9 January 2014 10:45 am
ஒரு வெள்ளைக்கார அழகியின் ரோஸ் நிற கன்னத்தில் அழகு ததும்பும் மச்சம். இரண்டு கவிஞர்களுக்கிடையில் அந்த மச்சத்தை வர்ணிக்கிற போட்டி. செழித்து வளர்ந்திருக்கும் ரோஜாத் தோட்டத்தில் ஒரு கறுப்பு வண்டு தேன் அருந்துகிறது" என்றார் வெள்ளைக்காரக் கவிஞர். "வெள்ளைக்காரன் தோட்டத்தில் அடிமையாக வேலை செய்தே களைத்துப் போன ஒரு கறுப்பனைப் போல இருக்கிறது அந்த மச்சம்" எனச் சொன்னார் கறுப்பர் இனக் கவிஞர். வெள்ளைக்காரரின் கற்பனை, அழகியல் உணர்ச்சி; கறுப்பரின் கவிதை, சமுகப் பொறுப்பு உணர்வு! அரசியல் என்பது ஏணி. அதை வைத்து ஏறவும் செய்யலாம், இறங்கவும் செய்யலாம். சமீப காலமாகவே நமக்கு இறங்கு முகம்தான். பதவி அதிகாரம் தருகிற போதையில் தமிழ்நாட்டு அரசியல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. "அதிகாரம்தான் எங்களுக்கு முக்கியம்" என்று கொள்கைகளைக் குப்பையில் தூக்கியெறிய இன்று எல்லாத் தரப்புமே அரசியல், சாதி அரசியல், மத அரசியல், கையூட்டு (இலஞ்ச) அரசியல், ஊழல் அரசியல், வன்முறை அரசியல் என அரசியலின் ஓட்டைகள் இப்போது அதிகமாகிக் கொண்டே வருகின்றன தோழர்களே! உலகின் மிகச் சிறந்த, மிகப் பெரிய மக்களாட்சி நாட்டுக்குச் சொந்தக்காரர்கள் நாம். விடுதலை பெற்ற இந்தியாவின் அறுபத்தி ஏழாம் ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். எனினும், நாம் கனவு கண்ட தேசம் இன்னும் நம் கை கூடவில்லை. காரணம், தொண்டு செய்வதற்கான களமாகப் பார்க்கப்பட்ட அரசியல், இன்று வளம் கொழிக்கிற தொழிலாக மாறியிருக்கிறது. தேர்தல் என்பது இலவயங்களை அள்ளி வீசி இரை தேடும் வேட்டைக் களமாக இருக்கிறது. சென்னையில் ஒரு கல்லூரியில், சேர்மன் தேர்தலுக்காக ஒரு மாணவன் ஐந்து இலட்ச ரூபாய் வரை சாதாரணமாகச் செலவழிக்கிறான். வெற்றி பெற்ற மாணவப் பிரதிநிதி, மறுநாளே ஓர் அரசியல் கட்சியின் தலைவரைச் சந்தித்து, அவர் காலில் விழுகிறான். அந்தப் புகைப்படத்தை அவர்களே செய்தித் தாள்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். எதிர்கால அரசியலைத் தீர்மானிக்க முளைக்கிற இளைய தலைமுறையினரிடம் இப்படி ஓர் அநாகரிக அரசியல் பண்பாடு எப்படி வந்தது? மாற்று ஆடையை உடுத்த வழியில்லாமல் பாதி ஆடையை உடுத்திக் கொண்டு, மீதி ஆடையைத் துவைத்த பெண்மணியைப் பார்த்துக் கலங்கி, தானும் அரை நிர்வாணமானவர் காந்தி. தன் தாயின் குடியிருப்புக்கு விதிமுறைகளை மீறிக் குடிநீர் இணைப்பு தர முடியாது என்றார் காமராசர். தொடர் வண்டியில், சாதாரண வகுப்புக் கட்டணத்தில் பயணம் செய்து, மிச்சம் பிடித்த பணத்தில் பாமரர்கள் அறிவு பெற மலிவு விலையில் புத்தகங்கள் அச்சடித்தார் பெரியார். பட்டினியால் துவண்டு போயிருந்த தோழர் ஜூவாவிடம் ஆயிரக்கணக்கில் பணம் இருந்தும் ஒரு தேநீர் கூட குடிக்காமல் இருந்தார். "பல தோழர்கள் கட்சிக்காகத் தந்த நிதி இந்தப் பணம். இதில் டீ குடிப்பதற்கு எந்தத் தனி மனிதனுக்கும் உரிமை இல்லை" என்றார். அவர்களைப் போன்ற உயர்ந்த தலைவர்கள் வழி நடத்திய ‘மக்கள் நல அரசியலை’ எங்கே தொலைத்தோம்? குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் திருட்டு உலகை நிர்மாணிக்கவா இத்தனைப் போராட்டங்கள்? இத்தனை தியாகங்கள்? அரசியல், பண்பாடு, இலக்கியம் எல்லாவற்றிலும் பழம் பெருமை பேசுவதாகவே ஒரு தேசம் இருப்பது மிகவும் ஆபத்தானது. இப்படியே போனால், அடுத்த தலைமுறை நம் நிகழ்கால அரசியலைப் பற்றி என்ன பேசும்? சுயநலங்களுக்காக நாட்டை, மக்களை, பதவிகளை விலை பேசியவர்களாக வருங்காலம் நம்மைக் குற்றம் சாட்டினால் என்ன பதில் வைத்திருக்கிறோம்? ஓர் அரசியல் இயக்கத்தின் அடிமட்டத் தொண்டனாக இருந்து அந்தக் கட்சியின் தேசியத் தலைவராக வளர்ந்து, இந்தியாவின் தலைமையமைச்சரையே தீர்மானிக்கிற நிலைக்கு உயர்ந்தார் படிக்காத மேதை காமராசர். சினிமாவில் நடித்ததை மட்டுமே தகுதியாகக் கொண்டு இன்று மக்கள் பிரதிநியாக, முதலமைச்சர் ஆகிவிடத் துடிக்கிறார்கள். இன்றும் வரலாறாக வாழ்கிற பெரியார், சட்டமன்ற உறுப்பினராக வேண்டுமென்று ஆசைப்பட்டதில்லை. அரசுக்குத் தலைமையேற்பது எவ்வளவு பொறுப்புள்ள காரியம் என்பது இப்போது ஆள்பவர்களுக்கும் தெரியவில்லை; ஆள நினைப்பவர்களுக்கும் தெரியவில்லை. கட்டுகிற வேட்டியில் கரை இருக்கலாம்; மனதில் கறை இருக்கலாமா? தகுதி அடிப்படையில் இல்லாமல், சாதி வாரியாகத் தொகுதிகள் ஒதுக்கப்படுகின்ற அவலம் நடக்கிறது. அமைச்சர் பதவி முதல் பல்கலைக் கழக துணைவேந்தர் பதவி வரை எல்லாவற்றையும் தீர்மானிப்பது சாதி அரசியல்தான். கார்கில் போரில் நாட்டைக் காப்பதற்காகப் போராடிய இராணுவ வீரர்களுக்குச் செய்யப்பட்ட சவப்பெட்டியிலும் ஊழல் என்று புகார் எழுந்த போது தலை கவிழ்ந்து நின்றது அரசியல்.மக்களின் சிக்கல்களை நாடாளுமன்றத்தில் குறைந்தபட்சம் பேசவாவது செய்வார்கள் என்று எதிர்பார்ப்போடு மக்கள் தேர்ந்தெடுத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி கேட்கவே கையூட்டு வாங்கியது தெரிந்த போது கூசிக்குறுகி நின்றது அரசியல். குசராத், கோத்ரா கலவரத்தில், ஒரு கர்ப்பிணியின் குடலைக் கிழித்து உள்ளிருந்த சிசுவைக் கொன்று வெற்றிக் களிப்பில் சிலர் திக்குமுக்காடிய போது அகோரமாகக் காட்சி அளித்தது மதவெறி அரசியல். எங்கே நடந்தது தவறு? மரியாதைக்குரிய நம் தலைவர்கள் குறிக்கோளுக்காகச் சொன்னதை நாம் மேற்கோளுக்காக மட்டுமே பயன்படுத்த ஆரம்பித்தது ஏன்? "பசி, பிணி, பகை மூன்றும் இல்லாமல் இருந்தால்தான் அது நாடு" என்கிறார் வள்ளுவர். அத்தகைய நாட்டை உருவாக்க வேண்டியது அரசை ஆள்பவர்களின் கடமை. அதை அரசியல்வாதிகளிடம் எதிர்பார்ப்பதும் இல்லாமல் போனால் போராடுவதும் மக்களின் உரிமை. ஒழுகாத வீடு, கிழியாத உடை, சூடான உணவு இந்த மூன்றும் ஒரு மனிதனின் அடிப்படைத் தேவை. அதைச் சாதாரண குடிமகனுக்கும் உருவாக்கித் தருகிற சமுகப் பொறுப்பு அரசியல்வாதிகளுக்கு உண்டு. அரிசி விலை ஏறிக்கொண்டே போவதும், மகிழுந்து (கார்) விலை குறைந்து கொண்டே வருவதும் வளமான நாட்டுக்கு நல்ல அறிகுறியே அல்ல! ஏழைகள் மேலும் ஏழைகளாகவும், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும் இருந்தால் ஆட்சியாளர்கள் சுயநலங்களுடன் இருக்கிறார்கள் என்று பொருள். "தேனாறு பாயுது, செங்கதிரும் சாயுது, ஆனாலும் மக்கள் வயிறு காயிது" என்கிற வேதனை அவர்கள் யாருக்கும் இல்லாமல் போனதால்தான் வயலுக்குத் தெளிக்க வேண்டிய பூச்சி மருந்தை குடும்பத்தோடு அருந்தி உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள் உழவர்கள். இந்த தேசத்துக்கே சோறு போடுகிறவனுக்கு நத்தைகள்தான் உணவு. நாலு ரூபாய் நியாயவிலை கடையில் (ரேஷன்) அரிசி வாங்க முடியாமல் பட்டினி கிடப்பவர்கள் தங்கள் தாகத்தைத் தீர்க்க பத்து ரூபாய் குளிர்பானம் அருந்த வேண்டுமாம். என்ன கொடுமை இது! கண்டம் விட்டு கண்டம் பாயும் ஒரு ஏவுகணை தயாரிக்கிற செலவில் ஒரு மாநிலத்துக்கான அடிப்படைக் கல்வியை எல்லோருக்கும் வழங்கிவிட முடியும் என்பது எப்போது நம் புத்தியில் உறைக்கப் போகிறது! "ஐந்து அப்பங்கள், இரண்டு மீன்களைக் கொண்டு ஐயாயிரம் நபர்களுக்கு உணவு படைத்தார் ஏசு" என்கிறது பைபிள். இன்று ஐயாயிரம் நபர்களுக்குரிய அப்பங்களையும், மீன்களையும் ஐந்தே அரசியல்வாதிகள் பங்கிட்டுக் கொள்கிறார்கள். வேரில் விசமேறி விட்டால் கனிகளும் அப்படித்தான் இருக்கும். ஒரு சமுகத்துக்கு அரசியல்தான் ஆணிவேர். அரசியல் அசிங்கமானால் நாடே அசிங்கமானதாகத்தான் பொருள். வாருங்கள் தோழர்களே, எல்லாரும் இறங்கி சாக்கடையைச் சுத்தம் செய்வோம். அதை யாராவது செய்வார்கள் என்று இருந்து விடாமல், சமுகம் அசிங்கமானதற்கு நானும் ஒரு காரணம் என்று மனமுவந்து நம் தவறுகளை ஏற்றுக் கொள்வோம். மக்களாட்சி நாட்டில் ஆட்சியாளர்கள் என்பவர்கள் மக்களிடமிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள். தகுதியால் இல்லாமல் பிறப்பால் ஒருவர் அரசியல்வாதியாக முயற்சி செய்தால், கொள்கைகளை மறந்து கொளையடித்தால், அதிகார போதையில் மக்களை மறந்தால் அவர்களைத் தூக்கியெறிய, வாக்குரிமை என்கிற வலுவான ஆயுதம் நம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. மக்களாட்சியில் மக்கள்தான் கண்ணாடி, அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படித்தான் அரசியலும் இருக்கும். சிக்கல் நம்மிடம்தான் இருக்கிறது. வருங்காலத் தலைமுறைக்கு நல்ல ஆரோக்கியமான அரசியலை அறிமுகப் படுத்துவோம். இலவயங்களிலும், அன்பளிப்புகளிலும் ஏமாந்தது போதும். ஒருமுறை வாக்குப் பிச்சை போட்டுவிட்டு ஐந்தாண்டுகளுக்கு நாம் வாழ்க்கைப் பிச்சை எடுப்பதை இனியாவது நிறுத்துவோம். நேர்மையும், உண்மையும் அரசியலின் இரண்டு பக்கங்களாக மாறும் போதுதான் நாம் கனவு காண்கிற சமத்துவமுள்ள நாட்டை உருவாக்க முடியும். இனியும் நாம் இழப்பதற்கு ஒன்றுமில்லை. மீட்பதற்கோ ஒரு சொர்க்கமே இருக்கிறது. நம் எதிர்காலத்தைத் தீர்மானிக்க, நமக்கான உலகத்தை உருவாக்க… வாருங்கள் தோழர்களே.- நல்லக்கண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி"