20 January 2016 1:37 pm
ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவன் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் எதிரொலியாக இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். ரோஹித் வேமுலா என்ற இந்த மாணவன் 17-01-2016 அன்று தற்கொலை செய்து கொண்டார். ஜாதிப் பாரபட்சம் காட்டப்பட்டதே அவரது தற்கொலைக்குக் காரணம் என்று ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் கூறுகின்றனர். தலித் பிரிவைச் சேர்ந்த ரோஹித் வேமுலா தனது பிறப்புதான் துயரத்துக்குரிய விபத்து என்று தற்கொலை செய்யுமுன் குறிப்பு ஒன்றை எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டார் என்று கூறப்படுகிறது. டில்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் பூனாவில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தத்ரேயாதான் , வேமுலா மற்றும் வேறு நான்கு தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நியாயமற்ற வகையில் கோரினார் என்றும் அதனால் தான் இந்த சம்பவம் நடந்தது என்றும் குற்றம் சாட்டுகின்றனர். ஹைதராபாத் பல்கலைக்கழகம் இந்தப் போராட்டத்தின் எதிரொலியாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த ஐந்து மாணவர்களும், ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் ஆதரவாளர்களுடன் மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவத்தை அடுத்து அமைச்சர் தலையிட்டார் என்று கூறப்படுகிறது. போலிசார் அந்த அமைச்சருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர். மத்திய அரசு இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஒரு " உண்மை அறியும் குழுவை" ஹைதராபாத் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பியிருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி உட்பட பல கட்சிகளின் தலைவர்களும் இந்தப் பல்கலைக்கழகத்துக்கு விரைந்துள்ளனர். காங்கிரசின் அகில இந்தியத் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்களை சந்திக்க ஹைதராபாத் சென்றடைந்துள்ளார். இதனிடையே , அமைச்சர் தத்தத்ரேயா , இந்த சம்பவம் தொடர்பாக தெரிவித்த கருத்துக்களில், தான் எழுதிய கடிதம் இந்த தலித் மாணவர்கள் சம்பந்தப்பட்டதல்ல என்று கூறியிருக்கிறார். "பல்கலைக்கழகத்தில் நிலவும் அமைதியான சூழலைக் குலைக்க சில சமூக விரோத சக்திகள் முயன்றுகொண்டிருந்தன. அதற்கு எதிராக நடவடிக்கை கோரி அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதினேன்" என்றார் அவர்.