5 June 2013 12:15 pm
தைப்பொங்கல், புத்தாண்டு என்பது தமிழ் நாட்டிற்குத் தனிச் சிறப்பு வாய்ந்த விழா. உழவர் உழுது விளைவித்த புது நெல்,பசுக்கள் தரும் பால், நெய், ஆலைக் கரும்பின் சருக்கரை என அனைத்தும் சேர்த்து பொங்கல் செய்து, மஞ்சளும், இஞ்சியும் மங்கலம் ஊட்ட, மனங்கவர் சுற்றமும் நட்பும் சூழ உறவாடி, உரையாடி, உண்டு மகிழ்ந்து, தமிழர்தம் பண்பாட்டு விழுமியங்கள் போற்றும் சீர் மிகு நன்னாளே பொங்கல் நாள்.
ஒவ்வொரு புத்தாண்டிலும் வாழ்த்துகளைப் பறிமாறிக் கொள்ளும் ஒவ்வொருவரும் இந்த ஆண்டு இனிய ஆண்டாக, வளமிக்க ஆண்டாக மலர வேண்டும் என்றே வாழ்த்திக் கொண்டாலும், ஒவ்வொரு ஆண்டின் இறுதியில் மிஞ்சுவது ஏமாற்றமே என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து வருகின்றோம். குறிப்பாகத் தமிழினம் கடந்த சில ஆண்டுகளாக எதிர் கொள்ளும் சோகமும், சோதனைகளும் அளவிட முடியாதவை.
தமிழர் வாழ்ந்த நிலம் மிகப்பெரிய பரந்து பட்ட நிலம். ஆனால் இன்றுள்ள நிலப்பகுதி அதனுடைய தேய்ந்த பகுதியாகும். ஒரு காலத்தில் தமிழை, தமிழரை வளர்க்கும் போக்கும், வாழ்விக்கும் போக்கும் நெஞ்சில் உறையப்பெற்ற தமிழறிஞர்கள், சமுகவியலாளர்கள் நிறைந்த நிலையில் மறைமலை அடிகள், திரு.வி.க, நாவலர் பாரதியார், இரா.பி.சேதுப்பிள்ளை, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, தேவநேயப் பாவாணர் போன்றவர்களுடைய பேச்சும், எழுத்தும், செயலும் இளைஞர்களை நல்வழிப்படுத்தி தமிழார்வம் ஊட்டின. ஆனால் இன்று தமிழன் என்று சொல்ல, தமிழைப் பற்றிப் பேச, தமிழுக்கென்று குரல் கொடுக்க, தமிழினம் இன்னலுக்கு ஆளாகும் போது வீறுகொண்டெழுந்து போராட அச்சப்படுகின்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. அயலாரை அரவணைக்கும் போக்கும், அவர் பின் அறியாக் குழந்தையெனப் பின் செல்லும் போக்கும் இன்றையச் சூழலில் பெரிதும் தென்படுகின்றது. தமிழர்களிடையே நெறியெனப் பரப்பட்ட, வளர்க்கப்பட்ட மதங்களும், சாதிகளும் தமிழர்களிடையே கூட்டு உணர்வை, மந்தைப் போக்கை வளர்த்த அளவிற்கு தமிழ்க் கூட்டுணர்வை வளர்க்கவில்லை என்பது அண்மைக்கால நிகழ்வுகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளன. நம்முடைய தன்மானம் காப்பதற்கு ஒன்றாக இணைவோம் என்ற கொள்கையைக் கொண்டு செயல் புரிந்த தலைவர்கள் தமிழ்நாட்டில் அருகி வருகிறார்கள். இதன் விளைவாக தமிழ்நாட்டு இளைஞர்களிடையே இன வளர்ச்சிச் சிந்தனைகளும், மன வளர்ச்சிப் போக்கும் மங்கி வருகின்றன.
ஒரு காலத்தில் தமிழறிஞர்களால் ஊட்டப்பட்ட உணர்வும், சமுகவியலாளர்களால் கற்பிக்கப்பட்ட ஒழுக்கமும் குறைந்து வருவதற்கு கரணியமாக அமைந்தவை அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்களின் நிலையற்றத் தன்மையும், நிறைவற்ற மனப் போக்குமே ஆகும்.
ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கங்கொண்ட இயக்கங்கள், ஆட்சியைக் கைப்பற்றும் வரைதான் ஆற்றல் உடையது போல் விளங்கும். ஆட்சியைக் கைப்பற்றி விட்டால் மக்களுணர்ச்சியில் அதன் வலிமை சிறிது சிறிதாக மங்கத் தொடங்கி விடும். அதனால் தான் ஆட்சிகளில் நிலையற்றத் தன்மை ஏற்படுகிறது. தொடக்க காலத்தில் தூயவர்களாக இருந்தாலும், அடுத்தடுத்து வருவோர் அந்நிலையிலேயே அமைவர் என்பது இயல்பன்று. எனவே கொள்கை, நோக்கம், இலக்கு போன்றவற்றில் ஒரு சலிப்பும், சோர்வும், தளர்வும் ஏற்பட்டு பின்னர் தன்னலமே பொது நல உணர்வை மிஞ்சும் அளவு வலுப் பெற்று வருகிறது.
இந்த நாட்டின், குறிப்பாக தமிழ்நாட்டின், இன்றைய நிலை இதனையே எடுத்துக் காட்டுகின்றது. கல்லாமை, போதிய பண்பு இல்லாமை, பேராசை, பெரும் பொருள் ஆகிய அனைத்தும் நாட்டில் களவு, கற்பழிப்பு, வன்முறைப் போன்ற வன்மங்களை விதைத்துள்ளன. இவைகளிலிருந்து நாட்டு மக்கள் மீட்கப் பட வேண்டும். நம்மை எதிர் நோக்கியுள்ள பிரச்சனைகளை எண்ணிப் பார்த்து இன்று முதலே உரிய திருத்தங்களை மேற்கொள்ளாவிடில் ஏற்படுகின்ற விளைவுகள் பெருமைக்குரியதாக இராது என்பதை நெஞ்சில் நிறுத்தி, உண்மை உணர்வோடு குமுகாய அறம் வளர்ப்போம். ஒரு இனத்தின் செல்வம் என்பது சிந்தனையின் நிறைவே என்று உணர்ந்து, ஒன்றிணைந்து செயலாற்ற இப்பொங்கல், புத்தாண்டு நாளில் உறுதி ஏற்போம்.
துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாம் தரும்.
(குறள் 651)
கனிவுடன், சு.குமணராசன்.
முதன்மை ஆசிரியர்.