‘சீர்வரிசை சண்முகராசனார்’ நினைவு நூலகம் திறப்பு விழா - தமிழ் இலெமுரியா

16 June 2016 8:12 pm

மும்பையின் முதுபெரும் எழுத்தாளரும் மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் நிறுவனருமான சீர்வரிசை சண்முகராசன் அவர்களின் நினைவாக மும்பையில் ஒரு தமிழ் நூலகம் அமைக்கப்படும் என அன்னாருடைய நினைவேந்தல் நிகழ்ச்சியில் ‘இலெமுரியா அறக்கட்டளை’ சார்பில் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.  அந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் மும்பை & தானே வீர்சாவர்க்கர் நகர் பகுதியிலுள்ள டேனிஸ் அடுக்ககம் முதல் மாடியில் சற்றொப்ப ஆறாயிரம் தமிழ் நூல்கள் கொண்ட நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நூலகத்தினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி திறந்து வைத்து உரையாற்றினார். நூலக பெயர்ப் பலகையை மும்பை எழுத்தாளர்கள் சாருசிறீ, புதிய மாதவி ஆகியோர் திறந்து வைத்தனர்.  இந்நூலகத்தில் சங்க கால தமிழ் இலக்கியங்கள், திருக்குறள் உரைகள், திருக்குறள் பன்மொழி மொழிபெயர்ப்புகள், தமிழ் அகராதிகள், நாவல்கள், அறிவியல் சார்ந்த நூல்கள், தமிழ், ஆங்கிலம் தகவல் களஞ்சியங்கள், உலகத் தமிழ் மாநாடுகளின் மலர்கள், சமூக சிந்தனையாளர்களின் கட்டுரைகள், வாழ்க்கை வரலாறுகள், மராத்திய எழுத்தாளர்களுடைய நூல்கள், பெரியார், காந்தி, அண்ணா, கலைஞர், கி.வீரமணி, சுப.வீரபாண்டியன், சீர்வரிசையார், கலைக்கூத்தன், பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், சுரதா, கா.ப.அறவாணன், இளங்குமரனார், பாவாணர், பெருஞ்சித்திரனார், அம்பேத்கர், அயோத்திதாசர் போன்ற பெருமக்களின் நூல்கள், பக்தி இலக்கியங்கள், சமய நூல்கள், பகுத்தறிவு கட்டுரைகள், பெரியார் களஞ்சியங்கள், செந்தமிழ்ச்செல்வி, உண்மை, தெளிதமிழ், தமிழ்நிலம், வள்ளுவர் வழி, யாதும் ஊரே, மீட்போலை, தமிழ் இலெமுரியா, காக்கை சிறகினிலே, சீர்வரிசை, வள்ளுவர் வழி இதழ்களின் பல்லாண்டு தொகுப்புகள், மும்பை எழுத்தாளர்களுடைய வெளியீடுகள், தமிழ் ஈழம் தொடர்பான நூல்கள், சிங்கப்பூர், இலங்கை மற்றும் பிற நாட்டு எழுத்தாளர்களின் நூல்கள், மருத்துவம், சுற்றுச்சூழல், கடல்சார் பொறியியல் தொடர்பான நூல்கள், சிற்றிதழ்கள் என சற்றொப்ப ஆறாயிரம் நூல்கள், ஒலி&ஒளி நாடாக்கள், குறுவட்டுகள், திரைப்படங்கள், தமிழகத்தின் முன்னணி பேச்சாளர்களின் ஒலி&ஒளிப்பதிவுகள் இடம் பெற்றுள்ளன. இத்திறப்பு விழாவில் சென்னையிலிருந்து திராவிடர் கழக வெளியுறவு செயலாளர் வி.குமரேசன், பிற்படுத்தப்பட்டோர் நல அமைப்பின் அமைப்பாளர் கருணாநிதி, சிவக்குமார், ஆ.சுப்பிரமணியம், மைதிலி, மும்பை எழுத்தாளர்கள் நாகலட்சுமி சண்முகம், குமாரசாமி, அமலா ஸ்டான்லி, நங்கை, இராகுல கார்க்கி, இறை ச.இராஜேந்திரன், வெ.சித்தார்த்தன், மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன், பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் அ.இரவிச்சந்திரன், மும்பை திமுக பொறுப்பாளர் கருவூர் இரா.பழனிச்சாமி, அ.கதிர்வேல், மு.தருமராசன், சு.சுப்பிரமணியன், கி.தனுஷ்கோடி, காரை.இரவீந்திரன், கயல் கண்ணன், வெற்றிச் செல்வன், மகாலிங்கம் உள்ளிட்ட ஏராளமான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ‘தமிழ் இலெமுரியா’ குழுமம் சிறப்பாக செய்திருந்தது. நிறைவாக தானே தமிழ்ச்சங்க உறுப்பினர் எம்.இலட்சுமணன் நன்றியுரை ஆற்றினார்.  

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி