பழந்தமிழர் வேளாண்மை - தமிழ் இலெமுரியா

15 May 2016 6:35 pm

பண்டைத் தமிழர்களின் வேளாண்மைக் காலத்தை மிகக் குறிப்பாக அறுதியிட்டுச் சொல்ல முடியாதெனினும் நாகரிகம் என்று இப்போது ஆய்வாளர்களால் குறிக்கப்படுகிற காலத்திற்கும் முந்தையது என்பதில் சிறிதும் ஐயமில்லை. உலகிலேயே வாழ்நிலப் பகுதிகளை திணை மண்டலங்களாகப் பகுத்து அதை இலக்கணப் படுத்தியவர்கள் தமிழர்களே என்பது பல ஆய்வாளர்களின் ஆணித்தரமான கருத்தாகும். இது இன்று அறிவியலாளர்கள் பகுக்கின்ற திணைமவியல் பகுதிகளுக்கு சற்றும் குறைந்ததன்று. குறிஞ்சி எனப்படும் மலையும் மலைசார்ந்த நிலமும் முல்லை எனப்படும் காடும் காடு சார்ந்த நிலமும் மருதம் எனப்படும் வயலும் வயல் சார்ந்த நிலமும் நெய்தல் எனப்படும் கடலும் கடல் சார்ந்த நிலமும் நாநிலம்" என்று அழைக்கப்பட்டது. இதற்கடுத்தாற்போல் வறட்சிக் காலத்தில் முல்லை, குறிஞ்சி என்ற பகுதிகளை பாலை என்று பிரித்தனர். ஆனால் இதற்கு ஏனைய நிலத்தைப் போல் நிலையான நிலம் கிடையாது. எந்த இடத்தையும் இயற்கை பாலையாக ஆக்குவதில்லை என்பதற்கு மிக அறிவியல் வகைப்பட்ட பார்வையாக இது உள்ளது. குறிஞ்சி நில வேளாண்மை மிகவும் பழமையானது. ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தேர்வு செய்து அது அடர்ந்த காடாக இருந்தால் அதைத் தீயிட்டுக் கொளுத்திவிட்டு அந்த இடத்தில் விதைகளைத் தூவி விடுவார்கள் அல்லது காட்டுப் பன்றி மண்ணைக் கீறி கிழங்குகளைத் தின்றுவிட்டுப் போன இடங்களில் விதைப்பார்கள். தவசங்கள் (தானியங்கள்) இயல்பாக விளைந்துவிடும். குளிர்ந்த காடுகளாக இருப்பதால் எப்போதும் மழை இருக்கும். ஆகவே குறிஞ்சி நில மக்கள் ஏர்கொண்டு உழாமல் வேளாண்மை செய்தனர். இதை மலைபடுகடாம் என்ற கடைச்சங்க நூல், ‘தாய்யாது வித்திய துளர்படு துடவை’ என்று குறிப்பிடுகிறது. அதாவது ‘உழாது விதைத்த நல்ல விளைநிலம்’ என்று பொருள். வளப்பான அந்த குறிஞ்சி நிலத்தில் உழவேண்டிய தேவை இல்லை. அங்கு பற்றாக்குறையாக இருப்பது சாம்பல் ஊட்டம் (பொட்டாசியம்) மட்டுமே. அதற்காக அம்மக்கள் எரித்துவிட்டு விதைக்கிறார்கள். இன்று உலகம் முழுமையும் பேசப்படுகிற அறிஞர் ஃபுகோகா கூறுகின்ற உழாத வேளாண்மையை அன்றைய தமிழர்கள் மிக இயல்பாகச் செய்திருக்கின்றனர். மேலும் குறிஞ்சி நிலத்தின் முதன்மை விளைபொருள் ஐவன வெண்ணெல்லும் தினையும் ஆகும். நன்செய் நிலத்தில் உள்ளது போன்ற சம்பா நெல் அங்கு இல்லை. முல்லை நிலத்தில்தான் கலப்பையின் வருகை தொடங்குகிறது. அந்தக் கலப்பை கூட எளிய கலப்பைதான். பெரும்பாணாற்றுப்படை என்ற நூலில்,  பிடிக்கணத்து அன்ன குதிருடை முன்றில்களிற்றுத் தாள் புரையும் திரிமரப் பந்தர்குறுஞ்சாட்டு உருளையொடு கலப்பை சார்த்திஎன்று தவசங்களைச் சேர்த்து வைக்கின்ற குதிர்களையும் கலப்பையையும் குறிப்பிடுகின்றது. இதே கலப்பை மருத நிலத்திற்கு வரும் போது விரிந்து அகன்று ஆழ உழும் திறன் மிக்கதாய் ஆக்கப்படுகின்றது. பெரும்பாணாற்றுப் படையில், குடிநிறை வல்சிச் செஞ்சால் உழவர்நடைநவில் பெரும்பகடு புதவில் பூட்டிபிடிவாய் அன்ன மடிவாய் நாஞ்சில்உடுப்பு முகமுழுக் கொழு மூழ்க ஊன்றிஎன்று பெண் யானையின் வாயைப் போன்று மடிந்து அகன்று இருக்கின்ற பெரிய கலப்பையான நாஞ்சில் கலப்பை மருத நிலத்தில் வருகின்றது, இதை ஆழமாக ஊன்றி இழுப்பவை வலிமையான பகடுகள் எனப்படும் பெரிய மாடுகள். இவை எவ்வளவு பள்ளம் இருந்தாலும் மண்டி போட்டு இழுக்கும் ஆற்றல் பெற்றவையாம். இதை வள்ளுவப் பெருமான் ‘மடுத்தவாயெல்லாம் பகடன்னான்’ என்று மிகுந்த முயற்சி உடையவனுக்கு இணையாகப் பகடைக் கூறுகிறார். வலுவான மாடுகள், அகன்ற கலப்பைகள் என்று வேளாண்மை மருத நிலத்தில் புதிய வடிவம் எடுக்கின்றது. விளைந்த தவசங்களைச் சேர்த்து வைக்க மிகப் பெரிய குதிர்களை அன்றைய மக்கள் வடிவமைத்திருந்தனர். விளைந்த விளைச்சலும் மிக அதிகமாகவே இருந்திருக்கிறது. உழவின் பெருமை பற்றியும் அதன் இன்றியமையாமை பற்றியும் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் யாவையும் தவறாமல் குறிப்பிடுகின்றன. வேத (வைதீக) நூல்கள் மண்ணைக் கீறுவது பாவம் என்று உழவுத் தொழிலை குறித்த போது தமிழிய நூல்கள் உழவைப் பெருமைக்குரியதாகக் கருதின.உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாந்தொழுதுண்டு பின் செல்வர்என்று வள்ளுவர் கூறியுள்ளார். இதையே பெரும்பெண் புலவர் அவ்வையார் வேறு மொழியில் கூறுகிறார், ஆற்றங்கரையில் மரமும் அரசுஅறியவீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றோஏற்றம்உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்பழுதுண்டு வேறோர் பணிக்குஎன்று ‘நல்வழியில்’ கூறுகிறார். இத்தகைய சிறப்பான தொழில் இன்று சிதைந்து சிறுத்துப் போய்விட்டதை நினைத்தால் நெஞ்சம் கனக்கும்.  உலகிற்கு அரிசியை அறிமுகம் செய்த பெருமை தமிழர்களைச் சாரும். அலெக்சாண்டர் இந்தியாவிற்கு வருவதற்கு முன்புவரை அரிசியைப் பற்றி ஐரோப்பியர்களுக்குத் தெரியாது. அலெக்சாண்டருடன் வந்த அரிசுடாட்டில் அன்றைய சிந்தாற்றின் தென்புறமுள்ள அனைத்து அறிவுச் செல்வங்களையும் பெரியதொரு குழுவினருடன் வந்து திரட்டிச் சென்றுள்ளார். அதில் ஒன்றுதான் அரிசி. தமிழிசையும் அவ்வாறு ஐரோப்பா சென்றுள்ளதை அறிஞர்கள் நிறுவியுள்ளனர். மேலும் பல மேல்திசை, கீழ்திசை நாடுகளுக்கெல்லாம் அரிசி அரேபிய வணிகர்களால் கொண்டு செல்லப்பட்டது. கி.மு.300களில் அரிசி, ஆப்பிரிக்க கடலோர நாடுகளுக்கு (எகிப்து, எத்தியோப்பியா, பாரசீகம் இன்றைய ஈரான்) கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்னர் தோன்றிய பேரரசான ரோமப் பேரரசின் கீழ் இருந்த சிசிலி வழியாக அரிசி ஸ்பெயின் தேசம் சென்றது. அரபு மொழியில் அல்ருஸ், ஸ்பானிய மொழியில் அராஸ், இலத்தின் மொழியில் ஒரைசா, இத்தாலியில் ரைசே, பிரெஞ்சு மொழியில் ரிஸ், ஜெர்மனியில் ரெய்ஸ், ஆங்கிலத்தில் ரைஸ் எனப் படிப்படியாக ஒலி மாற்றம் பெற்றது அரிசி. ஆனால் இன்று ஆங்கில அகராதியில் இதை இலத்தின் சொல் என்று போட்டுவிட்டு, கீழை தேசத்துத் தோற்றம் என்றும் தோற்றம் தெரியாதவாறு குறித்துள்ளனர். என்னே இன்றைய தமிழர்களின் விழிப்புணர்வு! எவ்வாறு அரிசியை உலகிற்கெல்லாம் கொடுத்தார்களோ அதேபோல உலகின் பிற பகுதிகளில் இருந்து வேறு சில பயிர்களைத் தமிழகத்திற்கு பண்டைத் தமிழர்கள் கொண்டு வந்துள்ளனர். கரும்பு என்பது பலராலும் இன்று விரும்பப்படும் பயிர். ஆனால், அது நமது பழம் பண்டைப் பயிரன்று. வெளியில் இருந்து வந்தது. நமக்கென்று இனிப்பைக் கொடுத்து வந்தது பனையாகும். அதியமான் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னனின் முன்னோர்கள் கிழக்காசிய நாடுகளில் இருந்து கரும்பைக் கொண்டு வந்ததாக இலக்கியக் குறிப்பு உள்ளது. வேளாண்மைக்கு அடிப்படை நீர். ‘நீரின்றி அமையாது உலகு’ என்பார் வள்ளுவர். பண்டைத் தமிழ் மக்கள் நீரின் மீது வைத்திருந்த மதிப்பீடுகளும் நம்பிக்கைகளும் நமக்கு வியப்புத் தருவன. ஆனால் அந்த மரபில் வந்த இன்றைய மக்கள் நீரை எவ்வளவு மோசமாகப் பயன்படுத்துகின்றனர் என்பது அதைவிட வியப்புக் கலந்த வேதனை உண்மையாகும். ‘மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்’ என்பார் இளங்கோவடிகள். மழைப் பொழிவு பற்றிய அறிவியல் உண்மைகளை பண்டைத் தமிழர் மிக முன்பே அறிந்து கொண்டுள்ளனர். கடலில் இருந்து நீரை முகந்து மேகமானது மழையைக் கொண்டு வந்து நிலத்திற்கு தருகின்றது என்கிற அறிவியல் கோட்பாடு அன்றே நிலைப்பட்டுவிட்டது. பட்டினப்பாலையில் ‘வான்முகந்த நீர் மலைப் பொழியவும் மலைப் பொழிந்த நீர் கடற்பரப்பவும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது இந்தப் பூவுலகில் உள்ள நீரின் அளவு மாறுபடாதது என்ற அறிவியல் உண்மையும் அவ்வரிகள் குறிப்பிடுகின்றன.  ஆனால் அந்தக் கால மேலை நாட்டு அறிஞர்கள் குறிப்பாக கிரேக்க நாட்டு ஞானிகளான ‘தேல்ஸ்’ மற்றும் இன்றைய அறிவியல் உலகம் கொண்டாடும் ‘அரிசுடாட்டில்’ போன்றோர் கடலுக்கு அடியில் உள்ள நீரூற்றுதான் எல்லாத் தண்ணீருக்கும் ஆதாரம் என்றும் நிலம் அதை உறிஞ்சி மேலே கொண்டு வந்து ஆறாக ஓட விடுகிறது என்றும் கூறியுள்ளனர். மேலும் இப்படி கடல் நீரை உறிஞ்சும் போது அதன் உப்பு மண்ணில் கரைகிறது. வானத்தில் உள்ள காற்று குளிர்ந்ததும் அது மழையாகிறது என்றும் கூறியுள்ளனர். இதுதான் கி.பி.1500 வரை அவர்களுக்கு இருந்த கருத்து. திருவள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பே ‘மாறாநீர்’ பற்றி தெளிவுபடக் கூறியுள்ளார். மேலும் மாரி (மழை) என்பது தமிழகத் தாய்த் தெய்வத்தின் பெயர். மழையை உலகத்தின் அச்சாணியாகப் பார்த்துள்ளனர் தமிழர்கள். ஆனால் நமது தமிழ்க் குழந்தைகள் இன்று ஆங்கிலப் பள்ளிகளில் ‘ரெயின் ரெயின் கோ அவே’ அதாவது ‘மழையே மழையே! போ, போ!’ என்று பாடுகின்ற அவலத்தைக் காணுகின்றோம். அதே போல மழை வருவதற்கான குறிகளாக, நண்டுகள் சேற்றைக் குழைந்து வளைகளை அடைப்பதும் மரக்கிளைகள் சுழன்று காற்று அடிப்பதும் மேற்கிலும் கிழக்கிலும் மின்னல் சூழ்ந்து வெட்டுவதும் வானம்பாடிகள் மழைக்காக வானத்தில் பறப்பதும் கூறப்படுகின்றன. ஆற்று வெள்ளம் நாரை வர.. என்ற பாடல் இதை நன்கு விளக்கும். மழை நீரைச் சேர்த்து வைத்து வேளாண்மை செய்ய வேண்டும் என்ற நிலை குறிஞ்சி நிலத்தில் இல்லை. ஏனெனில் அவர்களுக்கு அருவி நீரும் சுனை நீரும் எப்போதும் குறைவின்றிக் கிடைத்து வந்தன. அது மட்டுமல்லாது அவர்களது வேளாண்மை முறையானது மழைப் பாசனத்தை அடிப்படையாகக் கொண்டது அல்லது அருவி நீரை அடிப்படையாகக் கொண்டது. மேலும் உயர்ந்த மலைகளில் போதுமான மழைப் பொழிவு அப்போது இருந்ததால் அவர்கள் எவ்வித இடைஞ்சலும் இல்லாமல் தினை விதைப்பதும் ஐவன வெண்ணெல் விதைப்பதும் அறுப்பதுமாக இருந்தனர். இந்த மழைப் பாசன மக்கள் காடுகளை உயிர்போலக் காத்தனர். இவர்களது தேவை மிகக் குறைவு. எனவே இயற்கை இவர்களுக்கு வேண்டிய அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து கொண்டே இருந்தது. ஆக மக்களின் உணர்வோடும் வாழ்வோடும் ஒட்டிப்போன இந்த மழை முல்லை நிலத்திலும் அதேபோலப் பார்க்கப்பட்டது.  மருத நிலம்தான் பாசனத்தில் ஒரு திடீர் திருப்பத்தை ஏற்படுத்திவிட்டது. ஓடும் ஆற்றின் போக்கைத் தடுத்து அதை வேண்டிய இடத்தில் வேண்டிய முறையில் பயன்படுத்த முனைந்த இந்தச் சாதனை மாந்தர் குல வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகவே அமைந்து விட்டது. சுமேரிய, எகிப்து, சிந்து நாகரிகங்கள் தோன்றுவதற்கும் இதை போன்ற வேறு பல நாகரிகங்கள் கால் கொள்வதற்கும் இது வழிகாட்டிற்று. அணைகள் அமைத்து நீரைத் தேக்கி வைக்கும் முறை உருவாயிற்று. ஐரோப்பியர்கள் பாசனம் பற்றி பண்டைக் காலத்தில் அறிந்திருக்கவில்லை. நைல் ஆற்று அணைகள் மிகப் பழமையானது என்ற போதிலும் உலகின் பழமையான இன்றும் பயன்பாட்டில் உள்ள அணைக்கட்டு கரிகாலன் கட்டிய கல்லணை ஆகும். கல்லணை கி.பி.2 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது சிலப்பதிகார காலம் எனலாம். இதற்கும் முன்பே தமிழகத்தில் பாசனக் கட்டுமானங்கள் பல இருந்துள்ளன. தமிழகத்தில் இன்று வற்றிப் போய்விட்ட ஆறுகள் பல அன்று செழித்து தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தன. வைகையைக் கடக்க கோவலனும் கண்ணகியும் படகில் வந்ததை சிலப்பதிகாரம் கூறுகிறது. இந்த ஆறுகளைத் தவிர்த்து மிக அதிக அளவில் செயற்கைக் குளங்களை அமைத்திருந்தனர். ஏனெனில் தமிழ்நாட்டில் ஆற்றுப் பாசனப் பகுதிகள் மிகவும் குறைவு. ஆகவே பரந்து பட்டு வேளாண்மை செய்ய வேண்டுமாயின் நீரைச் சேமிக்க வேண்டும். அதற்காக பல்வேறு அமைப்புகளை உருவாக்கினர். படுகர், தாங்கல், கேணி, பல்வலம், படு, பட்டம், மடு, உவளகம், பண்ணை, வாவி, வட்டம், தடம், கயம், பயம், தடாகம், குளம், குட்டம், கிடங்கு, சூழி, அலந்தை, குண்டம், பங்கம், இலஞ்சி, கோட்டம், பொய்கை, ஏல்வை, ஓடை, ஏரி, கண்மாய் என்று 30க்கும் மேற்பட்ட அமைப்புகள் இருந்துள்ளன. இது தவிர சுனை, பொழில் போன்ற இயற்கை நீர் நிலைகள் தனி. நீரோட்டத்தை தடுத்துக் கரையமைத்து நீர்நிலைகளை உருவாக்கியுள்ளனர். அது வாரம், பாரம், கோடு, வரை, அணை, கூலம், தீரம் என்று பெயர் பெற்றுள்ளன. இந்த அமைப்புகள் ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டவை. இவற்றிற்குள் வேறுபாடுகள் உண்டு. பட்டினப்பாலை பொருநராற்றுப் படையும் புகழ்ந்து பேசும் பெருமைக்குரிய மன்னன் கரிகாலன். இவன் வழக்கமான மன்னர்களைப் போல போர்களில் ஈடுபாட்டாலும் வடநாட்டு அசோகனுக்கு இணையாக மரம் நடுவது, குளம் வெட்டுவது என்பதோடு விலங்குகளுக்கான மருத்துவமனைகளையும் ஏற்படுத்தியுள்ளான். இவனது மிகப்பெரும் பணிகளில் ஒன்று காவிரியில் கல்லணை கட்டியது. இவன் வேளாண்மையைப் பெருக்குவதில் பெரும் பங்காற்றியவன். வடநாட்டு அசோகனுக்கு இணையாக வைத்துப் போற்றப்பட வேண்டியவன்.‘அரிகாலின் கீழுகூஉ மந்நெல்லே சாலும்கரிகாலன் காவிரிசூழ் நாடு’ (பொருநர்)என்று இவனைப் பாடுகின்றன இலக்கியங்கள். கரிகாலன் பெருவளத்தான் தொடர்ந்து வெள்ளச் சேதம் ஏற்படுத்தி வந்த காவிரிக்கு அணை போட்டான். அந்த அணை இயற்கையின் போக்கை உணர்ந்து கட்டப்பட்ட அணை. இந்த அணை கட்டப்பட்டுள்ள தொழில் நுட்பத்தை வியந்து போற்றுகிறார் ஆங்கிலேய நாட்டுப் பொறியாளர் சர்.ஆர்தர் காட்டன் என்பவர். இவர் தனது தொப்பியைக் கழற்றி "ஓடும் நீரில் அணை கட்டும் தொழில்நுட்பத்தை எனக்கு விளக்கிக் காட்டியுள்ள இந்தக் காவிரி அணை கட்டிய முன்னோர்களை நான் வணங்குகிறேன்" என்றாராம். ஏனெனில் ஓடும் நீரின் மீது அணை கட்டுவது என்பது மிகவும் கடினமான பணி. காரையோ சுண்ணாம்போ கரைந்து கொண்டே போய்விடும் அல்லது நீரை வேறுபக்கம் திருப்பி விட்டு அணையைக் கட்டிய பின்பு பாதை மாற்ற வேண்டும். ஆனால் இது காவிரியில் இயலாது. வெள்ளக் காலங்களில் இப்போதே நொடிக்கு இரண்டு இலட்சம் கனமீட்டர் நீர் பாயும் ஆற்றைத் திருப்புவது கடினம். அன்றைய காலத்தில் கன்னட நாட்டினர் அணை ஏதும் கட்டாதபோது, இப்போதை விட மிகப் பெரிய அளவில் காட்டு வளம் உள்ளபோது எவ்வளவு தண்ணீர் வரும் என்று நாம் கணக்கிடலாம்! இதனால் பண்டைத் தமிழர்கள் மிக அருமையான நுட்பத்தைக் கடைபிடித்தனர். நாம் நீரோடும் ஆற்றங்கரையிலோ அல்லது அலைவந்து விழும் கடற்கரையிலோ நின்றோமென்றால் நீர் வந்து பாயும் போது நமது கால்கள் மண்ணில் மெல்ல மெல்ல பதிவதைக் காணலாம். அதாவது நீரோட்டம் மணலை அரித்துக் கொண்டு போக கனமான நமது கால்கள் மண்ணுள் பதியும். இந்த நுட்பத்தைத்தான் அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். ஓடும் நீரோட்டத்தின் மீது பெரிய பாறைகளை வைப்பர். அது மெல்ல மெல்ல மணலுள் பதிந்து அடியில் பாறைப் பகுதியை அடையும். அதன் பின்னர் அதே இடத்தில் மற்றொரு பாறைத் துண்டை வைப்பர். அதுவும் கீழே சென்று தங்கும். இவ்வாறு வைக்கும் போது இரண்டு பாறைகளுக்கிடையில் ஒரு வகையான கரையாத தன்மை கொண்ட களிமண்ணைப் பயன்படுத்தியுள்ளனர். தஞ்சைப் பகுதியில் பெரும் பாறைகள் கிடைப்பது மிகவும் கடினம். புதுக்கோட்டையில் இருந்தோ அல்லது திருச்சியில் இருந்தோ அல்லது அதைவிடத் தொலைவில் இருந்தோதான் கல் கொண்டு வர வேண்டும். இத்தகைய இடர்பாடுகளைத் தாண்டி கல்லணை கட்டப்பட்டதை நினைத்தால் நமக்கு வியப்பாகவும் பெருமையாகவும் உள்ளது.  இந்த அணையை பேயர்டு சுமித் என்பார் தென்னிந்திய பாசனம் என்ற நூலில் இது ஒரு மிகச் சிறந்த சாதனை என்று குறிப்பிடுகிறார். ஏனெனில், ஆற்றுப்படுகையில் அணைகட்டும் தொழில்நுட்பம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்தான் கண்டறியப்பட்டது. ஆர்தன் காட்டன் இந்த அணையை "பெருமித அணை" என்று பெயரிட்டழைத்தார். இப்பெயர்தான் இன்று உலகெங்கும் அழைக்கப்படுகிறது. இவ்வாறு இவ்வுலகிற்கே வேளாண்மையை கற்றுத்தந்த நம் பண்டைத் தமிழர்கள் வழியில் நாமும் நின்று வேளாண்மைத் தொழில் அழியாது காக்க வேண்டிய தருணம் இது.  - பாமயன்"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி