தீர்வுகள் இல்லாத தீர்ப்புகள் - தமிழ் இலெமுரியா

22 October 2017 11:20 am

கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மேல்நிலைப்பள்ளி மாணவி செல்வி அனிதா தற்கொலை செய்து கொண்டு தன்னுயிர் நீர்த்துள்ளார். இச்செய்தி இந்தியா நாடெங்கும், குறிப்பாக தமிழ் நாட்டில் மாணவர்கள் பொதுமக்களிடையே ஓர் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. போராட்டங்களினால் பொது வெளியில் இடையூறுகள் ஏற்படுமாயின் உரிய சட்ட நடவடிக்கைகளைத் தொடருமாறு மாநில அரசுக்கு நடுவண் உச்ச நயன்மை மன்றம் வலியுறுத்தியுள்ளது.நீட்  (NEET) என்று சுருக்கிச் சொல்லக்கூடிய மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வு தற்போது இந்திய மாநிலங்கள் அனைத்திலும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் சமுக நிலை, கிராமப்புற மாணவர்களின் வசதி வாய்ப்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தமிழ் நாட்டிற்கு இத்தேர்விலிருந்து விதிகள் தளர்த்தப் பட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற வழக்கின் மற்றொரு மனுவில் ஏற்கனவே தடை செய்யப் பட்டிருந்த நீட் தேர்வுக்கு மீண்டும் மறு ஆய்வு என்ற பெயரில் தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. உயிர் நீத்த மாணவி அனிதா தான் நன்கு கல்வி கற்று, மருத்துவராகி, தமிழ் நாட்டின் கிராமங்களில் சேவை செய்ய வேண்டுமென்ற உயர் நோக்குடன், மிக ஏழ்மையுடன் வாழ்ந்தாலும் தன் கனவு நிறைவேற வேண்டுமென படித்து 12 ஆம் வகுப்பில் 1200 க்கு 1176 மதிப்பெண் பெற்று  சாதனை  நிகழ்த்தினார். ஆனால் அம்மாணவியின் கனவுகளுக்கு கதவு சாத்தப்பட்ட நிலையில் மாநில அமைச்சர்களிடம் நடுவண் அமைச்சர்களிடம்  எதிர்க்கட்சித் தலைவர்களிடம் என அனைத்து வழிகளையும் கையாண்டார். எவ்விதப் பலனும் கிட்டாமல் போகவே உச்சநீதி மன்ற அரங்கிலும் தன் ஏழ்மைநிலையையும் தகுதி திறமையையும் எடுத்துரைத்தார். ஆனால் உச்சநீதிமன்றமும் அவருடைய கனவை சிதைத்தது. விளைவு நான் வாழ்கிற இடம் நாடா அல்லது இடுகாடா? என தனக்குத் தானே கேள்வியெழுப்பி இடுகாட்டில் இருப்பதே மேல் என எண்ணி உயிரை மாய்த்துக் கொண்டார். மாண்ட பின்பு மகுடி ஊதும் நம் அரசியல் கட்சிகளும் செத்த பின் சிந்து பாடும் அரசும் அம்மாணவியின் இறப்பிற்கு ஒருவரையொருவர் குற்றம் சாட்டி தம் இருப்பையும், தம் உள்ளத்தின் கருப்பையும் வெளிக்காட்டிக் கொண்டன. நமது பார்வையில் இது கட்சி அரசியல் சார்ந்த சிக்கல் இல்லையெனினும் இச்சமுகப் படுகொலைக்கு ஆளும் மத்திய மாநில அமைச்சர்களின் கபட நாடகமும் பொறுப்பற்றப் பேச்சும், முறையற்றக் கொள்கை முடிவுகளுமே கரணியமாகும்.ஏக இந்தியா பேசும் அரசியலாளர்கள் பலருக்கு தமிழ் நாட்டின் தனித்தன்மை குறித்து அறிந்திருக்க வாய்ப்பில்லை. நடுநிலைப்பள்ளியிலிருந்த மேல் படிப்புக் கல்விக்குச் செல்லும் தமிழ் நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 47 விழுக்காடு ஆனால் இந்தியாவின் பிற  மாநிலத்தில் 22 விழுக்காடு மட்டுமே; இந்தியாவில் தமிழ் நாட்டில் தாழ்த்தப் பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு  69 விழுக்காடு தமிழ் நாட்டில் மட்டுமே; இந்த ஒதுக்கீடு தமிழ் நாட்டில் நகரம் கிராமம், ஏழை பணக்காரன் வறட்சி, வளர்ச்சிப் பகுதி என பலவற்றுக்கும் பரவலாக்கப் பட்ட ஒன்று;  கல்வித்துறை குறிப்பாக மருத்துவத்தில் தமிழ் நாடு முதலிடம் வகிக்கின்ற மாநிலம்; அதிகம் மாணவர்கள் பயிலும் மாநிலம், அதிலும் மாணவிகளே திறம்பட முண்ணனியில் நிற்கும் மாநிலம்; பெரும்பாலான மேனாள் மருத்துவர்கள் வெளிநாட்டு மோகம் தவிர்த்து அரசு மருத்துவ மனைகளிலும் கிராமப்புற மருத்துவ முகாம்களிலும் பணியாற்றுகின்ற ஓர் மாநிலம்; மருத்துவ மேல் படிப்பு மற்றும் தனித்துவ மருத்துவத்தில் முன்னிலை வகிக்கும் மாநிலம், என அடுக்கிக்கொண்டே போகலாம்.மேலும் தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளை வெளிக்கொணரும் வகையில் மருத்துவ  நுழைவுத்தேர்வாகிய  நீட்(NEET))டிலிருந்து விலக்களிக்க வேண்டுமென தமிழ் நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காகக் காத்திருந்த மாநிலம். தமிழ் நாடு மட்டும் ஏன் எதிர்க்கின்றது என வினவும் அரை குறை அறிவு  படைத்தோர்க்கு மேற்கண்ட சொற்களே விடையாகும்.தற்போது தமிழ்நாட்டு மாணவர்கள் மீது திணிக்கப் பட்டிருக்கும் இத்தேர்வு முறை சட்டத்திற்கு முரணாக முந்தைய உச்சநீதி மன்ற தீர்ப்பை மீண்டும் விசாரிக்கிறோம் என்ற போர்வையில் தடைநீக்கம் செய்யப்பட்டதினால் வந்த விளைவேயொழிய நீதிமன்ற இறுதி வடிவம் அல்ல. எனினும் இந்நாட்டை ஆளுகின்ற பா. ச. க  நீட் தேர்வுக்கு ஆதரவாக வினையாற்றுகிறது. இது கல்வி வளர்ச்சிக்கோ சமுக வளர்ச்சிக்கோ அடிகோலாது.தமிழர்கள் பலர் மதம் , சாதி அரசியல் கட்சி என பல்முனைத் திசை திருப்பங்களுக்கு ஆளாகி மூளைச்சலவைக்கு உள்ளாகி இருப்பதால் நீட் நுழைவுத் தேர்வின் நெடுங்கேடுகள் குறித்து அறியாத நிலையில் உள்ளனர்; ஒரே நாடு ஒரே தேர்வு, என ஓலமிடும் அரசியல் வாதிகளே முதலில் இந்தியாவை ஒரேசாதி ஒரே வர்க்கம் என மாற்ற முயலுங்கள். சாதிகளில் ஏற்றத்தாழ்வு, வருவாய்களில் ஏற்றத்தாழ்வு, கோவில்களில் ஏற்றத்தாழ்வு, வேலைவாய்ப்புகளில் ஏற்றத்தாழ்வு என கரடுமுரடாக காட்சியளிக்கும் இந்தியாவில் தமிழ்நாடு மட்டுமே சமூகத் தளத்தில் சற்று சமநிலைப்பட்டது; அதற்குத் தந்தை பெரியாரின் கடும் உழைப்பும் ஒரு காரணமாகும்.எனவே நீட் தேர்வின் சமநிலை குறித்து வாய் கிழியப் பேசும் அரசியல்வாதிகளே  நம்நாட்டில் சம ஈவு, சம நுகர்ச்சி உள்ளதா? என்பது தான் எம் வேதனை. நகர்ப்புறம் & கிராமப்புறம்; ஏழை & பணக்காரன்;  உயர் சாதிகள் & ஒடுக்கப்பட்ட சாதிகள் என சமநிலையற்ற இவைகளிடையே நீட் தேர்வின் அடிப்படையில் படிக்கும் வாய்ப்பு சமமாகப் பங்கிடப்படுகிறதா? என்பதே எம் வினா! வெளி வந்திருக்கும் புள்ளிவிவரங்கள் தலைகீழாக உள்ளன.எனவே தமிழ்நாட்டின் கோரிக்கையை அரசியல் நோக்கமின்றி குமுகாய நோக்கில் ஆராய்ந்தால்தான் தமிழ்நாட்டு மக்களின் நயன்மையான எண்ணங்களை உணர முடியும். அவ்வாறு உணர மறுத்த நடுவணரசுக்கு உரக்கச் சொல்வதற்காகவே தன்னுயிரை விலையாகக் கொடுத்த இளம் பிஞ்சு அனிதா எம் பார்வையில் ஓர் சவமல்ல; சடலமல்ல, தமிழ்நாட்டு மக்களின் உரிமைப் போருக்கு அவள் ஓர் சாவா மருந்து என எண்ணுகின்றோம். மாணவர்களே இளைஞர்களே அனிதாவின் செய்தியைப் புரிந்து செயல்பட்டால் உண்டு வாழ்வு!ஒன்றுபடுவீர்; போராடுவீர்! வெற்றியை ஈட்டி வேற்றுமை அகற்றுவீர்!.நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்நாடொறும் நாடு கெடும். திருக்குறள் (553) – திருவள்ளுவர்கனிவுடன்  சு.குமணராசன், முதன்மை ஆசிரியர்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி