ஈர்ப்பு - தமிழ் இலெமுரியா

19 July 2016 3:18 pm

கைக் குழந்தையின் பொக்கைவாய்ச் சிரிப்பு நம்மை வெகுவாக ஈர்க்கிறது. சீருடையில் பள்ளிக்குச் செல்லும் சிறுமிகளும் சிறுவர்களும் நம் மனத்தில் மகிழ்ச்சி அலைகளை எழுப்புகின்றனர். காடெல்லாம் பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி மலர்களின் அணிவகுப்பு நாம் நாள்தோறும் விரும்பும் காட்சியாகிறது. இராணுவ விழா நாட்களில் வீரர்களின் வண்ண வண்ண அணிகள், அவர்களின் மிடுக்கு நடைகள், அலையென ஏறி இறங்கும் கை வீச்சுக்கள், குதிரைகளின் மீது அமர்ந்து அவர்கள் புரியும் சாகசங்கள், விமானப்படை வீரர்களின் வான்வெளிச் சாதனைகள் முதலியன நம்மை இன்பத்தேனில் மூழ்கடிக்கின்றன. இளையராசா தேர்ந்தெடுத்து வடிவமைத்துப் பாடப்படுகின்ற பாடல்கள், மணிரத்தினம் அமைக்கும் திரைப்படக் காட்சிகள், மகாராஜ புரம் சந்தானத்தின் இளகுவான இன்னிசை, மைக்கேல் ஜாக்சனின் விரைவு நடனப் பாடல் காட்சிகள், உலக கால்பந்துப் போட்டிகளில் விளையாட்டு வீரர்களின் ஆவேச அல்லது புத்துணர்ச்சி வெளிப்பாடுகள், புவியிலிருந்து கிளம்புகின்ற ராக்கெட்டுகளின் விரைவுகள், அன்னை தெரசாவின் பார்வைக் கனிவுகள் ஆகிய அற்புதக் காட்சிகள் மனித மனங்களை எல்லையில்லா இன்பத்தில் ஆழ்த்துகின்றன. இக்காட்சிகளுக்கு நேர்மாறாக நிகழ்பவை நம்மை வெறுப்பில் தள்ளுகின்றன. பணம் ஒன்றையே குறியாக்கி, மக்கட் பண்பு, நேர்மை, வாய்மை, தூய்மை ஆகிய பண்புகள் அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு பொய், பித்தலாட்டம், ஏமாற்றல், வேடம் போடல் ஆகியவற்றையே முதலாகக் கொண்டு நடந்துவரும் இன்றைய அரசியல்வாதிகளின் செயல்கள் நம்மை வெறுப்பில் ஆழ்த்தாமல் வேறென்ன செய்யும்? மக்கள் தொகை பெருக்கத்தால் நாள்தோறும் பல்கிவரும் சிக்கல்களைச் சமாளிக்க இயலாமல் எவ்வாறேனும் அறிவியல் வெளிப்பாட்டுச் சுக போகங்களை அனுபவிப்பதற்காக நெறிமுறைகளில் பிறழ்ந்து வரும் மக்களை நாம் விரும்பவா முடிகிறது? வேலையில்லா விரக்தியில் வன்முறைகளை மேற்கொண்டு கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டுவரும் இளைஞர்களை நோவதா? அல்லது இந்நிலை தோன்றக் காரணமான அரசியல்வாதிகளை வெறுப்பதா? எவ்வாறாயினும் வெளிப்பாடுகள் வெறுப்பைத்தானே உமிழ வைக்கின்றன! இங்ஙனம் விருப்பு, வெறுப்பு ஆகிய இரண்டிற்கும் மக்களாகிய நாம் உட்பட்டுள்ளோம். ஆனால் நாம் வாழ்ந்து வரும் இப்புவி விருப்பு, வெறுப்பின்றி அனைவரையும் ஏன் அனைத்துப் பொருள்களையும் ஈர்த்து வருவதை அறியும்போது வியப்பிலும் வியப்பு! அகழ்வாரைத் தாங்கும் நிலம் மட்டுமன்றி இப்புவி ஈர்ப்பு புவியாகவும் செயல்படுகிறது. இயற்கை ஏராளமான இரகசியங்களை மறைத்து வைத்துள்ளது. அவற்றை அறிவதிலேதான் மனித சமுதாயத்தின் ஆர்வமே அடங்கியிருக்கிறது. இப்புவியில் மிக கமுக்கமாகவே ஆப்பிளையும் ஏனையவற்றையும் ஈர்த்து வருவதை ஐசக் நியூட்டன் முதன் முதலில் இவ்வுலகிற்கு வெளிப்படுத்தினார். மழைத்துளிகள் விழுவதும் மேலே எறியப்பட்ட கல் கீழே விழுவதும் மூட்டை தூக்கும் கூலிக்காரன் கடினப்படுவதும் முதியோரின் உறுப்புகள் தளர்ச்சியுறும் போது சரிவதும் மிதிவண்டி ஓட்டுபவர் மேட்டில் ஏற திணறுவதும் இப்புவி ஈர்ப்பு விசையால்தான் என்றால் வியப்பாக உள்ளதன்றோ! இவை மட்டுமா? வாய்க்கால், ஆறு, நதிகளின் நீரோட்டங்கள் இப்புவி ஈர்ப்பு விசையால்தான் நிகழ்கின்றன. ஆழமான கிணற்றை எட்டிப் பார்க்கும் போது ஈர்ப்பு விசைக்கு உள்ளாவதாலேயே இலேசான தலை சுற்றலுக்கு ஆளாகிறோம். மலையேறும் போது புவி ஈர்ப்பை எதிர்த்துச் செல்வதால் எளிதில் களைப்படைகிறோம். இறங்கும் போது புவி நம்மை ஈர்ப்பதால் இறக்கம் இலகுவாகின்றது. விளையாட்டு வீரர்கள் உயரம் தாண்டும் போது உண்டாகின்ற சிக்கலே இவ் ஈர்ப்பு விசைதான். இதை எதிர்த்துத்தான் குதிப்பவர்கள் சாதனை புரிய வேண்டியுள்ளது. மனிதர்களின் உயரங்கள் கூட இப்புவி ஈர்ப்பு விசையால்தான் நிறுத்தப்பட்டுள்ளது எனலாம். இல்லையென்றால் பத்தடி, பதினைந்தடி என்றவாறு உயரமாகியிருப்பார்கள். நம் இயக்கங்களையும் புவி ஈர்ப்பு விசையே தடுத்து வருகிறது. இதை எதிர்த்து மேலெழும்பவே அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. ஒரு ராக்கெட்டை செலுத்த எரிபொருள் செலவு ஏராளம். புவி ஈர்ப்பு விசையை முறியடிக்க குறைந்தது ஒரு வினாடிக்கு 11.2கி.மி வேகத்தில் ராக்கெட்டைச் செலுத்த வேண்டியுள்ளது. இவ்வளவு ஏன்? நம் கடல்நீர் வெளியில் – ஆம், வான் வெளியில் கொட்டி விடாமல் நிறுத்திக் கொண்டிருப்பதும் ஈர்ப்பு விசையால்தான். அதுமட்டுமா? நாம் வெளியே புவிச் சுழற்சி காரணமாகத் தூக்கி எறியப்படாமல் நிலைநிறுத்தி இருப்பதுவும் இப்புவியீர்ப்பு தான். நிலவு, புவியைச் சுற்றி வரச் செய்வதுவும் ஈர்ப்பு விசையென்றால் அது உண்மையே! அவ்வாறே புவி, சூரியனைச் சுற்றுவதும் சூரிய ஈர்ப்பு விசையால்தான்  பிற கோள்கள் அனைத்தும் இச்சூரியப் பொருண்மை (தனித்தன்மை ஆற்றல்) ஈர்ப்பு விசையால் சுற்றுகின்றன.நிலவின் குறைவான ஈர்ப்புபுவி ஈர்ப்பு விசையைப் போன்றே சூரிய ஈர்ப்பு விசையும் செயல்படுகின்றது. ஆனால் சூரிய ஈர்ப்புவிசை புவி ஈர்ப்பு விசையைக் காட்டிலும் மிகமிக வலிமை உடையது. நிலவிற்கும் ஈர்ப்பு விசையுண்டு. புவியின் அளவில் ஆறில் ஒரு பங்காகும். ஆகவேதான் நிலவு பரப்பில் ஒருவன் மிக அதிகளவு உயரத்திற்குக் குதிக்க இயலும். புவிப்பரப்பில் ஐந்தடி உயரம் குதிக்க முடிகின்ற ஒருவன், நிலவு பரப்பில் முப்பது அடி உயரத்திற்குக் குதிக்க முடியும். இப்புவி ஈர்ப்பு விசை புவியின் நிறையால் உருவாகின்ற விசையாகும். பொருண்மை ஈர்க்கின்ற இயல்புடையது. பொருண்மை நிறை உடையது என்பதை அறிவோம். இடத்தை அடைத்திருப்பது பொருளாகும். அதிக இடத்தைக் கொண்டுள்ள அதே பொருள் அதிக பொருண்மை உடையது. பொருண்மை அதிகரிக்க நிறை கூடுகிறது. நிறை கூடும் போது ஈர்ப்பு விசையும் வலுக்கிறது. நிறை குறையும் போது ஈர்ப்பு விசையும் குறைகிறது, இந்த ஈர்ப்புவிசை தனித்தன்மை வாய்ந்தது. பொருண்மை ஈர்ப்பு விசை இரு பொருட்களுக்கு இடையேயும் செயல்படுகிறது. பொருட்களின் நிறையால் ஒன்றையொன்று ஈர்ப்பதால் பொருட்களின் தொகுப்பு கோளக வடிவத்தில் அமைகிறது. அதாவது நட்சத்திரங்கள், கோள்கள் முதலியன கோளக வடிவங்களைப் பெற்றுள்ளன. ஏன், நீர்த்தி வலைகள் கோளக வடிவில்தான் உருவாகின்றன. ஆனால் நீர்த்தி வலைகளின் கோளக வடிவம் பொருண்மை ஈர்ப்பு விசையால் மட்டும் நிகழ்வதன்று. திரவ மூலக் கூறுகளிடையே நிலவும் பரப்பு ஈர்ப்பு பெரிதும் காரணமாகும். இப்பொருண்மை ஈர்ப்பு விசை கிராவிடான் என்ற துகள்களின் மூலமாகச் செயலுறுகின்றது என்று கொள்ளப்படுகின்றது. இந்த உண்மை இன்னும் சோதனை மூலம் தெளிவாக்கப் படவில்லை என்றாலும் பெருமளவில் கிராவிடான்கள் என்னும் துகள்களைத் தேடும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொருண்மை அதிகரிப்பினால் இவ்வீர்ப்பு விசை வெகு தொலைவிற்குப் பரவி செயலுறுகின்றது. ஆகவேதான் பால்வெளி என அழைக்கப்படும் நம் அண்டத்தில் உள்ள அனைத்து நட்சத்திரங்களும் ஒரு வடிவத்தில் அமைந்து சுழன்று வருகின்றன. இவ்வீர்ப்பு விசை செயல்படாது இருப்பின் நட்சத்திரங்களும் சிதறி ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் அமையாது வெளியேறியிருக்கும் என்பது வெளிப்படை.கருந்துளைஒரு நட்சத்திரம் அல்லது நம் சூரியன் தொடர்ந்து ஒளி உமிழ்ந்து கொண்டே இருப்பதால் அதன் நிறை குறைகிறது. சில காலத்திற்குப் பின் ஒளி உமிழ்வு நின்று விடுகிறது. இந்நிலையில் ஈர்ப்பு விசையால் அந்த ஒளிவிடா நட்சத்திரத்தின் அடர்த்தி அதிகமாகிறது. ஒரு நிலையில் அளவிலா ஈர்ப்புவிசை காரணமாக பொருண்மை முழுவதும் ஈர்ப்புப் புலமாக மாறிவிடுகிறது. இது கருந்துளை என்றழைக்கப்படுகிறது. ஒரு கருந்துளை முழுதும் ஈர்ப்புப் புலமாக உள்ளதால் அதன் எல்லைக்குள் எது சென்றாலும் அது ஈர்க்கப்பட்டு விடுகிறது. பொருண்மை இல்லாது போகிறது. அதாவது பொருண்மை அழிந்து ஈர்ப்புப் புலமாகி விடுகிறது. ஒளிக்கதிரும் ஈர்க்கப்படுகிறது. வெளியில் ஒரு கருந்துளைக்கு அதன் புலத்தின் வழியே கடக்க முயலுகின்ற அனைத்து ஒளிக்கதிர்க் கற்றைகளையும் கருந்துளைப்புலம் ஈர்த்து விடுகிறது.வெளி வார்ப்பு ஒளி நேர்க்கோட்டில் செல்வதாக நாம் அறிகிறோம். ஆனால் ஒரு நட்சத்திரப் பரப்பு அருகே வருகின்ற ஒளி சற்று வளைந்து செல்கின்றது. இவ்வாறு நட்சத்திர ஈர்ப்புப் புலத்தருகே ஒளி வளையும் விளைவை ஐன்ஸ்டைன் தெளிவாக்குகிறார். ஒளி வளைத்துச் செல்கிறது என்பதை விட அந்த நட்சத்திரப் புலம் (ஈர்ப்புப் புலம்) நட்சத்திரத்தைச் சுற்றியுள்ள வெளியை வளைத்துள்ளது என்பதே சரியாகும். கருந்துளையும் அவ்வாறே வெளியை வளைத்துள்ளது. வெளியை வளைத்தல் என்பது சற்றுப் புரியாது குழப்பமாக அமையலாம். அதைத் தெளிவாக்கிட ஓர் எடுத்துக்காட்டை மேற்கொள்ளலாம். இரப்பர் பாய் ஒன்று விறைப்பாகப் பிடிக்கப்பட்டுள்ளதாகக் கொள்வோம். நடுவில் ஒரு இரும்புக் குண்டு வைக்கப்பட்டால் இரப்பர் பாய் தொய்வடைகின்றதல்லவா? இப்போது இரப்பர் பாயின் நான்கு முனைகளும் கெட்டியாகவே பிடிக்கப்படுகின்றன. நடுவில் ஒரு குழி விழுந்து அதில் இரும்புக் குண்டு அமர்ந்துள்ளது. இந்த ரப்பர் பாயின் பரப்பு வளைந்துள்ளவாறுதான், கருந்துளையும் வெளியை வளைத்துள்ளது. இரப்பர் பாய் என்பது பரப்பை மட்டும் கொண்டது. அதாவது அது இரண்டு பரிமாணங்களைக் கொண்டது. ஆனால் வெளி முப்பரிமாணங்களைக் கொண்டது. எனவே கருந்துளையைச் சுற்றி எல்லாத் திசைகளிலும் வெளி வளைவிற்கு உள்ளாகின்றது. சாலை ஒன்றில் பேருந்து செல்வதைக் காண்கிறோம். சாலை வளைவில் பேருந்தும் வளைந்து செல்கின்றதல்லவா? சாலை பள்ளத்தில் பேருந்தும் இறங்கித்தான் செல்கின்றது. அவ்வாறே ஒளியும் கருந்துளை அல்லது ஒரு நட்சத்திரத்திற்கு அருகே செல்லும் போதும் வளைந்து செல்கின்றது. இவ்வாறு ஒளி வளைதல் நிகழ்வை உண்டாக்கியது ஈர்ப்புப் புலந்தான். பொருள்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கின்றன. இந்த அடிப்படையில் நட்சத்திரங்களும் பிற கோள்களும் கோள வடிவங்களைப் பெறுகின்றன. பொருண்மை ஈர்ப்பு விசையால் வெளி வளைபடுகிறது. கோள்கள், நட்சத்திரங்களின் இயக்கங்கள் ஈர்ப்பு விசையால் நிகழ்கின்றன. புவிப் பரப்பில் நிகழ்கின்ற அனைத்திற்கும் இந்த ஈர்ப்பு விசை அடிப்படையாக அமைகின்றன. ஆயினும், ஈர்ப்பு விசைச் சுமப்பான்களான கிராவிடான்களைக் காண அறிவியல் உலகம் முனைப்பாகச் செயல்பட்டு வருகிறது. – கே.நவநீதன்

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி