இலங்கையிலும் நினைவுகூரப்படும் அப்துல் கலாம். - தமிழ் இலெமுரியா

29 July 2015 9:59 am

முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் மறைவு இலங்கையின் வடபகுதியில் பலரையும் கவலையடையச் செய்திருக்கின்றது. அப்துல் கலாம் இரண்டு முறை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கிறார். முதல் விஜயத்தின்போது, அவர் யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்குச் சென்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அத்துடன் அவர் யாழ் பல்கலைக்கழகத்திற்கும் சென்றிருந்தார். இந்தக் கல்லூரிக்கு அவர் விஜயம் செய்தபோது, அந்த விழாவிற்கு கல்லூரியின் முன்னாள் அதிபர் வீரவாகு கணேசராஜா தலைமை வகித்தார். அப்துல்கலாம் மறைவு தங்களுக்கு பெரும் அதிர்ச்சியளிப்பதாக வீரவாகு கணேசராஜா தெரிவித்தார். தமது கல்லூரிக்கு அப்துல் காலம் மேற்கொண்ட விஜயமும், அங்கு அவர் மாணவர்கள் மத்தியில் ஆற்றிய உரையும் வடமாகாணத்தின் பல இடங்களிலும் இருந்து வருகை தந்திருந்த மாணவர்கள் மத்தியில் ஓர் எழுச்சியையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தியிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது என கணேசராஜா கூறினார். அப்துல்காலம் அவர்களின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பதிவுகளை மேற்கொள்வதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் வைக்கப்பட்டிருந்த பதிவேட்டில் பலரும் தமது அனுதாபங்களைத் தெரிவித்திருக்கின்றனர். அவ்வாறு அனுதாபம் தெரிவித்தவர்களில் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் பயிலும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவனாகிய திரவியச் செல்வம் சிறிரஜீவனும் ஒருவர். இலங்கைக்கு அப்துல்கலாம் விஜயம் செய்தபோது, அந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு, சிறிரஜீவன் அவரை நேரில் பார்த்ததாகக் கூறுகிறார். கலாமினால் ஈர்க்கப்பட்டு அவருடைய பெயரில் கிளிநொச்சியில் இளைஞர் கழகம் ஒன்றையும் சிறீரஜீவன் நடத்திவருகிறார். அப்துல் கலாமின் வழிமுறைகளை இளைஞர்கள் மத்தியில் பரப்புவதற்காகவே அவருடைய பெயரிலான இளைஞர் கழகம் ஒன்றை செயற்படுத்திவருவதாக சிறிரஜீவன் கூறுகிறார்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி