பற்றிய மக்களின் சமகால கருத்தியல்பை அறிந்து கொள்வதற்கு உதவியாகவே பொது வாக்கெடுப்பு அமையும். இதுகாறும் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் உயிரிழப்புகள் இல்லை. உண்மைகள் வெளிக் கொணரப்பட்டுள்ளன. எனவே பல்லாண்டு காலமாகத் தொடர்ந்து வரும் ஈழச் சிக்கலிலும் அம்மக்களின் மன நிலையே ஒரு தீர்ப்பாக அமையும். அது உலக நாடுகளால் ஒப்புக் கொள்ளப்பட்ட சுய நிர்ணய உரிமைகளை உள்ளடக்கியதாகவும் விளங்கும். எனவே இலங்கையில் உள்நாட்டு விவகாரம் என்று பல நேரங்களில் தன்னுடைய சமூகக் கடமையைத் தட்டிக் கழிப்பதை விடுத்து பன்னாட்டு அரங்கில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விதிகளை மனத் தூய்மையோடு நடைமுறைப் படுத்துவதே உலகில் அமைதியை விளைவிக்கும்; அச்சத்தைத் தவிர்க்கும். வல்லரசுகள் பல தனக்கு சாதகமான அரசியல் பார்வையிலேயே பல சிக்கல்களை அணுகி மேலும் பல சிக்கல்களை இறுகச் செய்துள்ளன. இது அனைவரும் அறிந்த ஒன்று. எனவே வல்லரசுகள் என்று தன்னைப் பிரகடனப்படுத்துக் கொண்ட எந்த நாடும் “நல்லரசு” என்று கூறி விட முடியாது. இன்று அமெரிக்கா, சீனா, இரசியா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் செயல்முறைகளும் இதையே உணர்த்துகின்றன. வல்லரசாகத் துடிக்கும் இந்திய நாடாவது உலகில் அமைதியைத் தேடும் நல்லரசாக தன் பார்வையைச் செலுத்தி அண்டை நாடுகளில் அமைதியை ஏற்படுத்த முன் வர வேண்டும் என்று ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் விருப்பம் ஆகும்.
– சு.குமணராசன்.