14 January 2017 7:00 pm
தமிழ்நாட்டின் மேற்கு எல்லையோரம் கோபிச் செட்டிப்பாளையம் அருகிலுள்ள சேவகம் பாளையம் என்பது ஒரு குக்கிராமம். அந்த கிராமத்தில் ஒரு நடுநிலைப் பள்ளி ஆசிரியரின் மகனாகப் பிறந்து, வளர்ந்து, கல்வி கற்று இன்று மகாராட்டிர மாநிலக் காவல் துறையின் உயரிய பதவியான கூடுதல் காவல்துறைத் தலைவர் (Additional Director General of Police) என்ற நிலையில், இந்தியாவின் நுழைவாயிலுக்கு (Gate Way of India)) அருகிலுள்ள மகாராட்டிர மாநில காவல் தலைமையகத்தில் பணிபுரிபவர் ஜெகன்நாதன் இ.கா.ப (ஐ.பி.எஸ்).தமிழார்வமும் எளிமையும் நேர்மையும் மிக்க இவருடைய வாழ்க்கைப் பயணம் எதிர்காலத் தலைமுறையினருக்கு எண்ணற்ற செய்திகளைச் சொல்லுகின்றன. தமிழ் இலெமுரியா"வின் மராத்திய மாநில சிறப்பு மலருக்காக அவரை அலுவலகத்தில் சந்தித்து உசாவிய கருத்தாக்கங்களிலிருந்து ஒரு சில துளிகள்..வேளாண்மை அறிவியல் படித்து இந்திய காவல்துறை பணிக்கு வந்த பாதைகள் குறித்து அறியலாமா?வேளாண்மை பட்டப் படிப்பிற்குப் பின் விவசாய அதிகாரியாக வேலை கிடைத்தது. எனினும் நான் மேலும் படிக்க விரும்பியதால் அதை ஏற்காமல் உதவித் தொகையுடன் மேற்படிப்பு படித்தேன். பின்னர் அதே பல்கலைக் கழகத்தில் உதவிப் பேராசியராகப் பணியாற்றும் வாய்ப்புக் கிட்டியது. தொடர்ந்து தென்னிந்திய இரயில்வே பணியாளர் துறையில் இரண்டாண்டு பயிற்சிக்குப் பின்னர் ஓராண்டு வேலை செய்தேன். அப்போது அங்கிருந்த பலர் இந்திய குடிமைப் பணி (Indian Civil Service) தேர்வுக்காக விடுப்பெடுத்து படித்துக் கொண்டிருந்தனர். இந்தியக் குடிமைப் பணி என்றால் அது நகர்புறத்தில் ஆங்கில வழி படித்தவர்கள்தான் எழுதித் தேர்வு பெற முடியும் என்ற ஒரு தவறான எண்ணம் பலரிடத்தில் இருந்தது. ஆனால் நான் அவ்வாறு எண்ணவில்லை. கிராமப் பகுதியில் தமிழ் மொழியில் கற்றவர்களாலும் அந்தத் தேர்வை எழுத முடியும் என்று நிரூபிப்பதற்காக நானும் விடுப்பு எதுவும் எடுக்காமலேயே படித்து தேர்வு எழுதினேன். முதல்முறை நேர்முகத் தேர்வு வரை வந்து தேர்ச்சி பெற இயலவில்லை. இரண்டாவது முயற்சியில் வெற்றி பெற்று இந்திய காவல்துறைப் பணி (ஐ.பி.எஸ்)யில் சேர்ந்தேன். இது எனக்குள் பெரும் நம்பிக்கையை ஊட்டியது.தமிழ்நாட்டிலிருந்து வந்து மகாராட்டிர மாநிலத்தில் பணிபுரிவது சிரமமாகத் தென்பட வில்லையா?மகாராட்டிரா மாநிலத்தில் பணியாற்றுவதை நான் ஒரு நல்வாய்ப்பாகவே கருதுகின்றேன். காரணம் இந்த மக்களிடம் நான் கண்ட மொழிப்பற்று, பண்பாடு, இசை, நாடகம் என அனைத்துத் துறைகளிலும் நேர்மையாகச் செயல்படுகின்றனர். இங்குள்ள மகாராட்டிரா தொலைக்காட்சிகள் நல்ல செய்திகளை சமுகத்திற்கும் பிரதிபலிப்பதாக உள்ளது. என்னுடைய கடந்த 25 ஆண்டு கால பணிக் காலத்தில் எந்த விதமான இடையூறுகளோ, அரசியல் தலையீடுகளோ இல்லை. நாம் தன்னலமின்றி நேர்மையாகப் பணியாற்றினால் அதற்கு உரிய அங்கீகாரம், மதிப்பு கிடைக்கிறது என்பதை உளப்பூர்வமாக உணர்கின்றேன். அந்த வகையில் மகாராட்டிரா மாநில பணி மனநிறைவைத் தருகின்றது.தங்கள் பணிக் காலத்தின் கடினமான நிகழ்வுகள் அல்லது சாதனையான நிகழ்வுகள் என எதையாவது குறிப்பிட முடியுமா?சோதனை அல்லது சாதனை என பிரித்துப் பார்க்க வேண்டிய தேவையில்லை. காவல்துறை பணி என்பது ஒரு தொண்டு! அதில் நாம் நம்முடைய கடமையைச் செய்கின்றோம் என்ற அளவிலேயே நான் அனைத்து நிகழ்வுகளையும் எடுத்துக் கொள்கின்றேன். என்னுடைய பயிற்சிக்குப் பிறகு, என் முதல் பணியிடமே மகாராட்டிரா மாநிலத்தில் சிரோஞ்ச் பகுதியிலுள்ள அல்லப்பள்ளி என்ற இடமாகும். இது நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த பகுதி. பணியில் சேர்ந்த மறுநாளே பல வன்முறைச் சம்பவங்களை காண வேண்டிய சூழல் ஏற்பட்டது. நிலச் சுரங்கம் வெடித்து ஒரு காவல் ஆய்வாளரும் 5 காவலர்களும் சிதறிப் போனார்கள். எனினும் மனம் தளராது பணியாற்றினேன். பொதுவாகவே இது போன்ற பகுதிகளில் ஒரு தடவைக்கு மேல் மீண்டும் பணியாற்றச் செய்வதில்லை. ஆனால் எனக்கு பதவி மாற்றம் கிட்டியபோது மீண்டும் அங்கு பணியாற்ற அறிவுறுத்தப்பட்டது. அதையும் எவ்வித சலனமும் இன்றி ஏற்றுச் செம்மையாகப் பணியாற்றினேன். முழு ஈடுபாட்டுடன் பணிகளில் செயல்படுவேன் என மகாராட்டிரா அரசு உரிய மரியாதையைத் தந்தது.தங்கள் பணிக் காலத்தில் எந்தந்த இடங்களில் பணியாற்றி உள்ளீர்கள்?மத்தியப் புலனாய்வுத் துறையில் சென்னை மற்றும் மும்பையில் பணியாற்றி உள்ளேன். பன்னாட்டுக் காவல் துறை என்று சொல்லக்கூடிய இன்டர்போல் (Interpol)இல் 2010 முதல் 2014 வரை நான்கு ஆண்டுகள் பணிபுரிந்துள்ளேன். பொதுவாகவே இன்டர்போல் அமைப்பில் சேருவதற்கு ஓரளவு சிபாரிசு அல்லது அரசியல் பின்னணி இருந்தால்தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால் மத்தியப் புலனாய்வுத் துறையில் என்னுடைய மேலதிகாரிகள் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து என்னை சிபாரிசு செய்தனர். அதுவும் மத்தியப் புலனாய்வுத் துறை பதவிக் காலம் முடிந்த பின்பு மகாராட்டிரா பிரிவில் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்ட பின்பு அந்தப் பதவியை எனக்கு அளித்தனர். அது ஒரு விதிவிலக்கு ஆகும். அது எனக்கு நல்ல அனுபவங்களைத் தந்தது.இது தவிர பங்குச் சந்தை ஏய்ப்பு (IPO Fraud), செக்கியூரிட்டி ஸ்கேன், பன்னாட்டு வன்முறை தவிர்ப்பு இயக்கம் (UN Terrorism Executive Directrate), மாநில மனித உரிமை ஆணையம் (State Human Rights Commission) போன்ற பல துறைகளிலும் நாசிக் நகரத்தின் காவல்துறை ஆணையராகவும் பொறுப்பேற்று செயல்பட்டிருக்கிறேன். கேத்தன் பாரேக், ஹர்சத் மேத்தா, குளோபல் டிரஸ்ட் பேங்க் போன்றவற்றின் பொருளாதார, குற்ற ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறேன்.மும்பையில் 2008 ஆம் ஆண்டு நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, இது போன்ற அவசரக் காலங்களில் மத்திய அரசுப் படைகளையே நம்பியிருக்காமல், காவல் துறையினரே கமாண்டோ படையை போல நேரடியாக விரைந்து செயல்படுவதற்கு ஏதுவாக காவலர்களுக்கு பயிற்சியளிக்க திட்டமிட்டு மகாராட்டிரா அரசிடம் முறையிட்டிருந்தேன். அதன் அடிப்படையில் "முதல் அதிரடி" (Force One) எனும் அதிரடிப் படையை உருவாக்க கருவாகவும் காரணமாகவும் செயல்பட்டேன். இதன் மூலம் அவசர காலங்களில் மாநிலக் காவலர்களே முன்னின்று சிக்கல்களைத் தீர்க்க இயலும்.பல்வேறு துறை சார்ந்த வாய்ப்புகள் பொதுவாக எல்லா அதிகாரிகளுக்கும் கிடைக்குமா? அல்லது தங்களுக்கு மட்டுமே கிட்டியதா?நாம் எவ்வாறு பணியாற்றுகிறோம் என்பதைப் பொறுத்துக் கிடைக்கும் வாய்ப்புகளே இவை. எந்தப் பதவிக்காகவும் நானாக முயற்சி எடுத்ததில்லை. ஆனால் பணியில் வெளிப்படத் தன்மை, கடமை உணர்வு, நேர்மை ஆகியவைகள் கவனத்தில் கொள்ளப்பட்டு அவ்வப்போது பல பதவிகளில் மாற்றம் செய்யப்பட்டேன்.பன்னாட்டுக் காவல்துறை (Interpol) என்பது பற்றி கூற முடியுமா?இன்டர்போல் என்ற அமைப்பு 1914 ஆம் ஆண்டு அன்றிருந்த ஐரோப்பியர்களால் ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகும். அந்தக் காலத்தில் பல நாடுகள் கூட இருந்ததில்லை. பெரும்பாலானவை ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட காலனித்துவ நாடுகளாகும். எனினும் காலப் போக்கில் பல நாடுகளுக்கு எல்லைகள் வகுக்கப்பட்டன. புதிய நாடுகள் உருவாகின. ஒவ்வொரு நாட்டிற்கும் சட்டங்கள் இயற்றப்பட்டன. இந்த சட்டங்கள் அந்தந்த தேச எல்லையுடன் முடிவடைந்து விடுகின்றன. ஆனால் குற்றங்கள் என்பது தேச எல்லையுடன் முடிவடைவதல்ல. குற்றவாளிகள் எல்லைக் கடந்து செல்லும் போது எந்த நாட்டிலும் பிடிக்க வகை செய்கிறது. எனவே பல நாடுகளின் ஒருங்கிணைப்பு தேவைப்பட்டது. அவர்கள் குற்றவாளிகளை நாடு கடத்தும் தன் சட்ட வளையங்களுக்கு கொண்டு வரும் வகையில் இன்டர்போல் என்ற அமைப்பு திறம்படச் செயல்பட்டு வருகிறது. இதில் எனக்குக் கிடைத்த அனுபவங்களை நைரோபி, ருவாண்டா, மலேசியா, பிஜி, தாய்லாந்து, பாங்காங் போன்ற பல்வேறு நாட்டு காவல்துறையின் பயிற்சிக்குப் பயன்படும் வகையில் பயிற்சி முகாம் நடத்தியுள்ளேன்.இன்டர்போலில் எனக்குக் கிடைத்த சுதந்திரம் அதிகம். ஊழல் தடுப்பு, பொருளாதாரக் குற்றங்கள் துறையில் நான் பல நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் தவறான பணம் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு பல நாடுகளுக்கு உதவியிருக்கிறேன். இதில் மத்திய புலனாய்வுத் துறையில் கிடைத்த அனுபவங்கள் பெரிதும் உதவின. உலக வங்கி போன்றவற்றிக்கும் ஆலோசனை வழங்கியுள்ளேன்.மாநில மனித உரிமை ஆணையத்திலும் தாங்கள் பணியாற்றியது குறித்து? மகாராட்டிர மாநிலத்திலிருந்து எந்தெந்த தளத்தில் மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன?பொதுவாக கடந்த காலங்களில் மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் சிறைச்சாலை மற்றும் காவல் நிலையங்களில் மீறல் என்று பதிவாகின. ஆனால் தற்போது மனித உரிமை மீறல் என்பதன் பொருள் பெரிதும் விரிவடைந்து சம்பளப் பாக்கி தரவில்லை என்றால் கூட மனித உரிமை மீறலின் கீழ் வருகின்ற அளவுக்கு மாறுபட்டுள்ளது. மதம் சார்ந்த வன்முறை நிகழ்வுகளில் இசுலாமியர்கள் கைது செய்யப்படுவது போன்ற ஒரு பொதுக் கருத்து இருந்தது. ஆனால் தற்போது இவை அனைத்திலும் பெரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. எந்த குற்ற ஆய்வுகளை எந்தக் கோணத்தில் பார்க்க வேண்டும் என்கிற முறையான பயிற்சி அளிக்கப்பட்டு மனித உரிமைகள் காக்கப்படுகின்றன. இன்றைய அளவு அரசுடன் உரையாடுவதற்கு இசுலாமிய மக்களுக்கு கிடைத்திருக்கும் வழியே காவல்துறைதான் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு நண்பர்களாக இணைந்து செயல்படுவதன் மூலம் தவறான கைதுகள் அல்லது மனித உரிமை மீறல்கள் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளன.நாசிக், கும்பமேளாவில் தாங்கள் திறமையாகக் கையாண்டதாக மராத்திய அரசு தங்களைப் பாராட்டியுள்ளது? அது குறித்த செய்திகள்..கும்பமேளா என்பது நாசிக் நகரில் சற்றொப்ப 60 இலட்சம் மக்கள் கூடுகின்ற ஒரு நிகழ்வாகும். மூன்று விசேட நாட்களில் பெருமளவில் மக்கள் கூடுகின்றனர். அதை நான்கு மாதங்களுக்கு முன்பாகவே தெளிவாக திட்டமிட்டு ஒரு சிறு அசம்பாவிதம் கூட இன்றி அமைதியாக நடந்தது. அலகாபாத் கும்பமேளா, ஆந்திராவில் பலர் நெருக்கடியில் இறந்தது, மெக்காவில் மக்கள் இடர்பாட்டில் மறைந்தது என பல வரலாறுகள் உள்ளன. ஆனால் நாசிக்கில் எல்லா மொழியிலும் அறிவிப்புகள் போன்றவற்றை திட்டமிட்டு செயல்பட்டோம். அந்த நிகழ்வில் 1114 பேர் காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்டது. ஆனால் அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டு அந்தந்த குடும்பத்துடன் ஒப்படைக்கப்பட்டது. இதில் எல்லா மொழி மக்களும் நாசிக் தமிழரான இராமச் சந்திரன் உட்பட பலரும் உதவினார்கள். வெற்றிகரமாக எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி நடைபெற்றது. எனவே அனைவராலும் பாரட்டப் பெற்றேன்.தங்களின் அனுபவத்திலிருந்து அரசுகள் - நிருவாகத்துறை அதிகாரிகள், சீர்திருத்தங்கள் குறித்து ஏதாவது சொல்ல இயலுமா?மகாராட்டிரா மாநிலத்தைப் பொறுத்தவரை இங்கு அதிகமான அரசியல் தலையீடுகள் இல்லை. அதிகாரிகள் தங்கள் விருப்பத்திற்கொப்ப பணி செய்ய வேண்டி சில சிபாரிசுகளைக் கேட்கும் போது அங்கே சில சமரசங்கள் தவிர்க்க இயலாததாகி விடுகின்றது. எனவே நேர்மையும் வெளிப்படைத் தன்மையும் கடமை உணர்வும் செவ்வனே அமையுமானால் எவ்வித அரசியல் மாற்றங்கள் கொள்கை நகர்வுகள் குறித்து அதிகாரிகள் கவலைப்பட வேண்டிய தேவையிருக்காது. அரசியல் வாதிகளும் மிகவும் கவனமுடன் நடந்து கொள்வர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அங்கு அதிகாரிகளை ஒரு சில அணிகளாகப் பிரித்துப் பார்க்கின்ற போக்கு பொதுவாகத் தென்படுகிறது. அதிகாரிகளும் ஒரு சில அரசியல் கட்சிகளுக்கு சார்பாகவும் எதிராகவும் செயல்படுவது போன்ற தோற்றம் வெளிப்படையாகத் தெரிகிறது. இவையனைத்திற்கும் காரணம் ஒவ்வொருவரின் தன்னல உணர்வேயன்றி வேறில்லை. இவைகள் முற்றாகத் தவிர்க்கப்பட்டால் அரசும் நிருவாகமும் கால, அரசியல், கட்சி மாற்றங்களுக்கு அப்பால் சீராக இயங்கும் என்பது என் கருத்து.தாங்கள் மகாராட்டிரா மாநிலக் காவல் துறைத் தலைவராக பதவி உயர்வு பெறுவதற்கு வாய்ப்புள்ளதா?நான் என்னுடைய கடந்த 25 ஆண்டு கால பணியில் என் பதவி உயர்வை இலக்காக வைத்துக் கொண்டு ஒருபோதும் பணியாற்றியதில்லை. நம் மீது அரசும், மக்களும் வைத்திருக்கும் நம்பிக்கையும் மதிப்பும் தளரா வண்ணம் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றேன்; என்னைப் பொறுத்தவரையில் "செய்வனத் திருந்தச் செய்" என்பதற்கிணங்க நாம் செய்யும் பணி சிறியதாயினும் அதை செவ்வனே செய்து முடிக்க வேண்டும். அவ்வளவுதான். அதுவே பெரும் மன நிறைவைத் தருகிறது."தமிழ் இலெமுரியா" வாசகர்களுக்கு என் அன்பான பொங்கல் வாழ்த்துகள்!வேர்முகம்: கெஜன்நாதன் இ.கா.ப நேருரையாளர்: சு.குமணராசன்"