5 June 2013 3:05 pm
நியுசிலாந்து பசிபிக் பெருங்கடலின் தென் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு ஆகும். பொதுவாக, மனிதன் வசிக்கின்ற கடைசி நிலப்பகுதிகளில் ஒன்றாக நியுசிலாந்து திகழ்கிறது. இது இரண்டு முக்கிய நிலப்பகுதிகளையும், பல சிறிய தீவுகளையும் உள்ளடக்கியுள்ளது. இந்த இரு நிலப்பகுதிகளும் முறையே வடக்குத் தீவு, தெற்குத் தீவு என அழைக்கப்படுகிறது. நியுசிலாந்துக்கு அருகிலுள்ள முக்கிய நாடான ஆசுத்திரேலியா தஸ்மான் (Tasman) கடலுக்குக் குறுக்கே 1,500 கி.மீட்டருக்கு அப்பால் அமைந்துள்ளது. மேலும் இதன் அண்மையில், 1,000 கி.மீ தூரத்தில் கலிடோனியா, ஃபிஜி மற்றும் டொன்கா ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. சற்றொப்ப 2,68,021 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இந்நாட்டின் மக்கள் தொகை 44,45,436 மட்டுமே. இதன் தலைநகராக வெல்லிங்டன் (Wellington) நகரமும், நாட்டின் பெரிய நரமாக ஆக்லாந்து (Auckland) நகரமும் விளங்குகின்றன. இந்நாட்டின் தேசிய மொழியாக ஆங்கில மொழி திகழ்கிறது.
கி.பி 800க்கும் 1,300க்கும் இடையில் தொடர்ச்சியாக பல புலப்பெயர்வுகள் மூலம் வந்து சேர்ந்த கிழக்கு பொலினீசியர்களே (Polynesians) நியுசிலாந்தின் முதல் குடியேறிகள் ஆவர். பின்னர் சில நூற்றாண்டுகளில் இவர்கள் தனக்கென தனிப் பண்பாட்டைக் கொண்ட மவோரி (Maori) இனத்தவர்களாக வளர்ச்சியடைந்தனர். பின்னர் இந்த மவோரிகள் தங்களுக்குள்ளே சிறு சிறு இனக் குழுக்களாகப் பிரிந்து கூட்டுறவுடனும், போட்டியிட்டும், சில வேளைகளில் சண்டையிட்டும் வாழ்ந்து வந்தனர். இவ்வாறு பிரிந்த இனக் குழுக்கள் ஆங்காங்கே சத்தாம் தீவு, ஸ்டிவார்ட் தீவு எனத் தனித் தனி தீவுகளில் குடியமர்ந்தனர்.
1642 ஆம் ஆண்டில் ஒல்லாந்து நாட்டைச் சேர்ந்த தஸ்மன் என்ற மாலுமி, பசிபிக் பெருங்கடலில் ஆசுதிரேலியாவிற்கு அருகில் கண்டுபிடித்த தீவிற்கு, தனது தாயகத்தில் உள்ள மாகாணம் சீலாந்து (Zealand) என்னும் பெயரை வழங்கியதில் இருந்து அந்நாட்டில் ஐரோப்பியர்களின் காலனித்துவம் ஆரம்பமாயிற்று. பின்னர் ஜேம்ஸ் குக் என்ற ஆங்கிலேயரால் நியுசிலாந்து என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்பு, மவோரி மக்களால் அவர்களுடைய மொழியில் நியுசிலாந்து முழுவதும் “அவோதியரோவா” (Aotearoa) என்னும் பெயரில் அழைக்கப்பட்டது.
ஜேம்ஸ் குக் தலைமையில் பல அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் வணிகத்திற்காக நியுசிலாந்தினுள்ளே நுழைந்தனர். இதனால் 1801 முதல் 1840 ஆம் ஆண்டு வரை உள்நாட்டு – டிரைபல் மஸ்கட் போர்(Inter – Tribal Musket War) மூண்டது. இதில் ஏறத்தாழ 30,000 முதல் 40,000 மவோரி மக்கள் கொல்லப்பட்டனர்.பின்னர் அங்கே அதிகமாகக் குடியேறிய ஆங்கிலேயர்களும், பிற ஐரோபியர்களும் நியுசிலாந்தின் மொத்த மக்கள் தொகையில் பெரும்பான்மையினராகவும், நியுசிலாந்தின் அரசியல், பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் விளங்கினர்.
இறுதியில் ஆங்கிலேயர்களால் கேப்டன் வில்லியம் கோப்சன் தலைமையில் போரை முடிவுக்குக் கொண்டு வர 1840 ஆம் ஆண்டு, பிப்ரவரி 6 ஆம் நாள் “வைதாங்கி ஒப்பந்தம்” (Treaty of Waitangi) கொண்டு வரப்பட்டது. பிரிட்டிஷ் அரசப் பிரதிநிதியாலும், மவோரித் தலைவர்களாலும் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம் ஆங்கிலத்தில் ஒரு பிரதியும், மவோரி மொழியில் ஒரு பிரதியுமாக எழுதப்பட்டது. இந்த இரண்டு பிரதிகளும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. ஆங்கில மொழியில் உள்ள பிரதியில், நியுசிலாந்து நாட்டின் “இறைமை” (Sovereignty) பிரிட்டிஷ் மகாராணிக்கு சொந்தமானது என எழுதியுள்ளது. ஆனால் மவோரி மொழியில் உள்ள பிரதியில் நியுசிலாந்து நிலங்களின் மீதான “ஆளுகை” (Governorship) உள்நாட்டு இனக் குழுத் தலைவர்களின் பொறுப்பில் உள்ளதாக எழுதியுள்ளது. இதன் மூலம் மவோரி மக்கள் தாமே நியுசிலாந்தின் உரிமையாளர்கள் என்று ஆங்கிலேயர்கள் அங்கீகரித்து விட்டதாகவும், அவர்கள் விருந்தாளியாகவே இங்கே தங்கியிருப்பதாகவும் கருதினர். ஆனால் அதற்கு மாறாக நியுசிலாந்து ஆட்சி அதிகாரத்தை மவோரிகள் தங்களிடம் ஒப்படைத்து விட்டதாக, ஆங்கிலேயர்கள் இந்த ஒப்பந்தம் மூலம் உறுதிபடுத்திக் கொண்டனர். சில ஆண்டுகளுக்குப் பின்னரே தாம் ஏமாற்றப்பட்டு விட்டதை மவோரி மக்கள் உணர்ந்தனர். பெரும்பான்மையான நியுசிலாந்து நிலங்களை ஆங்கிலேயர்கள் சொந்தமாக்கிக் கொண்டனர். நேர்மையற்ற வழியில் நிலங்களை அபகரித்த ஆங்கிலேயர்களின் துரோகச் செயல், இரண்டு சொற்களின் பிழையான மொழிப் பெயர்ப்பால் சாத்தியமானது. “இறைமை”, “ஆளுகை” போன்ற சொற்களுக்கு இடையில் உள்ள வித்தியாசத்தை, அன்றைய மவோரிகளுக்கு தெரிந்திருக்கவில்லை.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் நியுசிலாந்து, ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குட்பட்ட குடியரசாக மாறியது. இதனால் பெருமளவு ஐரோப்பியர்கள் நியுசிலாந்துக்குப் புலம் பெயர்ந்தனர். தற்போது நியுசிலாந்தில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் ஐரோப்பிய வழியினர். நகரப் பகுதியில் ஆசிய இனத்தவர்களும், மவோரியர்களில்லாத பொலினிசியர்களும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர். தாயக மவோரி இனத்தவர்கள் மிகப் பெரிய சிறுபான்மையினர்களாக உள்ளனர். இவர்கள் சில குறிப்பிட்ட பிரதேசங்களில், தனது பண்பாட்டைப் பேணிக் காத்து வாழ்ந்து வருகின்றனர். மவோரியர்களின் சிறந்த பண்பாடான சித்திரம் வரைதல், நெசவு செய்தல், பச்சைக் குத்துதல் ஆகியவை இன்றும் வழக்கத்தில் இருந்து வருகின்றன. இருப்பினும் அந்த மக்கள் ஆங்கிலேயப் பண்பாட்டைப் பின்பற்றும் நிர்பந்தத்திற்கு ஆளாகினர். கல்விக் கூடங்களில் ஆங்கில மொழியில் மட்டுமே கல்வி கற்பிக்கப்பட்டது. அங்கு பயிலும் மாணவர்கள் தமது சொந்த மவோரி மொழியில் பேசினால் தண்டிக்கப்பட்டனர். 1987 ஆம் ஆண்டிலிருந்துதான் மவோரி மொழிக்கு ஆங்கில மொழிக்கு நிகரான மதிப்பு வழங்கப்பட்டது.
முரண்பாட்டுக்குரிய “வைதாங்கி ஒப்பந்தம்” இன்று வரை மவோரிகளின் கிளர்ச்சிகளைத் தூண்டி விடும் காரணியாகவே உள்ளது. தேசிய நாளாக அறிவிக்கப்பட்டுள்ள “வைதாங்கி நாள்” அன்று, மவோரி ஆர்பாட்டக்கார்கள் பிரிட்டிஷ் ஆட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நியுசிலாந்து தேசியக் கொடியைக் கிழிக்கும் போராட்டம் ஆண்டுக்காண்டு நடந்தேறி வருகிறது. மவோரிகள் வைதாங்கி ஒப்பந்தத்தை நிலம் திருடுவதற்காக ஆங்கிலேயர் செய்த ஏமாற்று வேலை என்றே கருதுகின்றனர்.
நியுசிலாந்து எழுதப்படாத அரசமைப்புச் சட்டத்தைக் கொண்டிருந்தாலும், இது நாடாளுமன்ற மக்களாட்சியுடன் கூடிய அரசமைப்பு ஒற்றையாட்சி நாடாகும். இரண்டாம் எலிசபெத் நாட்டின் ராணியும், தலைவரும் ஆவார். பிரதமரின் ஆலோசனைக்கு ஏற்ப ராணியால் நியமிக்கப்படும் ஆளுநரே ராணியின் பிரதிநிதியாவார். ஆனால் தற்போது அரசிக்கு எந்த வித அதிகாரமும் கிடையாது. நாட்டின் அரசியல் அதிகாரம் மக்களாட்சி முறையில் தேர்வு செய்யப்படும் நியுசிலாந்தின் நாடாளுமன்றத்திடமே உள்ளது.
பொதுவாக நியுசிலாந்து அதன் கண்டச் செல்வாக்கிலிருந்து தனிமைப்பட்டு இருப்பதாலும், தெற்கிலிருந்து வீசும் குளிர் காற்றாலும், கடல் நீரோட்டங்களாலும் இதன் காலநிலை எப்போதும் மிதமாகவே உள்ளது. இதன் தட்பவெப்ப நிலை மக்கள் குடியேற்றம் உள்ள இடங்களில் 0°Cக்குக் கீழ் செல்வதோ அல்லது 30°C க்கு மேல் செல்வதோ இல்லை. முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச்சே நகரம் மிகவும் வறண்ட நகரமாகக் காட்சியளிக்கிறது. ஏனெனில்,இங்கு மற்ற நகரங்களான பெல்லிங்டன், ஆக்லாந்து நகரங்களை விட குறைந்த அளவே மழைப் பொழிவை பெறுகின்றன.
நியுசிலாந்தின் மிகப் பெரிய நிலப்பகுதியான தெற்குத் தீவு, அதன் நீளவாக்கில் தெற்கு ஆல்ப்ஸ் என்னும் மலைத்தொடரால் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மலைத் தொடரில் 12,320 அடிகள் உயரம் கொண்ட ஆவேராக்கி சிகரம் அமைந்துள்ளது.
நியுசிலாந்தைச் சுற்றி கடல் நீர் சூழ்ந்திருப்பதால், அதிக அளவு கடல் வளங்களைக் கொண்ட நாடாக திகழ்கிறது. நியுசிலாந்து பெரும்பாலும் உள்நாட்டு வணிகத்தையே நம்பியுள்ளது. வேளாண்மைக்குப் பின் இவர்களின் முக்கியத் தொழிலாக, மீன் பிடித்தல், சுரங்கத் தொழில், தோட்டக்கலை ஆகியவை உள்ளன. மேலும் நியுசிலாந்து மீன்களையும், செம்பறி ஆட்டு முடியாலான கம்பிளி ஆடைகளையும் அதிகமாக ஏற்றுமதி செய்கின்றனர். நியுசிலாந்தின் ஏற்றுமதித் தொழிலில் அதிக அளவு தொடர்புள்ள நாடுகளாக, ஆசுதிரேலியா, ஐக்கிய நாடுகள், சப்பான், சீனா மற்றும் இங்கிலாந்து ஆகியவை விளங்குகின்றன.
நியுசிலாந்து ஆசிய – பசிபிக் பொருளாதாரக் கூட்டுறவு, காமன்வெல்த் ஆப் நேஷன்ஸ், பொருளாதார கூட்டுறவு மற்றும் மேம்பாட்டிற்கான ஒருங்கிணைப்பு, பசிபிக் தீவுகள் பொது மன்றம் மற்றும் ஐக்கிய நாடுகள் ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது. சற்றொப்ப நான்கில் ஒரு பங்கு நியுசிலாந்தின் படித்த இளைஞர்கள், வேலைக்காக கடல் கடந்து வாழ்கின்றனர். இதில் அதிகமானோர் ஆசுதிரேலியாவிலும், இங்கிலாந்திலும் பணிபுரிகின்றனர்.