மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும் - தமிழ் இலெமுரியா

5 July 2013 5:43 pm

Mettur Dam

கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழை காரணமாக கபினி அணையில் இருந்து 50 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை மேட்டூர் அணை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அணை நீர் மட்டம் ஒரு வாரத்துக்கு பின்பு மீண்டும் கிடுகிடுவென உயர வாய்ப்பு உள்ளது. கேரள மாநில வயநாடு பகுதியில் 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் எச்.டி. கோட்டை வட்டத்தில் உள்ள கபினி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி நீர் வந்தது. ஏற்கனவே கபினி அணையின் மொத்த கொள்ளளவான 2284 அடியை எட்டி உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் 50 ஆயிரம் கன அடி நீரும் உபரி நீராக காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. 

இதனால் காவிரியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள நஞ்சன்கூடு நகரத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதேபோல் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 1500 கன அடி நீர் திறக்கப்படுகிறது. காவிரியில் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் இன்று ஒகேனக்கல்லை வந்தடைகிறது. மீண்டும் வெள்ள பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசலில் செல்லவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஒகேனக்கல்லில் இருந்து 6 மணி நேரத்தில் மேட்டூர் அணையை நீர் வந்தடையும். இதனால் இன்று இரவு அல்லது நாளை அதிகாலையில் நீர் மேட்டூரை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நீர் மட்டம் ஒரு வாரத்துக்கு பின்னர் கிடுகிடுவென உயர வாய்ப்பு உள்ளது.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி