அதிகாரமும் விடுதலையும் நமக்குப் பல கடமை உணர்வுகளைச் சுமந்து வருகின்றன - தமிழ் இலெமுரியா

18 August 2015 10:27 am

18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து பிரிட்டிசு அரசு இந்தியத் துணைக்கண்டத்தின்  பல்வேறு சிறு சிறு நிலப்பகுதிகளையும், அரசுரிமை மாநிலங்களையும் தங்களின் ஆதிக்கத்திற்குள்ளாக்கியிருந்தனர். 1858 கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கம் பிரிட்டிசு அரசின் நேரடிப் பார்வைக்கு மாற்றப்பட்டது. அன்றிலிருந்து தொடங்கியதே பிரிட்டிசு ராஜ்யம் என்பதாகும். விக்டோரிய மகாராணி இந்தியாவின் பேரரசி என அறிவிக்கப்பட்டது. அன்றைய இந்தியா என்பது இந்தியா, பாகிசுத்தான் வங்காள தேசம் உள்ளடக்கியப்பகுதியாகும். உலகில் பரந்து விரிந்திருந்த பிரிட்டிசு பேரரசின் கிரீடத்தில் பதிக்கப் பெற்ற ஒரு வைரக் கல்லாக விளங்கியது. அந்த வரலாறு 1947 ஆம் ஆண்டு ஆகசுடு 15 ஆம் நாள் முடிவுக்கு வந்தது. அப்போது இந்தியாவின் தனி பெரும் தலைவராக விளங்கிய சவகர்லால் நேரு இந்திய நாட்டின் விடுதலைப் பிறப்பை நாட்டுக்கு அறிவித்தார். இந்திய நாடாளுமன்றத்தில் ஆற்றிய முதல் உரை பின்னர் இந்திய வானொலியிலும் ஒலிபரப்பப் பட்டது. அதே நாள் பாகிசுத்தான் என்ற நாடும் தோன்றியது. அந்த இரு நாடுகளின் உறவுகளில் இன்று வரை கீறல் தென்படுகிறது. காசுமீரம் சிக்கல், அணு ஆயுதப் போர் போன்ற விடயங்களில்  இன்னும் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. ஆனால், 21 ஆம் நூற்றாண்டில் இந்திய நாடு தன் உலக அரசியலில், பொருளாதாரத்தில்  தனக்கு உரிய இடத்தைப் பிடிப்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கியது.  ஒரு கடினமான நீண்ட போராட்டம் 1885 களில் இந்திய தேசியக் காங்கிரசு என்ற அமைப்பின் மூலம் தொடங்கி பல்வேறு மக்களை இணைத்து பிரிட்டிசு அரசில் பல மாற்றங்களைக் கொண்டுவர முயன்றது. முதலில் அவர்கள் விரும்பியது போதுமான பள்ளிக் கூடங்கள் மற்றும் இந்திய மக்களுக்குப் போதுமான பிரதிநிதிதுவம் என்பவையே. 1907 ஆம் ஆண்டுக்குப் பின்னர் காங்கிரசு இயக்கத்தில் இரு வேறு கருத்துகள் தலை தூக்கின. மிதவாதிகள் ஒரு புறம் ஆளும் அரசில் போதுமான பங்கு வேண்டுவதில் நிறைவடைந்தனர். ஆனால் தீவிர வாதிகள் ஒரு தன்னாட்சி முறையே தீர்வு என வாதிட ஆரம்பித்தனர். அதன் பின்னர் மதப் பிரிவுகள் தலை தூக்கின. பெரும்பாலான இந்துக்கள் காங்கிரசை கையில் வைத்துள்ளனர் என முசுலீம்கள் அச்சம் கொண்டனர். பின்னர் தனி முசுலீம் நாடு அமைவதே நோக்கமாகக் கொண்டு முசுலீம் லீக் என்ற கட்சி பிறப்பெடுத்தது. 1909 ஆம் ஆண்டு வாக்கில் இந்தியர்களுக்கு பிரிட்டிசு அரசில் ஓரளவு பிரதிநிதிதுவம் வழங்கியது. 1914–18 களில் நடை பெற்ற முதலாம் உலகப் போரில் இந்திய மக்கள் அனைவரும் பிரிட்டிசு அரசுக்கு ஆதரவாகவே இருந்தனர். இந்த கால கட்டத்தில் மோகந்தாஸ் காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்புகிறார். அவரோடு ஒத்துழையாமைக் கோட்பாடும் வருகின்றது. 1916 ஆம் ஆண்டு காங்கிரசு கட்சிக் கூட்டத்தில் இங்கிலாந்தில் படித்த ஒரு பெரும் பணக்கார வழக்குரைஞருமான சவகர்லால் நேருவைச் சந்திக்கிறார். இரு வேறு துருவங்களாக விளங்கிய அவர்கள் இந்திய விடுதலைப் போரின் முதன்மை வீரர்களாக உருப்பெறுகிறார்கள். காந்தியின் பல கொள்கைகள் அவருடைய பழமை வாதம், எளிமை போன்றவைத் தவிர அவரோடு ஒத்துப் போகின்றார். நேரு நவீனத்துவத்தை விரும்பினார்.  முதல் உலகப் போரின் முடிவுக்குப் பின்னர் பிரிட்டிசாரின் தாமதப்போக்கு காங்கிரசுத் தீவிரவாத தலைவர்களை எரிச்சலூட்டியது. பிரிட்டிசார் விடுதலை உணர்வை நசுக்கினர்; பேச்சு வார்த்தைகளை தாமதப் படுத்தினர். காந்தி, நேரு போன்றவர்கள் சிறைப்படுத்தப் பட்டனர். 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு" இயக்கம் தோன்றியது. அது மீண்டும் அனைத்து காங்கிரசுத் தலைவர்களையும் சிறையில் தள்ளியது.  பல்லாண்டு காலப் போராட்டத்திற்குப் பின்னர் பேரரசியின் மணிமகுடம் தொடர்வது யதார்த்தம் அல்ல என்பதை பிரிட்டிசார் உணரத் தலைப்பட்டனர். ஐம்பது ஆண்டு போராட்டத்திற்குப் பின்னர் அன்றைய வைசுராயராகிய லார்டு மவுண்ட்பேட்டன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். இறுதியாக ஆகஸ்டு 14, 1947 ல் இந்தியாவின் எதிர்பார்ப்பு நிறைவேறும் காலம் கனிந்து விட்டது என அறிவித்தார். உலகில் ஒரு பெரிய மக்களாட்சி நாடு வடிவம் பெற்றது. அதன் பின்னர் ஆகஸ்டு 15, 1947 லிருந்து சற்றொப்ப 17 ஆண்டுகள் நேரு இந்தியாவின் தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்று உலகில் பனிப்போர் நடத்திக் கொண்டிருக்கும் பல நாடுகளுக்கிடையில் கூட்டு சேரா அணி நாடுகள், பொருளாதார இயந்திரத் துறை வளர்ச்சி என பல்முனைகளில் முயன்றார். இந்திய விடுதலைக்கான அறிவிப்பாக அவர் ஆற்றிய உரை வரலாற்றில் இடம் பெற்ற ஒன்றாகும் . – ஆசிரியர்பல்லாண்டுகளுக்கு முன்பே நாம் நம் தலைவிதியைச் சந்திக்க உறுதி எடுத்துக் கொண்டோம். ஆம், தற்போது அந்த உறுதியை நிறைவேற்ற வேண்டிய காலம், முழுமையாக இல்லாவிடினும், மிக கணிசமான அளவில் பெறுகின்ற காலம் கனிந்துள்ளது.  இன்றிரண்டு கடிகார முட்கள் இணையும் நேரம், உலகமே தூங்கிக் கொண்டிருக்கையில், இந்தியா தனது வாழ்விற்காகவும், விடுதலைக்காகவும் விழித்துக் கொள்ளும். வரலாற்றில் மிக அரிதாகவே கிடைக்கும் இத் தருணம், நாம் பழையனவற்றை விட்டு விட்டு ஒரு புதிய பாதையில் அடியெடுத்து வைக்கும் நேரம், வரலாற்றின் காலவோட்டத்தில்  ஒரு முடிவாக  அழுத்தி வைக்கப் பட்டிருந்த நம் ஆன்மாக்கள் வாய் திறந்து பேச நினைக்கும் அந்த தருணம் வருகின்றது. இந்த புனிதமான நேரத்தில் இந்திய நாட்டிற்காகவும், அதன் மக்களுக்காவும், அதைவிட மேலான மனித குல மேம்பாட்டிற்காகாவும் சேவை செய்ய வேண்டிய உறுதியை ஏற்போம்.  வரலாற்றின் தொடக்கக் காலத்தில் இந்தியா தனது முடிவுறா பயணத்தை தாகத்துடன் தொடங்கியது. அதன் பல நூற்றாண்டு கால அளவைகளில் போராட்டங்களில் மிகப் பெரிய வெற்றிகளையும் தோல்விகளையும் சந்தித்துள்ளது சாதித்துள்ளது. இந்திய நாடு தனது வெற்றிகளையும் தோல்விகளையும் மறவாது தனக்கு ஆற்றல்களை வழங்கிய அந்தக் கோட்பாடுகளையும் மறவாது நடை போடுகிறது. நம்முடைய சோதனையான தருணங்கள் வேதனையான விழுமியங்கள் இன்றுடன் முடிவடைகின்றன. இந்தியா தன்னைப் புதுப்பித்துப் புரிந்து கொள்கின்ற நேரம் மீண்டும் நமக்குக் கிடைத்துள்ளது. நாம் கொண்டாடும் இச் சாதனையென்பது ஒரு முதல் படியாகும், நாம் எதிர் கொள்ளவிருக்கின்ற வெற்றிகளுக்கும் ஒளி மயமான எதிர் காலத்திற்கும் நமக்குக் கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பு. இந்த வாய்ப்பைப் பயன் படுத்தி நம் எதிர் கால சவால்களை ஏற்றுக் கொள்ளும் துணிவும் அறிவும் நம்மிடையே உள்ளதா?  அதிகாரமும் விடுதலையும் நமக்குப் பல கடமை உணர்வுகளைச் சுமந்து வருகின்றன. இந்தப் பொறுப்பு இந்திய நாட்டைப் பிரதிநிதிப் படுத்தும் இந்த அவையின் முன் உள்ளது. சுதந்திரம் பிறப்பதற்கு முன்பு நாம் அனைத்து வேதனைகளையும் தாங்கினோம், நமக்கு ஏற்பட்ட வலியைப் பொறுத்துக் கொண்டோம். கனத்த இதயத்துடன் கண்ணீரையும் வேதனைகளையும் சுமந்தோம். சில வலிகள் இன்றும் தொடர்கின்றன. எனினும், அந்த காலம் முடிவுக்கு வந்து விட்டது. தற்போது எதிர்காலம் நம்மை கை நீட்டி வரவேற்கிறது.  எதிர் காலம் ஒன்றும் நமக்கு எளிமையானது அல்ல. ஆனால், விடாமுயற்சியுடன் நாம் இதுகாறும் எடுத்துக் கொண்ட உறுதி மொழிகளைப் போல இன்று எடுத்துக் கொள்ளும் உறுதி மொழிகளை நிறைவேற்ற வேண்டும். நாம் இந்திய நாட்டுக்குச் செய்யும் சேவை என்பது துன்பத்தில் வாழும் பல கோடி மக்களுக்குச் செய்யும் சேவையாகும். இந்திய மக்களின் வறுமை, அறியாமை, நோய்கள் ஆகியவனவற்றை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து அனைத்து மக்களுக்கும் ஒரு சரி சமமான வாய்ப்பு கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். அவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப் பட வேண்டும். நம்முடையத் தலைமுறையின் மிக உயர்ந்த மனிதரின் இலட்சியம் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கண்களிலிருந்து வருகின்ற கண்ணீரைத் துடைப்பதாகும். இது நமது தகுதிக்கு மேலானதாக இருக்கலாம். ஆனால் நமது தொண்டு இந்திய மக்களின் வேதனையும் கண்ணீரும் தொடரும் வரை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அது வரை நமது பணி ஓயாது.  நம்முடைய கனவுகள் நனவாக நாம் ஒவ்வொருவரும் கடுமையாக உழைக்க வேண்டும். அந்த கனவுகளும் உழைப்பின் பயனும் இந்திய நாட்டுக்கு மட்டுமல்ல, மாறாக இந்த உலகத்திற்கே பொதுவானது. அனைத்து நாடுகளுக்கும், அனைத்து நாட்டு மக்களுக்குமாக இருக்க வேண்டும். தற்போதைய கால கட்டத்தில் அனைத்து மக்களும் ஒருவரோடு  ஒருவர் பின்னிப்பிணைந்துள்ளனர். அவர்கள் தனித்தனியே வாழ முடியாது. அமைதி என்பதைப் பிரிக்க முடியாது. அது போலத்தான் விடுதலை, வளமை என்பவைகளும். இந்த உலகத்தில் இனி நடைபெறும் பேரழிவுகளையும் தனித்தனியே பிரித்துப் பார்க்க முடியாது. உலகின் எந்தப்பகுதியில் எது நடந்தாலும் அவற்றில் அனைவருக்கும் பங்குண்டு.  இந்த சாகசப் பயணத்தில் இந்திய மக்கள் அனைவரும் எங்களோடு துணை நிற்க வேண்டுமென இந்திய குடிமக்களின் பிரதிநிதிகளாக இன்று  உங்களை வேண்டுகின்றோம். நம்பிக்கையுடனும் உறுதியுடனும் செயல்படுவோம். நம்மிடையே ஏற்படும் சிறு சிறு பிணக்குகள், சச்சரவுகள், ஒருவரை ஒருவர் குற்றம் காணும் தன்மைகள் ஆகியவற்றைப் பெரிது படுத்தும் நேரம் அல்ல இது. அவைகள் நமக்கு அழிவைத் தருவனவாகும். நம்முடைய இந்தியக் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் தவழ்ந்து விளையாட, அனைவரையும் குடியமர்த்த ஓர் அழகிய இல்லத்தை உருவாக்க வேண்டிய தருணம் இதுவாகும் என்பதை உணர்ந்து செயலாற்றுவோம். சவகர்லால் நேரு (1889 – 1964)  சவகர்லால்நேரு 1889 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் நாள் அலகாபாத் நகரில் பிறந்தவர் ஆவார். இவருடைய தந்தை பெரும் செல்வந்தரும் புகழ் பெற்ற வழக்கறிஞரும் ஆவார். இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில்சட்டம் பயின்றவர். 1912 ஆம் ஆண்டு வழக்குரைஞர் தொழிலைத் தொடங்கிய நேரு இந்தியாவிற்குத் திரும்பி வழக்குரைஞராக இருந்து கொண்டே காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்திற்கு ஆதரவு அளித்தார். 1918 ஆம் ஆண்டு இந்தியதேசியக் காங்கிரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு நல்கினார். அவருடைய தொடர்ந்த கட்சிப் பணியின் காரணமாக 1923 ஆம் ஆண்டு காங்கிரசுக்கட்சியின் பொதுச் செயலாளராக உயர்ந்தார். 1926—- – 27 களில் அய்ரோப்பா மற்றும் சோவியத் ஒன்றியம் சென்று வந்த பிறகு அரசியலில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு இந்தியாவிற்கு முழு விடுதலையே தீர்வு என்ற கொள்கையைக் காங்கிரசு கட்சி ஏற்குமாறு பணி செய்தார். பல்வேறு காலக்கட்டங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு சிறைத்தண்டனை ஏற்றார். 1930 ஆம் ஆண்டு இந்திய தேசியக் காங்கிரசு இயக்கத்தின் தலைமைப் பதவிக்கு தேர்வு செய்யப் பட்டார். சிறையிலிருந்த காலகட்டத்தில் தன் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். இவருடைய பாசிச எதிர்ப்பு, அரசியலில் ஏற்படுத்திய முட்டுக்கட்டை வெள்ளையனே வெளியேறு போராட்டங்களின் காரணமாக மீண்டும் 1940–45 களில் கைது செய்யப்பட்டு தளைப்படுத்தப்பட்டார். 1946 ஆம் ஆண்டு இந்தியாவின் தற்காலிக அரசின் துணைத் தலைவராக இருக்கும் போது இந்தியாவை இரு நாடுகளாகப் பிரிக்க விரும்பிய முசுலீம் லீக் வேண்டுதலை மன ஒப்புதலின்றி ஏற்றுக் கொண்டார். 1947 ஆம் ஆண்டு இந்திய விடுதலைக்குப் பின்னர் 1964 வரை இந்தியாவின் தலைமை அமைச்சர் பொறுப்பு வகித்தார். ஆட்சியிலிருக்கும் போது சனநாயகக் கோட்பாடுகளுக்கு வலுவூட்டி, பொருளாதாரச் சீர்திருத்தங்களை முன்னெடுக்க முயற்சித்தார். 1962 ஆம் ஆண்டு சீனாவுடனான எல்லைப் போரில் இந்தியா தோல்வியைத் தழுவியது. சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்க நாடுகளுடன் அணி சேர விரும்பாத நாடுகளை ஒன்று திரட்டி அணி சேரா நாடுகள் இயக்கம் என்ற ஒன்றை நேரு உருவாக்கினார். பெரும்பாலான மக்களால் "பண்டிதர்" என்றழைக்கப் பட்ட சவகர்லால் நேரு 1964 ஆம் ஆண்டு மே திங்கள் 27 ஆம் நாள் மறைந்தார். இவருடைய பிறந்த நாள் ‘குழந்தைகள் தினமாக‘க் கொண்டாடப்படுகிறது.- சு.குமணராசன்"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி