தேவை மறு ஆய்வு - தமிழ் இலெமுரியா

18 August 2013 1:21 pm

தேவை மறு ஆய்வு

கடந்த சில நாட்களாக ஊடகங்கள் மூலம் அறியப்படும் செய்திகள் இந்திய நாட்டில் மக்களாட்சி செயல் முறைமையின் நேர்மையைக் கேள்விக்குரிய ஒன்றாகக் காட்டுகின்றன. அவ்வகையில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய சில செய்திகளாக 1. மாநிலங்களவை உறுப்பினர் பதவி ரூ100 கோடி வரை விற்கப்படுகிறது; 2. குற்றப்பின்னணியுடைய அரசியல்வாதிகள் சட்டமன்ற, நாடாளுமன்ற பதவிகளுக்காக தேர்தலில் போட்டுயிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்கிற உச்சநீதி மன்றக் கருத்துக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் போர்க் கொடி. விரைவில் நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வர அனைத்துக் கட்சிகளும் ஆதரவு; 3. நடுவணரசால் அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்ட உணவு பாதுகாப்பு மசோதா முதற்கட்டமாக பேராயக் கட்சி (காங்கிரசு) ஆளும் மாநிலங்களில் நடைமுறைப் படுத்தப்படும்; 4. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசியக் கட்சிகள் எதுவும் பெரும்பான்மை பெறாது. தொங்கு நாடாளுமன்றம் அமைய வாய்ப்பு என கருத்துக் கணிப்பாய்வு தகவல். 

மேற்கண்ட நான்கு செய்திகளும் இந்திய நாட்டின் மக்களாட்சித் தத்துவத்திற்கும், நம்பகத் தன்மைக்கும், வளர்ச்சிக்கும் விடப்பட்ட பெரும் அறைகூவல் என கணிக்கத் தோன்றுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்களால் விவாதங்களுக்குப் பின் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற சட்ட மசோதாக்கள், சட்ட முன் வரைவுகள் ஆய்வு செய்யத் தகுதியாக, கருத்துகள் வழங்க வேண்டி, அறிவார்ந்த, தனிச்சிறப்பு வாய்ந்த உறுப்பினர்களை உள்ளடக்கியதாக அமைய வேண்டிய மாநிலங்களவை பெரும் பணக்காரர்கள் அதிகார மையத்திற்குள் நுழையும் ஒரு வாயிலாக அமைந்து விட்டது. மேலும் நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்கள் சொத்துகளை அறிவிக்கையில் ஒரு உறுப்பினரின் ஆண்டு வருமானம் 60 ஆயிரம்; மற்றொரு உறுப்பினரின் ஆண்டு வருமானம் 60 கோடி எனவும் அறியப்படுகையில் நம் நாட்டின் பொருளாதார ஏற்றத் தாழ்வு வெட்ட வெளிச்சமாகிறது. சம ஈவு, சமநீதி என்பது இந்திய மக்களுக்கு இன்றும் எட்டாக்கனி என்கிற நிலையில்தான் உள்ளது.

எந்த ஒரு அரசியல் கட்சியின் வேட்பாளரும் தேர்தலில் போட்டியிடுகின்ற வரைதான் அந்தக் கட்சியின் பிரதிநிதி. தேர்தல் முடிவுகளில் ஒருவரின் தேர்வு அறிவிக்கப்பட்ட பின்பு, அந்தந்தத் தொகுதி மக்களின் பிரதிநிதியாக இருக்க வேண்டும். ஆனால், அண்மைக்கால நடைமுறைகள் அவ்வாறின்றி அந்தந்த கட்சிக்காக வாதாடுபவர்கள் போன்ற தோற்றமே இன்றைய அரசியல் சூழலில் தெரிகின்றது. பல்வேறு மாநிலங்களை உள்ளடக்கிய இந்திய அரசால் நிறைவேற்றப்படும் சட்டங்கள் அனைத்து மாநில மக்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் உள்ளடக்கியதாகவும், மக்களின் நன்மைக்காவும் ஏற்படுத்தப் பட வேண்டுமேயல்லாது தன் கட்சி ஆளும் மாநிலங்களில் நடைமுறைப்படுத்துவோம் என்பது எந்த வகையான இந்திய ஒருமைப்பாடு என்று புரியவில்லை. ஆட்சி அரசியல் வேறு, கட்சி அரசியல் வேறு. ஆளும் கட்சி எதுவானாலும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பின்பு தன் கட்சி, பிற கட்சி மாநிலங்கள் என பிரித்துப் பார்ப்பது ஏன்? என்பது விளங்கவில்லை.

கடந்த அறுபது – எழுபதுகளில் நடைபெற்ற தேர்தல்கள் போல் அன்றி, தற்போது ஒவ்வொரு கட்சியும் பெறும் வாக்கு விகிதங்கள் கணிசமாகக் குறைந்துள்ளன. அதாவது ஒவ்வொரு தொகுதியின் மொத்த வாக்காளர்களில் 75 விழுக்காடு மக்கள் எதிராகவும், 25 விழுக்காடு மக்கள் ஒருவருக்கு ஆதரவாகவும் வாக்களித்தாலும் அவர் வெற்றி பெற்றதாகவும், அப்பகுதியின் மக்கள் பிரதிநிதியாக ஏற்றுக் கொள்ளப்படுவதும் எந்த வகையான மக்களாட்சித் தத்துவம் என்பதுவும் நமக்கு விளங்கவில்லை? தேர்தல்களில் தேர்வு பெறுகின்றார்களேயொழிய, வெற்றி யென்று அறிவிப்பது கூட முரணானது ஆகும்.

கல்விக் கூடம் செல்லும் இளம் மாணவர்களுக்குக் கூட ஒரு வகுப்பிலிருந்து அடுத்த வகுப்பிற்குச் செல்வதற்கு குறைந்த அளவு மதிப்பெண்ணாக 35 விழுக்காடு வரம்பு விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர் எத்தனை பேராகினும் தோல்வியடைந்தவராகவே கருதப்படுவர். ஆனால் நம் இந்திய நாட்டின் அண்மைக்கால தேர்தல்களில் மிகக் குறைவான 20 அல்லது 25 விழுக்காடு அளவே வாக்குகள் பெற்று தேர்வான பின்பு ஆள நினைக்கும் கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கையாவது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக வருகிறதா என்றால் அதுவும் இல்லை. எந்தக் கட்சிக்கும் போதிய எண்ணிக்கையில்லை என்ற நிலையில், சனநாயகப் போக்கு மேலும் தளர்ந்து, சிறு சிறு கட்சிகளுடன் “குதிரைப் பேரம்” பேசுவதும், பணம், பதவி, ஆளுமை நடுவம் எனச் சமரசம் செய்வதும் எந்த வகையானக் கொள்கை? இது மெய்யான சனநாயக முறைமையை எடுத்துக் காட்டுகின்றதா? என்பதும் வினாவிற்குரிய ஒன்றல்லவா! இவ்வாறு அமையும் அரசும் சரி, அமைச்சர்களும் சரி வெறும் பதுமைகள் தான் என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே இவற்றையெல்லாம் ஒப்பு நோக்கி ஆய்வு செய்கையில், இந்திய நாட்டில் பல்வேறு தேசிய இன மக்களின் உணர்வு, உரிமை, வளர்ச்சி ஆகியவற்றை ஒருமைப்பாட்டு உணர்வுடன், நேர்மையுடன், நீதியுடன் முன்னெடுத்துச் செல்லும் தகுதி வாய்ந்த தலைமையோ, அரசியல் கொள்கையோ நம்மிடத்தில் இன்றையச் சூழலில் இல்லை என்பதையேக் காட்டுகின்றது. மக்களுக்காக, மக்களால், மக்களே ஆட்சி செய்வது என்கிற தத்துவம் தற்போது தன்னல அரசியலால் தடுமாற்றம் பெற்றுள்ளது. எனவே இந்திய அரசியலமைப்பு ஆவணம் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, கூட்டாட்சி முறை, சுழற்சி முறை ஆளுமைகள் குறித்து சிந்திக்க வேண்டிய வேளை இது என்பது எம் சிந்தையின் வெளிப்பாடாகும்.

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.
(குறள்: 834)

கனிவுடன் சு.குமணராசன்,
முதன்மை ஆசிரியர்.
S.KUMANA RAJAN
Editor in Chief.

ஆவணி – 2044 (ஆகஸ்டு – 2013)

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி