18 May 2014 6:21 am
சிற்பியின் படைப்புலகம்- பேராசிரியர் இரா.மோகன்- முனைவர் நிர்மலா மோகன் பேராசிரியர் இரா.மோகன் அவர்களின் சிற்பியின் படைப்புலகம் மற்ற படைப்பாளிகளின் பதிவுகளிலிருந்து தனியொரு இடத்தை பெற்றுள்ளது. மாறுபட்ட சிந்தனைச் சிதறல்கள், சிற்றிலக்கிய வார்த்தைகளில் அனுபவ வரிகள், கற்ற கல்வி வழி, பெற்ற வாழ்வியல் அனுபவங்கள், படிக்கப் படிக்க மனம் நெகிழ்ந்து எல்லோராலும் போற்றக் கூடிய கருத்துகள், அவரால் பதிவு செய்யப்பட்டுள்ள தமிழ் நம் நெஞ்சில் நிழலாடுகின்ற வகையில் 30 இலக்கியக் கட்டுரைகள் நான்கு உட்தலைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு நம் தமிழ் தலைமுறையினருக்கு புரிகின்ற வகையில் அழகு தமிழில் கவித்துவ மணம் கமழ எழுதப் பெற்ற பதிவுகளில் சில… அழித்து எழுத முடியாத ஒன்றுண்டு, அம்மா. காந்திஜியின் மரணம் பற்றிக் கூறும் வார்த்தைகள் வெண்ணெயில் பாயும் வேல்போல் அண்ணலின் மார்பில் பாய்ந்தன குண்டுகள் பாரதி பற்றிய பதிவில் ஈரத்தில் நின்றேன். மனதுக்குள் நனையும் நினைவுகள் சாகும் வயதில் போகிற காசிக்கு வாழும் வயதில் புறப்பட்டேன் நான் தமிழுக்கு புதிய உயிர் தருவது என் கடமை. இலக்கியத்தில் புது ரத்தம் பாய்ச்சுவது என் உரிமை. பட்டது நெஞ்சில் என்றால் வெட்டும் வாளாகும் என் நாக்கு என பாரதியின் சிறை வாழ்க்கையை ஆளுமைத் தமிழால் மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் சிற்பி அவர்கள். இவரது பதிவுகள் படிக்கச் சுவையாகவும், சுகமாகவும், விருந்தாகவும் விளங்குகிறது. தமிழர்கள் அனைவரும் கற்றுணர வேண்டிய நல்ல நூலாகும். முனைவர் நிர்மலா மோகன் இதுவரை 22 நூல்களை வெளியிட்டுள்ளார். இவரது நூல்கள் பல்வேறு பல்கலைக் கழகங்களிலும் தன்னாட்சி கல்லூரிகளிலும் பாட நூல்களாக இடம் பெற்றுள்ளன. நிர்மலா துணைவர் மோகனும் தமிழ் கூறும் நல்லுலகின் இலக்கிய இணையர் என்பதே பெருமை கொள்ளத்தக்க விடயமாகும்.வெளியீடு: வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை – 600 017(பக்கங்கள்: 194 விலை: 100)