19 December 2015 10:34 am
சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பொது மக்களுக்கு பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்பட்டன. உணவு கிடைக்காமல், தங்க இடம் கிடைக்காமல், பொருட்களை இழந்தவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் என்றாலும் அந்தத் தருணத்தில் இயற்கையாக மரணமடைந்தவர்களின் குடும்பத்தினர் பெரும் வேதனைகளை அனுபவித்துள்ளனர். தமிழின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான விக்ரமன் அந்தத் தருணத்தில் இறந்துவிட, அவரது உடலைப் பாதுகாக்கவும் தகனம் செய்யவும் அவரது குடும்பத்தினர் பெரும் சிரமங்களை அனுபவித்துள்ளனர். சென்னை மேற்கு மாம்பலத்தில் வசித்துவந்த எழுத்தாளர் விக்ரமன் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி மரணமடைந்ததையடுத்து, அவரது உடலை இரண்டாம் தேதி தகனம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவுசெய்திருந்தனர். ஆனால், ஒன்றாம் தேதி இரவிலிருந்தே இடைவிடாமல் மழை பெய்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டது. இதையடுத்து மேற்கு மாம்பலம் உள்ளிட்ட தென் சென்னைப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. மின்சாரம் இல்லாத நிலையில், விக்ரமனின் சடலத்தைப் பாதுகாக்க அவரது குடும்பத்தினர் பெரும் சிரமத்தை எதிர்கொண்டதாகக் கூறுகிறார் அவரது மகன் கண்ணன். அவரது உடலைப் பாதுகாக்க பல தனியார் மருத்துவனைகள் மறுத்துவிட்ட நிலையில், அரசு மருத்துவமனைகளை அணுகினார் அவர். ஆனால், பிரேதப் பரிசோதனை செய்தால் மட்டுமே உடலைப் பாதுகாக்க முடியும் என அரசு மருத்துவனைகளில் கூறப்பட்டதாகச் சொல்கிறார் கண்ணன். பல்வேறு முயற்சிகள், வேண்டுகோள்களுக்குப் பிறகு, மூன்றாம் தேதியன்று தனியார் மருத்துவமனை ஒன்று விக்ரமனின் உடலை பதப்படுத்தவும் பாதுகாத்துத்தரவும் முன்வந்தது. இதையடுத்து ஒன்றாம் தேதி மரணமடைந்த விக்ரமனின் உடல், வெள்ளம் வடிந்த நிலையில் டிசம்பர் நான்காம் தேதியன்று தகனம் செய்யப்பட்டது. சென்னையின் பல இடுகாடுகளில் வெள்ளம் புகுந்து செயல்படாமல் போனதால், விக்ரமனின் உடல் தகனம் செய்யப்பட்ட கிருஷ்ணாம்பேட்டை இடுகாட்டில், அன்று 10 நிமிடத்திற்கு ஒரு உடல் வந்ததாகக் கூறுகிறார் கண்ணன், வீட்டில் இயற்கையாக உயிரிழந்தவர்களின் உடலைப் பாதுகாக்க அரசு மருத்துவமனைகள் மறுக்கக்கூடாது என்கிறார் கண்ணன். நந்திபுரத்து நாயகி, கங்காபுரிக் காவலன் ஆகிய குறிப்பிடத்தக்க சரித்திரப் புதினங்களை எழுதியிருக்கும் விக்ரமன், அமுதசுரபி இதழின் ஆசிரியராக அரை நூற்றாண்டுக்கும் மேலாக இயங்கிவந்தார்.