5 June 2013 1:42 pm
பல்லுலகு எனும் பிரபஞ்சம் பதினான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. நாலாயிரத்து ஐநூறிலிருந்து நாலாயிரத்து அறுநூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமி தோன்றியது. ஒரு நிமிடத்துக்கு 16 பதினாறு முறை மூச்சு விட்டாலும், முப்பது விநாடிகளுக்கு மேல் மூச்சு விடாமல் உயிர் வாழ முடியாத மனித இனம் தோன்றி, நாற்பத்தெட்டாயிரம் ஆண்டுகள் ஆகியுள்ளன என்கிறார் விஞ்ஞானப் பேராசிரியர், ஜூலியன் ஹக்ள்லி. நாடுகள் தனித் தனியாகப் பிரிவதற்கு முன்பிருந்த மத்திய ஆப்பிரிக்காவிலுள்ள பெரிய ஏரி எனும் பகுதியில் தான் ஹோமோசேபியன்ஸ் என்கிற மனித இனத்தின் மூதாதையர்கள் இருபது இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றினார்கள். பல்லுலகில் தோன்றியுள்ள பல்லுயிர்களில் உயர்ந்ததாகக் கருதப்படும் பகுத்தறிவு படைத்த மனித இனம், பல்வேறு சுமைகளால் அழுத்தப்படுகிறது. “அரிதரிது; மானிடராய்ப் பிறத்தல் அரிது” என ஔவையார் வியந்த இவ்வினம் எண்ணற்ற அவலங்களுக்குள் ஆழ்ந்துள்ளது.
சுமை என்பது மனம் சார்ந்த உணர்வாகும். சுமையைச் சவாலாக ஏற்று, சுவையாகச் சமாளிக்கும் சாதனையாளர்களும் வரலாற்றின் பக்கங்களை நிரப்பியுள்ளார்கள். மனச்சுமை, பணச்சுமை, பணிச்சுமை, இன்பச்சுமை, துன்பச்சுமை, தலைச்சுமை, குடும்பச்சுமை, புத்தகச்சுமை, வரிச்சுமை என்பன போன்ற பலவகை சுமைகள் பல்வேறு நிலைகளில், மனிதரிடம் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. “சொர்க்கத்தை நரகமாக்குவதும், நரகத்தைச் சொர்க்கமாக்குவதும்”, கண்ணுக்குத் தெரியாத மனமே என்று கண் பார்வையிழந்த கவிஞர் மில்ட்டன், தமது “இழந்த சொர்க்கம்” என்கிற காவியத்தில் கூறியுள்ளார். மனத்தினால் ஏற்படும் துயரங்களே, சுவையிழந்து சோகமாகும் மனிதருக்குச் சுமையாகின்றன.
“இப்படியும் ஒரு வகையினர் இருக்கத்தான் செய்வார்கள்; இப்படியும் ஒரு வகை சூழலில் வாழ்ந்தேயாக வேண்டும்” எனும் தவிர்க்கயியலாத தன்மையைப் புரிந்து கொண்டு எதிர் கொண்டால் தான், மனம் இலகுவாகும். வேறுபட்ட மனிதர்களுக்கிடையேயும், முரண்பட்ட சூழல்களிலும், முன்னேறும் திறனை வளர்த்துக் கொண்டால் தான், சுமை குறையும். உடல் நலனுக்கு ஊறு விளைவிக்கும் நோய்க் கிருமிகளை எதிர்த்து நலன் காக்கும் ஆற்றல் மனித உடலுக்கு உண்டு. இதுபோல், தேவையற்றவர்களைத் துரத்தித் தூசும் மாசும் சேர்ந்து சுமையாக மாறிடா வண்ணம் கவனித்துக் கொள்ளும் எச்சரிக்கை உணர்வும் எல்லாருக்கும் உள்ளது. பக்குவமாகப் பயன்படுத்துவது அவரவர் எண்ணங்களைப் பொறுத்தது. வாழ்க்கைப் போக்கில் இயல்பாகச் சேரும் சுமையும் இருக்கிறது. போதிய பக்குவமின்மையால் வலிந்து வரவழைத்துக் கொள்ளும் சுமையும் உண்டு. மகப்பேற்றுச் சுமை என்பது மானுட இருப்பை வளர்க்கும் புனிதப் பயணத்தின் போது ஏற்கக் கூடிய ஒன்று. உரிய காலத்தில் சுமையை இறுக்கினால் தான் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும். தாமதமானால் விளைவு விபரீதமாகும். பிறப்பு என்று ஒன்று ஏற்பட்ட பின், இறப்பு என்று ஒன்று இருக்க வேண்டும் என்பது இயற்கையின் நியதியாகும். எனவே, இறப்பு எனும் பய உணர்வை உயிருடனிருக்கும் போதே கொண்டிருப்பதும், ஒரு வகைச் சுமைதான். தொடர்வண்டிப் பயணத்தில் இறங்க வேண்டிய இடம் வந்தவுடன் இறங்கி விடுவதுதான் மரியாதையாகும். உரிய வரவேற்பும் கிடைக்கும். இதற்கு மாறாக, அடுத்த நிறுத்தம் வரை பயணம் தொடர்ந்தால், இறங்குகின்ற இடத்தில் வரவேற்று உபசரித்திட வேண்டியவர்கள் இருக்க மாட்டார்கள். உரிய மரியாதையும் விலகிப் போய்விடும். எனவே, சாவைக் கண்டு அஞ்சாது ஏற்றுக்கொள்ளும் பக்குவம், வாழ்க்கைச் சுமையைக் குறைக்கும். “இரவல் தந்தவன் கேட்கின்றான்; இல்லையென்றால் அவன் விடுவானா” எனும் கண்ணதாசன் வரிகள், மனச்சுமையைக் குறைப்பதற்காக வடிவெடுத்தவை.
கரு உருவாகி, முதுகுத் தண்டிலிருந்து தோன்றும் முதலாம் எலும்பு முகமாக உருவெடுத்த பின் தோன்றும் இரண்டாம் எலும்பு, உழைக்கும் கரங்களாகவும் அவற்றின் விரல்களுக்கிடையேயான இடைவெளிகளாகவும் எழுகின்ற போதே, மனித மனத்துக்கும் உடல் உழைப்புக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு விடுவதாக, மருத்துவ அறிவியல் உறுதிப்படுத்துகிறது. எவ்வளவுதான் மூளை உழைப்பு இருந்தாலும், போதிய உடலுழைப்பு இல்லாவிடில், மன உளைச்சல் நோய்க்கு ஆளாவது தவிர்க்க முடியாது. நாகரிகம் என்னும் போர்வையில், இயந்திரங்களுக்குள் மூழ்கி, உடலுழைப்பை அடியோடு மறக்கும் போது, கள்ளங்கபடமற்ற மனப்பான்மையும், பகிர்ந்து வாழும் பண்பும் குறைந்து, பதுக்கி வைத்துத் தானே அளவுக்கு மீறி அனுபவிக்க வேண்டுமென்கிற எண்ணமும் வளர்ந்து வருகிறது. தன்னலம் பெருகி, தன்நிலை மறந்து, மன நிறைவினை எட்ட முடியாததால், இதயம் கனத்து விடுகிறது. உடலும், உள்ளமும் ஒன்றையொன்று பிரிக்கப்பட முடியாதவை என்பதும், நோய்க்கு மூலமான மனச்சுமைக்குச் சிகிச்சையளிப்பதே அவசியமானது என்பதும் கிரேக்க தத்துவ ஞானி பிளேட்டோ தந்துள்ள பாடம் கவனத்திற்குரியது.
மேலை நாடுகளில் இருபத்தைந்து விழுக்காட்டினர் இதய நோயால் இறப்பெய்துகின்றனர். ஆறில் ஒருவர், அமெரிக்காவில் மனக் கவலையால் அவதிப்பட்டுச் சற்றொப்ப அறுபத்தெட்டு விழுக்காட்டினர் ஐம்பது வயதுக்கு உட்பட்டவர்கள் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அறிவியலில் விண்ணைத் தொடும் அந்நாட்டில் மனநல மருத்துவமனைகள் பெருகி வருகின்றன. அகால மரணமடையும் அமெரிக்கக் கோடீசுவரர்களில், மூன்றில் இரண்டு விழுக்காட்டினர் இதய நோய்க்கு இரையாகின்றனர். “மனக்கவளையானது மனித நரம்புகளின் வீரிய இழப்புக்கும் தளர்ச்சிக்கும் காரணமாவதுடன், இரைப்பை நீரைப் பாழ்படுத்தி வியாதிக்கு வித்திடுகிறது” என்கிறார், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மருத்துவர் ஜோசப் மாண்டேகு அவர்கள்.
பெற்றோரையும் மற்றோரையும் பெருமளவு சார்ந்திருப்பது மனிதப் பிறவியாகும். சொந்த கால்களில் நிமிர்ந்து நிற்கும் பக்குவம் பெறுவது கடினமாகிறது. “உங்களுக்கென்று நியாயமான தேவைகளுக்கு வைத்துக் கொண்டு, எஞ்சியவற்றைப் பிறருக்கு வழங்குவதை வழக்கமாகக் கொள்ளுங்கள்” என்றார் குருநானக். “ஓடத்துக்குள் வரும் நீரும், வீட்டில் சேரும் செல்வமும், அவ்வப்போது வெளியேற்றப்படாவிடில், சுமை சேர்ந்து, மூழ்கிடும் ஆபத்து ஏற்படும்” என்பது கபீர்தாசின் கருத்தாகும்.
“பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால முகுத்துப் பெயின்”
“மிகினும் குறையினும் நோய் செய்யும்”, “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்பன போன்ற வாழ்க்கை விளக்கங்கள் நல்வழி காட்டுகின்றன. கசடறக் கற்று, கல்லாமையை நீக்கி, கேள்விச் செல்வம் பெற்று, அறிவுடைமையால் ஆற்றல் பெற்று, குற்றங் களைந்து, பெரியாரைத் துணைகொண்டு, சிற்றினம் சேராது, தெரிந்து, தேர்ந்து, தெளிந்து செயல்பட்டு, வலிமை அறிந்தும், இடம் அறிந்தும், காலம் அறிந்தும் செயல்படும் நன்மக்கள் பெருகிட வேண்டும். இத்தகைய மக்கள் வாழும் உலகில் நிருவாகத்துக்கும், நீதிமன்றம் போன்ற மக்கள் நல அமைப்புகளுக்கும் சுமை குறையும்.
பருவப் பெண்ணைத் தோளில் சுமந்து ஆற்றின் அக்கறையில் இறக்கிவிட்ட அக்கணமே அந்நிகழ்வை மறந்து விட்ட துறவி போல், ஒரு கலைக் களஞ்சியத்தில் உள்ளதைக் காட்டிலும் ஐந்து மடங்கு தகவல்களைத் தன்னகத்தே தேக்கி வைத்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டுள்ளது நமது மூளை என்பதற்காக, தேவையற்ற எண்ணங்களைச் சுமந்து செல்வதே மனநிறைவற்ற மனநிலையை தோற்றுவிக்கிறது. அச்சம் என்கிற இருட்டில் அலைமோதும் மனத்தில் எழுகின்ற குழப்பங்களும், முரண்பாடுகளும், அழிவு தரும் ஆரோக்கியமற்ற போட்டிகளும் வித்திடுகின்றன. இன்னொருவரைக் காட்டிலும் உயர்ந்திட வேண்டும் என்கிற “நான்”, “எனது” என்பன போன்ற குறுகிய உணர்வுகள், குற்றப் பரம்பரைக்கு வேராக அமைகின்றன.
செல்லுமிடமெல்லாம் தேவையற்ற எண்ணங்களை எடுத்துச் செல்லும் போது, வாழ்க்கைப் போக்கில் சுமை சேர்ந்து கொண்டிருப்பதாகத்தான் தோன்றும். சேர்ந்தச் சுமையைச் சுமந்து சோர்ந்து விடாமலும், பள்ளம் மேடு கண்டால் பார்த்துச் செல்லும் பிள்ளை போல், பகுத்தறிவைப் பக்குவமாய்ப் பயன்படுத்தி, அறிவின் துணை கொண்டு, அவ்வப்போது இறக்கி வைத்து, இளைப்பாறி, வாழ்க்கைப் பாதையில் வளமாகப் பயணிப்போம். சும்மா இருப்பதையும் சுமையாக மாற்றுகின்ற சிக்கல்களை விலக்கி வாழ்வோம். மழைத் துளிகளிலிருந்து தோன்றி மலைகளிடையே பாய்ந்து, கரைகள் எனும் கட்டுப்பாடுகளிடையே, செல்லுமிடமெல்லாம் செழிப்பாகுமாறு பயணித்துக் கடலில் கலக்கும் நதி போல் தடம் பதிப்போம்.
-நா.முத்தையா,
மதுரை