16 October 2016 4:44 pm
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் மத நிகழ்வு ஒன்றின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வாரணாசி தலைமை மருத்துவ அதிகாரி வி.வி. சிங் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். பாபா ஜெயகுருதேவ் என்ற துறவியின் ஆன்மிக சந்திப்பு ஒன்றின்போது இச் சம்பவம் ஏற்பட்டது. பெருமளவிலான மக்கள் அங்கு கூடியிருந்தபோது, ராஜ்காட் என்ற பாலத்தில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. அப்போது ஒருவருக்கொருவர் தள்ளிக்கொண்டு செல்ல முயன்றதால் அந்தக் கூட்டத்தில் பலர் தவறி கீழே விழுந்தனர்.இதில் பலர் நெரிசலில் சிக்கி இறந்ததாகவும், ஏராளமானவர்கள் காயமடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்தவர்களுக்கு லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்படுகிறது.தலைமையமைச்சர் இரங்கல்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலைமையமைச்சர் நரேந்திர மோதி ஆறுதல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்துள்ளார். வாரணாசி, பிரதமர் நரேந்திர மோதியின் மக்களவைத் தொகுதியாகும்.