திசை மாறிய தெலங்கானா - தமிழ் இலெமுரியா

18 August 2013 1:26 pm

தெலங்கானா

அண்மையில் சில நாட்களுக்கு முன்பு கூடிய நடுவண் அமைச்சரவைக் குழு ஆந்திர மாநிலத்தில் மிக நீண்ட நாட்களாகப் போராடி வரும் தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கையை ஏற்பதாகவும், விரைவில் ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரிப்பதற்குரிய சட்டமுறைமைகளை மேற்கொள்ள விருப்பதாகவும் அறிவித்ததைத் தொடர்ந்து கடலோர ஆந்திரா மாவட்டங்கள் மற்றும் ராயலசீமா பகுதிகளில் தெலங்கானாவிற்கு எதிரான போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. எனவே இந்த அறிவிப்பு எப்போது நடைமுறைப் படுத்தப்படும் என்பது கேள்விக்குரிய ஒன்று. 

இந்திய தேசிய அளவில் பெருங்கட்சிகள் என்று சொல்லக்கூடிய காங்கிரசு, பாரதிய சனதா கட்சி என இரண்டும் தெலங்கானாவை ஆதரிப்பது போல் காட்டிக் கொள்கின்றன. ஒரு கட்சி, அதாவது ஆளும் கட்சி, ஒரு அறிவிப்பை வெளியிட்டது. மற்றொரு கட்சி, எதிர்க் கட்சி இந்த மசோதாவை இந்த நாடாளுமன்றத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துவதாகத் தெரிகிறது. தெலங்கானா விடயத்தில் ஆளும் கட்சிக்கும், எதிர் கட்சிக்கும் இவ்வளவு ஒற்றுமை இருந்தால், தெலங்கானா அமைவதில் இவ்வளவு காலம் என்ன சிக்கல் நீடித்தது? என்பது சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். அண்மையில் தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பு ஆய்வில் ஆந்திர மாநிலத்தில் இந்த இரண்டு கட்சிகளுக்குமே செல்வாக்கு மிகவும் சரிவடைந்து, மாநிலக் கட்சிகளாகப் புதியதாக தோன்றியுள்ள கட்சிகள் பக்கமே மக்கள் ஆதரவு இருப்பதாக அறிவித்தது. இதே நிலை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நிலவி வருவதால் எதிர் வரும் தேர்தலில் இந்த இரண்டு கட்சிகளின் மூலம் தேர்வு பெறும் உறுப்பினர்கள் அல்லது அதன் கூட்டணிகள் கூட ஆட்சி செய்யத் தேவையானப் பெரும்பான்மையை பெற இயலாது என்று ஆய்வுகள் தெரிவிப்பதாகவும் செய்தி வெளியிட்டன.

எனவே சரிந்து வரும் செல்வாக்கை சற்று சரிகட்டுவதற்கு, மாநிலச் சிக்கலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதில் தற்போது இந்த அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன என்பதையே தற்போதைய நிலைப்பாடு காட்டுகிறது. ஆனால் தெலங்கானா போராட்டத்தின் உண்மையான வரலாறு வேறு வகையானது. எந்தெந்தக் காரணங்களுக்காக இப்போராட்டம் துவக்கப்பட்டதோ அந்தக் கொள்கையின் அடிப்படையில் இதுகாறும் ஆட்சி புரிந்து வந்த பல்வேறு அரசுகள் எதையும் செய்யவில்லை.

500 ஆண்டுகள் நிசாம் மன்னரின் ஒடுக்குமுறை ஆட்சியின் கீழ் இருந்த தெலங்கானா பகுதி மக்கள் கல்வி, தொழில் வளர்ச்சி, அடிப்படை கட்டமைப்புகள், பண்பாட்டு வளர்ச்சி ஆகியவற்றில் மிகவும் பின் தங்கினர். அதே வேளை ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் அமைந்த ஆந்திரா மக்கள் அதாவது தற்போது கடலோர ஆந்திரா என அழைக்கப்படும் பகுதியைச் சேர்ந்தவர்கள் கல்வி, விவசாயம், அரசியல் அங்கீகாரம், மொழி, பண்பாடு ஆகியவற்றில் முன்னேறிய நிலையில் இருந்தனர். எனவே தெலுங்கானா மக்கள் தங்கள் மீதான ஒடுக்குமுறைகளை எதிர்த்து பொதுவுடைமைப் பாதையில், ஆயுதம் தாங்கிய போராட்ட முறைகளைக் கையாண்டனர். ஒரு கால கட்டத்தில் அய்தராபாத்தைக் கைப்பற்ற வந்த ஆங்கிலேயே இந்திய இராணுவத்தினரை தங்களை மீட்டெடுக்க வந்த தூதர்கள் என்று நம்பினர். நிசாம் மன்னனுக்கும், நிலச் சுவான்தார்களுக்கும் எதிரான தெலங்கானா மக்களின் போராட்டமும் நசுக்கப்பட்டு 1948 ஆம் ஆண்டு இந்தியக் கட்டமைப்புடன் அய்தராபாத் மாநிலம் என்கிற பெயரில் தெலங்கானா பகுதியை இணைத்துக் கொண்டனர்.

ஒடுக்குமுறை ஆட்சியாளர்களிடமிருந்து விடுதலை கிடைக்கும் எனும் தெலங்கானா மக்களின் எதிர்பார்ப்பு விடுதலையடைந்த இந்திய அரசினாலும் நிறைவேற்றப் படவில்லை. அது மட்டுமன்றி 1956 மற்றும் 1961 ஆம் ஆண்டுகளில், தெலுங்கு மொழி பேசும் ஆந்திரா மாநிலத்துடன் தெலங்கானா பகுதிகளும் அய்தராபாத்தும் ஒன்றாக இணைக்கப்பட்டுத் தங்கள் தனித்தன்மை இழந்தனர். அதே கால கட்டத்தில் சென்னை மாகாணத்திற்குச் சொந்தமான திருப்பதி, கர்நூல் போன்ற பகுதிகள் ஆந்திர மாநிலத்துடன் இணைக்கப்பட்டன. இவ்வாறாக பல்வேறு மாற்றங்கள் அரசியலில் நிகழ்ந்திருந்தாலும் அப்பகுதி மக்களின் அடிப்படைக் கோரிக்கை ஒரு கானல் நீராகவே காட்சியளித்தது. தற்போது தெலங்கானா பல்வேறு அரசியல் பரிணாமங்களைக் கொண்டிருந்தாலும் இதன் அடிப்படை ஒரு மக்கள் போராட்டமாகும்.

எந்த அரசியல் கட்சியின் வழி நடத்துதலும் இன்றி, முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இது. இன்னும் குறிப்பாகச் சொல்வதானால் இழிந்த சாதிகள் என்று சொல்லப்படும் ஒடுக்கப்பட்ட மக்கள், வேறு பல தொழில் வகுப்பு மக்கள் ஆகியோரை ஒன்று திரட்டி முதலாளித்துவ கொள்கைகளுக்கு எதிராக, பண்பாட்டுச் சுரண்டலுக்கு எதிராக, அப்பகுதியின் வளம் சுரண்டும் போக்கிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஒன்றாகும். ஆந்திரா ஆட்சியாளர்களுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் நோக்கத்தைக் கொண்டிராமல் அநேகமாக எல்லாக் கட்சிகளிலும் தலைமை தாங்கி அரசியலை நடத்தும் உயர் சாதிக்காரர்கள், நிலச்சுவான்தார்கள் ஆகியோருக்கு எதிர்ப்பைத் தெரிவிப்பதுதான் முதன்மை நோக்கமாக இருந்தது என தெலங்கான அமைப்பின் செயற்குழுத் தலைவரும் தில்லிப் பல்கலைக் கழகப் பேராசியருமான ஐ.திருமலை தெரிவிக்கின்றார். மக்கள் தங்களுக்கான தெலங்கானா மாநிலம் அமைவதை மாத்திரம் விரும்புபவர்களாக இல்லை. மாநிலத்திலுள்ள சொத்திலும் அதிகார மையத்திலும், பதவிகளிலும் தங்கள் பங்கைப் பெறுவதே குறிக்கோள் என்கின்றனர். இது மாநில அமைப்பு போராட்டம் என்பதை விட மெய்யான மக்களாட்சி இப்பகுதியில் உருவாக வேண்டுமென்கிற போராட்டம் என்பது தான் சரி. பெரும் பகுதியான அரசியல் அதிகாரமும், வளமும், சொத்துகளும் ஆந்திரா பகுதி முதலாளிகளிடம் உள்ள நிலையில் தாங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப் படுவதாக தெலங்கானா மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பெயர் பெற்ற கதைப்பாட்டுப் பாடும் புரட்சிகாரன் கத்தரின் கூற்றுப்படி, ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் இந்த இயக்கத்தை கொழுந்து விட்டெரியும் படிச் செய்து கொண்டிருக்கும் போது, முக்கியமாக ரெட்டியார்கள், வெலமர்கள் கையில் அரசியல் தலைமைப் பதவி இருக்கிறது என்பது எல்லோராலும் உணர்ந்து கொள்ள முடியாத உண்மையாகும். இப்போராட்டம் 2009 களில் லம்பாடா இனத்தின் முதல் தலைமுறைக் கல்லூரி முதல்வர் டாக்டர் இராசேசு நாயக் போன்றவர்கள் ஆதரவால் நடைபெற்றது. எம்.கோதண்டராமன், செயசங்கர், கத்தார் போன்ற மனித உரிமை ஆர்வளர்களும் இப்போராட்ட வடிவத்தை மக்கள் இயக்கமாக கொண்டு சென்றவர்களாவர்.

ஆனால் எந்த ஒரு சிக்கலையும் தீர்ப்பதற்கு மற்றொரு சிக்கலை உருவாக்குவதில் வல்லவர்களான இன்றைய அரசியல் தலைவர்கள், மக்கள் எழுச்சிகளைத் தம் பக்கம் திருப்புவதற்காக பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டனர். அதன் விளைவாகவே தெலங்கானா ராசுட்டிரிய சமிதி மற்றும் தெலங்கானா ஆதரவு நிலைப்பாடுகள் என்கிற பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தப்பட்டன. தெலுங்கானாவிற்கான அடிப்படைக் காரணிகளை மறந்து தற்போது ஒவ்வொரு மாநில அளவிலும் வீழ்ச்சியடைந்து வரும் தேசியக் கட்சிகள் இதன் மூலமாவது உணர்ச்சிப் பெருக்கான மக்களின் வாக்குகளை நமக்கு ஆதரவாகப் பெற்று விட முடியும் என்ற நம்பிக்கையில் ஆளும் பேராயக் கட்சியும், எதிரணியில் இருக்கும் பாரதிய சனதா போன்ற கட்சிகளும் ஆதரவு தெரிவித்து தத்தம் வாக்கு வங்கியை வளர்க்க விரும்புகின்றனர்.

இதை விட மோசமாக இன்னுமொரு சிக்கலையும் ஆளும் கட்சி உருவாக்க முயல்கிறது. அதாவது ஆந்திரா, தெலங்கானா பிரிக்கப்பட்ட பின்பு, தத்தம் ஆதரவை சாதிய அடிப்படையில் நிலைநிறுத்த முயன்று ஆந்திராவின் பெரும்பான்மை சாதிகளின் வாக்குகளைக் குறி வைத்து திரைப்பட நடிகர் சிரஞ்சீவி போன்றவர்களை முதல்வராக்கும் முயற்சியும் ஒருபுறம் நடைபெறுகிறது. தற்போது இந்திய நாடு சந்தித்து வரும் பொருளாதாரப் பின்னடைவில் ஒரு புதிய மாநிலம் உருவாக்கப்படுவதற்கு எவ்வளவு பொருட் செலவு, கட்டமைப்புகள் போன்ற பலவற்றிற்கான நிதி ஒதுக்கீடு பற்றியெல்லாம் கவலைப் படாமல் தம் அரசியல் இலாபத்திற்காக அறிவிக்கப்பட்ட ஒன்றாகவே இந்த தெலங்கானா அறிவிப்பு தென்படுகிறது. மற்றொரு புறம் இணைந்த ஆந்திரா என்கிற பெயரில் வன்முறைகளும் அரசியல் கட்சிகளாலேயே நடத்தப் பெறுகின்றன. தெலங்கானா மக்களின் போராட்டம் உண்மையானது, உறுதியானது, மக்களாட்சி மலர வேண்டும் என்கிற எண்ணத்தின் பால் பட்டது. எனினும் கடந்த பல ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் இந்த மக்கள் போராட்டத்திற்கு பல அரசியல் தலைவர்கள் உரிமை கோரும் வகையில் மாற்றம் பெற்றுள்ளது. முதலாளித்துவதிற்கும், அடக்குமுறைகளுக்கும் எதிராகத் தோன்றிய மக்கள் போராட்டத்தின் வடிவம் இன்று அரசியல் முதலாளிகளாலும், பதவிப் பித்தர்களாலும் கட்சி அரசியலை முன்னிறுத்தும் பல தலைவர்கள் கையில் சிக்குண்டு இருப்பது வேதனையான விடயம். உழைத்தவன் ஒருவன், உரிமை கொண்டாடுபவன் மற்றொருவன் என்பது போல தற்போது காட்சியளிக்கின்றது. சிறு மாநிலங்கள் சீர்மை பெரும் என்பது உண்மையெனினும், எந்த ஒரு போராட்டத்திற்கும் அதன் அடிநாதம் அறிந்து சரிசெய்யப்படாத வரை தீர்வுகள் ஏற்பட்டு, சிக்கல் முடிந்து விட்டதாகக் கருதுவது அரசியலாளர்களின் அறியாமையேத் தவிர வேறல்ல. தெலங்கானா மக்களின் நல்வாழ்வு மலரும் வரை காத்திருப்போம்.

– கட்டபொம்மன்.

Copy rights @ S.Kumana Rajan.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி